சிலையும் ராஜகுமாரியும் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7093
முன்பு எப்போதோ கேள்விப்பட்டிருந்தாலும், இவ்வளவு மனிதர்களைப் பிடித்து நிறுத்தி ரசிக்க வைக்கும் இன்னொரு விஷயம் கோட்டைக்குள் இல்லவே இல்லை என்பதைப் புரிந்து கொண்டவுடன், வைரம் சற்று விலகி நின்று மக்கள் கூட்டத்தின் சேட்டைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் நின்றதும், வைரத்திற்குப் புதிய எண்ணங்கள் உண்டாயின.
சில மனிதர்கள் என்ன காட்டினாலும், அதைப் பார்ப்பதற்கு மனிதர்கள் இருப்பார்கள் என்பதைத் தவிர, சிலையாக நின்று கொண்டிருக்கும் அந்த மனிதனிடம் வேறு எந்தவொரு தகுதியும் இல்லை என்ற விஷயம் வைரத்திற்குப் புரிந்தது. அத்துடன் அப்படியொரு தகுதியே இல்லாத சிறப்பு கொண்ட மனிதர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள் என்பதையும், அப்படிப்பட்ட ஏதாவது திறமைகள் கொண்ட ஒரு ஆள் கிடைத்தால் மட்டுமே தன்னைப் போன்ற ஒரு மனிதன் இனிமேல் பிழைக்க முடியும் என்பதையும் அவன் சிந்தித்துத் தெரிந்து கொண்டான்.
பலரும் சிலையை சிரிக்க வைக்கவோ அசைய வைக்கவோ முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மணி நேரத்திற்கு இருபத்தைந்து ரூபாய் வீதம் பணம் கொடுத்து வரவழைக்கப்பட்ட இரண்டு நீதிபதிகளின் முன்னிலையில் அந்தப் போட்டிகள் நடந்தன. சிலையை எந்த விதத்திலாவது அசையச் செய்ய வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்த ஒரு கிழவன், அதற்குப் பின்னால் பதுங்கிப் பதுங்கிச் சென்று வெடிகுண்டு வெடிக்கும் சத்தத்தைக் கொண்ட ஒரு பட்டாசை வெடிக்கச் செய்ததும், வெடிச் சத்தத்தைக் கேட்டு கிழவன் மயக்கமடைந்து விழுந்ததும், அங்கு குழுமியிருந்தவர்களுடன் வைரத்திடமும் சிரிப்பை வரவழைத்தன. சாயங்காலம் கடந்த பிறகும், வைரம் அந்தப் பகுதியிலேயே சுற்றிச்சுற்றி நின்று கொண்டிருந்தான். அப்படி நின்றதில் சிலையின் மதிப்பு என்ன என்பது அவனுடைய மனதில் ஆழமாகப் பதிந்து விட்டிருந்தது.
பார்வையாளர்களின் நேரம் முடிந்து, இறுதிப் பார்வையாளனும் போன பிறகு, கோட்டையின் மணிக்கூண்டு ஆறரை மணியை அடித்தபோது, சிலைக்கு முன்னாலும் நான்கு பக்கங்களிலும் இருந்த தூண்களில் இருந்து அவிழ்ந்த திரைச் சீலைகள் கீழ் நோக்கி இறங்கி வந்து மறைத்து நின்றன. அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த விளக்குகளும் அணைந்தன.
மறைவுக்கு உள்ளே இருந்து சிலை வெளியேறி போவதைப் பார்க்க முடியும் என்ற எண்ணத்துடன், வைரம் திரைச்சீலையைச் சுற்றி இருந்த இருட்டில் கண்களைப் பதித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றிருந்தான். பிறகு, அது ஒரு வீண் வேலை என்று அவனுக்குப் புரிந்துவிட்டது. அந்தப் பகுதிக்கு நடந்து செல்வதற்கோ, பரிசோதனை செய்து பார்ப்பதற்கோ அவனுக்குத் துணிச்சல் வரவில்லை. அப்படி எல்லையைக் கடந்து நடந்து கொண்டவர்கள் எல்லாரையும், அடையாளம் தெரியாத இடங்களில் இருந்து கொண்டு வந்த வெடிகுண்டுகளையோ மின்சாரத்தையோ பயன்படுத்திக் கொன்று தீர்த்த கதைகள் எத்தனையோ கோட்டைக்குள் உலாவிக் கொண்டிருந்தன.
ஒன்று, ஒன்றரை மணி நேரத்தை அந்த இருட்டில் கழித்துவிட்டு, எதிர்காலச் செயல்களைப் பற்றி சிந்தித்தவாறு வைரம் பிரதான வாயிலுக்கு வெளியே நடந்தான்.
கோட்டையைச் சுற்றி முடிவே இல்லாமல் மணல்வெளி விரிந்து கிடந்தது. அதற்கு மேலே நிலவு ஒளிர்ந்து கொண்டிருந்தது.
கேட்டில் அப்போது நல்ல கூட்டம் இருந்தது. திரும்பிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், வேலை நேரம் முடிந்து சாயங்கால நேரத்தில் நடப்பதற்காக வெளியே செல்லும் வேலை செய்பவர்களின் குடும்பங்கள், இரவைக் கொண்டாடுவதற்காக வருபவர்களின் கார்கள் இவையெல்லாம் சேர்ந்து அங்கு ஒரே ஆரவாரமாக இருந்தது. அந்த ஆரவாரத்தில் அலட்சியமாகக் கண்களைப் பதித்தவாறு, "அந்தச் சிலை எங்கு போய் மறையும், ஒருவேளை- அங்கேயே இரவு வேளையிலும் இருந்து விடுமோ" என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே குழப்பமான மனதுடன் நின்றிருந்த வைரத்தின் கண்களில் சைக்கிளில் திரும்பிச் செல்லும் பால்காரனின் முகம் சிறிதும் எதிர்பாராமல் தென்பட்டது.
சாதாரணமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத ஒன்று தான். ஒருவேளை, மூன்று நான்கு மணி நேரங்கள் தொடர்ந்து பார்த்த ஒரு முகத்தை சிறிய ஒரு இடைவெளிக்குப் பிறகு தோற்ற மாறுதலுடன் பார்த்ததால் அடையாளம் தெரிந்திருக்கலாம். இல்லாவிட்டால், வைரத்தின் கிரகநிலை மாறுதல் காரணமாகவும் இருக்கலாம்.
அழைத்து நிறுத்துவதற்கான நேரம் இல்லை. அதற்கு முன்பே சைக்கிள், மணல்வெளிக்கு நடுவில் ஓடிக்கொண்டிருந்த சாலையின் வெறுமையில் பறந்துவிட்டிருந்தது. நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் அந்த சைக்கிள் ஓடிக்கொண்டிருந்தது என்ற விஷயத்தை வைரம் கவனிக்காமல் இல்லை.
எது எப்படி இருந்தாலும் - ஒரு விஷயத்தில் வைரத்திற்கு சந்தேகம் இல்லாமலிருந்தது - சிலையின் முகம்தான் பால்காரனுக்கும்.
மறுநாள் அதிகாலைப் பரபரப்பிற்கு மத்தியில் பால்காரனின் முகம் மீண்டும் ஒருமுறை மின்னலைப்போல கடந்து செல்வதைப் பார்த்தவுடன் அந்த நம்பிக்கைக்கு உறுதி கிடைத்தது.
தன்னுடன் வேலை செய்த ஒரு பழைய நண்பனிடமிருந்து பொய் சொல்லி இரவலாக வாங்கிய சைக்கிளுடன், மறுநாள் சாயங்கால நேரத்தில் வைரம் கேட்டிற்கு வெளியே சாலையில் சற்று தள்ளி எதிர்பார்த்து நின்றிருந்தான்.
கணக்கு போட்டதைப் போலவே, சரியான நேரத்திற்கு பால்காரனின் சைக்கிள் வெளியே வந்தது. யாரையும் கவனிக்காமல், எதையும் பார்க்காமல் மணல் வெளியில் பயணித்துக் கொண்டிருந்த அவனுடைய வேகத்தைப் பற்றி முன்கூட்டியே நன்கு தெரிந்து வைத்திருந்ததால், வைரத்தாலும் அவனுக்கு நிகராகப் பயணிக்க முடிந்தது.
சாலையில் மக்களின் நடமாட்டம் சிறிதும் இல்லாமல் இருந்தது. அதனால் சிலை நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. பெரும்பாலும் அவன் எழுந்து நின்று கொண்டே மிதித்துக் கொண்டிருந்தான். ஒரு பழைய சைக்கிள் வித்தை செய்தவனாக இருந்தும்கூட, வைரத்தால் அந்த சைக்கிளுடன் போட்டி போடுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது. காயம்பட்ட முழங்கால் மிகவும் பலமாக வலித்துக் கொண்டிருந்தது. எனினும், அந்த மனிதனின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ள கிடைத்த ஒரு அபூர்வ சந்தர்ப்பம் என்ற விஷயம் ஞாபகத்தில் இருந்ததால், அதை விட்டுக் கொடுக்க அவன் சிறிதும் தயாராக இல்லை.
மணல் வெளிக்கு நடுவில் போய்க்கொண்டிருந்த அந்த சாலைக்கு முடிவே இல்லாததைப்போல தோன்றியது. இடையில் ஒரே ஒருமுறை மட்டும், சுற்றுலா வந்த சிறுவர்களை ஏற்றிக்கொண்டு கோட்டையில் இருந்து திரும்பி வந்த ஒரு பேருந்து, அவர்களைக் கடந்து சென்றது.
தூரத்தில் இருக்கும் நகரம்தான் சிலையின் இலக்காக இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய நிமிடத்தில் வைரத்திற்கு உற்சாகம் இல்லாமற் போனது. பொழுது விடிந்தாலும், அங்கு போய்ச் சேர முடியாது. அதுவரை நிறுத்தாமல் மிதித்துக்கொண்டு போவது என்பது தன்னால் முடியாத ஒரு காரியம் என்று அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது.