
"வெட்டப்பட்ட நகங்களும் முரட்டுத்தனமான விரல்களும் இருந்த தன்னுடைய கையை என்னுடைய முழங்காலில் வைத்துக்கொண்டு அவள் தொடர்ந்து சொன்னாள்:
"லியோங்காவிற்காக நான் உங்களிடம் எப்போதும் நன்றி உள்ளவளாக இருப்பேன். அவன் இன்று மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறான். இன்று நல்ல ஒரு நாளாக இருந்தது. நீங்க நல்ல காரியத்தைச் செய்தீங்க.''
"நான் போக வேண்டிய நேரம் வந்திடுச்சு!''- நான் சொன்னேன்.
"எங்கே?''- அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.
"எனக்கு வேலை இருக்கு.''
"இங்கே தங்குங்க.''
"அது முடியாது.''
"தன்னுடைய மகனையும் சாளரத்தையும் வானத்தையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, மிகவும் அமைதியாக அவள் சொன்னாள்:
"ஏன் மெதுவா போகக்கூடாது? நான் என்னுடைய முகத்தை ஒரு துணியால் மூடிக்கொள்கிறேன். என் மகனுக்காக உங்களிடம் நன்றியைக் காட்டாமல் என்னால் இருக்க முடியாது. நான் இங்கு எங்காவது மூடிப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொள்கிறேன். போதுமா?''
மிகவும் உண்மை துடித்துக் கொண்டிருந்த மன சந்தோஷத்துடன் அவள் பேசினாள். அவளுடைய கண்களில்- குறும்புத்தனமான முகத்தின் சிறுபிள்ளைத்தனம் ததும்பிக் கொண்டிருக்கும் கண்களில் புன்சிரிப்பு மலர்ந்திருந்தது. ஒரு பிச்சைக்காரியின் புன் சிரிப்பாக அது இல்லை. தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கும் கடமையை நிறைவேற்றக்கூடிய ஒரு வசதி படைத்த பெண்ணின் புன்சிரிப்பு அந்தக் கண்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
"அம்மா...''- அந்தச் சிறுவன் உரத்த குரலில் அழைத்தான்: "பூச்சிகள் அரிக்கின்றன அம்மா. கொஞ்சம் சீக்கிரம் வாங்க...''
"அவன் கனவு காண்கிறான்''- தன் மகனுக்கு நேராக குனிந்து கொண்டே என்னிடம் அவள் சொன்னாள்.
நான் வெளியேறினாலும் சிந்தனையில் மூழ்கியவாறு அந்த வாசலிலேயே நின்றிருந்தேன். அந்த வீட்டின் திறந்துவிடப்பட்டிருந்த சாளரத்தின் வழியாக ஒரு தூங்க வைக்கும் பாடல் மிதந்து வந்து கொண்டிருந்தது. ஒரு தாயின் தாலாட்டுப் பாடல் அது. மூக்கை அடைத்துப் பிடித்துக் கொண்டுள்ள ஒரு குரலில் அவள் பாடிக்கொண்டிருந்தாள். முன்பு எந்தச் சமயத்திலும் கேட்டிராத ஒரு பாடலை என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது.
"பூச்சியும் பிராணியும் வந்தாச்சு
துன்பமும் தொல்லையும் வந்தாச்சு
துன்பத்தின் கணக்கு தெரியாது- அது
நெஞ்சைக் குத்திக் கிழிக்கிறது!
துயரம்... துயரம்... துயரம் மட்டும்...
எங்கே நாங்கள் பறப்பது?"
சத்தம் போட்டு அழுதுவிடக் கூடாது என்பதற்காக பற்களையும் உதடுகளையும் சேர்த்து அழுத்தி வைத்துக்கொண்டு நான் அந்த வாசலில் இருந்து தெருவில் இறங்கினேன்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook