மாஷ்கா - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7452
உனக்குப் புரியுதா?" என்று. நான் கோணியை நெய்ய ஆரம்பித்தேன். இரவில் என்னுடன் உடலுறவு கொண்ட பிறகு அவர் வெளியே போனார். அப்போ நாங்க எப்படியெல்லாம் சிரிச்சோம் தெரியுமா?''
"சிரிக்கிறதுன்னா மிகவும் விருப்பமான விஷயமாச்சே!'' - ஒரு முதிர்ந்த ஆணின் குரலில் அந்தச் சிறுவன் கேட்டான்: "பாத்திரத்தை எடுத்து வச்சு தேநீர் தயாரிக்கக்கூடாதா?''
"அதற்கு இங்கே கொஞ்சம்கூட சர்க்கரை இல்லை.''
"போயி வாங்கிட்டு வாங்க.''
"பணமில்லை.''
"ஓ! உங்களுடைய பாழாய்ப்போன குடிப்பழக்கம்தான் இதற்கெல்லாம் காரணம்! இவரிடமிருந்து கொஞ்சம் பணம் கடன் வாங்குங்க'' - அவன் நான் இருந்த பக்கம் திரும்பினான்: "உங்க கையில காசு இருக்கா?''
நான் அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் காசு கொடுத்தேன். உற்சாகத்துடன் அவள் வேகமாக எழுந்தாள். காய்ந்துபோன, கரி படிந்த சிறிய ஒரு பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து வைத்து விட்டு, ஒரு பாட்டை மெதுவான குரலில் பாடியவாறு அவள் வெளியே சென்றாள்.
"அம்மா, அந்த சாளரத்தைக் கழுவுங்க. வெளியே இருக்கும் காட்சிகள் எதையும் என்னால் பார்க்க முடியல'' - அந்தச் சிறுவன் உரத்த குரலில் சொன்னான்.
"டேய், பூச்சிகளா! நீங்க அந்த அளவுக்கு புத்திசாலிகளாக இருக்க வேண்டாம். நான் சொல்றேன்''- அவன் சொன்னான். பூச்சிகள் இருந்த ஒவ்வொரு சிறிய பெட்டியையும் மிகவும் கவனமாக அவன் அலமாரியில் வரிசைப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தான். ஈரமான சுவரில் அறையப்பட்டிருந்த ஆணியின் பலத்தில் நின்று கொண்டிருந்த அலமாரிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. "நல்லா வேலை செய்கிற என் தாய் நூல் நூற்க ஆரம்பித்து விட்டால் நமக்கு இருமல் வரும். இந்த அறை முழுவதும் தூசி நிறைந்து விடும். அப்போது நான் அழுவேன். "அம்மா, கடவுள் புண்ணியமா என்னை வெளியே கொண்டு போங்க. இல்லாவிட்டால் நான் இங்கே கிடந்து அருகிலேயே இறந்துவிடுவேன்" என்று சொல்வேன். ஆனால் நான் அதையெல்லாம் சகிச்சுக்கிடணும் என்று என் தாய் சொல்லுவாங்க. நான் அவங்ககூடவே இருக்கணும்னு சொல்லுவாங்க. என் அம்மாவுக்கு என்மீது ரொம்ப பிரியம். அதில் சந்தேகமே வேண்டாம். வேலை செய்றப்போ அம்மா பாடிக் கொண்டே இருப்பாங்க. என் தாய்க்கு எவ்வளவோ பாடல்களைத் தெரியும்.''
உணர்ச்சிவசப்பட்டதன் காரணமாக அவனுடைய கண்கள் ஒளிர்ந்தன. அடர்த்தியான புருவங்கள் உயர்ந்து வளைந்து நின்றன. கரடுமுரடான உற்சாகக் குரலில் அவன் பாட ஆரம்பித்தான்.
"ஸோஃபாவில் கிடப்பது யார்? ஸோஃபிதானே?'' - சிறிது நேரம் அந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு நான் சொன்னேன்.
"அது நல்ல பாட்டு இல்ல...''
"அந்தப் பாட்டுகள் எல்லாம் அப்படிப்பட்டவைதான்''- லியோங்கா உரத்த குரலில் சொன்னான். திடீரென்று எதையோ கேட்டதைப்போல அவன் சொன்னான்: "அந்தப் பாட்டைக் கேட்டீங்களா? சீக்கிரமா என்னைக் கொஞ்சம் தூக்குங்க.''
சாம்பல் நிறம் படர்ந்த தோலால் மூடப்பட்டிருந்த அந்த சிறிய எலும்புக் கூட்டை நான் எடுத்துத் தூக்கினேன். தன்னுடைய தலையை சாளரத்தின் வழியாக வெளியே வைத்துக்கொண்டு ஆர்வத்துடன் அவன் கூர்ந்து கவனித்தான். அவனுடைய அசைவே இல்லாத கால்கள் சுவரிலிருந்து கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருந்தன. வெளியே தெருவில் ஆர்கனில் ஒரு அருமையான பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு பையனின் கரடுமுரடான குரலுடன், நாயின் ஊளைச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பாட்டுடன் சேர்ந்து லியோங்கா முனகிக் கொண்டிருந்தான்.
தறியில் தூசு குறைந்து விட்டிருந்தது. அவனுடைய தாயின் தலைக்குப் பின்னால் சிதிலமடைந்த சுவரில், ஒரு நாணயத்தின் அளவிற்குப் பெண்டுலம் இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண்டிருந்தது. சமையலறையில் பாத்திரங்கள் கழுவாமல் கிடந்தன. அங்குள்ள எல்லா பொருட்களின் மீதும் தூசியால் ஆன ஒரு அடர்த்தியான படலம் படர்ந்து விட்டிருந்தது. மிகவும் அதிகமாக தூசு படர்ந்திருந்தது அந்த அறையின் மூலையில் இருந்த எட்டுக்கால் பூச்சியின் வலையின்மீதுதான்.
லியோங்காவின் இருப்பிடம் தூசிப்படலம் நிறைந்த ஒரு பொந்தைப்போல இருந்தது. அந்த துவாரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஏராளமான தூசிகள் படிந்திருந்தன.
தேநீர் கொதித்துக்கொண்டிருந்த பாத்திரம் அதற்கென்று இருக்கக்கூடிய சத்தத்தை உண்டாக்கியது. அதன் சத்தத்தைக் கேட்டு பயந்துவிட்டதைப்போல, தெருவில் ஒலித்துக் கொண்டிருந்த ஆர்கனின் சத்தம் நின்றுவிட்டது. அதற்கு பதிலாக ஒரு முரட்டுத்தனமான குரல் வெளியே கேட்டது: "ரிஃப் ராஃப்.''
"என்னைக் கீழே விடுங்க''- நீண்ட பெருமூச்சை விட்டவாறு லியோங்கா சொன்னான்: "ஆட்கள் அவனை அங்கேயிருந்து விரட்டி விட்டுட்டாங்க.''
நான் அவனை அந்த பெட்டியின்மீது உட்கார வைத்தேன். நெஞ்சைத் தடவிக்கொண்டும், அசைந்து கொண்டும் இருந்த அவன் மிகவும் கவனமாக இருமினான்.
"என் நெஞ்சு வலிக்குது. கொஞ்ச நேரம் சுத்தமான காற்றை சுவாசிப்பது என் உடலுக்கு நல்லது அல்ல. நீங்க எப்போதாவது பேயைப் பார்த்திருக்கீங்களா?''
"இல்ல...''
"நானும் பார்த்தது இல்ல. இரவு வேளையில் அவை வெளியே வருவதை எதிர்பார்த்துக்கொண்டு அடுப்பிற்குக் கீழே நான் உட்கார்ந்திருப்பேன். பேய்கள் சுடுகாட்டில் சுற்றித் திரியும். அப்படித்தானே?''
"உனக்கு அவற்றால் என்ன ஆகணும்?''
"அது ஒரு சுவாரசியமான விஷயம். அந்தப் பேய்களில் நல்லவர்களும் இருக்கலாமே! நீர் கொண்டு வரும் பெண்ணின் மகள் காத்கா அந்தத் தரைக்குக் கீழே இருக்கும் அறையில் ஒரு பேயைப் பார்த்திருக்கிறாள். அவளுக்கு பயம் வந்துவிட்டது. ஆனால் அப்படி பயப்படச் செய்யும் விஷயங்கள் எதுவும் என்னை பயமுறுத்தவில்லை.''
தன்னுடைய காலைச் சுற்றிக் கிழிந்த துணிகளை இழுத்து சுற்றிக்கொண்டே அவன் மிகவும் வேகமாகப் பேசிக் கொண்டிருந்தான்.
"எனக்கு அவற்றைப் பிடிக்கும். பயப்படச் செய்யும் கனவுகள்மீது எனக்கு மிகவும் விருப்பம். மேலே வேர்கள் இருக்கும்- இலைகளும் கிளைகளும் தலைகீழாக வளரும்- வேர்களுடன் வானத்தைத் தள்ளிக் கொண்டு நிற்கும் ஒரு மரத்தை நான் கனவில் கண்டேன். வியர்வையால் குளித்து நான் கண்விழித்து விட்டேன். ஒருநாள் நான் என் தாயைக் கனவில் கண்டேன். எந்தவித ஆடைகளும் இல்லாமல் என் தாய் படுத்திருந்தாள். ஒரு நாய் என் தாயின் வயிற்றின்மீது உட்கார்ந்து மாமிசத் துண்டைச் சுவைத்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு துண்டையும் தின்று முடித்து, அவன் எலும்புத் துண்டைத் துப்பிக் கொண்டிருந்தான். எங்களுடைய வீட்டை ஒரு வழிபண்ணி, அவன் தெரு வழியாக ஓட ஆரம்பித்தான். கதவுகளும் சாளரங்களும் பெரிய சத்தத்துடன் மூடின. ஒரு பூனைக்குட்டி அதற்குப் பின்னால் ஓட ஆரம்பித்தது...''