ஒரு லட்சமும் காரும் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6377
எல்லாரும் பொறுமை இல்லாமல் எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.
கட்டை அவிழ்த்து சங்கரன்குட்டி ஒரு நாளிதழை வெளியே எடுத்தான்.
‘‘சத்தமா வாசிடா சங்கரன்குட்டி’’ - பின்னாலிருந்து யாரோ உரத்த குரலில் சொன்னார்கள்.
சங்கரன்குட்டி நாளிதழை விரித்து வைத்துக்கொண்டு சொன்னான்.
‘‘எல்லாரும் சீட்டை எடுத்துப் பாருங்க.’’
எல்லாரும் தங்களின் டிக்கெட்டுகளை எடுத்துப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார்கள். சங்கரன்குட்டி உரத்த குரலில் வாசித்தான்.
‘‘முதல் பரிசு கிடைத்திருக்கும் சீட்டின் எண்... நாற்பத்து ஆறு, முப்பத்து ஒன்பது, ஒரு பூஜ்யம், மூணு.’’
மாதவன் மெதுவாகத் துள்ளினான். அவள் வெளியே ஓடினான்.
‘‘நில்லுங்க மாதவன் அண்ணே, நில்லுங்க’’ - சங்கரன் குட்டி சத்தம் போட்டுச் சொன்னான்.
மாதவன் நிற்கவில்லை. அவன் மிகவும் வேகமாக ஓடி மறைந்து விட்டான்.
2
ஒரு லட்சமும் ஒரு காரும்... அந்தச் சிறிய குடிசையின் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தூரத்தில் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன். ஒரு லட்சம் ரூபாயையும் காரையும் அவன் மனதில் கற்பனை பண்ணிப் பார்த்தான். அதிர்ஷ்டத்தின் அரசனான தன் மகனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் குஞ்ஞுலட்சுமி. அவளால் எதையும் கூற முடியவில்லை. ஆனந்தம் அவளைத் திக்குமுக்காடச் செய்தது.
வீட்டிற்குப் பின்னால் பலாமரத்திற்குக் கீழே ராஜம்மாவும் ரத்னம்மாவும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னென்னவோ கூறிக்கொண்டிருந்தார்கள்.
‘‘என்னை மறந்துவிட மாட்டீர்களே மாதவன் அண்ணே!‘‘- இப்படி கூறியவாறு சங்கரன்குட்டி அங்கு வந்தான்.
‘‘முதல் பரிசு எனக்குக் கிடைத்திருப்பது எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சா சங்கரன்குட்டி?’’ - மாதவன் மூச்சை அடக்கிக் கொண்டு கேட்டான்.
‘‘பிறகு...?’’ முதல் பரிசு உங்களுக்குக் கிடைச்சிருக்குன்னு தெரிஞ்சவுடனே எல்லாருடைய முகமும் மழைமேகம் மாதிரி ஆயிடுச்சு.’’
‘‘பொறாமை... சங்கரன்குட்டி, பொறாமை... யாருக்காவது நல்லது நடந்தால் மத்தவங்க எல்லாருக்கும் கண்கள் உறுத்த ஆரம்பிச்சிடுது’’ - குஞ்ஞுலட்சுமி சொன்னாள்.
‘‘இவை அனைத்தும் கடவுள் முடிவு செய்யிற விஷயம் அம்மா’’ - சங்கரன் குட்டி திண்ணையில் ஏறி மாதவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தான்.
‘‘அப்படிச் சொல்லு சங்கரன்குட்டி. வெள்ளாயிணி பகவதி தூக்கத்தில் வந்த சொன்னது - என் மகனுக்கு ஒரு லட்சம் ரூபாயும் ஒரு காரும் கிடைக்கும்னு.’’
சங்கரன் குட்டி பொறுமையை இழந்து சொன்னான்:
‘‘கேட்டீங்களா மாதவன் அண்ணே, என்னை மறந்துடாதீங்க உங்களுக்கு நான்தான் லாட்டரிச் சீட்டைத் தந்தேன்.’’
‘‘உன்னை நான் மறக்க மாட்டேன்டா சங்கரன்குட்டி. நீ கையில புண்ணியம் வைத்திருப்பவன்.’’
‘‘சரி... அது இருக்கட்டும். எப்போ பரிசுப் பணத்தைத் தருவாங்க சங்கரன்குட்டி?’’ - குஞ்ஞுலட்சுமி கேட்டாள்.
‘‘எப்போ தருவாங்கன்னு பத்திரிகையில் வரும். பெரிய மீட்டிங்கெல்லாம் நடக்கும். அமைச்சர்களும் கவர்னரும் அதிகாரிகளும் வருவார்கள். அந்த இடத்தில் வைத்துதான் பரிசைத் தருவாங்க.’’
‘‘மாதவா... மகனே... நீ ஒரு நல்ல ஆடையைத் தைக்கணும். பெரிய பெரிய ஆட்கள் இருக்குற இடத்துல போய் பரிசுப் பணத்தை வாங்க வேண்டியதிருக்கே!’’
‘‘இப்போ ஒரு புதிய வகை துணி வந்திருக்கு மாதவன் அண்ணே. டெர்லின் என்பது அதன் பெயர். அதுல ஒரு ஆடை தைக்கணும். ஒரு இரட்டை மடிப்பு வேட்டியும்...’’
‘‘பெண் பிள்ளைகளுக்கு முண்டும் ரவிக்கையும் வேணும்’’- குஞ்ஞுலட்சுமி.
‘‘அவங்க இனி முண்டு அணிய வேண்டாம். அவங்க இனி புடவை அணிந்தால்தான் நல்லா இருக்கும்’’- மாதவன்.
‘‘அது உன் விருப்பப்படி நடக்கட்டும். ஆனால் என்னால புடவையெல்லாம் அணிய முடியாது. எனக்கு முண்டு போதும்.’’
‘‘அம்மா, உங்களுக்கு முண்டு வாங்கலாம்.’’
‘‘செருப்பு வேணும் மாதவன் அண்ணே. செருப்பு அணிந்து கொண்டுதான் அங்கே போகணும்’’ - சங்கரன் குட்டி.
‘‘அப்படின்னா... சங்கரன்குட்டி, நீ இன்னைக்கு வேலைக்குப் போகலையா?’’ - குஞ்ஞுலட்சுமி.
‘‘போகணும்... போகணும்... மாதவன் அண்ணே! நீங்க பெரிய சொத்துக்குச் சொந்தக்காரரா ஆயீட்டீங்களே! இனிமேல் கூலி வேலைக்குப் போனால் ஆட்கள் என்ன சொல்லுவாங்க?’’
‘‘அது உண்மைதான். நான் வரல. சங்கரன்குட்டி நீ கிளம்பு.’’
‘‘வேலை முடிச்சு சாயங்காலம் நான் இங்கே வர்றேன் மாதவன் அண்ணே’’- சங்கரன்குட்டி அங்கிருந்து கிளம்பினான்.
‘‘எச்சரிக்கையா இருக்கணும் மகனே. இவனெல்லாம் நட்புன்னு சொல்லிக்கிட்டு வர்றது ஏன் தெரியுமா?’’
‘‘எனக்குத் தெரியும். அதெல்லாம் என்கிட்ட நடக்காது அம்மா.’’
மதியம் கடந்த பிறகும் அதுவரை யாரும் எதுவும் சாப்பிடவில்லை. எதுவும் சாப்பிட வேண்டும் என்று யாருக்கும் தோன்றவும் இல்லை. லட்சம் ரூபாய், கார் ஆகியவற்றின் போதையில் அவர்கள் எல்லோரும் மூழ்கிப் போய் உட்கார்ந்திருந்தார்கள்.
‘‘நீ ரொம்பவும் மெலிஞ்சு போயிட்டியேடி குஞ்ஞுலட்சுமி’’- இப்படிக் கூறியவாறு குஞ்ஞுலட்சுமியின் அக்கா குஞ்ஞுக்குட்டி அங்கு வந்தாள். மாதவன் பக்கம் திரும்பிக் கொண்டு அவள் சொன்னாள்:
‘‘நீ ரொம்பவும் மோசமா இருக்கியேடா மாதவா?’’
குஞ்ஞுலட்சமியும் மாதவனும் எதுவும் பேசவில்லை.
குஞ்ஞுக்குட்டி கேட்டாள்:
‘‘ராஜம்மாவும் ரத்னம்மாவும் எங்கே?’’
அதற்கும் பதில் கிடைக்கவில்லை. குஞ்ஞுக்குட்டி அதிகார தொனியில் கேட்டாள்.
‘குஞ்ஞுலட்சுமி, நீ ஏன்டி பேசாமல் இருக்கே?’’
‘‘அக்கா, நீங்க எதற்காக வந்தீங்க?’’ - குஞ்ஞுலட்சுமி தன் மவுனத்தைக் களைத்தாள்.
‘‘நான் வந்ததா? நீ என்னுடைய உடன்பிறப்புன்னு நினைச்சு வந்தேன். உனக்கு விருப்பம் இல்லைன்னா நான் இங்கேயிருந்து போயிடுறேன்.’’
‘‘இவ்வளவு நாட்களும் கூட பிறந்தவள்ன்ற எண்ணம் உங்களுக்கு இல்லாமல் போச்சே அக்கா. இப்போ இப்படி திடீர்னு எப்படி அந்த ஞாபகம் வந்தது?’’
‘‘உனக்கு தெரியாதுடி குஞ்ஞுலட்சுமி. அங்கேயிருந்து கொஞ்சம் வெளியேறி வர என்னால் முடியுதா? பிள்ளைகள்... பிள்ளைகளின் பிள்ளைகள் என்று எப்போ பார்த்தாலும் ஒரே தொந்தரவு...’’
‘‘பிறகு... இப்போ இங்கே வர எப்படி முடிஞ்சது பெரியம்மா’’- மாதவன் ஒரு அம்பை வீசினான்.
‘‘இப்போ எப்படி முடிஞ்சதுன்னு கேட்டால் அது ஒரு கதையடா மாதவா. சரோஜினி முந்தாநாள்ல இருந்து சொல்லிக்கிட்டே இருக்கா- அம்மா, நீங்க சித்தியைப் போய் பார்த்துட்டு வாங்க... பார்த்துட்டு வாங்கன்னு. பிறகு... கேளு...’’
குஞ்ஞுலட்சமி இடையில் புகுந்து சொன்னாள்:
‘‘மாதவனின் அப்பா இறந்தபிறகு, நாங்கள் இங்கே கிடந்து சிரமப்படுறது... அக்கா, உங்களுக்கு தெரியவில்லையா? நாழி அரிசியையோ, ஒரு கட்டு மரவள்ளிக் கிழங்கையோ எனக்குத் தந்திருக்கீங்களா? அவள் என்கூடப் பிறந்தவள்னு நினைச்சு, அக்கா- ஒரு நாளாவது நீங்க இங்கே வந்திருக்கீங்களா? ஆனால் இப்போ...’’
குஞ்ஞுக்குட்டி மிடுக்கான குரலில் சொன்னாள்: