யானைவாரியும் தங்கச் சிலுவையும் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6522
அவளைப் பொறுத்தவரை வெட்கமோ மானமோ கிடையாது என்பதே உண்மை. ராமன் நாயர் சைனபாவை மனதிற்குள் "போடி கழுதை" என்று திட்டியவாறே நடந்து போனார்.
"அவித்த கோழிமுட்டை ஒழிக! பொய்க் கணக்குகள் ஒழிக!" என்று தனக்குள் ஆவேசத்துடன் கூறியவாறு நடந்து போனார் ராமன் நாயர். பெண்ணுலகத்திற்குக் கடன்பட்ட மனிதனாக எப்படி வாழ்வது. இந்த அழுகிப்போன அமைப்பை மாற்றியே ஆக வேண்டும். இதை எப்படி மாற்றுவது? இப்படிச் சிந்தித்தவாறு நடந்து கொண்டிருந்த நிமிடத்தில் ராமன் நாயருக்கு சிறிய ஒரு காண்ட்ராக்ட் கிடைத்தது. ஒரு தொழில் வாய்ப்பு. வெல்ல வியாபாரி. முட்டைக் கண்ணன் நந்துரு, ராமன் நாயரை அழைத்து ரகசியமாகத் திக்கித் திக்கிக் கூறினான்:
"ரா...ரா...ரா... ராமன் நாயரே!''
"என்னடா?''
"அ...அ...அஞ்சு ரூபா.''
ரகசியம் வேறொன்றுமில்லை. முட்டைக் கண்ணன் நந்துரு அந்த ஊரிலேயே படு கஞ்சன் என்ற பெயரைப் பெற்றவன். வீட்டு வேலைக்காரிக்கு மாசம் இரண்டணா (பன்னிரண்டு பைசா) சம்பளம் ஏன் கொடுக்க வேண்டும் என்பதற்காக, அவளைத் திருமணம் செய்துகொண்டு மனைவியாகவே ஆக்கிக்கொண்ட மாமனிதன் அவன்! மனைவி என்று வருகிறபோது சம்பளம் தரவேண்டிய அவசியம் இல்லையே! முட்டைக் கண்ணன் நந்துரு வெல்ல வியாபாரம் செய்து கொண்டிருந்ததால், கொஞ்சம் நிலம் கைவசம் இருந்தது. விவசாயம் பண்ணுகிற நிலத்திற்கு சாணமும் சாம்பலும் மற்ற சத்துப்பொருட்களும் இடுவது பொதுவாக நல்லதல்லவா? ஊரில் பெரிய அளவில் விவசாயம் பண்ணிக் கொண்டிருந்த குன்னேத்தாழத்து
குட்டியாலி முதலாளி தன் நிலத்தில் போடுவதற்கென்று ஆற்றங்கரை ஓரத்தில் சாணம், சாம்பல் ஆகியவற்றை ஒரு குன்றுபோல் குவித்து வைத்திருந்தார். நல்ல கும்மிருட்டு. ஒரு மணி நேரம் செலவழித்தால் போதும். சாணத்தை அள்ளிக்கொண்டு வந்துவிடலாம்.
"எப்படியும் சாணத்தையும் சாம்பலையும் கொண்டு வந்திடணும்.''
சொன்னதோடு நிற்கவில்லை.
"இந்தாங்க அட்வான்ஸ்...'' என்று இரண்டு ரூபாயை ராமன் நாயரின் கையில் திணிக்கவும் செய்தான் முட்டைக் கண்ணன்.
அட்வான்ஸ் தொகையைக் கையில் வாங்கிக்கொண்டு ராமன் நாயர் நடக்கிறபோது, தோமாவும் எட்டுக்காலி மம்மூஞ்ஞூவும் மண்டு முத்தபாவும் ஒன்றாக நின்று பாருக்குட்டிக்கு வெல்ல உருண்டை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து ராமன் நாயருக்குக் கோபம் வராமல் இருக்குமா? தாங்க முடியாத அளவிற்கு அவருக்குக் கோபம் வந்தது. பந்தாவாக அழைத்தார்.
"அடே தோமா... இங்கே வா.''
தோமா என்ன அவ்வளவு இலேசுப்பட்ட ஆளா, கூப்பிட்டவுடன் ஓடி வருவதற்கு!
தோமா சொன்னார்:
"உன் அம்மாக்கிட்ட போய்ச் சொல்லு.''
தாய் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னால் யாருக்குத்தான் கோபம் வராது? இதைக்கேட்டு கோபம் வராத ஆளும் உலகத்தில் இருக்கிறானா? ராமன் நாயருக்குச் சுரீர் என்று கோபம் வந்துவிட்டது. ராமன் நாயர் சொன்னார்.
"அம்மாவைப் பற்றியா நீ சொல்றே? இரு... உன் மூக்கை அறுத்து உப்புல ஊறப்போடுறேன்.''
தோமா கேட்டார்:
"உன்னோட எந்த அம்மாவை நான் சொன்னேன் தெரியுமா?"
அவர் சொன்னது சரிதான். மருந்துக்கு ஒரு அம்மாகூட இப்போது உயிரோடு கிடையாது. என்றாலும் ராமன் நாயர் சொன்னார்:
"இந்தத் தடவை உனக்கு மன்னிப்பு தர்றேன். போ...''
"நான் எங்கே போறது? என்மேல உனக்கு என்ன கோபம்?''
"நீ அவள்கூட குழைஞ்சு போயி பார்க்குறப்போ என் மனசுல கோபம் வந்ததென்னவோ உண்மை. இங்க பாரு... முப்பது அணா... உன் கணக்குல ஒன்பது அணா.. என் கணக்கு பதினாலு... எட்டுக்காலி கணக்குல ஏழு... போய் அந்த ஒற்றைக் கண்ணன்- ஐஸ் மங்கியோட மகளுக்கு அத்தனையும் கொடுத்துட்டு வா. வேலை நிறைய இருக்கு.''
ஓரணா காசு தர்மக் கணக்கில் முத்தபாவுக்குக் கொடுக்கப்பட்டது.
அன்று பாதி இரவு நேரம். நல்ல இருட்டு. மக்களில் பெரும்பாலோர் உறங்கிவிட்டனர். உறங்காதவர்கள் ஏறிய ஒரு படகு ஆற்றங்கரை ஓரம் வந்தடைந்தது. அதில் ராமன் நாயர், தோமா, எட்டுக்காலி மம்மூஞ்ஞூ, மண்டு முத்தபா ஆகியோர் இருந்தனர். மண்டு முத்தபாவையும் எட்டுக்காலி மம்மூஞ்ஞையும் கொண்டு வந்தது ராமன் நாயரும் தோமாவும்தான். ஏற்றுக்கொண்ட தொழிலைச் செவ்வனே செய்யக்கூடிய ஆசாமிகள் என்பதால், இவர்கள் இருவரையும் பிரியப்பட்டு தங்கள் வியாபாரத்தில் ஈடுபடுத்தினர் ராமன் நாயரும் தோமாவும். வெள்ளம் பாய்ந்தோடி வரும் காலம். நீர் சீராக ஓடிக்கொண்டிருந்தது. மூன்று கூடைகள், ஒரு மண்வெட்டி, மூன்று
சுமைதூக்கும் நபர்கள். ஆனால் நல்ல கும்மிருட்டு. படகை எங்கே கட்டிப்போடுவது? கட்டுவது மாதிரி கம்போ மரமோ எதுவும் அருகில் இல்லை. எட்டுக்கால் மம்மூஞ்ஞூ படகு நதியின் ஓட்டத்தில் ஓடிப்போகாதபடி பார்த்தவாறு கையில் பிடித்தவாறு நின்றிருந்தான். தோமா இருளில் படகைக் கட்டிப்போட ஏதாவது கொம்பு கிடைக்காதா என்று தேடிக்கொண்டிருந்தார். நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும்? நேரம் செல்வத்தைப்போல் மதிப்புள்ளதாயிற்றே! மண்வெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு கையில் கூடைகளையும் தூக்கிக் கொண்டு ராமன் நாயரும் மண்டு முத்தபாவும் நடந்தனர். சூழ்ந்திருந்த இருட்டைவிட பயங்கர இருட்டாய் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த சாணத்திற்குப் பக்கத்தில் கூடையை வைத்துவிட்டு ராமன் நாயர் மண்வெட்டியால் ஓங்கி வெட்ட ஆரம்பித்தார். அவ்வளவுதான். ஆகாயமும் பூமியும் நடுங்குகிற அளவிற்கு அந்தச் சாணமலை யானை எனப் பிளிறியவாறு எழுந்தது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு நாய்கள் ஒன்றுசேர்ந்து குரைத்தன. யானையின் பிளிறலையும் நாய்களின் சத்தத்தையும் கேட்டு ஊர் மக்கள் உறக்கம் நீங்கி எழுந்தனர். பயங்கர பிசாசாக ஆன மருதாய்தான் இரவு நேரத்தில் கூப்பாடு போடுகிறாள் என்று எண்ணிக்கொண்ட அவர்கள் பயத்தில் மீண்டும் போர்வையை இன்னும் கொஞ்சம் அதிகமாக இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கினர். இது அத்தனையும் கண்சிமிட்டக் கூடிய நேரத்தில் நடந்துமுடிந்துவிட்டது. பயத்தில் நடுங்கிப்போன மண்டு முத்தபா தப்பித்துப்போகும் எண்ணத்தில் தன்னை மறந்து ஆற்றில் குதித்தான்.
(அதற்குப் பிறகு அவனை ஊர்மக்கள் பார்த்தது இரண்டு நாட்கள் சென்றபின்தான். ஆற்றில் நீந்தி நான்கைந்து மைல்தூரம் சென்ற பிறகுதான் கரையையே அவனால் காண முடிந்தது.) இந்தச் சம்பவம் நடந்து பத்து நிமிடங்கள் சென்றிருக்கும். "டேய்... டேய்'' என்று மெல்ல
அழைத்தவாறு நடந்துகொண்டிருந்தார் தோமா. அவர் குரலை ஒரு மரத்தின்மேல் அமர்ந்திருந்த ராமன் நாயர் கேட்டார்.
தோமா கேட்டார்.
"அங்க என்ன செய்யிறே?''
இது என்ன கேள்வி? ஒரு ஆள் பயந்து நடுங்கிப்போய் மரத்தில் ஏறி ஆபத்திலிருந்து தப்பித்திருக்கும் வேளையில், இப்படியொரு கேள்வியைக் கேட்டால் எப்படி இருக்கும்? ராமன் நாயர் சொன்னார்: