குட்டி அக்கா - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
பெரியம்மாவிற்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தார்கள். குட்டி அக்காவும் ஜானு அக்காவும்.
ஜானு அக்கா பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். நல்ல வெள்ளை நிறம். நீல நிற நரம்புகள் தெளிவாகத் தெரியும் கைகள் வாழைக் குருத்தைப் போல மினுமினுப்பாக இருக்கும். அவள் அருகில் வரும்போது சந்தன சோப்பின் வாசனை இருக்கும்.
எப்போதும் அவளுடைய முண்டும் ரவிக்கையும் வெள்ளை வெளேரென்று இருக்கும். ஆனால், எனக்கு அதிக விருப்பம் குட்டி அக்காவிடம்தான். குட்டி அக்கா கறுப்பு நிறத்தில் இருப்பாள். ஜானு அக்காவின் கருத்துப்படி, தொட்டு கண்ணில் மை இடலாம். சிரிக்காமல் இருக்கும்போதுகூட பெரிய இரண்டு பற்களின் நுனியும் வெளியே தெரியும். அவளுடைய கையைப் பிடிக்கும்போது, காய்ந்த விறகுக் கொள்ளியைப் பிடிப்பதைப்போல இருக்கும். என்ன ஒரு சொரசொரப்பு! கறுத்த புள்ளிகள் போட்ட ரவிக்கையைத்தான் அவள் தினமும் அணிந்திருப்பாள். அவற்றில் நிறைய அழுக்கு இருக்கும். முண்டில் மண்ணும் கரியும் இல்லாத நேரமே இல்லை. அருகில் வரும்போது, வியர்வை, எண்ணெய், நனைத்துக் காயப் போடாமல் அணிந்த ஈரத்துணி ஆகியவற்றின் வாசனை வரும்;வாந்தி வரும்.
ஒரு விஷயம் விட்டுப் போய்விட்டது. குட்டி அக்காவின் இடது காதில் ‘மணி’ இருக்கும். மணி என்றால் ஒரு துண்டு சதை துருத்திக் கொண்டு நின்றிருக்கும். அவள் அருகில் வந்து நிற்கும் போது, பேசும்போது, தலையை விரித்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும்போது எல்லாம் நான் ‘மணி’யையே பார்த்துக் கொண்டிருப்பேன். குட்டி அக்கா அதைத் தொடுவதைப் பார்க்கும்போது, வெறுப்பு தோன்றுவது எனக்குத்தான்.
எனினும் குட்டி அக்காவை எனக்குப் பிடிக்கும்.
வீட்டில் யாருக்கும் குட்டி அக்காவைப் பிடிக்காது. பெரியம்மா பார்க்கும்போதெல்லாம் வாய்க்கு வந்தபடி திட்டுவாள். காரணங்கள் எப்போதும் ஒன்றுதான். அடக்கம் இல்லை, நாணம் இல்லை. தோட்டம் முடியப்போகிற காலத்தில் பூ பூக்கும் என்றொரு தத்துவத்தையும் திட்டுவதோடு சேர்த்து பெரியம்மா கூறுவாள். அதனாலும் முடியவில்லையென்றால், “நீ ஆகுற காலத்தில் நக்கப் பூவும் நாராயணக் கல்லும் இருக்காது” என்பாள்.
எப்போதும் கேட்கக் கூடியதுதானே என்பதாக இருக்கலாம்- குட்டி அக்கா அப்போது சத்தம் போட்டுச் சிரிப்பாள். அதைப் பார்த்தால் பெரியம்மாவிற்கு கோபம் பயங்கரமாக வரும். பக்கத்தில் கிடக்கும் வெட்டுக் கத்தியையோ மரக்கொம்பையோ எடுத்து அடிப்பதற்காக ஓங்கியவாறு கூறுவாள்: “போ... என் முன்னால இருந்து போயிடு. இது என் வயித்துல உண்டானப்போ என் பிறவியே பாழாயிடுச்சு.”
பெரியம்மா கூறுவதை குட்டி அக்கா பெரும்பாலும் கேட்க மாட்டாள். என்னுடன் நடந்து திரிந்து விளையாடுவதில்தான் அவளுக்கு விருப்பம் அதிகம். வேலிக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டு கல் விளையாட்டு விளையாடுவாள். மணலில் குழி தோண்டி வண்டு படித்துத் தருவாள். இவையெல்லாம் பெரியம்மாவின் கண்களில் படாமல் நடக்க வேண்டும். என்னுடைய தாயும் பார்க்கக்கூடாது. பார்த்தால் திட்டுதல் கிடைப்பது எனக்கல்ல; குட்டி அக்காவிற்குத்தான்.
“மாளுக்குட்டி!”
பெரியம்மா அழைப்பாள் -இடி முழங்குவதைப் போன்ற குரலில்.
அவள் அழைப்பதைக் கேட்காவிட்டால் அதற்குப் பிறகும் ஒரு அழைப்பு கேட்கும்.
“அடியே நாசமாப் போறவளே!”
“அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு?”
குட்டி அக்காவிற்கு அது பிடிக்காது.
“ஒண்ணைப் பார்க்கப் போற பெண்ணடி நீ? நீ என்ன சின்ன குழந்தையாடீ? தெரியாமலா ரெண்டு ரவிக்கைகளோட ஒருத்தன் வராமல் இருக்கான்?”
குட்டி அக்கா விளையாடித் திரியக்கூடாது. தோஷம் இருக்கிறது- குட்டி அக்காவைத் தேடி ஒரு ஆள் வரப்போவது இல்லை!
பெரியம்மா என்னைத் திட்டமாட்டாள். அறிவுரை கூறுவாள்:
“வாசு, நீ ஒரு ஆண் பிள்ளை. நீ இந்தப் பெண்ணின் வாலைப் பிடிச்சுக்கிட்டு திரியக்கூடாது.”
பெரியம்மாவிற்கு நானும் ஒரு தத்துவத்தைக் கூற விரும்பினேன்.
‘கல் ஆடும் முற்றத்தில் நெல் ஆடாது.’
குட்டி அக்கா ஒரு இடத்தில் அடங்கி இருக்க மாட்டாள். எல்லோருடனும் சண்டை போடுவாள். குளத்தின் படித்துறைக்கு ஒவ்வொரு நாளும் போவதே ஒரு பிரச்சினையை உண்டாக்குவதற்குத்தான். மீனாட்சி அம்மாவின் வெள்ளிக் கிண்ணத்தை நீருக்குள் வீசி எறிந்துவிட்டாள். சும்முக் குட்டியின் முதுகில் அடித்து ஒரு வழி பண்ணி விட்டாள். ‘நீர் பிசாசு’ என்று அழைக்கப்பட்ட மூகாமி அம்மாவின் உடல் மீது நீரைத் தெறிக்கும்படி செய்து விட்டாள். இப்படிப் பல குற்றச்சாட்டுகள். அம்மாவும் பெரியம்மாவும் நூறு தடவை தடுத்தாலும், நாழியில் நீர் கோரத்தான் செய்வாள்.
மதிய நேரத்தில் குட்டி அக்காவிற்கென்று ஒரு சுற்றும் பழக்கம் இருந்தது. வீட்டைத் தாண்டி இருக்கும் வளைவு, வடக்குப்பக்க வீடு, காளியின் வீடு, ஆமினும்மாவின் வீட்டு வாசல் ஆகிய எல்லா இடங்களிலும் சுற்றி நடந்து விட்டுத்தான் திரும்பி வருவாள். குட்டி அக்கா, ‘ஒண்ணைப் பார்க்கப் போகும் பெண்ணாக இருப்பதால், அப்படி நடந்து திரியக்கூடாது’ என்று என் தாய் சொன்னாள், பெரியம்மா சொன்னாள். பெரியம்மா புளியமரத்தின் குச்சி ஒடியும் வரை அடித்துப் பார்த்தாள். ஆனால், குட்டி அக்கா அதை நிறுத்தவில்லை.
சாப்பிட்டு முடித்துவிட்டால் பெரியம்மா நடுக்கூடத்தில் படுத்துத் தூங்க ஆரம்பித்து விடுவாள். அம்மா வடக்குப்பக்க அறையில் படுப்பாள். ஜானு அக்காவின் அறை மாடியில் இருக்கிறது. சாப்பிட்டு முடித்துவிட்டால் வெற்றிலை போட்டு உதட்டைச் சிவப்பாக்கிக் கொண்டு மாடியிலிருக்கும் அறையின் படியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவள் ‘சரோஜினியின் கொடுமை’யைப் பாட ஆரம்பித்துவிடுவாள்- மெதுவாகத்தான். ஜானு அக்காவிற்குப் படிக்கத் தெரியும். எழுதுவதற்கும் படித்திருக்கிறாள். குட்டி அக்காவுடன் சண்டை போடும்போதெல்லாம் அவள் கூறுவாள்:
“குட்டி அக்கா, நான் இரண்டெழுத்து படிச்சவளாக்கும்.”
இடையில் அவ்வப்போது நான் ஜானு அக்காவின் அறையைத் தேடிச் செல்வேன். பாட்டுப் புத்தகம் படிக்காத வேளைகளில் அவள் கண்ணாடிக்கு முன்னால் உட்கார்ந்து, நெற்றியில் தலைமுடியைச் சுருட்டி வைத்துகொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருப்பாள். அவளுடைய உடலை எங்காவது தொட்டு விட்டால் அவள் கூறுவாள்:
“நீ என் உடம்பை அழுக்காக்கி விட்டாய்.”
படுக்கையைத் தொடக்கூடாது. பாட்டுப் புத்தகத்தைத் தொடக்கூடாது. பெட்டியின்மீது வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடியையும் சாந்து புட்டியையும் கண்மை டப்பாவையும் தொடக்கூடாது. உண்மையாகச் சொல்லப்போனால், ஜானு அக்காவின் மை டப்பாவைப் பார்ப்பதற்காகத்தான் நான் அங்கு போகிறேன். நல்ல அழகான மை டப்பா. அதில் முக்கால் வட்டத்தில் ஒரு கண்ணாடி பதிக்கப்பட்டிருக்கும். ஆனால் நான் அறைக்குள் நுழைந்தவுடன், ஜானு அக்கா பதைபதைப்பு அடைந்து விடுவாள். “பையா, பேசாமல் இரு. இதைத் தொடக் கூடாது... பையா, இதைத் தொடாதே... பையா, அதைத் தள்ளி விட்டுடாதே.”