மாஷ்கா - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7452
"இருக்கலாம்.''
"எனக்குத் தெரியும். நீங்கள் ஒரு பயந்தாங்கொள்ளியும்கூட.''
"பயந்தாங்கொள்ளியா?''
"வேணும்னா நாம் பந்தயம் வைக்கலாம்.''
எல்லாம் தெரியும் என்பது மாதிரியான ஒரு சிரிப்பைச் சிரித்தவாறு அவன் என்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான்.
"நான் பயந்தாங்கொள்ளி என்று எதை வச்சு நீ நினைச்சே?''
"அதுவா... நீங்க இப்போ என் பக்கத்துல இருக்கீங்க. உங்களுக்கு இரவு நேரத்தில் வெளியே போவதற்கு பயம் இருப்பதால்தான் நீங்க அப்படி நடந்து கொள்கிறீர்கள்.''
"ஆனால் பொழுது புலர ஆரம்பிச்சிடுச்சு.''
"அப்படின்னா நீங்க போயிடுவீங்க.''
"உன்னைப் பார்க்குறதுக்கு நான் மீண்டும் வருவேன்.''
அவன் என்னை நம்பவில்லை. அவன் தன்னுடைய அழகான கண்களை இமைகளைக் கொண்டு மூடினான். ஒரு நிமிட இடைவெளிக்குப் பிறகு அவன் கேட்டான்:
"எதற்கு?''
"உன்கூட இருக்குறதுக்கு. நீ நல்ல ரசிகனாச்சே! நான் வரட்டுமா?''
"சரி... இங்கே எவ்வளவு ஆட்கள் வருவது உண்டு.'' ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவன் தொடர்ந்து சொன்னான்:
"நீங்க சும்மா விளையாட்டுக்குச் சொல்றீங்க.''
"விளையாட்டுக்குச் சொல்லல. உண்மையாகவே நான் வருவேன்.''
"அப்படியென்றால் சரி. ஆனால் நீங்க என்னைத் தேடி வந்தால் போதும். என் தாயிடம் போக வேண்டாம். அவங்களை யாருக்கு வேணும்? நாம ரெண்டு பேரும் நண்பர்களாக இருப்போம்.''
"சரி...''
"ஒரு விஷயம்... நீங்கள் என்னைவிட வயதானவர் என்பது ஒரு விஷயமே அல்ல. உங்களுக்கு என்ன வயது?''
"இருபத்தொண்ணு நடக்குது.''
"எனக்கு பன்னிரண்டு நடக்குது. எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. எனக்கு இருப்பது அந்த நீர் கொண்டு வரும் பெண்ணின் மகள் காத்கா மட்டும்தான். என்கிட்ட வந்தால் அவளை அவளுடைய தாய் உதைப்பாள். நீங்க ஒரு திருடனா?''
"இல்லை. ஏன் அப்படிக் கேட்கிறே?''
"உங்க முகம் அந்த அளவிற்கு கோரமாக இருக்கு. நீளமான மூக்கும், சுருக்கங்கள் விழுந்த முகமும்... அசல் திருடனுக்கு இருப்பதைப்போலவே இருக்கு. இங்கே இரண்டு திருடர்கள் வழக்கமா வருவாங்க. ஒரு ஆளின் பெயர் ஸாஷ்கா. அவன் ஒரு முட்டாள். ஆனால் நல்ல பலசாலி. இன்னொரு ஆளின் பெயர் வனிய்கா. அவன் இரக்க குணம் படைத்தவன். ஒரு நாயைப் போன்றவன். உங்கக்கிட்ட சிறிய பெட்டிகள் ஏதாவது இருக்குதா?''
"நான் கொண்டு வர்றேன்.''
"சரி... நீங்க மீண்டும் வருவீங்கன்னு நான் என் தாயிடம் சொல்ல மாட்டேன்.''
"என்ன காரணம்?''
"அது அப்படித்தான். ஆண்கள் வருவது என்பது என் தாய்க்கு எல்லா நேரங்களிலும் விருப்பமுள்ள ஒரு விஷயம். அவங்களுக்கு ஆண்களை மிகவும் பிடிக்கும். ஆண்களின் பைகளையும்தான். அம்மா ஒரு தமாஷான பெண். அவங்களோட பதினைந்தாவது வயதில் நான் அவங்களுக்குக் கிடைச்சேன். ஆனால் அது எப்படி நடந்தது என்று என் தாய்க்கு இப்போதும் தெரியாது. நீங்க இனிமேல் எப்போ வருவீங்க?''
"நாளைக்கு சாயங்காலம்...''
"சாயங்காலம் நேரம் வந்துவிட்டால், என் தாய் நல்லா குடிச்சிருப்பாங்க. திருடவில்லையென்றால் பிறகு நீங்கள் எப்படி வாழுறீங்க?''
"நான் பவேரியன் க்யாஸ் விற்கிறேன்.''
"அப்படியா? எனக்கு ஒரு குப்பி கொண்டு வந்து தருவீங்களா?''
"தாராளமா... கட்டாயம் கொண்டு வந்து தர்றேன். நான் புறப்படட்டுமா?''
"சரி... நீங்க மீண்டும் வருவீங்களா?''
"கட்டாயமா...''
அவன் அந்த நீண்டு மெலிந்த கைகளை நீட்டிப் பிடித்தான். அந்த குளிர்ந்துபோன கைகளை என் கைகளுக்குள் வைத்து நான் குலுக்கினேன். திரும்பிப் பார்க்காமல் ஒரு மது அருந்தியவனைப் போல வேகவேகமாக நான் அந்த வாசலுக்கு வந்தேன்.
நேரம் விடிந்து கொண்டிருந்தது. அணையப் போகும் வெள்ளி நட்சத்திரம் நடுங்கியவாறு அந்த நனைந்து கிடந்த கட்டிடங்களுக்கு மேலே வானத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. கீழ்தளத்தில் இருந்த கட்டிடத்தின் சாளரங்கள் ஒரு குடிகாரனின் சுருங்கிப்போன, அசிங்கமான கண்களைப்போல என்னைப் பார்த்தன. வாசலில் நின்ற குதிரை வண்டியில் சிவந்த முகத்தைக் கொண்ட ஒரு மனிதன் படுத்திருந்தான். அவனுடைய பெரிய கால்கள் விரிந்து கிடந்தன. சிறு தாடி வானத்தை நோக்கித் தூக்கிக் கொண்டிருந்தது. வெள்ளை நிறத்தில் இருந்த பற்கள் அதற்கு மத்தியில் தெளிவாகத் தெரிந்தன. அவன் கண்களை மூடிக்கொண்டு யாரையோ கிண்டல் பண்ணி சிரித்துக் கொண்டிருக்கிறான் என்று நமக்குத் தோன்றும். முதுகில் முடிகள் உதிர்ந்த ஒரு நாய், நான் நீரில் நடக்கும் சத்தத்தைக் கேட்டு எனக்கருகில் வந்து கால்களை முகர்ந்து பார்க்கத் தொடங்கியது. என்னுடைய இதயத்தில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத இரக் கத்தை எழுப்பியவாறு பசியின் கொடுமையை அது வெளிப்படுத்தியது.
முந்தைய இரவு உண்டான அந்த சேற்று நீரில், அதிகாலை வேளையில் வானம் தன் முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. நீலநிறமும் குங்குமத்தின் நிறமும் சேர்ந்து தெரிந்த வானத்தின் தோற்றம் அந்த சேற்று நீரில் மனதை மயக்கி வசப்படுத்தும் அட்டகாசமான இனிய உணர்வைப் படைத்தது.
மறுநாள் நான் வசித்துக் கொண்டிருந்த பகுதியில் இருந்த சிறுவர்களிடம் எனக்குக் கொஞ்சம் வண்டுகளையும் பூச்சிகளையும் பிடித்துத் தரவேண்டும் என்று சொன்னேன். மருந்துக் கடைக்காரனிடம் அழகான சிறிய அட்டைப் பெட்டிகளை வாங்கினேன். ஒரு குப்பி க்யாஸ், கொஞ்சம் தேனில் செய்யப்பட்ட கேக்குகள், பன்கள் ஆகியவற்றையும் வாங்கிக் கொண்டு நான் லியோங்காவைப் பார்ப்பதற்காகச் சென்றேன்.
மிகுந்த ஆச்சரியத்துடன் லியோங்கா என்னுடைய பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டான். அந்தப் பகல் வெளிச்சத்தில் அவனுடைய கண்கள் எப்போதும் இருப்பதைவிட அழகாகவும் மலர்ந்தும் காணப்பட்டன.
"கடவுளே!''- ஒரு சிறுவனிடமிருந்து வரும் குரல் என்பதைப் போல இல்லாமல் ஆழத்திலிருந்து புறப்படுவதைப்போன்ற குரலில் அவன் சொன்னான்:
"இங்கே பாருங்க... நீங்க ஒரு பணக்காரரா? இல்லாவிட்டால் இதெல்லாம்...? இதெல்லாம் எப்படி முடியும்? ஒரு வசதி படைத்த மனிதர் வறுமை வேடம் போட்டுக்கொண்டு திரிகிறீர்கள். நீங்கள் ஒரு திருடர் இல்லை என்று நீங்களே சொன்னீங்க. அடடா... என்ன அழகான பெட்டிகள்! என் கைகள் கழுவப்படாமல் இருப்பதால் எனக்கு அதைத் தொடுவதற்குக்கூட தயக்கமாக இருக்கிறது. அதற்குள் என்ன இருக்கு? அந்த வண்டு என்ன மாதிரி சத்தம் போடுகிறான்! எல்லாம் சிவப்பு நிறத்தில் இருக்கின்றன. சில பச்சைக்காரர்களும் இருக்கிறார்கள். கடவுளே! போடா, பறந்து போடா... போகமாட்டியா? ம்... அது நடக்காது.''
தொடர்ந்து அடக்க முடியாத சந்தோஷத்துடன் அவன் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தான்.