சிலையும் ராஜகுமாரியும் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7093
3. திறப்பு விழா
அதிகபட்சம் போனால் அரைமணி நேரம் என்று கூறி ஆரம்பிக்கப்பட்ட அந்த திறப்புவிழா ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்டு போய்க் கொண்டிருந்தது. அவ்வளவு நேரமும் தீருலால் அனுபவித்த மனப் போராட்டம் அவருக்கு மட்டுமே தெரியும். "தயவு செய்து என்னைத் தொடாதீர்கள்" என்று எழுதப்பட்ட ஒரு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்ததால், நல்ல வேளை யாரும் தொடாமலே விழா நடந்தது. மன்னருடன் ஒரு கூட்டமே இருந்தது. அவருடைய அதிகாரப்பூர்வமான வைப்பாட்டியான அருந்ததி என்ற விஸ்வ மோகினியிலிருந்து படிப்படியாக கோமாளிகள் வரை உள்ள ஒரு பெரிய கூட்டத்தைச் சேர்ந்த எல்லாருக்கும் சிலையை மிகவும் பிடித்திருந்தது.
திறப்புவிழா முடிந்ததும், அவர்களில் பெரும்பாலானவர்கள் சிலையுடன் நின்று தனித்தனியாகப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த காரணத்தினால்தான் காலதாமதம் உண்டானது. தன்னுடைய திட்டம் வெற்றி பெற்றது குறித்து மிகுந்த சந்தோஷம் தோன்றியது என்றாலும், எங்காவது இடையில் திருட்டுத்தனம் வெளிப்பட்டு, அதனால் உண்டாகக்கூடிய அவமானத்தையும் கெட்ட பெயரையும் நினைத்துப் பார்த்தபோது தீருலாலிற்கு அதிகமாகவே உள்பயம் உண்டானது. மின் விளக்குகளின் கண்களைக் கூசச் செய்யும் பிரகாசமும் காற்று வெளியில் காதுகளை அடைக்கச் செய்யும் இசையும் இயல்பாகப் பொங்கி ஓடிக் கொண்டிருந்த இனிய சூழ்நிலையும் - எல்லாம் சேர்ந்து சமநிலை தவறியதைப் போல நடந்து கொண்டிருந்த அந்தக் கூட்டத்தை அன்று அங்கிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு தீருலால் குடும்பம் மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது.
ஆட்கள் ஒரு விதத்தில் போய் முடிந்தவுடன், சிலைக்கு சிறுசிறு சில்லறை வேலைகள் செய்ய வேண்டியதிருக்கிறது என்று கூறி அன்று திரை போட்டு விட்டார்கள்.
ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் அந்த திரை விலகியபோது, அங்கு சில்லறை வேலைகள் முடிவடைந்த துவாரபாலகனின் சிலை இருந்தது. அது சுப்பன்தான்.
இந்த ஒரு மாதத்திற்கிடையில் தீருலாலுக்கும் சுப்பனுக்கும் இடையே சில கணக்குப் போடல்களும் கடுமையான சோதனைகளும் உறுதிமொழிகளும் நடந்தன. எல்லா நெருப்புத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று வந்த சுப்பனை, அவன் கூறிய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுதான் அவர் நியமித்தார்.
மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில்தான் சிலையின் நியமனம் நடந்தது.
சுப்பன் கேட்ட சம்பளத்தைத் தருவதாக தீருலால் ஒப்புக் கொண்டார். அவன் செய்யும் வேலையின் கடுமையைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, அது அப்படியொன்றும் பெரிய ஒரு தொகை அல்ல.
இரண்டாவது நிபந்தனை - தினமும் சுப்பன் போய் வர வேண்டும். சிலை பற்றிய ரகசியம் வெளியே தெரிந்துவிடப் போகிறது என்று கூறி அந்த விஷயத்தைப் பற்றி தீருலால் சிறிது நேரம் தயங்கிக் கொண்டு நின்றார். ஆனால், சுப்பனுக்கு தினமும் போயே ஆக வேண்டும். போய் வருவதில் இருக்கும் சிரமங்களை அவன் எப்படியும் சகித்துக் கொள்வான். தன்னுடைய சைக்கிளில் அவன் போய் வந்து கொள்வான். ஆனால், அவனுக்கு தினமும் போய் தன்னுடைய உறவினர்களையும் நண்பர்களையும் கட்டாயம் பார்த்தாக வேண்டும்.
யார் அந்த உறவினர்களும் நண்பர்களும் என்ற கேள்விக்கு தெளிவான ஒரு பதில் வரவில்லை. வற்புறுத்திக் கேட்க ஆரம்பித்த போது, "முதலாளி, அது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமே அல்ல" என்று அவன் அறுத்து வெட்டிக் கூறிவிட்டான். அதனால்தான் அவனுடைய வீடு எங்கு இருக்கிறது என்பதை விசாரிப்பதற்கு அவருக்கு தைரியம் வரவில்லை. தினமும் போய் வருவது என்றால் மணல் வெளியில் எங்காவது இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். பெயரைக் கேட்டதற்கு, முதலாளி விரும்பக்கூடிய பெயரில் அழைக்கலாம் என்று அவன் அனுமதி தந்தான். அப்படித்தான் சுப்பன் என்ற பெயர் வந்து விழுந்தது.
சிலையின் மூன்றாவது நிபந்தனையைக் கேட்டதும் தீருலாலிற்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது.
சிலைக்கு "தீவில் சொர்க்க"த்திற்கு ஒருமுறை போகவேண்டும். நுழைவு இலவசமாக ஆக்கியதற்கு மறுநாளில் இருந்து சுப்பன் கோட்டைக்குள்ளேதான் இருக்கிறான். இதற்கிடையில் யாரோ கூறி, அவன் சொர்க்கத்தைப் பற்றித் தெரிந்து கொண்டான். என்றைக்காவது ஒருமுறை, ஒரே முறை அவனை அங்கு கொண்டு போய் காட்ட வேண்டும்.
அவனுடைய விருப்பத்தின் ஆழம் முதலாளியின் மனதில் பதிந்தது. இதுதான் அவனைப் பூட்டி வைப்பதற்கான விலங்கு என்பதை அனுபவங்கள் பல கொண்ட அவர் அந்த நிமிடமே மனதில் பதியவைத்துக் கொண்டார்.
"தீவில் சொர்க்க"த்திற்குப் போய் வருவதில் இருக்கும் நடைமுறை சிரமங்களை தீருலால் மிகைப்படுத்திக் கூறினார். ஹெலிகாப்டரில் இருக்கும் அனைத்து இருக்கைகளும் சில நட்சத்திரக் கோவில்களின் பூஜையைப் போல பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டவை என்றும், அதைப் பின்பற்றித்தான் ஒவ்வொரு விமானமும் மேலே பறக்கிறது என்றும், சுப்பனுக்கு அப்படிப்பட்ட ஒரு விருப்பம் இருக்கும் பட்சம், இப்போதே ஒரு பெரிய தொகையைச் செலுத்தி பெயரைப் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்றும், "தமாஷ் கோட்டை"யில் எந்தவொரு சட்டமும் எந்தச் சமயத்திலும் தவறியதில்லை என்பதால், இப்போது அப்படிச் செய்தாலே மீண்டும் எவ்வளவோ வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்றும், அவர் அவனுக்குப் புரிய வைத்தார். பரவாயில்லை என்றும், தான் காத்திருக்க தயார் என்றும் அவன் அதற்கு பதில் சொன்னான்.
தன்னுடைய பிடி இறுக்கமாகிறது என்பதைக் கண்டவுடன், தீருலாலின் வர்த்தக மூளை மேலும் விழிப்படைந்து செயல்பட ஆரம்பித்தது. "சொர்க்க"த்திற்கு ஒருமுறை போய் வருவதற்கு ஆகும் பெரும் செலவைப் பற்றி அவர் விளக்கிக் கூற ஆரம்பித்தார். கணக்கைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரியவில்லை என்பதைத் தெரிந்து கொண்டவுடன், கணக்கு விஷயத்தில் ராஜாவான தீருலால் தாறுமாறான கணக்குகளைச் சொல்லி அவனைக் குழப்பத்திற்குள்ளாக்கினார். சுப்பனைப் போன்ற ஒரு மனிதனுக்கு அங்கு போய் வருவதற்கான பணத்தை தயார் பண்ணுவது என்பது மிகவும் சிரமமான விஷயம் என்று அவர் இறுதியாகச் சொன்னார். அதற்குப் பிறகும், "பரவாயில்லை... நான் போயே ஆகவேண்டும்" என்ற நிலைப்பாட்டில் இருந்து சுப்பன் அணு அளவுகூட பின் வாங்கத் தயாராக இல்லை.
இறுதியாக கட்டணத்திலும் வேறு சில விஷயங்களிலும் நிர்வாகத்திற்குத் தெரியாமலே சில தகிடுதத்த வேலைகளும் இலவசங்களும் உண்டாக்கியவாறு ஒருநாள் "சிலை"யைத் தீவிற்கு அழைத்துக் கொண்டு செல்வதாக தீருலால் உறுதியளித்தார். எனினும், ஒரு பெரிய தொகையை சுப்பன் கட்டியே ஆக வேண்டும். அதைச் சேர்த்து வைப்பதற்காக எல்லா மாதங்களிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலாளி தவறாமல் பிடித்து வைப்பார். தேவையான பணம் சேர்ந்தவுடன், அந்தத் தொகையைச் சேர்த்து சுப்பனிடம் அவர் தருவார்.
சுப்பனுக்கு சந்தோஷம் உண்டானது. சம்பளத்தில் முக்கால் பகுதியைப் பிடித்துக் கொள்வதற்கு அவன் அனுமதி தந்தான். காலையிலிருந்து இரவுவரை நீர்கூட பருகாத சிலைக்கு என்ன செலவு வரப் போகிறது என்று அவன் சர்வ சாதாரணமாகக் கேட்ட போது, அது சரிதான் என்பதை தீருலாலும் ஒப்புக்கொண்டார். அத்துடன் சுப்பன் தனி மனிதன் என்பதையும், குடும்பக் கடமைகள் எதுவும் இல்லாதவன் என்பதையும் அவர் சந்தோஷத்துடன் தெரிந்து கொண்டார்.