மனோமி - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6653
ஒவ்வொரு நாளும் நூறு தமிழர்களாவது இந்தியாவிற்கு அகதிகளாகப் போய்க் கொண்டுதான் இருக்கிறார்களென்றும் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். இந்த இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வோ ராணுவம் மூலமான தீர்வோ சாத்தியமே இல்லை. அதையும் தாண்டிய ஒரு தீர்வே சரியாக இருக்கும். ‘நீயும் நானும் ஒருவரையொருவர் வெறுக்க முடியுமா அண்ணா?’ என்று என் தந்தை எழுதினார். எழுதும்போது என் தந்தையின் கலங்கியிருந்த கண்களை நான் பார்த்தேன்.
“அண்ணாதுரை எந்த சமயத்திலும் உன்னைக் கைவிட மாட்டார் மகளே. எனக்கு ஏதாவது நடந்தால் நீ எவ்வளவு சீக்கிரமா போக முடியுமோ, அவ்வளவு சீக்கிரமா சென்னைக்குப் போயிடணும். அண்ணாவை உன் தந்தையா நினைச்சு அவருடைய வீட்டில் போய் தங்கணும். உன்னை பொருத்தமான ஒரு ஆளுக்கு அவர் திருமணம் செய்து வைப்பார். நம்முடைய உறவினர்கள் யாரையும் என்னால நம்ப முடியவில்லை. அண்ணாவை நான் நம்புறேன்” என்றார் என் தந்தை. அன்று நான் என் தந்தையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, நீண்ட நேரம் தேம்பித் தேம்பி அழுது கொண்டே இருந்தேன். மூன்று மாதங்கள் தொடர்ந்து என் தந்தைக்கு ஸ்ட்ரெப்ரோமைன் ஊசி போடப்பட்டது. பதினெட்டு மாதங்கள் சயரோகத்திற்கான மாத்திரைகளைச் சாப்பிட்டார். எனினும், என் தந்தை மரணத்தைப் பற்றிப் பேசியபோது, என்னுடைய நல்ல எதிர்பார்ப்புகள் அனைத்தும் சுக்கு நூறாக நொறுங்கி விழுவதைப்போல் நான் உணர்ந்தேன்.
“அப்பா, உங்களுக்கு மீண்டும் உடல்நலம் நல்ல நிலைமைக்கு வரும் என்றுதானே டாக்டர் விஜயநாயக சொன்னாரு? பிறகு எதற்கு இப்படியெல்லாம் வாய்க்கு வந்ததையெல்லாம் நீங்க என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கீங்க?”
“டாக்டர்களால் விதியை சிகிச்சை செய்து மாற்ற முடியுமா மகளே?”
என் தந்தையின் மரணத்திற்குப் பிறகு, எங்களுடைய பக்கத்து வீட்டுக்காரரின் மூத்த மகன் நிஸ்ஸாம்க என்னிடம் சொன்னான்:
“மனோமி, நீ இந்தியாவிற்குப் போகக்கூடாது. இது.... எங்களின் – சிங்களர்களின் மானப் பிரச்சினை. ஒரு சிங்கள இளம் பெண்ணைப் பத்திரமாக வைத்துக் காப்பாற்ற இலங்கையில் ஆண்களே இல்லை என்று நீ நினைக்கிறாயா? உன்னை நான் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கேன். சின்ன வயசுல இருந்தே நாம ரெண்டு பேரும் ஒருவரையொருவர் நன்கு தெரிந்தவர்கள் ஆச்சே!”
“என் தந்தை கூறியபடி நடக்காமல் இருக்க என் மனம் அனுமதிக்காது. நான் மூன்று மாதங்கள் அங்கு தங்குவேன். அதற்குப் பிறகு என் எதிர்காலத்தை எந்த நாட்டில் செலவழிக்க வேண்டியது என்பதைப் பற்றி நான் தீர்மானிக்கிறேன். நிஸ்ஸாம்க, உங்களை நான் தினமும் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பேன்.”
“நான் கல்லூரியில் படிக்காதவனாக இருப்பதால், என்னைத் திருமணம் செய்து கொள்ள நீ தயங்குகிறாயா?”
“நிச்சயமா இல்ல. நான் இந்தியர்கள்மீது அன்பு செலுத்தி வளர்ந்தவள். இந்தியர்களைப் பிறவி எதிரிகளாக நினைக்க எனக்கு மனம் வரவில்லை. எவ்வளவு முயற்சி செய்தாலும், என்னால் யாரையும் வெறுக்க முடியவில்லை. என் ரத்தத்தில் காலத்திற்கேற்றபடி வெப்பம் உண்டாகவில்லை. இந்தியாவில் புலிகளுக்காக இருபது பயிற்சி முகாம்களை எல்.டி.டி.ஈ. தலைவர் பிரபாகரன் இந்திய அரசாங்கத்தின் மற்றும் முதலமைச்சர் ராமச்சந்திரனின் அனுமதியுடன் தமிழ்நாட்டில் ஆரம்பித்திருக்கிறார் என்று என்னிடம் சமீபத்தில் ஒரு நாள் சொன்னீங்க. உங்களுடைய கண்களில் இருந்து நெருப்புப் பொறிகள் உண்டாவதைப் போல் அன்று நான் உணர்ந்தேன். அதற்குப் பிறகும் இந்தியர்கள்மீது என் மனதில் கோபம் உண்டாகவில்லை. நான் அமைதியாக இருந்தேன். அன்னைக்கு நீங்க என்னைப் பார்த்து ‘மனோமி, நீ யார் பக்கம் இருக்குறே? எங்கள் பக்கமா இந்தியர்கள் பக்கமா?’ என்று கேட்டீங்க.
‘நான் இரண்டு பக்கங்களில் இருப்பவர்களையும் ஒன்றாகவே பார்க்கிறேன்’ என்று அந்த நிமிடத்தில் உங்களிடம் கூறுவதற்கான தைரியம் என்னிடம் இல்லாமல் போய்விட்டது. அதனால், நான் இப்போது அந்த உண்மையை மனம் திறந்து கூறுகிறேன். நிஸ்ஸாம்க, இந்தியர்களையும் சிங்களர்களையும் நான் ஒன்றாகவே நினைக்கிறேன். நான் யாரையும் வெறுக்கவில்லை” என்று நான் சொன்னேன். நிஸ்ஸாம்க என்னை அனுப்பி வைக்கக் கூட வரவில்லை. இந்தியா மீது கொண்டிருக்கும் பகைமை ஒரு தொற்று நோயைப் போல இலங்கையில் பரவிவி்ட்டிருந்தது. நெற்றியில் செந்தூரத் திலகம் வைத்து வெளியில் செல்ல பெண்கள் பயப்படத் தொடங்கியிருந்தார்கள். இந்தியப் பெண்களும் சிங்களப் பெண்களின் பாணியில் புடவைகளை அணிய ஆரம்பித்தார்கள். இளம் பெண்கள் பர்கர் இனத்தவரைப் போல ஆடைகள் அணிந்தார்கள். செய்தித் தாள்களும், சுவரொட்டிகளும், சுவர் எழுத்துக்களும் இந்திய அரசாங்கத்தை எதிர்த்தன. இளைஞர்கள் இந்திய தூதரகத்தைச் சுற்றிச் சுற்றி வந்து வாய்க்கு வந்தபடி திட்டினார்கள். இந்திய அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் வறுமையில் சிக்குண்டு கிடப்பவர்களுக்கு அரிசி, பால்பொடி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை விமானத்தின் மூலம் விநியோகம் செய்தபோது, சிங்களர்கள் கடுமையாக கோபப்பட்டார்கள். ஒரிஸ்ஸாவிலும் பீஹாரிலும் வறுமையில் உழன்று கொண்டிருப்பவர்கள் அழுது கொண்டிருக்கும்போது, இந்திய அரசாங்கம் எதற்காக இலங்கைக்கு உணவைக் கொண்டு வந்து வினியோகம் செய்கிறது என்று இளைஞர்கள் கேட்டார்கள். தமிழ் தீவிரவாதிகளை ஆதரித்துப் போற்றி, அவர்களுடைய அமைப்பை வெற்றி பெறச் செய்வதற்குத்தான் இந்தியா இப்படிப்பட்ட ஒரு தந்திரச் செயலைச் செய்து கொண்டிருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள். இளைஞர்களின் ஒரு அமைப்பின் தலைவர் என்னிடம், “மனோமி, உங்களுடைய தந்தையைக் கொன்றது சயரோகம் இல்லை. முதுமையும் அல்ல. தமிழ் தீவிரவாதிகள்தான் அவரைக் கொன்னுட்டாங்க. கட்டரகாமாவிற்கு வழிபாடு செய்வதற்காகப் போயிருந்த உங்களின் தந்தை மீது வெடிகுண்டு வீசிக் கொன்றது தமிழ்த் தீவிரவாதிகள்தான் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியும். எனினும், நீங்கள் சென்னைக்குப் போறதுல மிகவும் ஆர்வமா இருக்கீங்க. உங்களுடைய இந்த மனநிலை மிகவும் வினோதமா இருக்கிறது” என்று சொன்னார். சென்னைக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நின்றிருந்தபோது, என் இதயம் பயத்தால் மிகவும் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. எமிக்ரேஷன் கவுண்டரில் நின்றிருந்த ஒரு அதிகாரி என்னிடம் கேட்டார்:
“இதற்கான கால அளவு மூன்று மாதங்கள். என்ன தேவைக்காக இந்த மோசமான நேரத்துல நீங்கள் இந்தியாவுக்குப் போறீங்க? நம்முடைய இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை.”
“நான் சாரநாத்தையும் புத்த கயாவையும் பார்க்க விரும்புகிறேன். என் தந்தை தன்னுடைய மரணத்திற்கு முன்னால், நான் அங்கு சென்று அவருடைய ஆன்மாவுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்”- நான் சொன்னேன். அதைக் கூறும்போது என் இதயம் மிகவும் பலமாக அடிப்பதைப் போல் எனக்குத் தோன்றியது.