மீனவனும் அவன் ஆன்மாவும் - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7081
அதனால் அவர்கள் அந்த இரவு வேளையில் சந்தையிலேயே ஒரு இடத்தில் தங்குவது என்று தீர்மானித்தார்கள். அப்போது அந்த வழியே தலையில் துணி அணிந்து, டார்டார் பாணியில் ஆடை அணிந்த ஒரு வியாபாரி கையில் ஒரு லாந்தர் விளக்குடன் வந்தான். “கடைகள் அனைத்தையும் அடைத்து விட்டு, மூட்டைகளைக் கட்டிவிட்டு கடைக்காரர்கள் போய்விட்டார்கள். அதற்குப் பிறகும் நீங்கள் ஏன் சந்தையில் இருக்கிறீர்கள்?” அவன் கேட்டான்.
“இந்த நகரத்தில் நான் எந்தவொரு சத்திரத்தையும் பார்க்கவில்லை. எனக்கு தலையைச் சாய்ப்பதற்கு ஒரு இடம் தர இங்கு உறவினர்கள் யாரும் இல்லை.” மீனவன் கூறினான். “ஓ! அதனாலென்ன? நாம் எல்லாரும் உறவினர்கள்தானே? நாம் ஒரே தெய்வத்தின் மக்கள் அல்லவா? என்னுடன் வாருங்கள். என்னுடைய வீட்டில் விருந்தினர்களுக்கான ஒரு அறை இருக்கிறது. அங்கு இருக்கலாம்.” அந்த வியாபாரி மீனவனை அழைத்தான்.
இளைஞனான மீனவன் எழுந்து அந்த வியாபாரியுடன் சேர்ந்து அவனுடைய வீட்டுக்கு நடந்தான். அவர்கள் மாதுளை மரங்கள் நிறைந்திருந்த ஒரு தோட்டத்தைக் கடந்து ஒரு வீட்டை அடைந்தார்கள். அங்கு சென்றவுடன், கையைக் கழுவுவதற்காக ஒரு செம்புப் பாத்திரத்தில் பன்னீரைக் கொண்டு வந்து வைத்தான். தொடர்ந்து தாகத்தைத் தணிப்பதற்காக தண்ணீர்ப் பூசணியையும், அதைத் தொடர்ந்து ஒரு சிறிய பாத்திரத்தில் சாதத்தையும், ஒரு துண்டு வறுத்த ஆட்டு மாமிசத்தையும் கொண்டுவந்து தந்தான்.
சாப்பாட்டுக்குப் பிறகு, வியாபாரி மீனவனை விருந்தினர் தங்குவதற்காக இருந்த அறைக்குள் அழைத்துச் சென்றான். நன்கு உறங்கும்படி கூறிவிட்டு அவன் அறையைவிட்டு அகன்றான். தன்னுடைய விரலில் கிடந்த மோதிரத்தை முத்தமிட்டு விட்டு, மீனவன் கம்பளிப் போர்வைக்குள் சுருண்டு படுத்தான். கம்பளியால் மூடியவுடன், அவன் தூக்கத்திற்குள் மூழ்கிவிட்டான்.
சூரியன் உதயமாவதற்கு மூன்று மணி நேரம் இருக்க, அப்போதும் இருள் படர்ந்திருக்க, ஆன்மா அவனைத் தட்டி எழுப்பிக் கூறியது: “எழுந்திரு... வியாபாரி தூங்கிக் கொண்டிருக்கும் அறைக்குள் செல். பிறகு... அவனைக் கொன்றுவிட்டு, பொன் முழுவதையும் எடுப்பதற்கு வழியைப் பார். அது நமக்குத் தேவைப்படும்.”
இளைஞனான மீனவன் கண் விழித்து எழுந்து வியாபாரியின் அறையை நோக்கி நடந்தான். அவனுடைய கால் பகுதியில் வாளொன்றை வைத்திருப்பதை அவன் பார்த்தான். தலையின் அருகில் ஒன்பது பைகளில் பொன் இருந்தது. அவன் அந்த வாளைத் தொட்டபோது, வியாபாரி கண்விழித்துவிட்டான். வேகமாக எழுந்து அவன் வாளை தன் கைகளில் எடுத்துக்கொண்டு மீனவனிடம் கேட்டான்: “நன்மைக்கு பதிலாக நீ தீமையையா தருகிறாய்? நான் உன்னிடம் காட்டிய இரக்கத்திற்கு என்னுடைய ரத்தத்தைச் சிந்தச் செய்து பிரதிபலனைக் காட்டுகிறாயா?”
மீனவனின் ஆன்மா, அவனை கோபம் கொள்ளச் செய்தது. “அவனை அடி..” ஆன்மா கூறியது. மீனவன் அந்த வியாபாரியை அடித்து, மயக்கமடையச் செய்தான். பிறகு ஒன்பது பைகளிலும் இருந்த பொன்னை எடுத்து கொண்டு, மாதுளை மரங்கள் இருந்த தோட்டத்தின் வழியாக ஓடினான். ஒளிர்ந்து கொண்டிருந்த நிலவுக்கு எதிராக அவன் ஓடினான்.
அந்த நகரத்தை விட்டு நீண்ட தூரம் வந்தவுடன், மீனவன் தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு ஆன்மாவிடம் கேட்டான். “அந்த வியாபாரியை என்னை வைத்து அடிக்கச் செய்ததும், அவனுடைய பொன்னை எடுக்கச் செய்ததும் ஏன்? நீ ஒரு சாத்தான்...”
“மன்னித்து விடு... கொஞ்சம் அமைதியாக இரு.” ஆன்மா கூறியது.
“இல்லை...” மீனவன் சொன்னான்: “என்னால் அமைதியாக இருக்க முடியாது. நான் எதையெல்லாம் வெறுக்கிறேனோ, அதையெல்லாம் நீ என்னைச் செய்ய வைக்கிறாய். உன்னையும் நான் வெறுக்கிறேன்.”
“நீ என்னை இந்த உலகத்திற்குள் திறந்துவிட்ட போது, எனக்கு ஒரு இதயத்தைத் தரவில்லை. அதைத் தொடர்ந்துதான் நான் இவற்றையெல்லாம் கற்றதும், விரும்பியதும்...” ஆன்மா கூறியது.
“நீ என்ன சொல்கிறாய்?” மீனவன் முணுமுணுத்தான்.
“உனக்குத் தெரியும்... உனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு ஒரு இதயத்தை நீ தரவில்லை என்ற விஷயத்தை மறந்துவிட்டாயா?” ஆன்மாவின் புலம்பல் தொடர்ந்தது: “அதனால் நீயும் சிரமப்படாமல், என்னையும் சிரமப்படுத்தாமல் அமைதியாக இரு... விட்டெறியப்படக் கூடிய அளவிற்கு வேதனைகளோ, கிடைப்பதற்கு சந்தோஷமானதோ, எதுவுமே உனக்கு இல்லை.”
அதைக் கேட்டு பயந்துபோன மீனவன், ஆன்மாவிடம் சண்டை போட்டான் : “இல்லை... நீ ஒரு மோசமானவன். கெட்ட விஷயங்களை நோக்கி இழுத்துச் சென்று, என்னை வழிதவற வைக்க நீ முயற்சிக்கிறாய். பாவத்தின் பாதையில் என்னை நடத்திக்கொண்டு செல்கிறாய்.”
“ஒரு இதயமே இல்லாமல் இந்த உலகத்தில் என்னை விட்டது நீதான் என்பதை மறந்துவிடாதே. வா... நாம் இன்னொரு நகரத்திற்குச் சென்று, சந்தோஷமாக இருக்கலாம். நம் கையில் இப்போது ஒன்பது பைகளில் பொன் இருக்கிறதல்லவா?”
ஆனால், மீனவன் அந்தப் பொன் இருந்த பைகளை எடுத்து வீசியெறிந்தவாறு சொன்னான்: “இனிமேல் நான் உன்னுடன் சேர்ந்து பயணம் செய்வதாக இல்லை. உன்னை நான் விலக்கப் போகிறேன்.” அவன் பாம்பின் தோலாலான கைப்பிடியைக் கொண்ட கத்தியை எடுத்து, நிலவுக்கு எதிரில் நின்றுகொண்டு, தன்னுடைய பாதத்திலிருந்து நிழலை வெட்டி நீக்கினான்.
ஆனால், அதற்குப் பிறகும் அவனிடமிருந்து ஆன்மா விலகிச் செல்லவில்லை. அவன் கூறியது எதையும் அது கேட்கவுமில்லை. அதற்கு பதிலாக அவனிடம் அது சொன்னது: “அந்தப் பெண் மந்திரவாதி கூறிய காலம் முடிந்துவிட்டது. இனி நான் உன்னை விட்டுப் போகமாட்டேன். உன்னால் என்னை விரட்டி விடவும் முடியாது. ஒருமுறை ஆன்மாவை விலக்கிய நபருக்கு, அது திரும்பவும் கிடைத்தால், அதை எப்போதும் அவன் தன்னுடன் பாதுகாப்பாக வைத்துக்கொண்டே தீரவேண்டும். அது ஒரு தண்டனை... ஆசீர்வாதமும்கூட...”
இளைஞனான மீனவன் தன் கைகளைக் கசக்கிக் கொண்டே புலம்பினான்: “அவள் ஒரு கபடத்தனம் நிறைந்த பெண் மந்திரவாதி... இந்த விஷயத்தை அவளே என்னிடம் ஒப்புக் கொண்டிருக்கிறாள்.”
“எந்தச் சமயத்திலும் இல்லை...” ஆன்மா திருத்திக் கூறியது: “அவள் யாரை வழிபட்டாளோ, அந்த ஆளுக்கு அவள் உண்மையானவளாக இருந்திருக்கிறாள். எல்லா காலங்களிலும் அவள், அந்த ஆளுக்குக் கீழ்ப்படியக்கூடியவளாக இருந்தாள்.”
இனிமேல் தன்னுடைய ஆன்மாவை விலக்குவதற்கு வழியே இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, இந்த கெட்ட ஆன்மாவை எல்லா காலங்களிலும் பின்பற்றிச் சென்றே ஆகவேண்டும் என்பதையும் புரிந்துகொண்ட மீனவன் தரையில் விழுந்து தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.