தினா - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6779
படிப்படியாக டாண்டனே, ட்ஜிமோ, முத்தம்பி என்று ஒவ்வொருவராக தங்களுடைய கண்களை கங்காணியின்மீது பதித்துக்கொண்டே வயலுக்குள் இருந்து வெளியே வந்தார்கள்.
ட்ஜிமோவின் சரீரம் வியர்வையால் நனைந்திருந்தது. ஆற்று மணலின் நிறத்திலிருந்த தோலுக்கு உள்ளிருந்த அவனுடைய சதைகள் நரம்புகளுடன் துடித்துக் கொண்டிருப்பதை மாதலா கவனித்தான்.
“நாம் சாப்பிடச் செல்வோம்.'' தன் கையிலிருந்த புத்தகத்தை மூடிக் கொண்டே கட்டளை பிறப்பித்தான். “இந்தத் தேவடியாள்கள் இல்லாமலே ஒரு புத்தகத்தை ஒரு மனிதன் அந்த நாட்களில் எழுதியிருக்கிறான்...'' புத்தகத்தின் மேலட்டையைப் பார்த்துக்கொண்டே அவன் சொன்னான்.
கங்காணி அணிவகுப்பை ஆரம்பித்து வைக்க, மற்றவர்கள் அமைதியாகப் பின்தொடர்ந்து நடந்தார்கள்.
மாதலா தன்னைச் சுற்றிலும் பார்த்தான். மென்மையான தானியக் கதிர்களின் இலைகளுக்கு மத்தியிலிருந்து வந்த சூரியனின் கீற்றுகளைப் பார்த்தபோது, அந்தப் பார்வையில் ஒரு சுகம் கலந்திருப்பதை அவன் உணர்ந்தான். "தானியக் கதிர்கள் வளர்ந்திருக்கும் வயல்வெளிகள் பார்ப்பதற்கு கடல்போல இருக்கிறது...'' மாதலா தனக்குத்தானே கூறிக்கொண்டான்.
மற்றவர்கள் மிகவும் முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களின் உடல்களின் பாதி வயலில் இருந்த பச்சைச் செடிகளால் மறைக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே ஏதோ ஒரு திரவத்திற்குள் ஊடுருவிச் செல்வதைப்போல அவர்கள் மெதுவாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
மாதலா அசைவே இல்லாமல் நின்றிருந்தான். "வெள்ளைக்காரனின், தானிய வயல்கள் கடலைப்போல இருக்கின்றன...' கண்கள் வயல்களிலிருந்த செடிகளின் மேற்பகுதி காற்றில் அசைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் தனக்குத்தானே கூறிக்கொண்டான். வீசிக் கொண்டிருந்த காற்றின் வழியே மாதலாவின் பார்வை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தக் காற்று விலகி தூரத்தில் வீசிக் கொண்டிருக்க, அதோடு சேர்ந்து ஓராயிரம் வெள்ளிக் கீற்றுகள்... சிறிய சூரியன்கள் காற்றால் நட்சத்திரங்களாக மாறிக் கொண்டிருந்தன. தன் கண்களால் இதற்கு மேல் எரிச்சலைத் தாங்கமுடியாது என்ற நிலை உண்டானவுடன், அவன் பார்வையை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான்.
திடீரென்று, தானியக் கதிர்கள் வளர்ந்திருந்த வயல்வெளிகளை கடலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் களைத்துப் போனான். "தினா'விற்காக மணியடிக்கும் சத்தம் கேட்டதும், தான் மேலே எழும்போது, இந்த ஒப்பிடல் உண்டாவதை நினைத்துப் பார்த்தான். அவன் தன் கண்களை, தன்னைச் சுற்றியிருந்த வெட்ட வெளியில் பதித்தான். “கடல் வேறு வகையானது...'' அவன் சோர்வு கலந்த குரலில் முணுமுணுத்தான்.
“கடலில், மேலே, பிடித்து இழுப்பதற்கு களைகள் இருக்காது...'' அவன் தன்னுடைய சுண்டு விரலை உயர்த்தினான். “கடலில் காற்றில் மிதக்கும் பறவைகளைப்போல மீன் இருக்கும்.'' அவன் இன்னொரு விரலை நீட்டினான். “ஆமாம்.. கடல் வேறு மாதிரியானதுதான்...'' சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு, அவன் ஒரு தீர்மானத்திற்கு வந்தான்.
மாதலா வரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தபோது, மற்ற குழுவினர் ஏற்கெனவே அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அவர்களில் சிலர் முன்கூட்டியே சாப்பிட்டும் முடித்திருந்தார்கள். சுத்தம் செய்யக் கூடிய குழுதான் எப்போதும் முதலில் வரக்கூடியது. அது அந்த நிழலுக்குள் இப்போது சிதறி விட்டிருந்தது. காலையிலிருந்து வேலை செய்த களைப்பிலிருந்து விடுபடுவதற்காக, பெரும்பாலான மனிதர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வயலில் வேலை செய்யும் குழுவினர் தாமதமாகத்தான் சாப்பிட்டு முடித்து வருவார்கள். ஏனென்றால், அவர்களுடைய சமையல்காரனான ஜோஸ், அவர்களுடைய சாப்பிட்டிற்கான நெருப்பை இன்னும் அடுப்பில் மூட்டிக் கொண்டிருந்தான்.
மாதலா பழைமையான ஒரு கூடத்திற்குள் சென்று, அங்கு நிழலில் அமர்ந்திருந்த குழுவினருக்கு மத்தியில் தன்னுடைய இடத்தைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்தான். அவன் அருகில் வருவதைப் பார்த்ததுமே, பெண்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, அவர்கள் நல்ல காற்றை வீசச் செய்தனர்.
“மாதலா, உன்னுடைய குழுவில் விஷயங்கள் எப்படி போய்க் கொண்டிருக்கின்றன?'' ஒரு குரல் கேட்டது. உடனடியாக மாதலா எந்தவொரு பதிலையும் கூறவில்லை. ஏனென்றால், ஏதாவது கருத்தைக் கூறுவதற்கு முன்னால், அந்தக் கேள்வியை தனக்குத்தானே ஒருமுறை கேட்டுக் கொள்ள வேண்டும்; அதற்கான பதிலை தானே சொல்லிக் கேட்டுக்கொள்ள வேண்டுமென்ற பழக்கத்தைக் கொண்டவன் அவன்.
“வயல்களில் சூரியன் மிகவும் வெப்பமாக இருக்கிறது.'' மாதலாவின் மவுனத்திற்கு முன்னால், அந்தக் கேள்வி மன்னிப்பு கேட்பதைப்போல ஒலித்தது.
“ஆமாம்... வயல்களில் சூரியன் மிகவும் வெப்பமாகத்தான் இருக்கிறது...'' (மாதலா என்ன பதில் கூறுவது என்பதைப் பற்றி இன்னும் சிந்திக்கவில்லை.)
தொடர்ந்து உரையாடல் நடைபெற வேண்டுமென்ற எண்ணத்துடன், அந்தக் குரல் மீண்டும் ஒலித்தது: “முழு நேரமும் கங்காணி உனக்கு மேலேயே நின்று கொண்டிருந்தார்...''
கேள்வி கேட்ட அந்த மனிதனின் இளமையான முகத்தையே வெறித்துப் பார்த்தான் மாதலா. வயல்களில் நடக்கும் வேலையைப் பற்றிய விஷயங்களிலேயே ஆர்வத்தைச் செலுத்திக் கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை என்பதைப் புரியவைக்கும் வகையில், அவனிடம் என்ன கூறுவது என்பதைப் பற்றி சிந்திக்க அவன் முயற்சித்துக் கொண்டிருந்தான். தனக்குள் சிந்தனையைச் செலுத்தி, அதைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் அவன் ஈடுபட்டான்.
“கங்காணி மிகவும் மோசமான மனிதர்...'' அந்த இளைஞன் தொடர்ந்து கூறினான்: “உன்னை அனுப்புவதற்கு அவர் அதிக நேரம் எடுத்துக் கொண்டார். நான் வயலில் வேலை செய்யும்போதே, அதைக் கவனித்தேன். இன்னும் சொல்லப் போனால்- சிறிது முதுகை நிமிர்த்துவதற்குக்கூட அவர் ஆட்களை விடுவதாக இல்லை... நான் ஒருமுறை அதைப் பார்த்தேன்...'' திடீரென்று உற்சாகம் உண்டானதைப்போல, அந்த இளைஞன் தன்னுடைய முழுவைச் சேர்ந்த மற்ற ஆட்கள் இருக்கும் பக்கம் திரும்பிக்கொண்டே சொன்னான்: “இது பொய்யல்ல. நான் உறுதியாகக் கூறுகிறேன். இது ஒரு பொய்யே அல்ல. ஒருநாள் நாங்கள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தோம். கங்காணி அங்கேதான் இருந்தார். அப்போது மிகவும் வெப்பமாக இருந்தது. வயலில் மிகுந்த வெப்பம் இருக்கிற விஷயம் எல்லாருக்கும் தெரியும். கங்காணி மிகவும் மோசமான ஒரு மனிதர் என்று நான் ஏன் சொல்கிறேன் என்பதை நீயே தெரிந்து கொள்வாய். நாங்கள் வயலில் வேலை செய்துகொண்டிருந்தோம்...'' அந்த இளைஞன் தான் கூறிக்கொண்டிருந்ததை தொடர்ந்து கொண்டிருந்தான். தன்னுடைய உற்சாகத்தால் மேலும் மேலும் தூண்டப்பட, அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன் வார்த்தைகளை மாதலாவிடமிருந்து விலக்கி, தன்னுடைய ஆட்களிடம் கூற ஆரம்பித்தான்.
அருகிலிருந்த நிழலான ஒரு இடத்தில் போடப்பட்டிருந்த பெட்டியின் மீது அமர்ந்து தன்னுடைய உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த கங்காணியையே மாதலா கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். தனக்கு முன்னால் போடப்பட்டிருந்த இன்னொரு பெட்டி மேஜையைப் போல செயல்பட, அதில் அவருடைய உணவுப் பொருட்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. அவர் மிகுந்த சந்தோஷத்துடன் உணவைச் சாப்பிட்டுக் கொண்டே, ஒயினையும் பருகிக் கொண்டிருந்தார்.