சோதனைக்கூடம்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6385
சுராவின் முன்னுரை
ரவீந்திரநாத் தாகூர் (Rabindrath Tagore) எழுதிய ‘Laboratory’ என்ற புதினத்தை ‘சோதனைக் கூடம்’ (Sodhanai Koodam) என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். கவிதைகளில் முத்திரை பதித்த தாகூர் புதினம் எழுதுவதிலும் ஒரு திறமைசாலி என்பதை நாவலின் ஒவ்வொரு பகுதியிலும் நாம் உணரலாம்.
1861-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் வசதி படைத்த ஒரு குடும்பத்தில் பிறந்த தாகூர் வழக்கமான கல்வியில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.
பல பள்ளிக் கூடங்களில் சேர்க்கப்பட்டாலும், அதில் அவர் விருப்பமில்லாமல் இருந்ததால், வீட்டிலேயே இருக்கச் செய்து படிக்க வைத்தார்கள்.
ஏழாவது வயதில் தாகூர் தன்னுடைய முதல் கவிதையை எழுதினார். பள்ளிக் கூடத்தில் படிப்பதற்குப் பதிலாக தாகூர் தன்னுடைய அண்ணனுடன் இங்கிலாந்திற்குச் சென்றார். அங்குள்ள பல்கலைக் கழகக் கல்லூரியில் இரண்டு வருடங்கள் படித்து விட்டு, இந்தியாவிற்குத் திரும்பி வந்தார். 1983-ல் திருமணம் நடந்தது. மாதுரிலதா, ரேணுகா என்ற இரு மகள்களைத் தொடர்ந்து ஒரு மகனும் பிறந்தான்.
1909-ல் தன்னுடைய ‘மாஸ்டர் பீஸ்’ என்று கூறப்படும் ‘கீதாஞ்சலி’யை அவர் எழுத ஆரம்பித்தார். 1911-ஆம் ஆண்டு ‘ஜனகணமன’ எழுதினார். 1912-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் பயணம் செய்த தாகூர் புகழ் பெற்ற பல இலக்கியவாதிகளையும் சந்தித்துப் பேசினார். அதே ஆண்டு வில்லியம் பட்லர் யேட்ஸ், தாகூரின் ‘கீதாஞ்சலி’யை ஒரு மிகப் பெரிய கூட்டத்திற்கு முன்னால் அறிமுகப்படுத்தினார். மிகப் பெரிய இலக்கியவாதியான எஸ்ரா பவுண்ட் தனிப்பட்ட ஆர்வம் எடுத்து, ‘கீதாஞ்சலி’யின் ஆங்கில மொழி பெயர்ப்பை வெளியே கொண்டு வந்தார். வில்லியம் பட்லர் யேட்ஸ் அந்த நூலுக்கு முன்னுரை எழுதினார். 1913-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு (Nobel Prize) தாகூருக்கு அறிவிக்கப்பட்டது. 1921-ஆம் ஆண்டு தாகூர், விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தை உருவாக்கினார். நோபல் பரிசு மூலம் கிடைத்த தொகையையும், தன்னுடைய நூல்கள் மூலம் வந்த வருமானத்தையும் தாகூர் விஸ்வபாரதிக்காக அர்ப்பணித்தார். உலகத்தின் பெரும்பாலான நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கும் தாகூர் அங்கு பல சொற்பொழிவுகளையும் நடத்தி இருக்கிறார்.
1940-ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம் தாகூருக்கு இலக்கியத்திற்கான டாக்டர் பட்டத்தை அளித்தது. 1941, ஆகஸ்டு மாதம் 7-ஆம் தேதி தான் பிறந்து வளர்ந்த வீட்டிலேயே தாகூர் மரணத்தைத் தழுவினார்.
பள்ளிக்கூட நாட்களில் இருந்தே நான் மிகவும் விரும்பிப் படித்த ரவீந்திரநாத் தாகூரின் மிகச் சிறந்த ஒரு நூலை தமிழில் மொழி பெயர்க்க வாய்ப்பு கிடைத்ததை ஒரு பெருமைக்குரிய விஷயமாகவே நினைக்கிறேன். கனமான ஒரு கதைக் கருவை எவ்வளவு ஆழமாக தாகூர் புதினத்தில் கையாள்கிறார் என்பதைப் பார்க்கும்போது, அவர்மீது நமக்கு மிக உயர்ந்த மரியாதை உண்டாகிறது. இதில் வரும் சோஹினி, ரேபதி, நீலா, சவுதரி- அனைவரும் நம் உள்ளங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)