யானைவாரியும் தங்கச் சிலுவையும் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6522
போட்டிருக்கும் யூனிஃபார்மைக் கழற்றி வைத்துவிட்டு, எங்கேயாவது ஓடிப்போய்விட்டால் என்ன? சரி... எங்கே போவது? வயது அதிகமாகிவிட்டது. இனி செய்வதற்கு என்ன இருக்கிறது?
"கடவுளே... என்னை சதி செஞ்சிராதே!'
இப்படிப் பிரார்த்தனை செய்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. பொழுது புலர ஆரம்பித்துவிட்டதைப் பளுங்கன் உணர்ந்தார். எல்லாமே ஒரே குழப்பமாக இருப்பதுபோல் அவருக்குத் தோன்றியது. ஆனால் எதுவுமே குழப்பமாக இல்லை. ஒன்றரை மணி நேரம் சென்றிருக்கும். மழையில் நனைந்த கோலத்துடன் தோமா உள்ளே வந்தார். வந்த வேகத்தில் லாக்-அப் கதவைத் திறந்து உள்ளே போனார்.
"பளுங்கா... பூட்டிக்கோ.''
இப்படிச் சொன்ன தோமா கட்டியிருந்த வேஷ்டியைக் கழற்றிப் பிழிந்து தலையையும் உடம்பையும் துவட்டத் தொடங்கினார்.
பளுங்கன் கொச்சு குஞ்ஞூ லாக்-அப்பை இழுத்துப் பூட்டினார். தலையில் கை வைத்தவாறு மெல்ல கீழே அமர்ந்தார்.
"இதைக் கொண்டுபோய் விற்றுப் பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணிவை. பொண்டாட்டிக்கு மருந்து வாங்கிக்கொடு.''
தோமா இரும்புக் கம்பிகளின் இடைவெளியில் ஒரு பொட்டலத்தை நீட்டினார். பளுங்கன் அதை வாங்கினார். நல்ல கனமாக இருந்தது. பளுங்கன் அதைத் திறந்து பார்த்தார். ஆறு அங்குல நீளமும் முக்கால் அங்குல பருமனும் ஒன்றரை அங்குல அகலமும் உள்ள ஒரு
தங்கக்கட்டி உள்ளே இருந்தது. எங்கோ ஒடித்து தனியே எடுத்து வந்த மாதிரியான தோற்றம்.
"நான் உறங்கட்டுமா?''
தோமா உறங்க ஆரம்பித்தார்.
இரண்டு நாட்கள் சென்றிருக்கும். நாடு முழுவதும் பரபரப்பான ஒரு செய்தி. பெரிய பள்ளியில் இருந்த தங்கச் சிலுவை திருடு போய்விட்டது.
பிஷப் வந்தார். ஃபாதர் வந்தார். பள்ளியில் பணியாற்றும் அலுவலர்கள் வந்தார்கள். சாதாரண ஊழியர்கள் வந்தார்கள். இன்ஸ்பெக்டர் சிறுத்தை மாத்தன் முன் எல்லாருமே வந்து நின்றார்கள். சிறுத்தை மாத்தனின் மஞ்சள் நிறம் கொண்ட விழிகள் மின்னின.
சிறுத்தையைப்போல மாத்தன் உறுமினார்:
"ம்...யார்னு கண்டுபிடிக்கறேன்.''
முன்பு குற்றம் செய்தவர்கள், குற்றமே செய்யாதவர்கள், குற்றம் செய்யப்போகிறவர்கள் - இப்படி நூற்றுக் கணக்கில் ஆட்கள் ஸ்டேஷனுக்குக் கொண்டு வரப்பட்டார்கள். அடித்தல், இடித்தல், பாதத்தை நெருப்பு வைத்துச் சுடுதல், மிதித்தல், அறைதல், நகக்கண்ணில் ஊசியை ஏற்றுதல், பிறப்பு உறுப்பில் பழைய துணியைச் சுற்றி எண்ணெய் புரட்டி தீ வைத்தல்... இப்படி பல கொடுமைகள்! தோமா நடக்கும் செயல்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் அழுவதையும் புலம்புவதையும் கதறுவதையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். யாருமே குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. நாட்கள் ஒவ்வொன்றாக நீங்கிக்கொண்டிருந்தன. புதிய குற்றவாளிகள் சிலரைக் கொண்டு வந்தார்கள். மீண்டும் அதே கொடுமைகள் தொடர்ந்தன.
செத்துப்போனால்கூட பரவாயில்லை என்று ஒருவருமே குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
இப்படி நிலைமை இருக்கிறபோதே, ஒரு புதிய குற்றவாளிகள் கூட்டம் ஸ்டேஷனுக்குக் கொண்டு வரப்பட்டது. ஒற்றைக் கண்ணன் போக்கர், மண்டு முத்தபா, யானைவாரி ராமன் நாயர், எட்டுக்காலி மம்மூஞ்ஞூ- இவர்களே அந்தக் கூட்டம். தோமா அவர்களைப் பார்த்தார். தோமா அவர்களைத் தெரிந்தது மாதிரி காட்டிக்கொள்ளவில்லை. ஒரு பெஞ்சின் முன் அவர்கள் அமர வைக்கப்பட்டார்கள். எல்லாரையும் நாக்கை நீட்டி பெஞ்சின்மேல் இருக்கும்படி வைக்கச் சொன்னார் சிறுத்தை மாத்தன். அவர் சொன்னபடி அவர்களும் செய்தார்கள். இன்ஸ்பெக்டர் சிறுத்தை மாத்தன் ஒரு சுத்தியலையும் நான்கு ஆணிகளையும் எடுத்துக் கொண்டு வந்தார்.
"நான் இப்போ உங்க நாலு பேரோட நாக்கையும் இழுத்து வச்சு பெஞ்சில ஆணியாலே அடிக்கப்போறேன். அதுக்கு முன்னாடி சொல்லிடுங்க, தங்கச் சிலுவை எங்கே?''
யாரும் ஒன்றுமே பேசவில்லை. அவர்கள் யாருக்கும் தெரியாதே தங்கச் சிலுவை எங்கே இருக்கிறதென்று!
இன்ஸ்பெக்டர் சிறுத்தை மாத்தன் யானைவாரி ராமன் நாயரின் நாக்கை பெஞ்சோடு சேர்த்து வைத்து ஆணியால் அடிக்கவில்லை. அதற்கு முன்பே துள்ளி எழுந்த தோமா லாக்-அப்பின் கம்பிகளைப் பிடித்து இழுத்தவாறு உரத்த குரலில் சத்தமிட்டார்.
""தங்கச் சிலுவை எங்கே போச்சுன்னு இவங்க யாருக்கும் தெரியாது.''
இன்ஸ்பெக்டர் சிறுத்தை மாத்தன் சுத்தியைக் கையில் பிடித்தவாறு தோமாவின் அருகே வந்தார். சிறுத்தையைப்போல் பயங்கரமான ஒரு
பார்வை பார்த்தார். சிறுத்தையைப்போல் கடுமையான குரலில் கேட்டார்:
"உனக்குத் தெரியுமா?''
தோமா சொன்னார்:
"தெரியும். அய்யாகிட்ட ஒரு ரகசியம் சொல்லணும்.''
லாக்-அப் திறக்கப்பட்டது. தோமாவை இன்ஸ்பெக்டர் அறைக்குக் கொண்டு சென்றார்கள்.
"ம்...''
தோமா கூறினார்:
"நான்தான் தங்கச் சிலுவையைத் திருடியது.''
"நீயா? திருட்டு நடக்கிறப்போ நீ இங்கே லாக்-அப்பில் இல்ல கிடந்தே!''
தோமா சொன்னார்:
"அய்யா விருப்பப்படுற அளவுக்கு என்னை அடிக்கலாம். கொல்லலாம். ஆனா அவனுக்கு வயசாயிருச்சு. கருணை காட்டணும். பொண்டாட்டிக்குப் பக்கவாதம். கல்யாணம் பண்ணிக்கொடுக்க ஏழு மகள்கள் இருக்காங்க.''
இன்ஸ்பெக்டர் கூறினார்.
"நீ என்ன சொல்றேன்னே எனக்குப் புரியல.''
தோமா அவருக்குப் புரிய வைத்தார். எல்லாவற்றையும் தெரிய வைத்தார். போலீஸ் ஸ்டேஷனில் கிழக்குப் பக்கத்தில் இருந்த ஆலமரத்தின் அருகில் மண்ணில் புதைத்து வைத்திருந்த மீதி
சிலுவையை எடுத்துக் கொடுத்தார். பளுங்கன் கொச்சு குஞ்ஞூ தன் கையில் இருந்த எஞ்சிய சிலுவையைக் கொடுத்தார்.
தோமாவைப் பார்த்து இன்ஸ்பெக்டர் சிறுத்தை மாத்தன் கேட்டார்:
"ஒரு உண்மையான கிறிஸ்துவனான நீ ஏன் இந்த பயங்கர பாவச் செயலை செய்தே? தங்கக் சிலுவையை நீ ஏன் திருடினே?''
தோமா சொன்னார்:
"அய்யா! வேணும்னா என் நாக்குல ஆணி அடிச்சுக்குங்க. கர்த்தாவான இயேசு கிறிஸ்துவை அறைஞ்சது மரச் சிலுவையில தான். பள்ளிக்கு எதுக்கு தங்கச் சிலுவை?''
தோமா இப்படிச் சொன்னதும் உண்மையிலேயே ஆடிப்போனார் சிறுத்தை மாத்தன். பூமியில் உள்ள எத்தனையோ கோடி கிறிஸ்துவர்கள் சின்ன வயதிலிருந்தே கேட்டு மனதில் வைத்திருக்கும் நம்பிக்கை இது. மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களுக்குக்கூட உண்மை வரலாறு என்னவென்று தெரியும். எல்லாருக்கும் நன்கு தெரிந்த விஷயம் இயேசுவை அறைந்தது மரத்தாலான சிலுவையில்தான். தோமா திருடனாக இருந்தாலும் அவருக்கு அது நன்றாகவே தெரியும். அவர் செய்தது தவறா சரியா? பென்ஷன் வாங்கப்போகிற நேர்மையான பெரியவர் போலீஸ்காரனான பளுங்கன் கொச்சு குஞ்ஞூ சிக்கலில் மாட்டியிருக்கிறார். திருமணம் செய்துகொடுக்க ஏழு பெண் குழந்தைகள் வரிசையில் நிற்கிறார்கள். பெண்களின் தாயார் பக்கவாதம் பீடித்துப் படுக்கையில் கிடக்கிறாள். பரிதாபகரமான கிறிஸ்துவர்கள்! உதவிக்கு ஒருவர்கூட கிடையாது. தோமாவின் வார்த்தைகளை நினைத்துப் பார்த்தார். பள்ளிக்கு எதற்குத் தங்கச் சிலுவை?
தோமா சொன்னது சரிதான்.