பாத்தும்மாவின் ஆடு - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6358
யார் பார்த்தாலும் எந்த மாறுதலும் உண்டானதாகத் தெரியாது. வாப்பா எடுப்பதைப் போலவே நானும் எடுத்தேன். அவர் ஸ்பூனால் எடுத்துவிட்டு மெதுவாக பாத்திரங்களுக்குள் இருக்கும் பொருட்களைச் சரி செய்து வைத்துவிடுவார். அதே மாதிரி நான் கையால் சரி செய்துவிட்டு வாப்பாவின் கட்டிலில் அமர்ந்து நெய்யையும் சர்க்கரையையும் சேர்த்துகுழைத்து கொஞ்சம் வாய்க்குள் போட்டு ‘கருமுரா’ என்று ஓசை உண்டாகுமாறு சுவைத்துத் தின்றேன். சர்க்கரை சரியாக நெய்யில் கலக்கவில்லை. எனினும், ஸ்டைலாக தின்று கொண்டிருந்தேன்.
அப்போது மெதுவாக, மிகவும் மெதுவாக தாழ்ந்த குரலில் ஒரு கேள்வி! நான் அதிர்ந்து போனேன். கேள்வி கேட்டது அப்துல்காதர்தான். அவன் எனக்குப் பக்கத்தில் நின்றிருந்தான்.எப்படி? எப்போது அவன் அந்த அறைக்குள் வந்தான்? என்னால் முடிவுக்கு வரமுடியவில்லை. அவன் மெதுவான குரலில் கேட்டான்: “அண்ணே... என்ன தின்றீங்க?”
நான் தாழ்ந்த குரலில் சொன்னேன்: “ஒரு மருந்து.”
“நான் உங்க பின்னாடிதான் இருந்தேன். எல்லாத்தையும் நான் பார்த்தேன். எனக்கும் அதைத் தரணும். இல்லாட்டி நான் சொல்லிடுவேன்.”
பெரிய ரகசியத்தைப் போல் எண்ணி மெதுவாக நான் கேட்டேன். “டேய், நீ என் தம்பிதானே?”
“அப்படின்னா எனக்கும் அதைத் தரணும்.”
நான் அவனுக்கும் கொடுத்தேன். பாத்திரத்தை நக்கி சுத்தமாக்கியது அவன்தான்.
“இனிமேல் நான் எடுக்க மாட்டேன்.” -நான் சொன்னேன்: “நீயும் எடுக்கக் கூடாது.”
சரியென்று ஒப்புக்கொண்டு நாங்கள் வெளியே புறப்பட்டோம். பாத்திரங்களை அவை இருந்த இடத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டு உலகத்தில் எதுவும் நடக்கவில்லை என்பது மாதிரி நாங்கள் நடந்தோம். அந்தச் சம்பவத்தை அத்துடன் நாங்கள் மறந்து விட்டோம்.
அதற்குப் பிறகு நெய்யையும் சர்க்கரையையும் நான் எடுக்கவில்லை என்பது பரம உண்மை. நெய்யின் குணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. இருந்தாலும் எதுவுமே இல்லாமல் இருந்தபோது நெய்யையும் சர்க்கரையையும் கலந்து சாப்பிட்டேன். அவ்வளவுதான் தின்பதற்கு எத்தனையோ பொருட்கள் வீட்டில் இருக்கின்றன. பழுத்த பலாப்பழம் இருக்கிறது. மாம்பழம் இருக்கிறது. மாமிச வறுவல் ஒரு பாத்திரம் நிறைய அலமாரியில் இருக்கிறது. நான் இந்த விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்தினேன். விஷயம் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருந்தது. நாட்கள் நீங்கிக் கொண்டிருந்தன. நான் தினமும் அடி, உதை வாங்கிக் கொண்டிருந்தேன். அப்துல்காதருக்கு உடம்பில் வீக்கம்!
நான் அடி வாங்கியதற்குக் காரணம்- யாரோ நெய்யைத் திருடித் தின்கிறார்கள் என்பதுதான். பாத்திரங்களின் வெளிப்பகுதியிலும் கட்டிலிலும் ரேகைகள் இருந்தன. நான் அடிகள் வாங்கினேன். அப்துல்காதருக்கு வந்த வீக்கம் உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான். அவன் நாளுக்கு நாள் பெருத்துக் கொண்டே இருந்தான். எப்போதும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பான். எதையும் சாப்பிட முடியாது.
“பிள்ளைக்கு ஏதோ நோய் பிடிச்சிருக்கு!” -உம்மாவும் நங்ஙேலியும் சொன்னார்கள். வாப்பா ஜோதிடரை அழைக்கப் போனார். ஜோதிடர்தான் அப்போது பெரிய வைத்தியர். ஆயுர்வேதம்தான் சம்பவம். பார்க்க வேண்டும் அல்லவா?
அப்போது உம்மா அப்துல்காதரைத் தன்னுடைய மடியில் வைத்துக்கொண்டு கவலையுடன் தடவினாள்.
“கடவுளே! என் தங்கத்துக்கு என்ன ஆச்சு?”
நங்ஙேலி சொன்னாள்: “கடவுளே! என் தங்கக் குடத்துக்கு எதுவுமே வராம இருக்கணும்.”
அப்துல்காதர் எந்தவித கவலையும் இல்லாமல் வீங்கிப் போய், தடியனாக, முக்கிய நபராக மாறிவிட்டிருந்தான்.
நான் அவனுடைய முகத்தைப் பார்த்தேன். டேய், திருடா! நீ அந்த நெய்யைத் திருடித் தின்று உடல் பெருத்துப் போய் இருக்கிறாய் அல்லவா? அதுவும் தவறு எதுவுமே செய்யாதது மாதிரி நடித்துக் கொண்டு…
அவனுக்கு எந்தவித கூச்சமும் இல்லை. ஜோதிடர் வந்தார். அது முடிந்ததும் இன்னொரு வைத்தியனான வேலன் வந்தான். அதற்குப் பிறகு ஒரு முஸ்லீம் வந்தார்.
நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. நெய் குறைந்துகொண்டே வந்தது. வழக்கம்போல அடி, உதைகளை நான் வாங்கிக் கொண்டிருந்தேன்.அப்துல்காதர் தடியாகிக் கொண்டே வந்தான். அவன் மருந்து எதுவும் குடிப்பதில்லை. யாருக்கும் தெரியாமல் அவன் அதைக் கீழே ஊற்றி விடுவான். எப்போதாவது கொஞ்சம் சாதம் சாப்பிடுவான். அவன் வீங்கிப் போய் இருந்ததால் எல்லாரும் அவன் மீது மிகவும் பிரியமாக இருந்தார்கள். அவனுக்குச் சிறிதுகூட களைப்பு தோன்றாது. தன் விருப்பப்படி நடப்பான். சரியான ஆள்தான்!
தினமும் அவன் நெய்யையும், சர்க்கரையையும் தின்று கொண்டிருக்கிறான் என்ற விஷயம் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அதை யாரிடம் சொல்வது? அப்படியே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.
ஒருநாள் நான் அவனுக்குக் கொஞ்சம் வறுத்த மாமிசத்தைக் கொடுத்தேன். யாருக்கும் தெரியாமல் அலமாரியிலிருந்து நான் திருடி எடுத்தது அது. அவன் அதை வாங்கித் தின்றான். நான் சொன்னேன்:
“டேய், நீ என் தம்பி! உண்மையைச் சொல்லு. நீ தடிமாடு மாதிரி இருக்கிறதுக்கு என்ன காரணம்? நெய்யையும் சர்க்கரையையும் திருடி தின்னுறதுனாலதானே?”
“அப்படியெல்லாம் பேசக்கூடாது, அண்ணே. எனக்கு உடம்புக்குச் சரியில்லைன்னு சொல்லலியா?”
அவன் பொய் சொல்கிறான் என்பதை எல்லாருக்கும் எப்படி தெரிய வைப்பது? அப்படியே சொன்னாலும் யார் அதை நம்புவார்கள்? எனினும், நான் உம்மாவிடம் சொன்னேன்- நங்ஙேலியிடமும் சொன்னேன்- நெய்யையும் சர்க்கரையையும் தின்று தீர்க்கும் பெரிய திருடன் அப்துல்காதர் என்ற விஷயத்தை.
நான் ஏற்கெனவே சொன்னதைப் போல் யாரும் அதை நம்பவில்லை. என்னுடைய இதயத்தின் சுத்தத்தால் ஒரு சம்பவம் நடைபெற்றது. ஒரு வெள்ளிக்கிழமை. வாப்பா தொழுகைக்காக பள்ளிவாசலுக்குப் போயிருந்தார். உம்மா சில பெண்களுடன் பக்கத்து வீட்டில் அமர்ந்து பேன் பார்ப்பதற்கு இடையில் ஊர் கதைகளைக் கூறிக் கொண்டிருந்தாள். பேச்சுக்கு மத்தியில் அப்துல்காதரின் நோயைப் பற்றியும் சொன்னாள். அதையெல்லாம் கேட்டவாறு நான் வீட்டிற்குள் வந்தேன். நங்ஙேலி தூங்கிக் கொண்டிருந்தாள். சமையலறைக்குள் நுழைந்த நான் அங்கிருக்கும் விஷயங்களை ஆராய்ந்தேன். சிலவற்றை கையை நுழைத்து எடுத்துத் தின்றேன். பிறகு வீட்டிற்குள்ளிருந்து வராந்தாவை நோக்கி மெதுவாக நடந்தேன். வாப்பா படுத்திருக்கும் அறையில் ஏதோ ஒரு சத்தம் கேட்டது. ஒரு ‘கருமுரா’ சத்தம்! நான் மெதுவாக பார்த்தேன். வாப்பாவின் கட்டிலுக்குக் கீழே இரண்டு கால்கள் தெரிந்தன. ஒரு ஊனமான கால்!
அப்துல்காதர் நெய்யையும் சர்க்கரையையும் தின்று கொண்டிருக்கிறான்!
நான் மெதுவாக, மிகவும் மெதுவாக வெளியே ஓடி உம்மாவின் அருகில் சென்றேன்.
“அப்துல்காதரோட உடல் வீக்கத்திற்கான காரணத்தைப் பார்க்கணுமா? ஓடி வாங்க...”