சோதனைக்கூடம் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6387
கான்வென்ட் பள்ளிக்கூடத்தில் இருந்து ஒருநாள் அவள் திரும்பி வந்தபோது, அழகான முகத்தில் அரும்பு மீசையை வைத்திருந்த, சிதறிப் பறந்து கொண்டிருந்த தலைமுடியைக் கொண்டிருந்த ஒரு இளைஞன் அவளுடைய காருக்குள் ஒரு கடிதத்தைச் சுருட்டி எறிந்தான். அந்தக் கடிதத்தை வாசித்தபோது அவளுடைய நரம்புகள் முறுக்கேறின. அவள் அந்தக் கடிதத்தை ரவிக்கைக்குள் மறைத்து வைத்தாள். ஆனால் அவளுடைய தாய் அதைக் கண்டுபிடித்து விட்டாள். உணவு எதுவும் தராமல் ஒரு நாள் முழுவதும் அவளுடைய தாய் அவளை ஒரு அறைக்குள் அடைத்து வைத்தாள்.
மரணத்தைத் தழுவிவிட்ட தன்னுடைய கணவனின் பெயரில் இருந்த ஸ்காலர்ஷிப்களை வாங்கிய மாணவர்களில்- தன்னுடைய மகளுக்குப் பொருத்தமான ஒரு பையனை சோஹினி தேடிக் கொண்டிருந்தாள். ஆனால், அவர்கள் எல்லாருக்கும் பெண்ணின் பணப் பெட்டியின் மீதுதான் கண்கள் இருந்தன. அவர்களில் ஒருவன் சோஹினியின் பெயரில் ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்தான்.
அந்த இளைஞனிடம் அவள் சொன்னாள்: "என்னுடைய தங்கமே! நீ எந்த அளவிற்கு அதிர்ஷ்டம் இல்லாதவனாக இருக்கின்றாய்! நீ என்னை ஆச்சரியப்பட வைக்கிறாயே! உன்னுடைய பட்டப் படிப்பு முடியப் போகிறது என்று நான் கேள்விப்பட்டேன். எனினும், நீ உன்னுடைய பூவையும் பிரசாதத்தையும் சிறிதுகூட பொருத்தமே இல்லாத ஒரு இடத்தில் கொண்டு போய் அர்ப்பணம் செய்கிறாயே! நீ மிகுந்த கவனத்துடன் வழிபாடு நடத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் வாழ்க்கையில் எந்தக் காலத்திலும் நீ தேற முடியாது!''
சோஹினியின் கவனத்தை ஈர்த்த ஒரு நல்ல பையன் இருந்தான். அவளுடைய மகளுக்கு மிகவும் பொருத்தமானவனாக அவன் இருந்தான். ரேபதி பட்டாச்சார்யா என்பது அவனுடைய பெயர். அவனுக்கு டாக்டர் ஆஃப் சயின்ஸ் பட்டம் கிடைத்திருந்தது. அவனுடைய பல கட்டுரைகளும் வெளிநாட்டுப் பத்திரிகைகளில் பிரசுரமாகி, வெளிநாடுகளில் அவை வாசிக்கப்பட்டன.
3
ஆட்களுடன் பழகக்கூடிய விஷயத்தில் மிகுந்த திறமை கொண்டவளாக சோஹினி இருந்தாள். ரேபதி பட்டாச்சார்யாவின் பழைய கால ஆசிரியர் மன்மத சவுதரியை சோஹினி கவனித்தாள். தாமதிக்காமல் அவள் அவரை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாள். அவள் அவரை தினமும் தேநீர் அருந்துவதற்கும் உணவு சாப்பிடுவதற்கும் அழைப்பது என்பதை ஒரு வாடிக்கையான விஷயமாக ஆக்கினாள். அவருக்கு மிகவும் பிடித்தமான ஆம்லெட்டையும் வறுத்த மாமிசத்தையும் அவள் தயார் பண்ணிக் கொடுத்தாள். இதற்கிடையில் ஒருநாள் அவள் ரேபதி பட்டாச்சார்யா பற்றிய விஷயத்தை எடுத்து விட்டாள். "உங்களை அவ்வவ்போது தேநீர் அருந்துவதற்கும் உணவு சாப்பிடுவதற்கும் நான் எதற்காக அழைக்கிறேன் என்பதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள்''- சோஹினி கூறினாள்.
"அது எனக்கு எந்தச் சமயத்திலும் ஒரு சிரமமான விஷயமாக இல்லை. மிசஸ் மல்லிக்.''
"நாம் நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளத்தான் இப்படியெல்லாம் செய்கிறோம் என்று ஆட்கள் நினைக்கிறார்கள்.''
"ஓகே மிசஸ் மல்லிக். என்னுடைய மனதில் இருப்பதை நான் திறந்து கூறட்டுமா? யாருடைய விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டாலும், நட்பின் அடையாளம் எப்போதும் தனியாக நின்று கொண்டிருக்கும். என்னைப் போன்ற ஒரு சாதாரண பேராசிரியருக்கு யாருக்காவது உதவியாக இருப்பது என்பது ஒரு சாதாரண வாய்ப்பு அல்ல. பாட நூல்களை விட்டு வெளியே வருவதற்கு நம்முடைய மூளைக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அதனால் அது முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது. நான் இதைக் கூறுவதைக் கேட்கும் போது, உங்களுக்கு ஆச்சரியம் உண்டாகும் என்று எனக்குத் தெரியும். நான் ஒரு பேராசிரியராக இருந்தாலும், எனக்கு நகைச்சுவை உணர்வு இருக்கத்தான் செய்கிறது. அடுத்தமுறை என்னை தேநீர் பருகுவதற்கு அழைப்பதற்கு முன்னால், நீங்கள் இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் போதும்.''
"நான் அதைக் கவனித்திருக்கிறேன். எனக்கு இப்போது சந்தோஷமாக இருக்கிறது. நான் எவ்வளவோ பேராசிரியர்களைப் பார்த்திருக்கிறேன். சிரிக்க வைக்க வேண்டுமென்றால் பேராசிரியர்களுக்கு டாக்டர்களின் உதவியைத் தேட வேண்டும்.''
"சரிதான்... நீங்கள் எங்களுடைய கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என்று கூட எனக்குத் தோன்றுகிறது. அதனால் இனிமேல் நம்முடைய மனதில் இருப்பதை ஒருவரோடொருவர் திறந்து கூறிக் கொள்ளலாம்.''
"என்னுடைய கணவரின் மிகப்பெரிய சந்தோஷம் அவருடைய சோதனைக் கூடம்தான். எனக்கு ஆண்பிள்ளைகள் இல்லை. அதனால் இந்த சோதனைக் கூடத்திற்கு பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்காக நான் ஒரு இளைஞனைத் தேடிக் கொண்டிருக்கிறேன். என் மனதில் இருக்கும் இளைஞன் ரேபதி பட்டாச்சார்யா.''
"அவன் அதற்குத் தகுதியான இளைஞன்தான். ஆனால், அவன் தேர்ந்தெடுத்திருக்கும் ஆராய்சிக்கான விஷயம் நிறைய பணச் செலவு வரக் கூடிய ஒன்று!''
"என்னிடம் நிறைய பணம் குவிந்து கிடைக்கிறது''- சோஹினி சொன்னாள்: "என்னுடைய வயதில் இருக்கும் விதவைகள் சொர்க்கத்தில் போய் சேர வேண்டும் என்பதற்காகப் பணத்தைக் கொடுத்து தெய்வங்களைத் திருப்திப்படுத்துவதற்கான வழிபாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எனக்கு அப்படிப்பட்ட சடங்குகளில் நம்பிக்கை இல்லை.''
அதைக் கேட்டதும் சவுதரியின் கண்கள் மலர்ந்தன. "பிறகு நீங்கள் எதை நம்புகிறீர்கள்?''
"உண்மையான தகுதியைக் கொண்ட நல்ல ஒரு இளைஞனைக் கண்டுபிடித்துவிட்டால், அவனுடைய கடன்களையும் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். அதுதான் என்னுடைய கடவுள் நம்பிக்கை!''
"அடடா... என்ன உயர்வான எண்ணம்! கல் நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது! பெண்களுக்கு அறிவு இருக்கிறது என்று சில வேளைகளிலாவது ஆட்கள் கூறுகிறார்கள் என்றால், அது இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான். எனக்கு ஒரு சாதாரண அறிவியல் பட்டதாரியைத் தெரியும். ஒருநாள் குருவின் கால்களைத் தொட்டு வணங்கிய பிறகு, தன்னுடைய மூளையை பஞ்சைப்போல காற்றில் பறக்க வைக்க முடியும் என்பது மாதிரி அவன் காற்றில் தலை குப்புற விழுந்து இறந்தான். அந்த வகையில் நீங்கள் ரேபதிக்கு உங்களுடைய சோதனைக் கூடத்தின் பொறுப்பை அளிக்கப் போகிறீர்கள். ஆனால், அவனைச் சற்று தூரத்தில் நிற்க வைப்பதுதானே நல்லது?''
"தவறு செய்யக் கூடாது, சவுதரி. எது எப்படி இருந்தாலும் நான் ஒரு பெண்தானே! என்னுடைய கணவரின் வழிபாட்டு இடமாக அந்த சோதனைக் கூடம் இருந்தது! அந்தப் புனித இடத்தின் நெருப்புச் சுடரை அணையாமல் காப்பாற்றக்கூடிய ஒரு இளைஞனைக் கண்டுபிடிக்க என்னால் முடிந்தால் எந்த உலகத்தில் இருந்தாலும், அவருடைய ஆன்மாவிற்கு சாந்தி கிடைக்கும்.''
சவுதரி சொன்னார்: "கடவுளே... பேசத் தெரிந்திருக்கும் ஒரு பெண்ணை நான் இதோ சந்தித்திருக்கிறேன். இது சிறிதுகூட வெறுப்பைத் தரக்கூடிய குரல் அல்ல. ஆனால், ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.