யானைவாரியும் தங்கச் சிலுவையும்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6520
கடவுளின் அருள் சேர்த்துச் சொல்கிறேன். இந்த ஊரில் இரண்டு யானைகள். சாந்தங்கேரி மனை வகையைச் சேர்ந்தது. ஒன்றின் பெயர் கொச்சு நீலாண்டன். இன்னொன்றின் பெயர் பாருக்குட்டி. இரண்டு யானைகளுமே ஊரில் வாழும் மக்களின் அன்புக்குப் பாத்திரமானவை.
கொச்சு நீலாண்டன் பெரிய போக்கிரி. நிற்கும் போதே பந்தாவாக இருக்கும். பலமான இரண்டு நீண்ட வெள்ளைத் தந்தங்கள் முன் நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும். இரண்டு தந்தங்களின் நுனியும் ஊசிபோல் இருக்கும். உலகத்தில் நித்தமும் நடக்கும் செயல்களில் ஏதாவது அவனுக்குத் தொந்தரவு தருவது மாதிரி தோன்றிவிட்டால் அவ்வளவுதான்...
ஒரு யானைப் பாகனைக் கொன்றுவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். இந்த ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு சாத்தங்கேரி மனையின் தலைவரான கொச்சு நாராயணன் நம்பூதிரிப்பாடு, ஏகப்பட்ட யானைப் பாகன்களை எப்போதும் வீட்டில் "ஸ்டாக்" வைத்திருப்பார். கொச்சு நீலாண்டனுக்கு மட்டும் யானைப் பாகன்களாக எப்போதும் ஆறு பேர் இருப்பார்கள். இதில் வழுக்கைத் தலையைக் கொண்டவர்கள் யாருமில்லை. தலைமுடியைச் சுற்றிப் பிடித்து மரத்தில் ஓங்கி அடித்துதான் கொச்சு நீலாண்டன் இதற்கு முன்பு யானைப் பாகன்களைக் கொன்றிருக்கிறான். அதற்குப் பிறகு கூர்மையான தந்தங்களால் யானைப் பாகன்களைக் குத்தவும் செய்வான், படுகோபத்துடன். இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால், தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் கோபத்துடனே இருப்பான். இந்த நாட்கள் ஊரில் ஒரு பெரிய கொண்டாட்டமாகவே இருக்கும்.
இதுவரை கொச்சு நீலாண்டன் பதினொரு யானைப் பாகன்களை மரங்களில் அடித்தும், தந்தத்தால் குத்தியும் கொன்றிருக்கிறான்.
பாருக்குட்டி இந்த மாதிரியில்லை. அவள் சாது. கொம்புகள் இல்லை. அவள் இதுவரை யாரையும் கொன்றதும் இல்லை; கொன்றுவிட்டு அட்டகாசமாக ஆர்ப்பரிக்கவும் இல்லை. இருக்கிற இடமே தெரியாது. அவளுக்குப் பெயருக்கு ஒரே ஒரு யானைப் பாகன்தான். அவனே இல்லை என்றால்கூட பிரச்சினை இல்லை. அந்த அளவுக்கு அமைதியான குணத்தைக் கொண்டவள் அவள். அவளை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தொடலாம். ஆனால் வாலில் இருக்கும் ரோமத்தை இழுத்து வேதனைப்படுத்தக் கூடாது என்பது மட்டும்தான் அவளைப் பற்றிய விஷயம்.
2
கொச்சு நீலாண்டனை விரும்புவதையும், பாருக்குட்டியை வெறுப்பதையும் தன் அன்றாட பழக்கவழக்கமாய்க் கொண்ட ஒரு நபரும் அந்த ஊரில் இருந்தார். அவர் பெயர் யானைவாரி ராமன் நாயர். மாறாக பாருக்குட்டிமேல் அளவற்ற பிரியம் வைத்திருப்பதோடு நிற்காமல், அவளுக்கு வெல்ல உருண்டை, பழம் ஆகியவற்றை வாங்கிக் கொடுப்பதுடன், கொச்சு நீலாண்டனை வெறுக்காமல் இருக்கும் ஒரு மனிதரும் அந்த ஊரில் இருக்கவே செய்தார். அவர் தங்கச்சிலுவை தோமா.
இந்த உலகம் இதில் வாழும் எல்லாருக்குமே சொந்தமானது. சொந்தத்தில் பொருட்களை ஆளுமை செய்வது விரும்பத்தக்கது அல்ல. யாருடைய பொருளையும் யாரும் எடுக்கலாம். இப்படிப்பட்ட சமதர்மக் கொள்கையைக் கொண்டவர்கள் யானைவாரி ராமன் நாயரும், தங்கச்சிலுவை தோமாவும், அவர்களின் கூட்டத்தைச் சேர்ந்த மற்றவர்களும்.
யானைவாரியும் தங்கச்சிலுவையும் தோழர்கள். பல வருடங்களுக்கு முன்பு அம்முக்குட்டி என்ற பெயரைக் கொண்ட ஒரு மங்கை ராமன் நாயரைக் காதலிப்பதாகச் சொல்லி, கடைசியில் அவரை ஏமாற்றிவிட்டாள். அந்த நாள் முதல் இந்த நாள் வரை அதனாலேயே பெண் இனம் என்றாலே ராமன் நாயருக்கு ஒரு வெறுப்பு. இதற்கு நேர் எதிராக பெண்கள் என்றாலே பாசமும் மதிப்பும் கொண்ட மனிதர் தங்கச்சிலுவை தோமா.
சில நேரங்களில் ராமன் நாயர் எங்கிருந்தோ நான்கு அல்லது ஐந்தணா (ஒரு அணா- ஆறு பைசா. நாலணா அன்று கால் ரூபாய்) சம்பாதித்து, பழமும் வெல்லமும் வாங்குவார். அவற்றுடன் கொச்சு நீலாண்டனும் பாருக்குட்டியும் இருக்கிற இடத்திற்குப் போவார். பாருக்குட்டியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே வெல்லத்தையும் பழத்தையும் கொச்சு நீலாண்டனுக்குக் கொடுப்பார். இதனால் பெரிதாக மன வேதனை அடையவில்லை என்றாலும், பாருக்குட்டி பெரிய குரலில் பிளிறுவாள். என்ன இருந்தாலும் பெண் அல்லவா? அப்போது யானைவாரி கூறுவார்.
"போடி கழுதை...''
இப்படிப்பட்ட நேரங்களில் தங்கச்சிலுவை தோமா கேட்பார்.
"யானைவாரி... உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருக்கா?''
யானைவாரி மகா கோபக்காரர். நீண்ட மூக்கை உடையவர். அவர் கோபத்துடன் கூறுவார்:
"தங்கச்சிலுவையே... பேசாமல் போயிடு. இல்லாட்டி உன் மூக்கைச் சீவி உப்புல போட்டு புரட்டிடுவேன்.''
தங்கச்சிலுவை தோமா சமாதானப்பிரியர். அவர் பதிலுக்கு ஒன்றுமே கூறாமல் வெறுமனே இருப்பார்.
யானைவாரியும் தங்கச்சிலுவையும் முன்பு வெறும் ராமன் நாயராகவும் தோமாவாகவும் இருந்தவர்கள்தான். இவர்கள் இருவருக்கும் "யானைவாரி", "தங்கச்சிலுவை" என்ற அடைமொழிகளை யார் கொடுத்தது? இந்தக் கேள்வியை குறைந்தபட்சம் நூறு முறை இந்த சரித்திர எழுத்தாளர் இவர்கள் இருவரிடமும் கேட்டாகிவிட்டது. இறுதியில் இருவருமே இந்தப் பெயர்கள் வந்ததற்கான காரணத்தை ஆதாரப்பூர்வமாகக் கூறவும் செய்தார்கள். ஊரில் உள்ள எல்லாருக்கும் இந்தக் கதை தெரியும். சரித்திரம் படிக்கும் மாணவர்களுக்காக நான் அதை இங்கு விவரமாகக் கூறுகிறேன்.
கொச்சு நீலாண்டன் ஆறாவது யானைப் பாகனைக் கொன்றுவிட்டு ஒன்றுமே செய்யாதது மாதிரி வெறுமனே நடந்து கொண்டிருந்த காலம் அது.
அன்று ராமன் நாயர் வெறும் ராமன் நாயரும் தோமா வெறும் தோமாவும்தான். அவர்களின் அன்புக்குப் பாத்திரமான தோழர்களான தொரப்பன் அவரானும், டிரைவர் பப்புண்ணியும் அந்தக் காலத்தில் தீவட்டிக் கொள்ளை, வெளியில் இருந்து திறந்த வீட்டுக்குள் நுழைவது, வீட்டைக் கொள்ளை அடிப்பது போன்ற கலைகளில் மேல்படிப்பு கற்பதற்காக வெளிநாடுகளில் பயணம் செய்து கொண்டிருந்ததால், ஊரில் உண்டாகும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பை ராமன் நாயரும் தோமாவும் அவர்களாகவே ஏற்றுக்கொண்டனர். அவர்களின் சீடர்கள் என்று வெறுமனே நடித்துக்கொண்டிருப்பவர்கள் மண்டு முத்தபா, எட்டுக்காலி மம்மூஞ்ஞூ போன்றவர்கள்.
ஊரில் பெரிய பிக்-பாக்கெட் அடிப்பவன் நான்தான் என்ற பெயரைப் பெறுவதற்காக கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தான் மண்டு முத்தபா.
கோழி பிடிப்பது, தேங்காய் திருடுவது, பாக்கு பறித்தல் போன்ற தொழில்களை இரவு நேரங்களில் செய்வதற்காக எட்டுக்காலி மம்மூஞ்ஞூ பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தான்.
இம்மாதிரியான சிறு கலைகளில் ராமன் நாயரும் தோமாவும் ஆர்வம் எடுத்துக்கொள்வதில்லை. இருந்தாலும் அவ்வப்போது சில ஆலோசனைகளை மட்டும் கூறுவார்கள். தனியுடைமைக்கு எதிராகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தவே அவர்கள் இருவருக்கும் எப்போதும் விருப்பம். அநீதியை எங்கு கண்டாலும் எதிர்ப்பது. தோமாவுக்கும் ராமன் நாயருக்கும் வேறு வேலைகள் ஒன்றும் கிடையாது. அப்படி இருக்கிறபோது எட்டுக் காலி மம்மூஞ்ஞூ ஓடி வந்து சொன்னான்.