தாலி - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6548
சைவ்யா எந்த நேரத்திலும் அவளை அடக்கி ஆள்வதற்கு விருப்பத்துடன் இருந்தாள். அவள்தான் வீட்டின் தலைவி என்பதையும் வீட்டில் இருக்கும் எல்லாரும் இந்தத் தலைமைத் தன்மையை மதிக்க வேண்டுமென்பதையும் நிமிட நேரத்திற்குக்கூட யாரும் மறக்கவில்லை. தேவகுமாரன் எல்லா காரியங்களையும் சந்தகுமாரனிடம் ஒப்படைத்தபோது, உண்மையாகவே சைவ்யாவை சிம்மாசனத்திலிருந்து கீழே இறக்கிவிட்டிருந்தார். கணவர் இல்லத்தின் நாயகனாக இருந்தபோதுதான் வீட்டின் நாயகியாக இருந்தோம் என்ற விஷயத்தை அவள் மறந்து விட்டாள். அவள் ஆசீர்வதிப்பதால் மட்டுமே வழிபடப்படும் ஒரு தேவியாக இப்போது இருக்கிறாள். மனதில் இருக்கும் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக எப்போதும் தன்னுடைய அதிகாரங்களை அவள் சோதித்துப் பார்த்துக் கொண்டேயிருப்பாள். இந்தத் திருட்டுத்தனம் ஒரு நோயைப் போல மனதில் இடம் பிடித்திருந்தது. ஜீரண சக்தி குறையும்போது உணவுமீது ஈடுபாடு அதிகமாகும். புஷ்பாவிற்கு அவளிடம் பேசுவதற்கு பயமாக இருந்தது. அருகில் போவதற்கே தைரியம் இல்லாமலிருந்தது. இனி பங்கஜா! அவளுக்கு நோயே வேலை செய்வதுதான். ஓய்வு, விளையாட்டு எல்லாமே வேலைதான். குறை கூற அவள் படித்ததே இல்லை. தேவகுமாரனின் தனி குணம். யாராவது திட்டினால் தலையைக் குனிந்துகொண்டு கேட்பாள். மனதில் வருத்தமோ கோபமோ இருக்காது. அதிகாலையில் இருந்து இரவு பத்து பதினொன்று மணி வரை மூச்சு விடுவதற்குக்கூட நேரம் இருக்காது. யாருடைய சட்டையின் பொத்தான் விழுந்திருந்தாலும், பங்கஜா தைத்துக் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவருடைய ஆடைகளும் எங்கெங்கே வைக்கப்பட்டிருக்கின்றன என்ற விஷயம் பங்கஜாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு வேலை செய்தும், அவள் வாசிப்பதற்கும் பொழுது போக்கு விஷயங்களுக்கும் நேரத்தை ஒதுக்குவாள். வீட்டிலிருக்கும் எல்லா தலையணைகளும் பங்கஜாவின் கலைத்திறமையைக் காட்டும். மேஜை விரிப்புகள், குஷன்கள், பெட்டி உறைகள்- எல்லாவற்றிலும் அவளுடைய கைத்திறமை நிறைந்து நின்றிருந்தன. பட்டிலும், வெள்ளைத் துணியிலும் பல வகைப்பட்ட பூக்கள், பறவைகள் ஆகியவற்றைப் படங்களாக ஆக்கி, சட்டம் போட்டு அவை முன்னறையின் சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருந்தன. இசையிலும் ஆர்வம் உண்டு. நன்றாக வீணை வாசிப்பாள். ஹார்மோனியம் சாதாரணமாகவே வாசிக்கத் தெரியும். ஆனால், மற்றவர்களுக்கு முன்னால் அவளுக்கு கூச்சம் அதிகம். இவற்றுடன் பள்ளிக்கும் செல்கிறாள். நல்ல மாணவிகளின் கூட்டத்தில் ஒருத்தி. பாடம் சொல்லித் தருவதற்காக மாதம் பதினைந்து ரூபாய் சம்பளமாகக் கிடைக்கிறது. அவளுக்கு புஷ்பாவிற்கு அருகில் அமர்ந்து விளையாட்டாகப் பேசிக் கொண்டிருப்பதற்கு நேரமில்லை. விளையாட்டாகப் பேசவும் தெரியாது. கேட்டால் புரிவதும் இல்லை. பதிலும் கூறுவதில்லை. புஷ்பாவிற்கு மனதிலிருக்கும் சுமையைக் குறைப்பதற்குக் கிடைத்திருப்பவன் சாது மட்டும்தான். அவளுடைய கணவனோ அதற்கு நேர்மாறாக, தன்னுடைய சுமையையும் சேர்த்து அவள்மீது சுமத்திக் கொண்டிருக்கிறான்.
சாது போனவுடன் புஷ்பா மீண்டும் அதே சிந்தனையில் மூழ்கினாள். இந்தச் சுமையை எப்படித் தாங்கிக் கொள்வது? அவளுடைய கணவன் அவள்மீது அதிகாரம் செலுத்துகிறான். எவ்வளவுதான் தொல்லைகள் தந்தாலும் அவளால் எங்கும் போக முடியாது. எதையும் பேச முடியாது என்ற விஷயம் அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆமாம்- அவன் நினைப்பது சரிதான். அவளுக்கு உயர்ந்த பொருட்கள் மீதுதான் விருப்பம். நல்ல உணவைச் சாப்பிட வேண்டும். சந்தோஷத்துடன் வாழ வேண்டும். அவள் சுகபோகங்களை வேண்டாம் என்று சொன்னால், தியாகம் பண்ணக் கற்றுக் கொண்டால், பிறகு அவள்மீது யார் அதிகாரம் செலுத்த முடியும்? பிறகு அவள் யாருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியதிருக்கும்?
மாலை நேரத்தில் புஷ்பா ஜன்னலுக்கு அருகில் நின்று கொண்டு வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். இருபது இருபத்தைந்து குழந்தைகளும் பெண்களும் கூட்டமாகச் சேர்ந்து ஒரே குரலில் பாட்டு பாடியவாறு போய்க் கொண்டிருந்தார்கள். யாருடைய உடலிலும் தேவையான ஆடைகள்கூட இல்லை. தலையிலும் முகத்திலும் அழுக்கு படிந்திருந்தது. மாதக் கணக்காக எண்ணெய் தேய்க்காததைப் போல் தலைமுடி காற்றில் பறந்து கொண்டிருந்தது. பகல் முழுவதும் கல்லையும் சுண்ணாம்பையும் சுமந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வரும் தொழிலாளர்கள் அவர்கள். பகல் முழுவதும் வெயிலால் சுட்டெரிக்கப்பட்ட நிலையில் இருப்பார்கள். முதலாளியின் பயமுறுத்தலையும் தட்டுதல்களையும் சகித்துக் கொள்ள வேண்டியதிருக்கும். ஒரு வேளை, உச்சிப் பொழுதில் ஒரு பிடி வறுத்த கடலை மட்டுமே உணவாக இருக்கலாம். எனினும், என்ன மனத் திருப்தி என்ன சுதந்திர உணர்வு! அவர்களுடைய மனத் திருப்தி, விடுதலை உணர்வு ஆகியவற்றின் ரகசியம் என்னவாக இருக்கும்?
3
பயப்படுவதால் மட்டும் மக்கள் சிலரை மதிப்பது உண்டு. அந்த வகையில் மதிக்கப்படும் ஒரு மனிதனாக சின்ஹா இருந்தான். நேரில் பார்க்கும்போது எல்லாரும் பாராட்டுவார்கள். நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். பின்னால் திரும்பினால் முணுமுணுப்பார்கள். கெட்டவன், கடித்தால் விஷம் இறங்காத ஜாதி. அவனுடைய வேலை வழக்கை உண்டாக்குவது. கவிஞன் தன் கற்பனையிலிருந்து முழுமையான காவியத்தைப் படைப்பதைப் போல, சின்ஹா கற்பனையைப் பயன்படுத்தி வழக்குகளைப் படைத்தெடுப்பான். அவன் ஏன் கவிஞனாக ஆகவில்லை? கவிஞனாக ஆகியிருந்தால், இலக்கியத்திற்கு மிகப் பெரிய சொத்தாக ஆகியிருப்பான் என்றாலும், அவனால் எதையும் அடைந்திருக்க முடியாது. சட்டத்தைப் படித்ததால் அவனுக்கு எல்லா வகைப்பட்ட திறமைகளும் கிடைத்திருந்தன. ஆடம்பரப் பொருட்கள் நிறைந்த மாளிகையில் வாழ்ந்து கொண்டிருந்தான். பெரிய பெரிய பணக்காரர்கள், பதவியில் இருக்கும் அதிகாரிகள் ஆகியோரின் நட்பு இருந்தது. பெயரும் பெருமையும் கிடைத்திருந்தன. பேனா முனையில் வழக்கிற்கு உயிர் கொடுக்கக்கூடிய வார்த்தைப் பயன்படுத்தல்... கற்பனைகளுக்கு உயிர் கொடுப்பதைப் போன்ற சம்பவங்களையும் சந்தர்ப்பங்களையும் அவனே உருவாக்குவான். பெரிய பெரிய கூர்மையான அறிவு கொண்டவர்கள்கூட அவனுடைய நிலையை அடைய முடியாது. கற்பனை என்று நினைத்துப் பார்க்க முடியாதவையாகவும் இருக்கும். அவன் சந்தகுமாரனின் நண்பனாக இருந்தான். இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். சந்தகுமாரனின் மனதில் ஒரு எண்ணம் உதயமானது. அதற்கு சின்ஹா நிறமும் வடிவமும் தந்து உயிருள்ள பொம்மையாக ஆக்கி எழுந்து நிற்க வைத்தான். இன்று வழக்கை நீதிமன்றத்தில் கொடுக்க முடிவு செய்திருக்கிறான்.
மணி ஒன்பது. கட்சிக்காரர்களும் வக்கீல்களும் நீதிமன்றத்திற்குச் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். சின்ஹா தன்னுடைய பெரிய அறையில் இருந்த மேஜைமீது கால்களை நீட்டி வைத்தவாறு நாற்காலியில் சாய்ந்திருந்தான். வெளுத்த, பளபளப்பான மனிதன். உயரமான, மெலிந்த சரீரம். நீளமான தலை முடியை பின்பக்கத்தில் இழுத்துக் கட்டியிருக்கிறான். தடிமனான மீசை. மூக்கின் மேல் கண்ணாடி. உதட்டில் சிகரெட். முகத்தில் சந்தோஷத்தின் பிரகாசம்.