மாஷ்கா - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7452
உடல் வெளிறிப்போய் இருப்பதை எடுத்துக்காட்டுவதைப் போல அவனுடைய கண்களுக்குக் கீழே நீல நிறம் படர்ந்து விட்டிருந்தது. மூக்கின் இணைப்புப் பகுதியில் நீளமான ஒரு வளைவு இருந்தது. அதற்குச் சற்று மேலே நெற்றியில் சிவப்பு நிறத்தில் உரோமங்கள் வளர்ந்து காணப்பட்டன. கண்களில் சாந்தம் குடிகொண்டிருப்பதைப்போல தோன்றினாலும், அது விளக்கிக் கூற முடியாதது மாதிரி இருந்தது. அமானுஷ்யமானதாகவும் அசாதாரணமானதுமாகவும் இருந்த அவனுடைய பார்வையை மொத்தத்தில் என்னால் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடிந்தது.
கீழே கிடந்த கிழிந்த துணிகளை எடுத்துப் போட்டு தன்னுடைய மெலிந்துபோன கால்களில் ஒன்றை அவன் வெளியே எடுத்தான். அடுப்பிலிருந்து நெருப்புக் கனலை எடுத்து மாற்றுவதற்கு பயன்படக்கூடிய ஒரு இடுக்கியைப்போல அது இருந்தது. அவன் தன்னுடைய கால்களைக் கையால் எடுத்து அந்த மரப்பெட்டியின்மீது வைத்தான்.
"உன் கால்களுக்கு என்ன ஆச்சு?''
"இங்கே பாருங்க... இது எப்படி இருக்குன்னு பார்த்தீங்களா? பிறக்கும்போதே இது இப்படித்தான் இருந்தது. அதனால் நடக்க முடியாது. இந்தக் கால்களுக்கு உயிர் இல்லை. ஒரு பயனும் இல்லாமல்...''
அவன் தான் கூற வந்ததை முழுமையாகக் கூறி முடிக்கவில்லை.
"அந்தச் சிறிய பெட்டிக்குள் என்ன இருக்கு?''
"அது என்னுடைய மேஜிக் பெட்டி''- ஒரு குச்சியை எடுத்துக் கீழே போடுவதைப்போல, கையால் அந்த கால்களை எடுத்து மரப்பெட்டிக்குக் கீழே வைத்த அவன் சொன்னான். நல்ல பிரகாசமான சிரிப்புடன் அவன் தொடர்ந்து சொன்னான்:
"நீங்க அதைப் பார்க்கணுமா? அப்படியென்றால் பொறுமையா உட்கார்ந்திருக்கணும். வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் இப்படிப்பட்ட ஒரு மேஜிக்கை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க.''
மெலிந்துபோன, அசாதாரணமான நீளத்தில் தோற்றம் தந்த கைகளின் வேகமான அசைவுகளால் தன்னுடைய சரீரத்தை உயர்த்திப் பிடித்துக்கொண்டவாறு, அந்த அலமாரியிலிருந்த ஒவ்வொரு பெட்டிகளையும் எடுத்து, அவன் என்னுடைய கையில் தந்தான்.
"பத்திரமா வச்சிருங்க. பெட்டிகளைத் திறக்கக் கூடாது. அவை ஓடிப்போய் விடும். அந்தப் பெட்டிகளில் ஒன்றை காதில் வச்சுப் பாருங்க, சரியா?''
"உள்ளே ஏதோ ஓடுறது மாதிரி இருக்கே!''
"ஆமா... அதுதான் எட்டுக்கால் பூச்சி. செண்டை மேளம் அடிப்பவன் என்று நான் அவனுக்குப் பெயர் வச்சிருக்கேன். அவன் புத்திசாலி!''
அவனுடைய கண்கள் பிரகாசமாக இருந்தன. அந்த நீலநிறத்தில் இருந்த முகத்தில் சிறிய ஒரு புன்சிரிப்பு மலர்ந்தது. கைகளை வேகமாகச் செயல்பட வைத்து அலமாரியிலிருந்த சிறிய பெட்டிகளை எடுத்து, முதலில் தன்னுடைய காதிலும் பிறகு என்னுடைய காதிலும் அவற்றைச் சேர்த்து வைத்துக்கொண்டு, மிகுந்த ஆர்வத்துடன் அவன் கூறத் தொடங்கினான்:
"அவன்தான் அனீஸம் என்ற கரப்பான் பூச்சி. ஒரு பட்டாளக்காரனைப்போல சத்தம் போட்டுக் கொண்டிருப்பான். இதோ இது ஒரு ஈ... திருமதி. அஃபீஸ்யல் என்று அழைக்கலாம். ஒரு கேடுகெட்ட படைப்பு. நாள் முழுவதும் முனகிக் கொண்டே இருக்கும். எல்லாரிடமும் போய் ஏதாவது சொல்லிக்கொண்டிருக்கும். அது என் தாயின் தலைமுடியைப் பிடித்துத் தரையில் இழுத்தது. அது ஈ அல்ல... தெரியுதா? தெருவிற்கு அப்பால் ஒரு பெண் இருக்கிறாள். ஈயைப் பார்க்குறப்போ அவளைப்போலவே இருக்கும். இனி... இதோ... இன்னொருவன். கருவண்டு! பெரிய ஆள்... ஒரு முதலாளி. சாதாரண மோசக்காரன் அல்ல. குடிகாரன், வெட்கம் இல்லாதவன்... அவ்வளவுதான். போதை ஏறிவிட்டால் ஒரு ஃபர்லாங் தூரத்திற்கு நிர்வாணமாக நகருவான். ஒரு கறுப்பு நிற நாயைப்போல உரோமங்கள் நிறைந்தவன். இனி... மணியன் ஈயைப் பற்றி... அங்கிள் நிக்கோடிம். நான் இந்த ஆளை வெளியில் இருந்து பிடித்தேன். இளவரசன்... அது உண்மை. கொடுத்து வைத்த ஊர்சுற்றி என்று அவன் தன்னைப் பற்றிக் கூறிக்கொள்வான். ஏதோ தேவாலயத்திற்காகப் பணம் வசூலிப்பதாக அவனுக்கு நினைப்பு. ஓசியாகக் கிடைத்தவன் என்று என் தாய் அவனைப் பற்றிக் கூறுவாள். அவனும் என் தாயின் காதலர்களில் ஒருவன். என் தாய்க்கு எத்தனையோ காதலர்கள் இருக்கிறார்கள்.''
"அவள் உன்னை அடிப்பாளா?''
"யார்? என் தாயா? எனக்கு அது பிடிக்கும். நான் இல்லாமல் அவங்களால் வாழ முடியாது. அவங்க ஒரு இளகிய இதயத்தைக் கொண்டவங்க. மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டவங்க என்பது வேறு விஷயம். ஆனால் எங்களுடைய தெருவில் இருப்பவர்கள் எல்லாரும் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டவர்கள்தான். என் தாய் ஒரு பேரழகி. எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவங்க. முழுமையாக மது அருந்தி, போதையில் ஆழ்ந்து கிடப்பாங்க. ஒரு கிராமத்து தேவடியாள். நான் அவங்கக்கிட்ட கூறுவேன்: "என்னுடைய பாவப்பட்ட பெண்ணே! மது அருந்துவதை நிறுத்துங்க. நீங்க பணம் சம்பாதிக்கலாம்" என்று. ஆனால் அவங்க வெறுமனே சிரிப்பாங்க. ஒரு முட்டாள்தனமான பெண்! இல்லாவிட்டால் வேறு என்ன? ஆனால் அவங்க நல்லவங்க. அவங்க கண் விழிச்ச பிறகு, நீங்கள் அதைத் தெரிஞ்சுக்குவீங்க.''
அவன் இதயத்திலிருந்து சிரித்தான். அவன் சிரித்தபோது என்னுடைய இதயத்திற்குள் என்னவோ பொங்குவதைப்போல இருந்தது. என் இதயம் இரக்கம் கொண்டு எழுந்து அடங்கியது. அந்த நகரம் முழுவதும் கேட்பது மாதிரி சத்தம் போட்டு அழ வேண்டும்போல எனக்குத் தோன்றியது. கழுத்திற்கு மேலே அவனுடைய தலை ஒரு அசாதாரண மலரைப்போல ஆடியது. உணர்ச்சிவசப்பட்டதால் அவனுடைய கண்களில் இருந்து மேலும் அதிகமாக பிரகாசம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பதில் கூற முடியாத அளவிற்கு அது என்னை தன்னை நோக்கி இழுத்தது.
சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், கருணை கலந்த அவனுடைய சிந்தனைகளைக் கேட்டு ஒரு நிமிட நேரத்திற்காவது நான் எங்கே இருக்கிறேன் என்ற விஷயத்தைக்கூட மறந்துவிட்டேன். ஆனால் அடுத்த நிமிடம் சிறையில் இருப்பதைப் போன்ற சாளரத்தைப் பற்றியும், வெளியே இருந்த சேற்றுக் குவியலைப் பற்றியும், அறைக்குள் இருந்த அடுப்பைப் பற்றியும், அறையின் மூலையில் கிடக்கும் மரத்துண்டுகளைப் பற்றியும் என்பதைப்போல, மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த பெண்ணைப் பற்றியும் நான் மனதில் நினைத்துப் பார்த்தேன்.
"நல்ல சுவாரசியமான மேஜிக். அப்படித்தானே?''- அந்த சிறுவன் பெருமையுடன் கேட்டான்.
"நல்ல சுவாரசியமான விஷயம்தான்.''
"பட்டாம்பூச்சிகள் இல்லை... பட்டாம்பூச்சிகளும் மின்மினிப் பூச்சிகளும் இல்லை.''
"உன் பெயர் என்ன?''
"லியோங்கா.''
"நீ என்னுடைய பெயரைக் கொண்ட புத்திசாலிப் பையனா?''
"உண்மையாகவா? நீங்கள் எப்படிப்பட்டவர்?''
"நானா? யாருமே இல்லாதவன்...''
"என்னிடம் உண்மையைச் சொல்லுங்க. எல்லாரும் ஏதாவதொரு வகையைச் சேர்ந்தவர்கள்தான். எனக்கு அது தெரியணும். நீங்கள் நல்ல மனிதர் என்று தோன்றுகிறது.''