மனோமி - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6653
என் பெயர் மனோமி. இந்தியாவில் இருக்கும் என்னுடைய நண்பர்கள் கேட்கலாம் – இது என்ன பெயர் என்று. இது சிங்களக்காரர்களின் பெயரைப்போல இருக்கிறது என்று அவர்கள் நினைக்கலாம். அப்படி நினைத்தால் சரிதான். இது சிங்களக்காரர்கள் தங்களின் பெண்பிள்ளைகளுக்கு சாதாரணமாகவே வைக்கக்கூடிய பெயர்களில் ஒன்றுதான். நான் சிங்களக்காரி தான். நான் இந்தியாவிற்கு வந்திருப்பதற்குக் காரணம் என்னவென்று இனி நீங்கள் கேட்பீர்கள். இந்தியாவிற்கும் இலங்கைக் குமிடையில் நம்பிக்கையில்லாமை உண்டாகியிருக்கிற இந்தக் காலகட்டத்தில் நான் எதற்காக வந்தேன்? என் நோக்கம் விபச்சாரம் செய்வதற்காக இருக்குமோ? உங்களுக்கு பல வகைப்பட்ட சந்தேகங்களும் மனதில் உண்டாகலாம். அதனால் நான் என்னுடைய ஆரம்பகால கதையை உங்களிடம் கூறுகிறேன்.
மாத்தரையில் பிறந்த சரத் டென்னக்கூன் தான் என் தந்தை. கருனெகல என்ற இடத்தைச் சேர்ந்த புண்ணியகாந்திதான் என் தாய். நாங்கள் வெல்லா வாட்டெ என்ற இடத்தில் ஒரு இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஓரளவுக்கு வசதியான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அந்தப் பகுதியில் முக்கால் வாசிப்பேர் தமிழர்கள். டாக்டர்கள், பொறியியல் வல்லுநர்கள், பேராசிரியர்கள் எல்லோருமே தமிழர்கள்தான். எல்லோருக்கும் சிங்கள மொழி தெரியும். அவர்களுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களாகவும் குடும்ப நண்பர்களாகவும் நாங்கள் இருந்தோம். சிங்களர்களுக்குத் தமிழ்மொழியைப் புரிந்து கொள்ள முடியும். தட்டுத் தடுமாறி தமிழில் பேசுவதற்கும் தெரியும். அவர்களின் திருவிழாக்களில் நாங்கள் பங்கெடுத்திருக்கிறோம். எங்களுடைய திருவிழாக்களில் அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்தில், தேர்வில் வெற்றிபெற நானும் என்னுடைய சிங்கள நண்பர்களும் கட்டரகாம கோவிலுக்குச் சென்று வழிபட்டிருக்கிறோம். இரண்டு இனத்தைச் சேர்ந்தவர்களும் உணவுப் பொருட்களைப் பங்கிடும் எளிமையுடன் கடவுள்களையும் பங்கிட்டுக் கொண்டு வாழ்ந்தார்கள். இடையில் அவ்வப்போது ஒரு சிங்களக்காரன் தமிழர்களின் கருப்பு நிறத்தைப் பற்றியோ, அவர்களின் ரசனையைப் பற்றியோ கேவலமாகப் பேசியிருக்கலாம். தமிழர்கள் சிங்களர்களின் சோம்பேறித் தனத்தைப் பற்றி விமர்சித்திருக்கலாம். ஆனால், அந்த விஷயங்கள் எதுவும் கத்தியைக் கொண்டு குத்துவதில் போய் முடிந்ததில்லை. என் வீடு மிகவும் அமைதியாக இருந்தது. எங்களுடைய பக்கத்து வீட்டில் அண்ணாதுரையின் குடும்பம் இருந்தது. அண்ணாதுரை மாமாவின் மனைவி சிவகாமியையும், பிள்ளைகள் பிரகாசம், ரூபாவதி, சுந்தரம் என்கிற மூவரையும் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் நான் நினைத்தேன். என் தந்தையும் அண்ணாதுரை மாமாவும் தினமும் மாலை நேரங்களில் எங்கள் வீட்டு மாடியில் உட்கார்ந்து கொண்டு விஸ்கி பருகிக் கொண்டிருப்பார்கள். அண்ணாதுரை மாமா சொந்தத்தில் வியாபாரம் செய்வதற்காக ஒரு இடம் வாங்கப் பணமில்லாமல் சிரமப்பட்ட போது, என் தந்தை என் தாயின் ஒரு டஜன் தங்க வளையல்களையும், மூன்று இழைகளைக் கொண்ட மணிமாலையையும் அவருக்குப் பரிசாகத் தந்த கதையை நான் பல தடவை அவர்கள் பேசக் கேட்டிருக்கிறேன். அந்தக் கடனை திரும்பச் செலுத்தும் விஷயத்தை ஆரம்பித்தபோது, என் தந்தை சொன்னார்:
“அண்ணா, அந்தக் கடன் தீர்க்கப்பட வேண்டிய கடன் இல்லை.”
அண்ணாதுரை மாமா அதற்குப் பிறகு நல்ல வசதி படைத்த மனிதராக மாறினார். அவர் இலங்கையில் தொழிற்சாலை ஆரம்பித்தார். நான்கு வருடங்களுக்குப் பிறகு அதை விற்றுவிட்டு சென்னைக்குப் புறப்பட்டார். தன்னுடைய சொந்த நாட்டில் சில இளைஞர்களுக்கு வேலை கொடுக்கத் தனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று ஒரு கடிதத்தில் அவர் என் தந்தைக்கு எழுதியிருந்தார். என் தந்தை அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு சிரித்தார்.
“இலங்கையும் அவருக்குச் சொந்தமான நாடாகத்தானே இருந்தது!”- என் தந்தை சொன்னார். அவர்கள் ஒருவருக்கொருவர் கடிதங்கள் எழுதிக் கொண்டார்கள். வருடத்தில் இரண்டு கடிதங்கள்... குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் ஊரில் இருப்பவர்களைப் பற்றியும் விளக்கமாக எழுதப்பட்ட இரண்டு கடிதங்கள்... அந்த உறவில் சிறிதும் பாதிப்பு உண்டாகவில்லை. 1983-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரைக் கொன்றபோதும், சிங்களர்கள் தமிழர்களை நெருப்பிட்டு எரித்தபோதும் அந்த நட்புறவில் சிறிதும் மாற்றம் உண்டாகவில்லை. அதற்குக் காரணம்- அவர்கள் இருவரும் மனித அன்பில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். நாடு, மதம், இனம் ஆகிய விஷயங்களைத் தாண்டி அவர்கள் அன்புமீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள். பிரகாசம், ரூபாவதி, சுந்தரம் ஆகியோர் மீது என் தந்தை தன்னுடைய சொந்தப் பிள்ளைகள் மீது வைத்திருந்ததைப் போலவே அன்பு செலுத்தினார். அண்ணாதுரை மாமாவிற்கு நான் எப்போதும் அன்பிற்குரிய மகளாக இருந்தேன். என்னுடைய தந்தைக்கு 1974-ஆம் ஆண்டிலிருந்து ஒரு கெட்ட நேரம் ஆரம்பமானது. ஒரு பெண் துறவியைப் போல புனிதமான வாழ்க்கை நடத்திய என் தாய் மூன்று நாட்கள் மட்டுமே நீடித்த மூளைக் காய்ச்சலில் மரணத்தைத் தழுவிவிட்டாள். அதற்குப் பிறகு என்னை விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறுவதற்கே என் தந்தை பயந்தார். அதன் காரணமாக, என் தந்தையின் இரும்புக் கடையில் வந்து கொண்டிருந்த வருமானம் குறைந்து கொண்டே வந்தது. இறுதியில் கடையை வேறொரு மனிதருக்கு விற்றுவிட்டு, அதன்மூலம் கிடைத்த பணத்தை வங்கியில் போட்டு விட்டு, அதிலிருந்து கிடைத்த வட்டியை வைத்து நானும் என் தந்தையும் சிக்கனமாக செலவுகள் செய்து வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தோம். என் தந்தைக்கு சயரோகம் பாதித்தபோதுதான், வறுமையின் கொடுமையை முதல் தடவையாக நான் உணர்ந்தேன். காட்டு முருங்கை இலைகளைக் கொண்டு குழம்பு வைத்து என் தந்தைக்குப் பரிமாறியபோது, என் கண்களிலிருந்து கண்ணீர் கட்டுப்படுத்த முடியாமல் வழிந்தது. என் தந்தைக்கு ருசியாக இருக்கும் வண்ணம் எதையாவது குழம்பு வைத்துக் கொடுத்தால், மருந்துக்காக ஒதுக்கி வைக்க வேண்டிய பணம் உடனடியாக செலவழிந்து விடும். அதனால் கொஞ்சம் மீன் சட்னியையும் முருங்கைக் குழம்பையும் சாதத்துடன் சேர்த்து நான் தினமும் என் தந்தைக்குப் பரிமாறினேன். என் தந்தை மிகவும் மெலிந்து, கறுத்துப் போய் தோன்றினார்.
“அண்ணாதுரை மாமாவுக்கு, உங்களுக்கு உடம்புக்கு சரியில்லைன்னு கடிதம் எழுதப் போறேன்” – நான் ஒரு நாள் என் தந்தையிடம் சொன்னேன். அண்ணாதுரை மாமாவின் உதவியை நாடுவதில் எந்தவித அவமானமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால், ‘வேண்டாம்’ என்று என் தந்தை தடுத்துவிட்டார்.
என் தந்தை இறுதியாக எழுதிய கடிதத்தில் தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதவில்லை. கொழும்பில் ஒரு காலத்தில் வசித்த இந்தியர்களின் எண்ணிக்கை 2,00,000 ஆக இருந்தது என்றும்; அவர்களில் 1,20,000 பேரைத் தவிர, மீதி அனைவரும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வாழப் போய்விட்டார்கள் என்றும் என் தந்தை எழுதினார்.