குட்டி அக்கா - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
“நீ இனிமேல் கேட்கக் கூடாததையெல்லாம் கேட்கும்படி செய்வாய். இனிமேல் வீட்டு முற்றத்துல காலை எடுத்து வச்சா, உன் பிணம் இங்கே கிடக்கும்.”
குட்டி அக்கா அழாமல் கன்னத்தைத் தடவிக் கொண்டே மாடிக்கு ஏறிச் சென்றாள். பெரியம்மா அப்போது சொன்னாள்:
“ஆண் இல்லைன்னா வீட்டின் தூணுக்காவது பயப்படணும்டீ...”
அதற்குப் பிறகு குட்டி அக்காவிற்கு வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லாமல் போய்விட்டது. குட்டி அக்கா யாருடனும் பேசாமல் மாடியில் எங்காவது படுத்திருப்பாள். என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டாள். கல் விளையாட்டு விளையாடவும், பதினைந்து நாயும் புலியும் விளையாட்டு விளையாடவும் வருவதில்லை.
ஒருநாள் மாலை மயங்கிய நேரத்தில் வேலிக்கு அருகில் நின்றுகொண்டு குட்டி அக்கா யாருடனோ பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டார்கள். பார்த்தது ஜானு அக்காதான். ஜானு அக்கா நெருப்பு கலந்த வார்த்தைகளைக் கொட்டினாள்:
“நான் பார்த்துட்டேன் குட்டி அக்கா!”
“பார்த்தது நல்லதுதான்.”
“வெட்கம் இருக்கணும் குட்டி அக்கா... தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருத்தனுடன்...”
“நீ என்னைத் திருத்த வேண்டாம்.”
சொல்லிச் சொல்லி ஜானு அக்கா, காதில் மணியை அறுத்த கதையைச் சொன்னாள். கருப்பு பூரான் என்று அழைத்தாள். ஜானு அக்கா ஒரு அடி வாங்க வேண்டிய நேரம் வந்தபோது, பெரியம்மா ஓடி வந்தாள்.
“சாயங்கால நேரத்துல என்னடீ பண்றீங்க?”
ஜானு அக்கா அழுதுகொண்டே விஷயத்தைச் சொன்னாள். வேலிக்கு அருகில் நின்றுகொண்டு குட்டி அக்கா ஒரு ஆணுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததால்தான் இதெல்லாம் என்றாள் அவள். அது என்னுடைய குற்றமா என்று அவள் கேட்டாள்.
பெரியம்மா தலையில் கை வைத்து, தளர்ந்து போய் உட்கார்ந்து விட்டாள். என் தாய் முணுமுணுத்தாள்:
“குடும்பத்தின் பெயரை நாசமாக்கிடுவா.”
பெரியம்மா திடீரென்று மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த துடைப்பத்தை எடுத்து குட்டி அக்காவை தலையிலிருந்து கால்வரை அடித்தாள்.
“ஒண்ணு... நீ திருந்தனும். இல்லாவிட்டால் சாகணும்.”
குட்டி அக்காவைக் கொன்று விடுவாள் என்பது மாதிரி தோன்றியது. நான் பயந்துபோய் என் தாயைக் கட்டிப் பிடித்துக்கொண்டேன்.
“சொல்லுடீ... இனி அப்படி பேசிக்கிட்டு இருப்பியா?”
மீண்டும் அடி...
“குட்டி அக்காவை அடிக்கக் கூடாது அம்மா”- நான் என் தாயிடம் அழுதுகொண்டே சொன்னேன்.
“அவளுக்கு அது தேவைதான் மூதேவி!”
குட்டி அக்கா அழவில்லை. அடி விழுந்தபோது, கதவின் பலகையைப் பிடித்துக்கொண்டு நெளிந்தாள்.
மீண்டும் அடி...
“இனி அப்படி பேசிக்கிட்டு இருப்பியா?”
அடி...
“நான் சாகப் போறேன்.”
“நீ சாகுடி...”
“நான் என் உயிரை விட்டுருவேன்.”
“நீ சாகுடி...”
துடைப்பத்தின் கட்டு அவிழ்ந்து ஈர்க்குச்சிகள் சிதறின. பெரியம்மா ஒரு பெரிய சத்தத்துடன் தரையில் விழுந்து உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள். நான் என் தாயின் மார்பில் இருந்து முகத்தை எடுத்துப் பார்த்தபோது, கதவின் பலகையைப் பிடித்து நின்று கொண்டு, கண்களை மூடியவாறு குட்டி அக்கா சொன்னாள்:
“நான் சாகப் போறேன்.”
அன்று இரவு வீட்டில் எந்தவொரு சத்தமும் அசைவும் கேட்கவில்லை. யாரும் பேசவில்லை.
குட்டி அக்கா உள்ளறையின் ஒரு ஓரத்தில் பாயில் கவிழ்ந்து படுத்திருந்தாள்.
பெரியம்மா சாப்பிடவில்லை. என் தாய் போய் அழைத்தபோது, குட்டி அக்கா வேண்டாம் என்று கூறிவிட்டாள். அப்போது ஜானு அக்காவிற்கும் சோறு தேவையில்லை. எனக்கும் சோறு தேவையில்லை. என் தாய் வற்புறுத்தினாள். எனக்குத் தேவையில்லை. எப்போதும் இல்லாத வகையில் என் தாய் என்னுடைய தொடையில் ஒரு அடி கொடுத்தாள். ஒரு காரணம் கிடைப்பதற்காக நான் காத்திருந்தேன். குலுங்கிக் குலுங்கி அழுதவாறு நான் குட்டி அக்காவிடம் போய் விழுந்தேன். குட்டி அக்கா தளர்ந்துபோன குரலில் கேட்டாள்:
“வாசு, நீ சாப்பிட்டியா?”
“எனக்கு வேண்டாம்.”
என் தாய் படுக்க வரும்படி என்னை அழைத்தாள். யாரிடம் என்றில்லாமல் கோபத்துடன் நான் சொன்னேன்:
“நான் இங்கேயே படுத்துக்குறேன்.”
வெளிக்கதவும் சமையலறையின் கதவும் அடைக்கப்படும் சத்தம் கேட்டது. விளக்குகள் அணைந்தன. எனக்கு தூக்கம் வரவில்லை. குட்டி அக்காவும் தூங்கவில்லை என்று தோன்றியது. அவளுடைய மார்போடு சேர்ந்து கொண்டு படுத்திருந்தபோது, தேம்பி அழும் சத்தம் கேட்டது. இருட்டில் சிறிது நேரம் கண்களைத் திறந்து கொண்டு படுத்திருந்த பிறகு, நான் மெதுவான குரலில் அழைத்தேன்.
“குட்டி அக்கா!”
“தூங்கு...”
“ரொம்ப வலிச்சதா?”
“இல்ல... தூங்கு...”
அவளுடைய ஈரமான மார்புடன் ஒட்டிக்கொண்டு நான் படுத்திருந்தேன்.
“வாசு, நீ நல்ல பிள்ளையா வரணும். அம்மாவையும் பெரியம்மாவையும் நல்லா பாத்த்துக்கணும்.”
நான் ‘உம்’ கொட்டினேன். என் முதுகில் குட்டி அக்காவின் விரல்கள் தாளம் போட்டுக் கொண்டிருந்தன.
“தூங்கு மகனே... தூங்கு...”
படிப்படியாக நான் கண்களை மூடினேன்.
பொழுது விடியும் நேரத்தில் ஒரு அழுகைச் சத்தம் கேட்டு, திடுக்கிட்டு நான் எழுந்தேன். கண்களைக் கசக்கிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தபோது, என் தாயும் பெரியம்மாவும் தலையில் கை வைத்து அழுதுகொண்டிருந்தார்கள். ஜானு அக்காவும் இருந்தாள். அவள் பெரியம்மாவைக் கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருந்தாள். பயத்துடன் நான் பார்த்தேன். அப்போது உள்ளறையின் உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருந்த கயிறின் நுனியில் குட்டி அக்காவின் இறந்த உடல் ஆடி கொண்டிருந்தது.