மாஷ்கா - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7452
புன்னகைத்துக்கொண்டே அந்தப் பெண் இவை எல்லாவற்றையும் சொன்னாள்.
அந்த நிமிடமே லியோங்கா என்னிடம் கேட்டான்: "நீங்கள் ஒரு முட்டாளா?''
"எனக்குத் தெரியாது. ஏன்?''
"அம்மா சொல்றாங்க, நீங்க ஒரு முட்டாள் என்று.''
"ஆமாம்... நான் அப்படிச் சொன்னேன் என்பதென்னவோ உண்மைதான். எதற்காக அப்படிச் சொன்னேன்?''- எந்தவொரு கூச்சமும் இல்லாமல் அவள் சொன்னாள்: "தெருவில் மது அருந்தி ஆர்ப்பாட்டம் பண்ணும் ஒரு பெண்ணை இந்த மனிதர் அவளுடைய வீட்டில் கொண்டு வந்து விடுகிறார். அவளைப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு, அங்கேயிருந்து வெளியேறுகிறார். அவ்வளவுதான். நான் இதைச் சொல்றதுக்குக் காரணம் துரோக எண்ணத்தால் அல்ல. என்ன முட்டாள் மனிதன்டா நீ!''
அவளும் ஒரு சிறுகுழந்தையைப் போலவே பேசினாள். அவளுடைய பேசும் முறை ஒரு சிறிய பெண் குழந்தையை ஞாபகப்படுத்தியது. அவளுடைய கண்கள் ஒரு பெண் குழந்தையின் கண்களைப் போலவே இருந்தன. உள்ளே போன மூக்கும், உயர்ந்த உதடும், அதற்கு உள்ளே தெரிந்த ஒரு பல்லும் பார்க்கவே சகிக்க முடியாமல் இருந்தன. அசிங்கமான நடையும், சந்தோஷத்துடன் செய்யும் கிண்டல்களும் அவளின் இன்னொரு பக்கமாக இருந்தன.
லியோங்காவிற்கு மிகவும் அருகில் இருந்த ஒரு பழைய பெட்டியின்மீதுதான் தேநீர்ப் பாத்திரம் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் மூடியின் வழியாக ஆவி வெளியே கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருந்தது. லியோங்கா தன்னுடைய கைகளில் ஒன்றை ஆவி பறப்பதற்கு மேலே வைத்தான். ஆவியால் உள்ளங்கையில் ஈரம் உண்டானதும், அவன் அதை தலைமுடியில் துடைத்துக் கொண்டான். அவனுடைய கண்களில் கனவுகள் தெரிந்தன.
"நான் பெரியவனாக ஆகும்போது, என் தாய் என்னை ஒரு கை வண்டியில் ஏற்றி தள்ளிக்கொண்டு போவாங்க. தெரு முழுவதும் பிச்சை கேட்டு கெஞ்சி நாங்கள் பணம் சம்பாதிப்போம். அதற்குப் பிறகு நான் அந்த திறந்து கிடக்கும் வயலில் இறங்குவேன்.''
"ஓஹோ!''- அந்தப் பெண் நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டு சொன்னாள்: "வயல் ஒரு சொர்க்கம் என்று இவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். பாவம்! பட்டாள முகாம்களும், வெட்கம் கெட்ட பட்டாளக்காரர்களும், குடிகாரர்களும் மட்டும்தான் அங்கே இருக்கிறார்கள் என்ற விஷயம் இவனுக்குத் தெரியாது.''
"ஏய்... அப்படி எதுவும் இல்ல...''- அவன் தன் தாயின் கருத்தை எதிர்த்தான். "இவர்கிட்ட கேட்டுப் பார். இவர் நிறைய வயல்களைப் பார்த்தவர்.''
"நானும் பார்த்திருக்கேன்.''
"அது கள்ளு குடித்த பிறகு...''
சிறு குழந்தைகளைப்போல தாயும் மகளும் சண்டை போட ஆரம்பித்தார்கள். அறிவுப்பூர்வமாக அந்தச் சண்டை நீண்டு கொண்டிருந்தது. உற்சாகமான அந்த மாலைப்பொழுது நிறைவடைந்து கொண்டிருந்தது. புகைந்து கொண்டிருந்த வானத்தில்,சாம்பல், நீல நிறங்களில் இருந்த மேகங்கள் பரவிவிட்டிருந்தன. வீட்டிற்குள் இருள் பரவியது.
ஒரு கோப்பை தேநீர் உள்ளே போனவுடன் சிறுவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. என்னை ஒருமுறை ஓரக்கண்களால் பார்த்த அவன் தன் தாயின் பக்கம் திரும்பிச் சொன்னான்:
"என் வயிறு நிறைந்துவிட்டது. எனக்குத் தூக்கம் வருது.''
"அப்படியென்றால் தூங்கு''- தாய் சொன்னாள்.
"அப்படின்னா இவர் போகப் போறாரா? நீங்க போயிடுவீங்களா?''
முழங்காலால் என்னைச் சீண்டிய அவள் சொன்னாள்: "பயப்படாதே... நான் இவரை விடமாட்டேன்.''
"போகக்கூடாது... தெரியுதா?''- லியோங்கா சொன்னான். கண்களை மூடிக்கொண்டு நன்கு பரவி அந்த மரப்பெட்டியின்மீது அவன் உடலை நீட்டிக் கொண்டு படுத்தான். திடீரென்று தலையை உயர்த்தித் தன் தாயைப் பார்த்து திட்டுகிற குரலில் அவன் சொன்னான்:
"மற்ற பெண்கள் செய்வதைப்போல... அம்மா, நீங்க இவரைக் கல்யாணம் பண்ணினால் என்ன? கண்களில் கண்ட ஆட்களுடன் எல்லாம் நீங்கள் ஏன் பழகுறீங்க? அவர்கள் உங்களை அடிப்பதைத் தவிர வேறு என்ன செய்கிறார்கள்? இவர் ஒரு அன்பான மனிதர்...''
"தூங்கப் பார்...''- தேநீர்க் கோப்பையுடன் தன் உதடுகளைச் சேர்த்து வைத்துக்கொண்டு அவள் சொன்னாள்:
"இவர் ஒரு பணக்காரர் வேறு...''
அவலட்சணம் பிடித்த தன்னுடைய உதடுகளால் அந்தக் கோப்பையிலிருந்து தேநீரை உறிஞ்சிக் குடித்துக் கொண்டே, பழைய ஒரு நன்கு அறிமுகமான மனிதனிடம் கூறுவதைப்போல அவள் என்னிடம் சொன்னாள்:
"இப்படித்தான் தட்டியும் முட்டியும் எங்களுடைய வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. நாங்கள் இரண்டுபேர் மட்டுமே இருக்கக்கூடிய இந்த வாழ்க்கை... வெளியே இருப்பவர்கள் என்னை பைத்தியம் என்று அழைப்பார்கள். அதனால் என்ன? எனக்கு அதைப்பற்றி எந்த வெட்கக் கேடும் இல்லை. வெளியே நான் ஒரு கேடு கெட்ட சரக்குத்தான். அந்த விஷயம் உங்களுக்கு என்னைப் பார்க்கும்போதே தெரியும்ல? நான் எதற்கு லாயக்கு என்ற விஷயம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். அவன் தூங்கிவிட்டான். அவன் ஒரு நல்ல பையன்...''
"ஆமாம்... மிகவும் நல்ல பையன்.''
"என்னால் அவனை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்க முடியவில்லை. அவன் நல்ல புத்திசாலி. சரிதானா?''
"பிறகு? நல்ல அறிவுள்ள பையன்.''
"நீங்கள் சொன்னது ஒரு வார்த்தைகூடப் பிசகாமல் சரியானது. அவனுடைய அப்பா நல்ல ஒரு மனிதராக இருந்தார். வயதான மனிதர். இந்த சட்டங்கள் எல்லாம் எழுதுவார்களே... அவர்களை நாம் எப்படி அழைப்போம்.''
"நோட்டரி...''
"ம்... அதேதான். நல்ல மனிதராக இருந்தார். அவருக்கு என்மீது நல்ல பிரியம் இருந்தது. நான் அவருடைய வீட்டில் வேலை பார்த்தேன்.''
அவள் அவனுடைய கால்களுக்கு மேலே துணியை இழுத்து விட்டாள். அவன் தலையணையாக பயன்படுத்திய அந்தக் கறுத்த துணிக்கட்டை அவள் சரியாக வைத்தாள். தொடர்ந்து மிகவும் சாதாரண முறையில் அவள் தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தாள்:
"திடீரென்று அவர் இறந்துவிட்டார். நான் அங்கேயிருந்து வேலை முடிந்து திரும்பி வந்த பிறகு அது நடந்தது. ஒரு இரவு வேளையில் வெறுமனே தரையில் நிலை குலைந்து விழுந்து அவர் இறந்துவிட்டார். உங்களுக்கு க்யாஸ் விற்பதுதானே வேலை?''
"ஆமாம்...''
"சொந்தத் தொழிலா?''
"இல்லை, ஒரு முதலாளிக்குக் கீழே...''
மேலும் சற்று நெருக்கமாக நகர்ந்து உட்கார்ந்து கொண்டு அவள் சொன்னாள்:
"என்னைப் பார்க்குறப்போ உங்களுக்கு வாந்தி எடுக்கணும் போல இருக்கக்கூடாது. எந்தச் சமயத்திலும் நான் ஒரு மோசமான பிறவியாக இருந்தது இல்லை. இந்தத் தெருவில் இருக்கும் யாரிடம் வேண்டுமென்றாலும் கேட்டுக்கோங்க... எல்லாருக்கும் என்னைத் தெரியும்.''
"எனக்கு வெறுப்போ வாந்தி எடுக்கணும் என்றோ தோணல.''