மாஷ்கா - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7452
"அம்மா... சீக்கிரமா கொஞ்சம் வாங்க. ஏய்... விலைமாதுவே! நீங்க என் கைகளைக் கொஞ்சம் கழுவிவிடுங்க. இந்த மனிதர் என்னவெல்லாம் கொண்டு வந்திருக்கிறார் என்பதை வந்து பாருங்க. இவரை உங்களுக்குத் தெரியுமா? கடந்த இரவு வேளையில் உங்களை இங்கே கொண்டு வந்த மனிதர்... போலீஸ்காரரைப்போல பார்ப்பதற்கு இருக்கிறார். இவருடைய பெயரும் லியோங்காதானாம்.''
"நீ அவருக்கு நன்றி சொல்லு''- சிறிதும் அறிமுகமில்லை என்று தோன்றக்கூடிய சாந்தமான குரல் எனக்குப் பின்னாலிருந்து கேட்டது.
சிறுவன் பலமாகத் தலையை ஆட்டினான்.
"நன்றி... நன்றி...''
முடி இழையைப் போன்ற தூசுப்படலம் ஒரு மேகக் கூட்டத்தைப்போல அந்த தரைக்கு மேலே பரவியது. அதற்குள்ளிருந்து ஒரு பெண்ணின் புன்சிரிப்பில் தெரிந்த கொஞ்சம் பற்களையும், மங்கலாகத் தெரிந்த முகத்தையும் என்னால் பார்க்க முடிந்தது.
"குட் மார்னிங்!''
"குட் மார்னிங்!''- அந்தப் பெண் திரும்பச் சொன்னாள். அவளுடைய அடக்கிப் பிடித்த குரல்... ஒரு விதத்தில் மிகவும் சக்தி படைத்ததாக இருந்தது. தன்னுடைய சிறிய கண்களைக் கொண்டு, சற்று கேலி பண்ணுவதைப்போல அவள் என்னைப் பார்த்தாள்.
லியோங்கா என்னை மறந்து போயிருந்தான். அவன் ஒரு தேன் கேக்கைச் சுவைத்துக் கொண்டிருந்தான். அந்த அட்டைப் பெட்டிகளை மிகவும் கவனமாகத் திறந்துகொண்டே அவன் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். கண்களுக்குச் சற்றுக் கீழே நீலநிறத்தைப் பரவச் செய்துகொண்டு அவனுடைய இமைகள் நிழல் விரித்துக்கொண்டிருந்தன. ஒரு கிழவனின் தெளிவற்ற பார்வையைப்போல சூரியன் சேறு படிந்த சாளரத்தின் கண்ணாடிகள் வழியாக உள்ளே பார்த்துக் கொண்டிருந்தது. அந்தச் சிறுவனின் சிவந்த தலைமுடியில் அது சிறிதும் கடுமை இல்லாத பிரகாசத்தைப் பரப்பியது. கழுத்துப் பகுதியில் அவனுடைய சட்டை திறந்து கிடந்தது. அந்தச் சிறிய எலும்புக் கூட்டிற்குள் அவனுடைய இதயம் துடிப்பதை என்னால் கேட்க முடிந்தது. அவனுடைய மார்பில் மிகவும் சிரமப்பட்டு பார்க்க முடிகிற மார்புக் கண்களும் வெளித் தோலும் அந்தத் துடிப்பில் உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்தன.
அவனுடைய தாய் அடுப்பிற்கு அருகில் இருந்து எழுந்தாள். துவாலையை நனைத்து எடுத்து அவள் லியோங்காவின் அருகில் சென்றாள். அவள் அவனுடைய இடக் கையைத் தன் கையால் எடுத்தாள்.
"அதோ அவன் ஓடுகிறான். அங்கேயே நில்லுடா''- மரப் பெட்டிகளை இறுகப் பற்றிக்கொண்டு, கீழே போட்டிருந்த துணிகளைத் தாறுமாறாக்கி, மெலிந்த கால்களை வெளியே காட்டியவாறு அவன் உரத்த குரலில் சத்தம் போட்டுக் கத்தினான்:
"அவனைப் பிடிங்க...''- அவன் ஆர்ப்பாட்டத்தை அதிகரித்தான்.
அந்த வண்டைப் பிடித்துத் தன்னுடைய உள்ளங்கையில் வைத்து, சோள மலரின் நிறத்தைக் கொண்ட கண்களால் அதையே வெறித்துப் பார்த்தவாறு, அதிகமான நாட்கள் பழக்கம் இருப்பதைப்போல காட்டிக் கொண்டு அவன் என்னுடன் பேசினான்.
"இவை எங்களுக்கு நிறைய இருக்கு. இவற்றை நெருக்கிக் கொன்னுடாதீங்க''- முன்னெச்சரிக்கையாகக் கூறுவதைப்போல அவன் சொன்னான்: "நல்லா தண்ணி அடிச்ச ஒரு நாள், என் தாய் என்னுடைய மேஜிக் பெட்டிகளின்மீது ஏறி உட்கார்ந்து, இருந்தவை அனைத்தையும் நாசம் பண்ணிட்டாங்க.''
"அதை மறந்திடு சிறுவனே!''
"பிணங்கள் ஒரு குவியலாக இருந்தன. அவை எல்லாவற்றையும் நான் நெருப்பு வைத்து எரித்தேன்.''
"ஆனால் பிறகு ஒருநாள் சில வண்டுகளை நான் உனக்குப் பிடித்துத் தந்தேன்ல?''
"அதனால் என்ன பிரயோஜனம்? என் தாய் அன்னைக்கு நசுக்கிக் கொன்ற வண்டுகள் அனைத்தும் பயிற்சி பெற்றவையாக இருந்தன. அவை இறந்தவுடன், நான் அவற்றை அடுப்பில் போட்டு எரியவிட்டேன். இதோ... பார்த்தீங்களா? நான் இங்கு ஒரு சுடுகாட்டை உண்டாக்கி வைத்திருக்கிறேன். நான் நடந்து சென்று அவற்றை அதில் போடுவேன். உங்களுக்குத் தெரியுமா? என் கையில் மிங்கா என்ற ஒரு எட்டுக்கால் பூச்சி இருந்தது. கிட்டத்தட்ட என் தாயின் வாடிக்கையாளர்களில் ஒருத்தனைப்போல- அந்த அடிதடிகளில் ஈடுபடக்கூடிய தடியன் இருந்தானே.... இப்போ சிறையில் நிரந்தரமாக இருக்கும் ஒருத்தன்... அவனைப்போல அந்த எட்டுக்கால் பூச்சி இருக்கும்.''
"அடடா... என் செல்ல மகனே!''- அந்தப் பெண் குச்சியைப் போல இருந்த சிறிய விரல்களைக் கொண்ட கைகளால் அவனுடைய தலைமுடியை ஒதுக்கிவிட்டு அவனைக் கொஞ்சினாள். முழங்கையால் என்னை சீண்டியவாறு, புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்த கண்களுடன் அவள் என்னிடம் கேட்டாள்:
"நல்ல பையன்... என்ன அழகான கண்கள்! சரியா?''
"என் கண்களில் ஒன்றை எடுத்து, அதற்கு பதிலாக எனக்கு என்னுடைய கால்களைத் தந்தால் போதும்''- லியோங்கா சிரித்துக் கொண்டே சொன்னான். ஒரு வண்டை கூர்மையாகப் பார்த்துக் கொண்டே அவன் தொடர்ந்து சொன்னான்:
"இந்தத் தடியன் இரும்புப் பானையைப்போல இருக்கிறான். அம்மா, இவன் அந்த பாதிரியார் மாதிரியே இல்லே? நீங்க ஒரு ஆளுக்கு கோணி சரி பண்ணி தந்தீங்கள்ல அம்மா? அந்த ஆளை ஞாபகத்துல இருக்குதா?''
"ஞாபகத்துல இருக்குன்னு கட்டாயம் சொல்வேன்.''
சிரித்துக்கொண்டே அவள் அந்தக் கதையைக் கூறத் தொடங்கினாள்:
"ஒருநாள் ஒரு பாதிரியார் வந்தார். அவருடைய தோற்றத்தைப் பார்க்கவே சகிக்கலை. அவர் என்னிடம் சொன்னார், "நீ ஒரு தையல் பண்ணக்கூடிய பெண்தானே? நீ எனக்கு சணலாலான ஒரு கோணியை உண்டாக்கித் தரமுடியுமா?" என்று. "அப்படிப்பட்ட கோணிகளைப் பற்றி நான் இன்றுவரை கேள்விப்பட்டதே இல்லை. என்னால் முடியாது" என்று நான் சொன்னேன். "அப்படியென்றால் உனக்கு நான் கற்றுத் தருகிறேன்" என்று அவர் சொன்னார். அவர் தன்னுடைய ஆடையை அவிழ்த்தார். நீங்க நம்புவீங்களா? அவருடைய இடுப்பைச் சுற்றி பலமான நீளம் கொண்ட ஒரு கயிறைச் சுற்றி வைத்திருந்தார். சணலைப் பயன்படுத்திக் கோணி தயாரிப்பது எப்படி என்பதை எனக்கு அவர் கற்றுத் தந்தார். அந்தக் கோணியை நெய்து கொண்டிருந்தபோது, நான் மனதில் நினைத்தேன்- "இந்தக் கோணியை வைத்து அவர் என்ன செய்யப் போகிறார்? தேவாலயத்திற்குள் நுழைந்து திருடுவதற்காக இருக்குமோ?" என்று.''
அவள் சிரித்தாள். ஒரு கையால் அவள் சிறுவனைத் தடவ ஆரம்பித்தாள்.
"அந்த மனிதர் சரியான நேரத்திற்கு வந்தார். நான் அவரிடம் சொன்னேன், "திருடுவதற்காக நீங்கள் இதை பயன்படுத்துவதாக இருந்தால், நான் இந்த வேலையைச் செய்ய முடியாது" என்று. ஆனால் அந்த தந்திரசாலியான மனிதர் சிரித்துக்கொண்டே சொன்னார், "இல்லை. ஒரு சுவரில் ஏறிப் பிடிப்பதற்குத்தான். என் வீட்டைத் தாண்டி பெரிய சுவர் இருக்கிறது. நாங்கள் பாவம் செய்பவர்கள். சுவரின் ஒரு பக்கத்தில் இருந்துகொண்டு நாங்கள் பாவம் செய்கிறோம்.