மாஷ்கா - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7452
"பேசாம வா என் தங்கமே''- சுய உணர்விற்குத் திரும்பி வந்தவாறு அவள் சொன்னாள்: "நான் நல்ல பிள்ளையா இருக்கேன். நான் உனக்கு சுகம் தர்றேன்.''
ஒரு பெரிய இரண்டு அடுக்குகள் கொண்ட ஒரு கட்டிடத்தை நோக்கி என்னை அவள் அழைத்துச் சென்றாள். ஒரு கண்பார்வை தெரியாதவளைப்போல குதிரை வண்டிகள், பீப்பாய்கள், பிய்ந்துபோன பெட்டிகள் ஆகியவற்றின் வழியாக தட்டுத் தடுமாறி அவள் முன்னோக்கி நடந்தாள்.
தரையில் ஒரு பெரிய துவாரத்திற்கு அருகில் சென்றதும் அவள் நின்றாள்.
"கீழே இறங்கு''- அவள் சொன்னாள்.
அந்த அடர்த்தி குறைந்த சுவரின்மீது சாய்ந்து கொண்டு, நடுங்கிக் கொண்டிருந்த பெண்ணின் சரீரத்தை என்னுடைய கைகளில் தாங்கியவாறு, அந்த வழுக்கிக் கொண்டிருந்த படிகள் வழியாக நான் கீழே இறங்கினேன். இருட்டில் சற்று தேடிப் பார்த்துக் கொண்டே நான் அந்தக் கதவின் தாழ்ப்பாளைக் கண்டுபிடித்தேன். கதவைத் திறந்த பிறகு, முன்னோக்கி நகரத் தயங்கியவாறு நான் கதவின் அருகிலேயே நின்றுவிட்டேன்.
"அம்மா, நீங்கதானே?''- இருட்டிற்குள்ளிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது.
"ஆமாம்... நான்தான்.''
தார், சிதிலம் ஆகியவை கலந்த ஒரு தாங்க முடியாத வாசனை என்னுடைய நாசிக்குள் நுழைந்தது. நெருப்புப் பெட்டியை உரசியபோது, அதன் மெல்லிய வெளிச்சத்தில் ஒரு சிறுவனின் வெளிறிப்போன முகத்தை நான் பார்த்தேன்.
"என்னைத் தவிர வேறு யார் இங்கே வருவாங்க? இது நானேதான்''- தன்னுடைய உடலின் எடை முழுவதையும் என்மீது சாய்த்துக் கொண்டு அவள் சொன்னாள்.
இன்னொரு நெருப்புக் குச்சியையும் எடுத்து உரசினேன். கண்ணாடி டம்ளரின் "சில்" சத்தம் கேட்டது. அந்த சிறிய மெலிந்து காணப்பட்ட கை தகர விளக்கை எரியச் செய்தது.
"என் தங்கமே...''- ஒரு மூலையில் சாய்ந்து விழுந்துகொண்டே அவள் நீண்ட பெருமூச்சை விட்டாள். செங்கற்களாலான அந்தத் தரையிலிருந்து அதிக உயரத்தில் என்று கூற முடியாத அளவிற்குப் படுப்பதற்கான ஒரு இடம் தயார் செய்யப்பட்டிருந்தது.
விளக்கின் ஒளியைக் குறைப்பதற்காக அந்தச் சிறுவன் அதன் திரியைத் தாழ்த்தினான். அப்போது அது புகையத் தொடங்கியது. அவனுடைய முகத்தில் ஒரு தீவிரத்தன்மை இருந்தது. அவன் கூர்மையான மூக்கின் நுனியையும், பெண்பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்ற தடிமனான உதடுகளையும் கொண்டிருந்தான். சிறிதும் பொருத்தமற்ற முறையில் வண்ணம் பூசப்பட்ட ஒரு ஓவியத்தைப்போல அவன் இருந்தான். விளக்கைச் சரி பண்ணியவுடன், தன்னுடைய கூர்மையான பார்வையால் என்னைப் பார்த்து அவன் சொன்னான்:
"அம்மா மது அருந்தியிருக்காங்கள்ல?''
அவ்வப்போது தேம்பித் தேம்பி அழுதுகொண்டும், இடையில் குறட்டை விட்டுக் கொண்டும் அவனுடைய தாய் அந்தப் படுக்கையில் மல்லாக்கப் படுத்துக் கிடந்தாள்.
"இவங்களோட ஆடையை மாற்றணும்''- நான் சொன்னேன்.
"அப்படின்னா ஆடையை மாற்றுங்க''- கண்களைத் தாழ்த்திக் கொண்டு அவன் சொன்னான்.
நான் அவளுடைய நனைந்த பாவாடையை அவிழ்க்க ஆரம்பித்தவுடன், மிகவும் தீவிரமாக குரலைத் தாழ்த்திக்கொண்டு அவன் கேட்டான்:
"விளக்கை அணைக்கணுமா?''
"எதற்கு?''
அதற்கு அவன் பதில் கூறவில்லை. ஒரு சாக்கு மூட்டையை அவிழ்ப்பதைப்போல அந்தப் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்துக் கொண்டே நான் அவனைப் பார்த்தேன். சாளரத்திற்குக் கீழே போடப்பட்டிருந்த ஒரு மரப்பெட்டியில் அவன் உட்கார்ந்திருந்தான். நல்ல உறுதியான பலகைகளைக் கொண்டு உண்டாக்கப்பட்டிருந்த அந்தப் பெட்டியின் மேலே கறுப்பு எழுத்துக்களில் இப்படி எழுதப்பட்டிருந்தது.
"மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். எல்.ஆர். அன்ட் கம்பெனி."
சதுர வடிவத்தில் இருந்த அந்தச் சாளரத்தின் அடிப்பகுதி அந்தச் சிறுவனின் தோளுக்கு அருகில் இருந்தது. சுவரில் சிறிய அடுக்குகளைக் கொண்ட அலமாரி இருந்தது. அந்த அடுக்குகளில் பலவகைப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளும் நெருப்புப் பெட்டிகளும் இருந்தன. அந்தச் சிறுவன் உட்கார்ந்திருந்த பெட்டிக்கு அருகில் மஞ்சள்நிறத் தாளால் மூடப்பட்டு, மேஜையாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெட்டி இருந்தது. மிகவும் மெலிந்து போய்க் காணப்பட்ட கைகளால் அவன் தன்னுடைய கழுத்திற்குப் பின்னால் பிடித்திருந்தான். இருள் நிறைந்த சாளரத்தின் பலகைகளுக்கு அப்பால் அவனுடைய பார்வை இருந்தது.
அந்தப் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து நான் அவற்றை அடுப்பிற்கு மேலே விரித்துப் போட்டேன். அந்த அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த மண்பானையிலிருந்து நீரை எடுத்து, நான் கைகளைக் கழுவினேன். கைக்குட்டையால் கைகளைத் துடைத்த நான் சொன்னேன்:
"சரி... குட்பை.''
என்னைப் பார்த்து சற்று கொஞ்சுகிற குரலில் அவன் கேட்டான்:
"நான் இந்த விளக்கை அணைக்கட்டுமா?''
"உன் விருப்பம்...''
"என்ன? நீங்க போறீங்களா? நீங்க இங்கே படுக்கலையா?''
தன்னுடைய மெலிந்த கையை அவன் தன்னுடைய தாயை நோக்கி சுட்டிக் காட்டினான்: "இவங்ககூட...''
"எதற்கு?''- நான் அலட்சியமாகக் கேட்டேன்.
"அதை நீங்களே தெரிஞ்சிக்குவீங்க''- சர்வசாதாரணமாக அவன் சொன்னான்: "இங்கே வர்றவங்க எல்லாரும் அப்படி நடப்பதுதான் வழக்கம்.''
கடைக் கண்களால் நான் சுற்றிலும் பார்த்தேன். நான் நின்றிருந்த இடத்தைவிட்டு சற்றுத் தள்ளி அழுக்கான ஒரு அடுப்பு இருந்தது. அதற்கடுத்து கழுவ வேண்டிய பாத்திரங்கள் கிடந்தன. மரப்பெட்டிக்குப் பின்னால் தார் புரண்ட கயிறும், ஓக் மரத்தின் கொம்பு ஒன்றும், மரத்துண்டுகளும், ஒரு தாழ்ப்பாளும் கிடந்தன.
என்னுடைய கால்களுக்கு அருகில் அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்ட பெண்ணின் உடல் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தது.
"உன்னுடன் கொஞ்ச நேரம் இருக்கட்டுமா?''- நான் அந்தச் சிறுவனிடம் கேட்டேன்.
கவலையுடன் என்னைப் பார்த்துக்கொண்டே அவன் சொன்னான்:
"உங்களுக்குத் தெரியுமா? நாளை காலை வரை அவங்க எழுந்திருக்க மாட்டாங்க.''
"அப்படியா? எனக்கு அவள் தேவையில்லை.''
அந்த மரப்பெட்டிக்கு அருகில் சப்பணம் போட்டு அமர்ந்து கொண்டு, அவனுடைய தாயைப் பார்த்த சூழ்நிலையை நான் விளக்கிச் சொன்னேன். மிகவும் சுவாரசியத்துடன் நான் பேச முயற்சித்தேன்.
"அவள் அந்த சேற்றில் இருந்துகொண்டு துளாவ ஆரம்பிச்சிட்டா- துடுப்பால் தோணியைச் செலுத்துவதைப்போல... பாட்டு பாடிக்கொண்டே...''
தன்னுடைய மெலிந்த மார்புக் கூட்டின்மீது தடவிக் கொண்டே ஒரு வெளிறிய சிரிப்பை எனக்கு வெளிப்படுத்தியவாறு அவன் தலையை ஆட்டினான்.
"அம்மா அதிகமாகக் குடிச்சிட்டாங்கன்னா இப்படித்தான். சுய உணர்வு வந்த பிறகும் அம்மா ஒவ்வொரு தமாஷ்களும் பண்ணுவாங்க... சின்ன பெண் குழந்தைகளைப்போல...''
இப்போது என்னால் அவனுடைய கண்களைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அந்தக் கண்களின் மேற்பகுதியில் நிறைய உரோமங்கள் வளர்ந்திருந்தன. அசாதாரணமான அளவில் பெரிதாக இருந்த புருவங்களையும், சற்று அதிகமாகவே சிறு உரோமங்கள் வளர்ந்திருந்த இமைகளையும் அவன் கொண்டிருந்தான்.