யானைவாரியும் தங்கச் சிலுவையும் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6522
டயலாக், குறைந்தது மூன்றாவது கைவசம் இருக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கிறபோதே இந்த முழக்கங்களும் கேட்க வேண்டும். நட யானை... செற்றி யானை... டத்தி யானை...
இந்த முழக்கங்களைச் சரித்திர மாணவர்கள் இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்தால் மனதில் பதிய வைத்துக் கொள்ளலாம்.
யானைக் கடத்தல் என்ற கலைக்கு உகந்த நேரம் இரவுதான் என்பதை மறந்துவிடக்கூடாது. நடு இரவு நேரம் என்றால் இன்னும் பொருத்தமானது. நிலவு வெளிச்சம் இருக்க வேண்டும் என்ற அவசியம் ஒன்றுமில்லை. சுத்தமான நாட்டு வெளிச்சம் போதும். யானையின் ஒரு காலைச் சங்கலியால் சுற்றி மரத்தோடு சேர்த்துத் தானே கட்டிப்போட்டிருப்பார்கள்! ஒரு சிறு மரம். அதில்தான் சோரக் கண்ணன், உண்டகக் கரும்பன், தூசிக்கொம்பன், தடிமாடன் ஆகிய யானைகளைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள். லேசாக சங்கிலியை நீக்கினால் போதும்; யானை விடுதலை ஆகிவிடும்.
"நட யானை... செற்றி யானை... டத்தி யானை."
ஆனால், இந்தக் காரியத்தில் ஈடுபடும் மனிதனின் மணம்.. புதிய ஆள் என்றால் யானை தும்பிக்கையால் தூக்கி எடுத்து நிலத்தில் புரட்டி வளைத்து வளைத்து அடிக்கும். பிறகு என்ன? காரியத்தில் ஈடுபடும் மனிதன் வீரசொர்க்கத்தைப் போய் அடைய வேண்டியது தான். அதாவது வீரசொர்க்கம் அடையத் தயாராக இருக்கும் மனிதனுக்கு மரணச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை முன் கூட்டியே செய்து வைக்க வேண்டியதுதான். இதை எல்லாம் சரித்திர மாணவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பழைய மனிதர்களை மறப்பது
நல்லதல்ல. யானைவாரி ராமன் நாயரும் தங்கச் சிலுவை தோமாவும் யானைக் கடத்தல் என்ற விஷயத்தில் வெற்றி வீரர்களானது எப்படி?
சாத்தங்கேரி மனையைச் சேர்ந்த இரண்டு தலைவர்களுக்குள்ளும் உறவு சரிவர இல்லாதிருந்த காலம். சொல்லப்போனால் எந்தக் காலத்திலுமே சீரான உறவு அவர்களுக்குள் இருந்ததில்லை. அண்ணனுக்கு நல்ல பாடம் சொல்லித்தர வேண்டும் என்று தம்பி பல நேரங்களில் பல ஏடாகூடமான செயல்களில் ஈடுபடுவதுண்டு. நெல்லை அறுவடை செய்து விற்பது, மரத்தை வெட்டி விற்பது, இவற்றுடன் ஒரு யானையையும் விற்று விடுவது என்று தம்பி தீர்மானித்திருக்கிறார். யானையைக் கடத்திக்கொண்டு போய் ஆற்றின் மறுகரையில் இருக்கும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிட வேண்டும்.
யானைவாரி ராமன் நாயர் இந்தத் தொழிலைச் செய்வதற்காக ஐம்பது ரூபாய் சம்பளம் பேசி, பத்து ரூபாய் முன்பணமும் வாங்கிக் கொண்டார். பிறகு அவர் நான்கைந்து நாட்களாக இரவு நேரங்களில் பழமும் சர்க்கரையும் வாங்கி பாருக்குட்டிக்குக் கொடுத்தார். இதன்மூலம் அவள் மனதைச் சரிப்படுத்துவதாக எண்ணம். இடையில் கொச்சு நீலாண்டனுக்கும் தருவார். அவன் மனம் வேதனைப்படக்கூடாது அல்லவா? அவனிடம் பிரியத்துடன் ராமன் நாயர் சொல்வார்:
"கொச்சு நீலாண்டா, நான் பாருக்குட்டிக்கு இதெல்லாம் தர்றது பாசத்தினால் எல்லாம் கிடையாது. ரகசியம் என்னன்னு உனக்குத் தெரியும்ல? அவளை நாங்க கடத்திக்கொண்டு போய் காட்டுல விடப்போறோம்.''
இதைக் கூறிவிட்டுப் பாருக்குட்டியைத் தடவ ஆரம்பிப்பார்.
"டத்தி யானை... செற்றி யானை...''
இப்படி வசனங்களை தாராளமாக உருவிவிடுவார். கொஞ்சம் நெருங்கி வந்தால், பாருக்குட்டிமீது கொண்டிருந்த பகை கிட்டத்தட்ட தீர்ந்த மாதிரிதான். சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் யானைவாரி கேட்டார்:
"டேய் தங்கச் சிலுவை! கொச்சு நீலாண்டனைக் கடத்துவதாக நாம் ஒப்பந்தம் போட்டிருந்தால்...''
தங்கச் சிலுவை கேட்டார்:
"நிச்சயம் நாம அதை ஒத்துக்கொண்டிருக்க மாட்டோம். இது மட்டும் உண்மை.''
யானைவாரி சொன்னார்:
"கொச்சு நீலாண்டனைக் கடத்துற அளவுக்கு நாம வளரலையே!''
தங்கச் சிலுவை கூறினார்:
"அதை நெனைச்சுப் பார்த்தா குடலே நடுங்குது. வயிறைக் கலக்குது.''
"எனக்கு மட்டும் என்ன?''
எப்படியோ பாருக்குட்டியைக் கடத்த இருவரும் தீர்மானித்து விட்டனர். நல்ல இருட்டும் சிறிது மழையும் உள்ள ஒரு இரவு. நாட்டு வெளிச்சம் கொஞ்சம்கூட இல்லை. பழக்குலையைக் கையில் ஏந்தியபடி தங்கச் சிலுவை தோமா முன்னால் போனார். யானைவாரி யானையைக் கட்டியிருந்த சங்கிலியை நீக்கினார். தங்கச் சிலுவை தோமா வேகமாக நடந்தார். மெதுவான குரலில் யானைவாரி சொன்னார்:
"நட யானை...''
யானை கொஞ்சம் வேகமாக நடந்தது. சாதாரண நடை அல்ல. எவ்வித தயக்கமும் இல்லாத நடை. தங்கச் சிலுவை தோமா ஒரு ஆற்றில் இறங்கினார். யானை அவரைப் பின்தொடர்ந்தது. ஆறு இருந்த பக்கம்
இருள் கொஞ்சம் குறைவாக இருந்தது. அப்போது தான் யானைவாரிக்கே தெரிந்தது- அவ்வளவுதான். ஆடிப்பேனார். கொச்சு நீலாண்டன்! ஊசிக்கொம்பன்! சிவந்த கண்ணன்! பயங்கரன்! போக்கிரி! ஏகப்பட்ட யானைப் பாகர்களைக் கொன்ற அந்தக் கொம்புகள் இரண்டும் இருட்டில் வெள்ளையாய் தெரிந்தன. யானைவாரியின் வாயில் நீர் வற்றிவிட்டது. தொண்டையும் உதடுகளும் உலர்ந்துவிட்டன. யானைவாரி பயம் மேலோங்க மெதுவாகச் சொன்னார்:
"தங்கச் சிலுவையே, திரும்பிப் பார்க்காதே. ஆள்மாறாட்டம் ஆயிடுச்சு. கொச்சு நீலாண்டனைக் கடத்திட்டோம்.''
தங்கச் சிலுவை தோமாவிற்கு எல்லா விஷயங்களும் புரிந்து விட்டன. கொச்சு நீலாண்டனையா கடத்தி இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தபோது ஒருநிமிடம் மயக்கம் வருவது மாதிரி இருந்தது. தங்கச் சிலுவை தோமா ஆலோசித்தார்- தானும் யானைவாரி ராமன் நாயரும் இன்னும் சிறிது நேரத்தில் யானையால் கொல்லப்படப்போவது உறுதி என்று மனதில்பட்டது. தங்கச் சிலுவை தோமா மனதில் நடுக்கம் உண்டாகக் கேட்டார்:
"என்ன செய்யலாம்?''
"பழக்குலையை அவனுக்குக் கொடுத்துவிட்டு... தண்ணியில முங்கிடு... வலது பக்கம் போகணும்... உன் பின்னாடி நானும் வந்திடுவேன்.''
தொடர்ந்து இரண்டு பேரும் நீரில் மூழ்கி, மூச்சுவிட முடியாமல் உயிரைப் பணயம் வைத்து நீந்தி நீந்தி பிழைத்துக் கரையை அடைந்தார்கள். இரண்டு பேரும் கட்டிப்பிடித்தவாறு கிடுகிடுவென நடுங்கியவாறு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கொச்சு நீலாண்டன் ஆற்றில் நீரை எடுத்து குளித்து ரசித்துக் கொண்டிருந்தான். பழம் முழுவதையும் தின்று தீர்த்துவிட்டான். எமகாதகப் பயல்!
நண்பர்கள் இருவரும் உயிரற்ற சவம்போல் நடந்து சென்று, இருப்பிடத்தை அடைந்து, பயங்கரமான கனவுகள் கண்டபடி உறங்கினார்கள்.
கொச்சு நீலாண்டன் மறுநாள் காலையில் சாத்தங்கேரி மனைக்கு திரும்பிவந்துவிட்டது என்றும், சங்கரன் நம்பூதிரிபாடைக் குத்துவதற்கு ஓடினான் என்றும் பலரும் சொன்னதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது இந்தச் சரித்திர எழுத்தாளனுக்குத் தெரியாது.
எது எப்படியோ, கொச்சு நீலாண்டன் வீட்டை அடைந்து விட்டான். யானைப் பாகர்கள் அவனைக் கஷ்டப்பட்டு கட்டிப் போட்டார்கள். அந்த அளவில் மகிழ்ச்சியே.
யானைவாரிக்கும் தங்கச் சிலுவைக்கும் ஒரு வார காலம் வயிற்றுப்போக்காகவே இருந்தது. எல்லாம் குணமாகி வாழ்க்கை மீண்டும் சகஜநிலைக்கு வந்தபிறகு நடந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்து யானைவாரி சொன்னார்:
"அடே, தங்கச் சிலுவை!''
"என்னடா யானைவாரி?''
"நாம கடத்தினது அந்த கேடுகெட்ட பாருக்குட்டியாக இருந்தா, இப்போ நாம் உயிரோட இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. யானையாகவே இருந்தாலும்- பாருக்குட்டி ஒரு பெண்தான்! அவளைக் கடத்தியிருந்தா நமக்கு எவ்வளவு மரியாதைக்குறைவு!''
மங்களம்.
சுபம்.