மனோமி - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6653
என் தொண்டை வறண்டு போய்விட்டது. விமானம் மேலே உயர்ந்த பிறகுதான் என்னுடைய சுவாசமே சரியான நிலைக்கு வந்தது. அண்ணாதுரை மாமா மற்றும் அவருடைய பிள்ளைகள் ஆகியோரிடம் போய்ச் சேர்ந்ததும், பாதையில் இருக்கும் கோவிலை அடைந்த பயணியைப் போல, பலமணி நேரங்கள் எல்லா கவலைகளையும் மறந்துவிட்டு நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அச்சத்தில் சிக்குண்டு கிடக்கும் மனிதர்களின் வேதனைச் சத்தங்கள் காதில் விழாமல் மீண்டும் வாழ நான் விரும்பினேன். மகாத்மா காந்தியின் நாட்டிலாவது மன அமைதி கிடைக்கும் என்று நான் நினைத்தேன். உலகம் முழுவதும் பயங்கரவாதிகளின் புதிய மதமான தீவிரவாதம் பரவிவிட்டிருக்கிறது. அதாவது – இம்சை! அகிம்சா மூர்த்தியான மகாத்மா காந்தி வாழ்ந்த நாட்டிலாவது அகிம்சை நிலவிக் கொண்டிருக்கும் என்று நான் நம்பினேன்.
விமான நிலையத்திற்கு அண்ணாதுரை மாமாவும் ரூபாவதியும் வந்திருந்தார்கள். பருமனான தன் உடலைத் தாங்குவதற்கு எங்கே தன்னுடைய கால்களுக்கு பலமில்லாமல் போய்விடுமோ என்று பயந்தோ என்னவோ, மாமா உருண்டையான ஒரு ஊன்றுகோலை வலதுகையில் இறுகப் பிடித்திருந்தார். முடி முழுமையாக நரைத்து விட்டிருந்தது. ரூபாவதி கறுப்பு நிறத்தில் ஒரு அழகியாக இருந்தாள். அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்ற விஷயத்தை முதல் பார்வையிலேயே நான் தெரிந்து கொண்டேன். ஐரோப்பிய முறையில் ஆடைகள் அணிந்திருந்த என்னுடைய முழங்காலுக்குக் கீழே தெரிந்த பகுதிகளை ரூபாவதி புருவத்தைச் சுருக்கிக் கொண்டு பார்ப்பதை நானும் பார்த்தேன்.
“புடவையை அணிந்து கொண்டு ஒரு இந்தியப் பெண்ணைப் போல கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்ல கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதனால்தான் இந்த ஆடைகளை அணிந்தேன்” – நான் சொன்னேன்.
“இந்த நீலநிற ஆடை உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கு”- மாமா என் கன்னத்தைத் தடவிக் கொண்டே சொன்னார்: “நீ எவ்வளவு வளர்ந்துட்டே! பார்க்குறப்போ புண்ணியகாந்தியைப் பார்க்குற மாதிரியே இருக்கு. அதே நிறம்... அதே உயரம்.... அதே தலை சீவல்...”
“மனோமிக்கு அவளோட தாயின் நிறம் கிடையாதுன்னு நீங்க சொன்னீங்களே அப்பா?”- ரூபாவதி தன் தந்தையிடம் கேட்டாள்.
“சின்ன பிள்ளையா இருக்குறப்போ மனோமிக்கு இப்போ இருக்குற நிறம் இல்லைதான்.”
“பயத்துனால வெளுத்துப் போயிட்டேன் மாமா”- நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்.
“இனி எந்தச் சமயத்திலும் நீ பயப்படுற மாதிரியான சூழ்நிலையே வராது. உனக்கு இந்த மாமாவான நான் இருக்கேன். உன்னைப் பத்திரமா பாத்துக்கிறதுக்கு இரண்டு சகோதரர்கள் இருங்காங்க. பிரகாசமும், சுந்தரமும் நீ வருவதை எதிர்பார்த்து வீட்டுல இருப்பாங்க. அவங்க மதிய உணவிற்காக வீட்டுக்கு வந்திருப்பாங்க”- மாமா சொன்னார்.
மாமாவின் காரும் சீருடை அணிந்த ஓட்டுநரும் அவருடைய குடும்பத்தின் பொருளாதார வசதியை வெளிக்காட்டின. வீட்டிற்குச் செல்லும் வழியில் வானத்தில் நின்று கொண்டிருந்த புகைப்படலத்தைச் சுட்டிக் காட்டியவாறு மாமா சொன்னார்:
“அந்தப் புகைக்குக் கீழேதான் என்னுடைய தொழிற்சாலை இருக்கு. நான் நூற்றி இருபத்து இரண்டு பேருக்கு சம்பளம் தர்றேன். அந்த வகையிலாவது மக்களுக்கு உதவுறதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறதே!”
ஓட்டுநருக்கு இடது பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞன் தன்னுடைய மூக்காலோ நாக்காலோ ஒரு கொடூரமான சத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தான். அது ஒரு கேவலமான செயல் என்று நான் நினைத்தேன். ஆனால் மாமா எதையும் தெரிந்து கொள்ளாதது மாதிரி தான் மக்கள் மீது கொண்டிருக்கும் அன்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
முன் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞன், ரூபாவதியின் கணவனாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ரூபாவதி பிராமணனான மூர்த்தியைத் திருமணம் செய்திருக்கிறாள் என்ற விஷயத்தை மிகுந்த பெருமையுடன் ஒருமுறை மாமா என் தந்தைக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தி இருந்தார். பிராமணர்கள் மீது கொண்டிருக்கும் எதிர்ப்பை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருந்தாலும், குடும்பத்தில் மருமகனாக ஒரு பிராமணன் வந்து சேர்ந்ததற்காக மாமா மனதில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் என்பதை அப்போதே நாங்கள் புரிந்து கொண்டோம். முதலாவதாக – மூர்த்தியின் ஜாதி. இரண்டாவதாக – அவனுடைய பொன்நிறம். மூன்றாவதாக – அவனுடைய அறிவு சார்ந்த வாழ்க்கை. மூன்று காரணங்களால் அந்தத் திருமணம் அண்ணாதுரை மாமாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. வரதட்சணையாக யாரும் கேட்காமலே இரண்டு அடுக்குகள் கொண்ட கட்டிடத்தையும், ஒரு பென்ஸ் காரையும், ஐந்து லட்சம் ரூபாய்களையும் தன்னுடைய மருமகனுக்குத் தந்ததாக மாமா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்த பிராமண இளைஞனின் நடவடிக்கைகளில் எனக்கு சிறிது கோபம் கூட உண்டானது. அவன் என்னைப் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளவோ புன்னகைக்கவோ கூட இல்லை. நன்கு படித்திருக்கும் இளைஞர்களிடம் இருக்கக்கூடிய நடவடிக்கைகள் எதுவும் மூர்த்தியிடம் இல்லை.
“விமானப் பயணம் சுகமாக இருந்ததுல்ல?” - மாமா என்னிடம் கேட்டார்.
“நினைத்திருந்த அளவிற்கு சிரமம் கொண்டதாக இல்லை. இது என்னுடைய முதல் விமானப் பயணம். விமானம் திடீரென்று மேலே உயர்ந்தபோது பயத்தால் என்னுடைய நாடி நரம்புகளெல்லாம் ஒடுங்கிவிட்டன. விமானப் பணிப்பெண்கள் மிகவும் அழகு படைத்தவர்களாக இருந்தார்கள். ஆனால், நான் ஒரு சிங்களப் பெண் என்பது தெரிந்து விட்டதாலோ என்னவோ, அவங்க என்னைப் பார்த்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.”
“சிங்களப் பெண் என்பதை அவங்க எப்படித் தெரிந்து கொண்டிருப்பார்கள்?”- ரூபாவதி கேட்டாள்.
“அது மிகவும் சாதாரண விஷயம். இந்தியப் பெண்களிடம் இருக்கக் கூடிய உருவ அழகு எங்களுக்கு இல்லை. எங்களுடைய தலை முடிக்கு மினுமினுப்பு குறைவு”- நான் சொன்னேன். ரூபாவதியைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் சாதாரணமாக அதைச் சொன்னேன். ஆனால், அவள் அதைப் புரிந்து கொள்ளாமல் புன்னகைத்தாள்.
“மனோமி, நீ அந்த அளவுக்கு அழகற்றவள் அல்ல”- அவள் சொன்னாள்: “பார்ப்பதற்கு அப்படியொன்றும் மோசம் இல்லை. உன் உடல் இன்னும் கொஞ்சம் சதைப்பிடிப்புடன் இருந்தால், நீ அழகான பெண்ணாக மாறிடுவே... உன் தலைமுடி ரொம்பவும் சுருண்டு போய் இருக்கு. சுருட்டை முடியை இப்போ யாரும் விரும்புறது இல்லை. அது நாகரிகமற்ற மனித இனத்தின் அடையாளம் என்று நினைக்கிறார்கள். வேணும்னா நான் உன்னை அழகு நிலையத்திற்கு அழைத்துச் சென்று, உன் தலைமுடியில் இருக்கும் சுருட்டையை முழுமையாக எடுத்துவிடும்படி செய்யறேன். அதற்குப் பிறகு நீ பார்க்குறதுக்கு அழகான இருப்பே.”