நன்மைகளின் சூரியன் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6401
குனிந்து உட்கார்ந்து, இதழ்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்து உள்ளங்கையில் வைத்தேன். ஒரு கூட்டம் பிஞ்சுக் குழந்தைகளின் இறந்த உடல்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல தோன்றியது. எதுவும் செய்ய முடியாமல்- எந்தவித அசைவும் இல்லாமல் இறந்து கிடக்கும் சின்னஞ் சிறு குழந்தைகள்.
என்னால் கவலையை அடக்க முடியவில்லை. நான் அந்தப் பூக்களின் இதழ்களைக் கண்களில் ஒற்றினேன். அவற்றுக்கு வாசனையோ மென்மைத்தனமோ நீடித்திருக்கவில்லை. பாவம் என்று தோன்றியது. நான் அவற்றை முத்தமிட்டேன். அப்போது என்னுடைய கண்களில் இருந்து இரண்டு மூன்று கண்ணீர்த் துளிகள் அவற்றின் மீது உதிர்ந்து விழுந்தன. "மேரி வயோலா டயானா!" -பூக்களின் இதழ்கள் என்னிடம் கூறுவதை நான் கேட்டேன்: "சின்ன அழகியே! உன்னுடைய இரக்கத்திற்கு நன்றி... நன்றி...!"
"ரோஜா மலரின் பிள்ளைகளே..." நான் முணுமுணுத்தேன். அவை அனைத்தும் என்னுடைய வார்த்தைகளுக்காகக் காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு இருப்பதைப்போல எனக்குத் தோன்றியது. அவற்றின் கவனம் வேறு எதை நோக்கியாவது திரும்புவதற்கு முன்னால் நான் வேகமாகச் சொன்னேன்: "நானும் உங்களைப் போல யாரும் இல்லாதவள்தான். அனாதைப் பிள்ளைதான். தாயும் தந்தையும் இல்லாதவள்தான். அப்பா என்னை எடுத்து வளர்க்காமல் இருந்திருந்தால், நானும் உங்களைப் போல மண்ணில் விழுந்து காணாமல் போயிருப்பேன்."
பூக்களின் இதழ்கள் தலையை ஆட்டிக் கொண்டு அன்புடன் புன்னகைத்தன. அவை என்னிடம் என்னவோ கூறத் தொடங்குவதாக இருந்தது. அப்போது உள்ளேயிருந்து ஆயா அழைப்பது கேட்டது: "டயானா.''
அந்த ரோஜா மலர்களை அங்கே விட்டுவிட்டுச் செல்வதற்கு எனக்கு மனமில்லை. ஆயா பார்ப்பதற்கு முன்னால் நான் அவற்றை ப்ளவுஸுக்குள் வைத்துக் கொண்டேன். தொடர்ந்து மழை காரணமாக பாதிப்படைந்திருந்த தோட்டத்தின் வழியாக ஆயாவை நோக்கி ஓடிச் சென்றேன். அவள் எனக்கு நேராக தேநீரை நீட்டினாள். என்னை அங்கு எல்லா இடங்களிலும் தேடியதாக அவள் புகார் சொன்னாள். புடவையை அணிந்து கொண்டு, வாசலைத் தாண்டிச் சென்றதற்கு சிறிய அளவில் திட்டவும் செய்தாள்.
எனக்கு ஆயாவைப் பிடிக்கும். ஆயா பாவம். என்னுடைய தலையில் மழைத்துளிகள் விழுந்துவிடப் போகிறதோ என்று அவள் பயப்படுகிறாள். காய்ச்சல் வந்துவிட்டால் அவளுக்குத்தான் கஷ்டம்.
முன்பு ஒரு முறை எனக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சல் வந்து விட்டால் மிகவும் சுவாரசியமாக இருக்கும். மூக்கில் இருந்து அடர்த்தியான நீர் வழிவதை நான் எந்தச் சமயத்திலும் துடைத்து நீக்குவது இல்லை. உதடுகளுக்கு மேலே யாரோ கிச்சுக் கிச்சு மூட்டுவதைப் போல தோன்றும். மூக்கைத் துடைப்பது என்பது ஆயாவின் வேலையாக இருந்தது. அவளுக்குத் தெரியாமல் நான் எங்காவது மறைவாக இருக்கும் மூலைக்குச் சென்று உட்கார்ந்து கொண்டு, மூக்கில் இருந்து இறங்கும் தும்பிகளின் தொடலை அனுபவிக்கிறேன். சுவாசத்தின் போக்கை இப்படியும் அப்படியுமாக மாற்றி, அவற்றுக்கு அசைவை உண்டாக்குகிறேன். அப்போது மேலும் சுவாரசியம் தோன்றும். ஆனால், ஆயா விடமாட்டாள். அவள் எப்படியும் கண்டு பிடித்து, எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும் சுத்தமான ஒரு கைக்குட்டையால் என்னுடைய செல்லக் குழந்தைகளைத் துடைத்துவிடுவாள். பிறகு கூறுவாள்: "ஏன் இப்படி நடந்து கொள்கிறாய், டயானா? சின்ன குழந்தையைப் போல..."
"நான் சின்ன குழந்தைதான்"- நான் கூறுவேன்.
"ஆமாம்... ஆமாம்..." -ஆயா கூறுவாள்: "உனக்கு பதினெட்டு வயது தாண்டிவிட்டது. எல்லாரின் கண்களிலும் நீ வளர்ந்த பெண்ணாகத் தெரிகிறாய்."
அதைக் கேட்பதே ஒரு சுகமான அனுபவம்தான். தான் வளர்ந்திருக்கிறோம் என்பதையும், ஒரு பெண்ணாக தன்னை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் வேறொரு ஆள் கூறிக் கேள்விப்படும்போது, சந்தோஷப்படாதவளாக ஒரு பெண்கூட இருக்க மாட்டாள். ஆனால், சிறிது நேரம் கழித்து, தன்னை யாரும் சிறு பெண்ணாகப் பார்க்க மாட்டார்கள் என்று தெரியவரும்போது அவர்களுக்கு வருத்தமும் ஏமாற்றமும் தோன்றும். ஒரு ஆளுக்கு முன்பாவது சிறு குழந்தையாக ஆகாத எந்த ஒரு பெண்ணுக்கும் வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.
காலியான காப்பி பாத்திரத்தை வாங்கிக் கொண்டு ஆயா கேட்டாள்: "நீ வெளியே போறியா?''
"இல்லை.''
"அப்படியென்றால் குளி. நீர் சூடாக இருக்கு.''
"வேண்டாம். நான் குளிக்கல.'' நான் சொன்னேன்: "எனக்கு குளிக்க வெறுப்பாக இருக்கு.''
"என்ன சொன்னே?'' ஆயா என்னைக் குளிக்க வைத்துவிட்டுத்தான் அடங்குவாள் என்று தோன்றியது.
அடுத்த நிமிடம் நான் சொன்னேன்: "குளிப்பதற்கு நேரம் இல்லை. வெளியே போகணும். ஒன்றிரண்டு தோழிகளைப் பார்க்கணும்.''
"பிறகு... வெளியே போகலைன்னு சொன்னே?'' ஆயா கேட்டாள்: "அது ஒரு பொய்.'' நான் அழகாகச் சிரித்தேன். ஆயாவும் என்னுடன் சேர்ந்து சிரிப்பதைப் பார்த்தேன்.
எனக்கு ஏராளமான சிரிப்புகளைத் தெரியும். மேலோட்டமான சிரிப்பு, வெறுக்கும் ஆளைப் பார்க்கும்போது அவனுக்கு மட்டுமே வெறுப்பைப் புரிய வைக்கும் உதடுகளைப் பிரிக்காத சிரிப்பு, சத்தம் உண்டாகும்படி வெளிப்படுத்தும் சிரிப்பு, தேடுகிற நேரத்தில் தோழிகள் கிடைக்கும்போது வாய் முழுவதையும் திறந்து ஆர்ப்பாட்டமாய் சிரிக்கும் சிரிப்பு, அப்பாவிற்காகத் தனிப்பட்ட முறையில் சிரிக்கும் சிரிப்பு, ஆயாவிற்காக வேறொன்று, பரிதாபச் சிரிப்பு, அழகான சிரிப்பு, பாசச் சிரிப்பு- இப்படி எவ்வளவோ சிரிப்புகள். இவை அனைத்தையும் நான் நேரத்தையும் சந்தர்ப்பத்தையும் பார்த்துப் பயன்படுத்துகிறேன்.
நான் ஒரு பாவம் என்று எனக்குத் தோன்றியது. என்னை நானே ஒரு புத்திசாலிப் பெண் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆடை அணிந்து காரில் கிளம்பும்போது நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்: "மிஸ் மேரி வயோலா டயானா! நீ ஒரு முட்டாள். மற்ற ஆங்கிலோ இந்திய இளம் பெண்களைப் போல நீயும் ஒரு முட்டாள்தான். முட்டாள்களின் அரசி. மடைச்சி. சுத்தமே இல்லாதவள்!"
2
இந்த நகரத்தின் மழைக்கு, வேறு எந்த இடத்திலும் இல்லாத ஒரு தனித்தன்மை இருக்கிறது. என்னுடைய கருத்து சரியாக இருக்க வேண்டும் என்றில்லை. காரணம்- ஒவ்வொரு இடத்தில் பெய்யும் மழைக்கும் அதற்கே உரிய சிறப்புத் தன்மை இருக்கும். எனினும், இங்கு பெய்யும் மழை ஒரு உதவியைச் செய்கிறது. சாலை முழுவதையும் கழுவித் துடைத்து சுத்தம் செய்து விடுகிறது.
ஆட்கள் இல்லாத சாலைகளின் வழியாக நான் வெறுமனே காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். வானம் மீண்டும் வெடிப்பதற்குத் தயாராக இருப்பதைப் போல தோன்றியது. எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம். மழைக்கு பயந்ததால் இருக்க வேண்டும், தெருக்களில் ஆட்கள் குறைவாகவே இருந்தார்கள். அலுவலகத்தை விட்டுச் செல்பவர்களின் கூட்டம் முடிந்து விட்டிருந்தது.