மாஷ்கா
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7452
ஒரு கோடைகாலத்தின் இரவு நேரத்தில், நகரத்தின் எல்லையில் தனியாக இருந்த ஒரு தெருவில் நான் ஒரு அசாதாரணமான காட்சியைக் கண்டேன். ஒரு பெரிய சேற்றுக் குவியலுக்கு நடுவில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். சிறு குழந்தைகளைப்போல அவள் தன்னுடைய கால்களால் சேற்றையும் நீரையும் மிதித்துத் தெறிக்கச் செய்து கொண்டிருந்தாள். சேற்று நீரைத் தெறிக்கச் செய்ததுடன், மூக்கைப் பிடித்துக்கொண்டு பேசுவதைப் போன்ற குரலில் ஏதோ ஒரு மோசமான பாடலை அவள் பாடிக் கொண்டும் இருந்தாள்.
அன்று மிகப்பெரிய சூறாவளிக் காற்று நகரத்தின்மீது படுவேகமாக வீசி அடித்துக் கொண்டிருந்தது. பெய்து கொண்டிருந்த மழை அந்தத் தெருவை ஒரு சேற்றுக் குவியலாக மாற்றி விட்டிருந்தது. சேறு மிகவும் ஆழமானதாக இருந்தது. கிட்டத்தட்ட முழங்கால்வரை அந்தப் பெண்ணின் கால்கள் சேற்றுக்குள் இருந்தன. குரலை மிகவும் கவனமாகக் கேட்டால், அந்தப் பாடலைப் பாடும் பெண் மது அருந்தியிருக்கிறாள் என்பதை மிகவும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். நடனம் ஆடிக் களைத்துப் போய்விட்டால், அவள் அந்த சேற்றில் மூழ்கிப்போவதற்கான எல்லா சாத்தியங்களும் இருந்தன.
என்னுடைய கால்களில் அணிந்திருந்த காலணிகளை நீக்கிவிட்டு அந்த சேற்றில் மெதுவாகக் கால்களை வைத்தேன். சேற்று நீரில் நின்று துள்ளிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் கைகளை பலமாகப் பிடித்து இழுத்து, அந்த சேற்றிலிருந்து அவளை வெளியே கொண்டு வந்தேன். ஒரு நிமிட நேரத்திற்கு அவள் பயந்திருக்க வேண்டும். அதனால் எதுவும் பேசாமல் கீழ்ப்படியும் மன நிலையுடன் அவள் என்னுடன் வந்தாள். ஆனால் திடீரென்று தன்னுடைய சரீரத்தை உதறிக்கொண்டு, வலது கையை எடுத்து என்னுடைய நெஞ்சில் அடித்தவாறு அவள் உரத்த குரலில் சத்தம் போட்டாள்: "உதவிக்கு வாங்க...''
அடுத்த நிமிடம் என்னையும் இழுத்துக்கொண்டு அவள் அந்தச் சேற்றுக் குவியலுக்குள் இறங்கினாள்.
"நீங்க நாசமாப் போகணும்''- அவள் சாபம் போட்டாள். "நான் போக மாட்டேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியும். நான் இல்லாமல் நீயும் வாழ முடியுமான்னு பார். என்னைக் காப்பாற்றுங்க...''
இருட்டுக்குள்ளிருந்து ஒரு இரவு நேரக் காவலாளி அங்கு வந்து நின்றான். அவன் எங்களிடமிருந்து ஐந்தடி தூரம் தள்ளி நின்றுகொண்டு முரட்டுத்தனமான குரலில் கேட்டான்:
"ஏன் சண்டை போடுறீங்க?''
அந்தப் பெண் சேற்றுக்குள் விழுந்து இறந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும், அதிலிருந்து அவளை வெளியே கொண்டு வருவதற்கு நான் முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்பதையும் நான் அந்த ஆளிடம் சொன்னேன். அந்தக் காவலாளி இன்னும் சற்று அருகில் நகர்ந்து நின்று கொண்டு அவளையே வெறித்துப் பார்த்தான். சத்தமாக காரித்துப்பிய அவன் உரத்த குரலில் சொன்னான்:
"மாஷ்கா, வெளியே வா.''
"எனக்கு வரப் பிடிக்கலைன்னு சொல்றேன்ல!''
"வெளியேவான்னு நான் சொல்றேன்.''
"நான் வரமாட்டேன்.''
"என்னிடம் உதை வாங்கினால்தான் உனக்கு சரியாக இருக்கும். அப்படித்தானே?''- அவன் சொன்னான். தொடர்ந்து நான் இருந்த பக்கம் திரும்பி அவன் நட்புணர்வுடன் சொன்னான்:
"இவள் இங்கே... பக்கத்தில்தான் இருக்கிறாள். இவள் பெயர் மாஷ்கா ஃப்ராலிக்கா. ஆண்களை வசீகரித்து இழுப்பது இவளின் தொழில். இவளை மேலே கொண்டு வரணுமா?''
நாங்கள் சிகரெட்டைப் பற்ற வைத்தோம். சேற்றைத் தெறிக்க வைத்துக்கொண்டு அவள் உரத்த குரலில் கத்தினாள்: "பெரிய முதலாளிகள் தேடி வந்திருக்காங்க! பேசாம போங்கடா... நான்தான் எனக்கு முதலாளி. இங்க பாருங்க... உங்களுக்குப் பிடிச்சிருந்தா நான் இதில் கொஞ்சம் மூழ்கிட்டு வர்றேன்.''
"நான் உன் முதுகில் ஒரு அடி கொடுக்கப் போறேன்''- காவலாளி எச்சரித்தான்.
அவன் ஒரு பலம் கொண்ட தாடி வளர்த்திருந்த மனிதனாக இருந்தான். எல்லா இரவு வேளைகளிலும் இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுவது என்பது அவளுடைய வாடிக்கையான செயலாகிவிட்டது. வீட்டில் இரண்டு கால்களும் இல்லாத ஒரு சிறுவன் இவளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பான்.
"இங்கேயிருந்து ரொம்பவும் தூரத்திலா இவள் இருக்கிறாள்?''
"சாகடிக்கப்பட வேண்டிய ஒருத்தி இவள்!'' - என் கேள்விக்கு பதில் கூறாமல் அவன் சொன்னான்:
"யாராவது இவளை வீட்டில் கொண்டுபோய்விட்டால் நன்றாக இருக்கும்''- நான் சொன்னேன்.
காவலாளி தன்னுடைய தாடையில் மூக்கின் வழியாகப் புகையை விட்டவாறு, அந்த சிகரெட் வெளிச்சத்தில் என்னைப் பார்த்தான். அந்த சேற்றை அழுத்தி மிதித்துக்கொண்டு அவன் நடந்து சென்றான். போவதற்கு மத்தியில் அவன் இப்படிச் சொன்னான்:
"இவளை அழைச்சிட்டுப் போ. ஆனால் அதற்கு முன்னால் இவளுடைய மூஞ்சில ஒண்ணு கொடு.''
அந்தப் பெண் சேற்றில் நின்றுகொண்டு தன்னுடைய கைகளையும் கால்களையும் அசைத்துக்கொண்டிருந்தாள். மூக்கு அடைத்துக்கொண்டதைப் போன்ற கரடுமுரடான குரலில் அவள் சொன்னாள்:
"கடலில் இப்படியே... போகணும் ஐலஸா...''
வானத்திலிருந்த இருட்டிலிருந்து ஒரு பெரிய நட்சத்திரம், குழம்பைப்போல இருந்த அந்த நீரில் தெரிந்தது. சேற்றில் அலைகள் உண்டானபோது அந்தத் தோற்றம் இல்லாமல் போனது. நான் மீண்டும் அந்தச் சேற்றில் இறங்கிச் சென்றேன். பாட்டு பாடிக் கொண்டிருந்த பெண்ணின் இரண்டு கைகளின் இடுக்குகளிலும் கைகளை வைத்துத் தூக்கி, என்னுடைய முழங்கால்களால் முன்னோக்கித் தள்ளி நான் அவளை வெளியே கொண்டு சென்றேன். அவள் என்னை எதிர்த்தவாறு, கையை ஆட்டிக் கொண்டு சவால் விட்டாள்:
"வா... என்னை அடி. நான் பார்க்கிறேன்... என்னை அடி. யாருக்கு என்ன இழப்பு? டேய், பிராணியே... பிச்சைக்காரப் பயலே... வாடா... என்னை அடி...''
நான் அவளை அந்த வேலியின்மீது சாய்த்து நிற்க வைத்தேன். அவள் எங்கே இருக்கிறாள் என்று நான் விசாரித்தேன். அவள் மதுவின் போதையுடன் தொங்கி ஆடிக்கொண்டிருந்த தலையை உயர்த்தினாள். கறுத்த பீளை விழுந்திருந்த கண்களால் அவள் என்னைப் பார்த்தாள். அவளுடைய தாழ்ந்து காணப்பட்ட மூக்கின் நடுப்பகுதியை நான் பார்த்தேன். அதன் மீதமிருந்த பகுதி ஒரு பொத்தானைப்போல மேல்நோக்கித் தள்ளிக் கொண்டு நின்றது. அவளுடைய மேலுதடு காயம்பட்டு சற்று வளைந்திருந்தது. அதன் வழியாகப் பற்களின் ஒரு வரிசை வெளியே தெரிந்தது. அந்தச் சிறிய சதைப் பிடிப்பான முகம் ஆர்வத்துடன் என்னைப் பார்த்தது.
"அப்படியென்றால் சரி... வா... நாம போகலாம்''- அவள் சொன்னாள்.
வேலியின் மேற்பகுதியில் அவ்வப்போது சாய்ந்தவாறு அவள் முன்னோக்கி நடந்தாள். அவளுடைய பாவாடையின் ஈரமான நுனி என்னுடைய கால்களில் அவ்வப்போது பட்டுக் கொண்டிருந்தது.