
அவன் தன்னுடைய நடுங்கிக்கொண்டிருந்த தோள்களை உயர்த்தினான். ஒரு வண்ணத்தாளை எடுத்து அதைச் சுத்தம் செய்து விரித்து, சாளரத்தின் படியில் வைத்துவிட்டு அவன் சொன்னான்:
"இந்தத் தாளை வைத்து அழகான பல பொருட்களை நான் உண்டாக்குவேன். இல்லாவிட்டால் நான் இவற்றைக் காத்காவிற்குக் கொடுப்பேன். இப்படிப்பட்ட நல்ல பொருட்களை அவளுக்கு மிகவும் பிடிக்கும். கண்ணாடித்துண்டு, பாத்திரத் துண்டுகள், தாள், வேறு சிறு சிறு பொருட்கள்.... இவை எல்லாம் அவளுக்குப் பிடிக்கும். ஒரு வண்டிற்கு நாம் தினமும் நன்றாக இரை கொடுத்தால், அது குதிரையைப்போல பெரியதாக ஆகும். அப்படித்தானே?''
அவன் அதை முழுமையாக நம்புகிறான் என்று எனக்குத் தோன்றியது. அதனால் நான் சொன்னேன்:
"அதற்கு ஒழுங்காகத் தீனி போட்டால் அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது.''
"உண்மையாகவா?''- மிகுந்த சந்தோஷத்துடன் அவன் கேட்டான்: "ஆனால் என் தாய் சிரிக்கிறாங்க. ஒரு பைத்தியக்காரப் பெண்!''
ஒரு மோசமான வார்த்தையையும் அவன் சேர்த்துச் சொன்னான்.
"அவங்க ஒரு பைத்தியம்தான். நன்றாகத் தீனி கொடுத்தால், ஒரு பூனையை திடீரென்று குதிரை அளவிற்குப் பெரியதாக ஆக்க முடியும். இல்லையா?''
"முடியும். என்னால் அதை உறுதியாகக் கூற முடியும்.''
"அதற்குக் கொடுக்கக்கூடிய அளவிற்கு உணவு என் கையில் இல்லை. இதை அதிர்ஷ்டக் கேடு என்று அல்லாமல் வேறு எப்படி அழைப்பது? அப்படிச் செய்ய முடியுமானால் விஷயம் நல்லபடி நடக்கும்.''
உணர்ச்சிவசப்பட்ட காரணத்தால் அவன் இறுக்கமாகத் தன்னைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டு, கைகளைச் சுருட்டிக் கொண்ட அவன் அவற்றைத் தன் மார்பில் அழுத்தி வைத்துக் கொண்டான்.
"ஈக்கள் ஒரு நாய் அளவிற்குப் பெரிதாகிப் பறந்து திரியும். வண்டுகளுக்கு ஒரு குதிரை அளவிற்குப் பெரிய தோற்றமும் பலமும் கிடைத்து விட்டால், அதன்மீது ஒரு குவியல் செங்கற்களை ஏற்றினாலும் அவன் அதைக் கொண்டுபோய் விடுவான். இல்லையா?''
"அவனுக்கு தாடியும் கிருதாவும் இருக்கும் என்பதுதான் பெரிய பிரச்சினையே!''
"அது ஒரு பிரச்சினையே இல்லை. கடிவாளம் போட நாம் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லாவிட்டால் ஆடி ஆடி நடக்கும் ஒரு எட்டுக்கால் பூச்சியின் பிரச்சினையை எடுப்போம். எதைப்போல அது இருக்கிறது என்று கூறுவது? ஒரு பூனைக் குட்டியைவிட பெரிய அளவை அவனுக்குக் கொடுக்க முடியாது. எனக்கு கால் இருந்திருந்தால், அவன் எப்படி நடப்பான் என்பதை நானே நடந்து காட்டியிருப்பேன். அப்படியென்றால், கடினமாக உழைத்து என்னுடைய வளர்ப்பு மிருகங்கள் எல்லாவற்றுக்கும் நல்ல முறையில் தீனி கொடுப்பேன். நான் ஒரு கடையை ஆரம்பிப்பேன். வெளியே பரந்து கிடக்கும் வயலில் இன்னொரு வீட்டை உண்டாக்குவேன். திறந்து கிடக்கும் வயலில் நீங்கள் எப்போதாவது நடந்திருக்கிறீர்களா?''
"நடந்திருக்கிறேனே! என்ன விஷயம்?''
"அது எப்படி இருக்கும் என்று எனக்குக் கொஞ்சம் சொல்ல முடியுமா?''
வயல்களைப் பற்றியும் மைதானங்களைப் பற்றியும் நான் அவனுடன் பேசத் தொடங்கினேன். மிகுந்த கவனத்துடன் அவன் அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் உறங்க ஆரம்பித்தவுடன் கண் இமைகள் கண்ணுக்கு மேலே தாழ்ந்துவிட்டிருந்தன. வாய் மெல்லத் திறந்தது. அதைப் பார்த்தவுடன் நான் என்னுடைய பேச்சின் சத்தத்தைக் குறைத்தேன். ஆனால் கொதித்துக் கொண்டிருந்த பாத்திரத்துடன் அவனுடைய தாய் அங்கு வந்தாள். அவனுடைய இன்னொரு கையில் ஒரு தாள் பொட்டலம் இருந்தது. அவளுடைய ரவிக்கைக்குள்ளே ஒரு குப்பி வோட்கா வெளியே தள்ளிக் கொண்டிருந்தது.
"நான் வந்துட்டேனே!''
"வெறும் புல்லும் பூக்களும் மட்டும்''- அவன் சொன்னான்: "அம்மா, ஒரு தள்ளு வண்டியில் ஏற்றி உட்கார வைத்து என்னை வெளியே இருக்கும் வயலுக்கு அழைத்துக்கொண்டு போகக் கூடாதா? ஒரு முறைகூட அதைப் பார்க்காமலேயே நான் இறந்து விடப் போகிறேன்! நீங்க ஒரு அசிங்கம் பிடித்த பன்றி... அம்மா!''- மிகுந்த கவலையுடனும் கோபத்துடனும் அவன் சொன்னான்.
ஆனால் மிகுந்த கனிவுடன் அந்தப் பெண் அதற்கு எதிர்வினை ஆற்றினாள். "நீ இப்படியெல்லாம் கோபமாகப் பேசக்கூடாது. உனக்கு அதற்கான வயது ஆகவில்லை.''
"கோபமாக பேசக்கூடாது என்று கூறுவது உங்களுக்கு மிகவும் சர்வசாதாரணமான ஒரு விஷயம். உங்களுக்கு விருப்பமான இடத்திற்கு ஒரு நாயைப்போல நீங்கள் போகலாம். நீங்கள் கொடுத்து வைத்தவள்...''- எனக்கு நேராகத் திரும்பிக் கொண்டு அவன் தன் பேச்சைத் தொடர்ந்தான்: "இந்த வயல்களையும் மைதானங்களையும் படைத்தது கடவுள்தானே?''
"அப்படித்தான் நான் நினைக்கிறேன்.''
"எதற்காக அவற்றைக் கடவுள் படைத்தார்?''
"மனிதர்கள் அந்த வழியே நடந்து திரிய...''
"திறந்து கிடக்கும் வயல்கள்...!''- அவன் கூறிக் கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் விருப்பங்களை வெளிப்படுத்தும் அடையாளமாகப் புன்சிரிப்பு மலர்ந்து காணப்பட்டது. "நான் என்னுடைய பிராணிகள் அனைத்தையும் அந்த வயலில் இறக்கி விடுவேன். என்னுடைய வளர்ப்பு மிருகங்களும் அந்த சுகத்தைக் கொஞ்சம் அனுபவிக்கட்டும். சரி... தெய்வத்தை அகதிகள் இல்லத்திலா படைக்கிறார்கள்?''
அவனுடைய தாய் தலையில் அடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தாள். படுக்கையில் விழுந்து, கைகளையும் கால்களையும் ஆட்டியவாறு அவள் உரத்த குரலில் சொன்னாள்:
"யாராவது என்னை மேலே கொஞ்சம் கொண்டு போவார்களா? என் தங்கமே...''
புன்சிரிப்புடன் லியோங்கா அவளைப் பார்த்தான். பாசம் பொங்க அவளைப் பார்த்து அவன் சொன்னான்:
"சின்ன பிள்ளையைப்போல இவ்வளவு பெரிய பெண் சிரிக்கிறாங்க. அம்மாவுக்கு சிரிப்புமீது மட்டுமே விருப்பம்!''
அந்த வார்த்தைகளை அவன் மீண்டும் சொன்னான்.
"அவள் சிரிக்கட்டும்!'' - நான் சொன்னேன்: "நீ அதைப் பெரிதாக எடுக்க வேண்டாம்.''
"இல்லை. நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை'' - லியோங்கா ஒப்புக் கொண்டான். "சாளரத்தின் கண்ணாடிகளைக் கழுவாத போதுதான், நான் என் தாயை வாய்க்கு வந்தபடி பேசுவேன். "சாளரத்தைக் கழுவு... சாளரத்தைக் கழுவு" என்று நான் கெஞ்சிக்கொண்டே இருப்பேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத, கொடுத்து வைக்கப்பட்ட பகல் வெளிச்சத்தை என்னால் பார்க்க முடியாது. ஆனால் என் தாய் எல்லா நேரங்களிலும் அதை மறந்து விடுவாங்க.''
தேநீர் பாத்திரத்தைக் கழுவுவதற்கு மத்தியில், அவள் மெதுவாக சிரித்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவாறு அவள் அந்த நீல நிறக் கண்களில் ஒன்றைச் சிமிட்டினாள்.
"இங்கே பாருங்க... இவன் ஒரு முத்து ஆயிற்றே! இவனுடைய இதயம் எந்த அளவிற்குப் பரிசுத்தமானது! இவன் மட்டும் இல்லாமல் போயிருந்தால், நான் என்னுடைய உயிரை எப்போதோ முடித்துக் கொண்டிருப்பேன்! ஆமாம்... நான் தூக்கில் தொங்கி இறந்திருப்பேன்...''
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook