தாரா ஸ்பெஷல்ஸ் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6954
ஆனால் உண்மை என்ன தெரியுமா? பெட்டியின் சாவி எங்கே இருக்கிறது என்பது போளிக்குத் தெரியும். போளியின் தந்தைக்கும் தெரியும். என்ன லாபம்? பாப்பச்சனுக்கும் இது தெரியும். போளியின் தாய் உடுத்தியிருக்கும் ஆடைக்கு உள்ளே இடுப்புப் பகுதியில், கறுத்துப்போய் காணப்படும் வெள்ளிக் கொடியில், ஒரு சிறு வளையத்தில் மாட்டித் தொங்கிக் கொண்டிருக்கிறது அந்தச் சாவி. என்ன செய்வது? இரவு நேரத்தில் ஒரு அல்சேஷன் நாய் பயங்கரமாகக் குரைத்தவாறு சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. போளியின் தந்தை படுக்கையறையில் வாசல் கதவு அருகே சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு உறங்காமல் இருக்கிறார். தாய் கட்டிலில் குப்புறப்படுத்து குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறாள். இதுகூட நம்புகிற மாதிரி இருக்காது. எல்லாம் சாராயத்தின் மகிமை. ஒவ்வொரு முறையும் வேறு வேறு மாதிரி எந்த விஷயத்தையும் கூறுவான் போளி. வீட்டில் ஐயாயிரம் ரூபாய்க்குமேல் கிடையவே கிடையாது. எல்லாம் வங்கியில்தான். எந்த வங்கியில்? ம்... அதைத் தெரிந்து என்ன ஆகப் போகிறது?
பாப்பச்சனும் பணக்காரன் ஆகப்போகிறான். ஒரு நான்கு பெக் அடித்தால் நன்றாக இருக்கும். ஆனால் கையில் காசில்லையே. போளியின் கையில் நிச்சயம் ஏதாவது இருக்கும். படிக்கிற காலத்தில் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மது மயம்தான். போளியும் பிரேம்ரகுவும்தான் அதற்கான பணத்தைச் செலவழிப்பார்கள். பாப்பச்சன் எதுவும் செலவு செய்ய மாட்டான்.
கையில் இருந்தால்தானே செலவழிப்பதற்கு! போளியும் பிரேம்ரகுவும் கள்ளோ சாராயமோ வாங்கிக் கொடுப்பார்கள். வசதியுள்ளவர்கள் வசதி இல்லாதவனுக்கு வங்கிக் கொடுக்க வேண்டும். அதுதானே உண்மையான சோஷலிஸம்? மதங்கள்கூட அதைத்தானே கூறுகின்றன. அப்படியானால்... மதமும் சோஷலிஸமும் ஒன்று என்று கூறலாமா? யாருக்குத் தெரியும்? போளிக்கு சோஷலிஸத்தில் நம்பிக்கை கிடையாது. அவன் ஒரு இம்பீரியலிஸ்ட் அண்ட் கேப்பிட்டலிஸ்ட். பிரேம் ஒரு சோஷலிஸ்ட்டாக இருந்தான். அவனின் இப்போதைய நிலை எப்படியோ? நேரில் பார்த்து நாட்கள் அதிகம் ஆகிவிட்டன. இண்டர் வகுப்பில் படிக்கிற காலத்தில்தான் அவன் பெயர் பிரேம்ரகு என்றானது. போளி கூறுவான்- அவர்கள் வகுப்பில் மொத்தம் பத்தொன்பது கல்லூரி மாணவிகள் இருந்தார்கள் என்று. உண்மையாக கல்லூரி மாணவிகள் அழகிகளாகத்தானே இருப்பார்கள். பலரும் பல பெண்களையும் காதலித்தார்கள். ஆனால் பி.கே. ரகுநாதனோ வலைவீசிய மாதிரி பத்தொன்பது பெண்களையும் ஒரே நேரத்தில் காதலித்தான். அவன் ஒரு காதல் கடிதம் எழுதினான். அதையே பத்தொன்பது பிரதி எடுத்தான். பத்தொன்பது பெண்களின் முகவரி எழுதி பத்தொன்பது கவர்களில் அதை அடைத்தான். இரண்டு மூன்று நாட்களில் பன்னிரண்டு மாணவிகளுக்கு அவற்றைக் கொடுத்தான். சாதாரணமாக பெண்கள் தங்களுக்கு வரும் காதல் கடிதங்களைப் பற்றி ஒன்றாக உட்கார்ந்து அலசி ஆராய்வதும், அதன் இலக்கிய அம்சங்களை விமர்சிப்பதும் நடக்கக்கூடிய ஒன்று. ஆனால் என்ன கஷ்டம் இங்கு! விவாதத்திற்கு வந்தது ஒரே வாசகங்களைக் கொண்ட பன்னிரண்டு கடிதங்கள். இப்படி ஒரு சூழ்நிலை உண்டானால், யாருக்கும் கோபம் வரத்தானே செய்யும். அவர்களுக்கும் வந்தது. கோபத்துடன், தங்களை யாரோ ஒருவன் அவமதித்து விட்டான் என்ற எண்ணமும் சேர்ந்து கொண்டது. இப்படிப்பட்ட ஒரு அயோக்கியன் யாராக இருக்கும்? அவனை என்ன செய்வது? அவர்கள் எல்லாரும் கூட்டமாகச் சென்று பிரின்ஸிபாலைப் பார்த்தார்கள். விஷயத்தைச் சொன்னார்கள். கொடுக்க முடியாமல் போய் புத்தகத்தில் மறைத்து வைத்திருந்த மீதி ஏழு காதல் கடிதங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியால் பிரேம்ரகு என்ற பட்டப் பெயரைப் பெற்ற அவன் புத்தகங்களையும் பெட்டியையும் படுக்கையையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போக நேர்ந்தது. கூறும்போது எல்லாவற்றையும் கூற வேண்டும் அல்லவா? பிரேம்ரகு ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் நிறைய பட்டைச் சாராயத்தை ஒரே மூச்சில் குடிப்பான். தண்ணீர் வேண்டாம், சோடா வேண்டாம். ஒன்றும் வேண்டாம். இந்த அளவுக்கு மது அருந்த பாப்பச்சனால் முடியாது. போளிக்கும் தெரியாது. பிரேம்ரகு மது அருந்தும் விஷயத்தில் மேல்நிலைப் பட்டம் வாங்கியவன். அவன் ஆத்மாவிற்கு நித்யசாந்தி கிடைக்கட்டும். பிரேம்ரகு நகரத்திற்கு வரும்போதெல்லாம் வீட்டுக்கு வரும்படி அழைப்பான். இரண்டு மூன்று வருடங்களாக அவனைப் பார்ப்பதில்லை. "படுக்கையறை" பத்திரிகையின் ஒரு வருட சந்தா அவன் செலுத்தினான். மூன்று இதழ்கள்தான் மொத்தம் வெளிவந்ததே. மீதிப் பணத்தை அவனுக்குத் திருப்பித் தரவேண்டி இருக்கிறது. பத்திரிகைக்காக போளியும் மூவாயிரம் ரூபாய் செலவு செய்திருக்கிறான். போளியின் தந்தை "படுக்கையறை'' பத்திரிகையின் மூன்று இதழ்களையும் தோப்புக்கு எடுத்துச் சென்று சருகுகளைச் சேர்த்து நெருப்புக்கு இரையாக்கினார் என்று கூறப்படுவதுண்டு. அவர் கலாரசிகரோ இலக்கிய ஈடுபாடு கொண்டவரோ கிடையாது. மகா கஞ்சத்தனமான மனிதன். ஒரு வேஷ்டியும் துண்டும் வாங்கினால், அது உடலில் கிடந்து கிழிவது வரை இன்னொன்று புதிதாக வாங்குவது இல்லை. நகரத்தின் மையமான இடத்தில் எட்டு புதிய கடைகள் கட்டியிருக்கிறார். எட்டு அல்ல. பதினாறு. மேலேயும் கீழேயும் சேர்த்து. அதில் பதினான்கு கடைகளை வாடகைக்குக் கொடுத்துவிட்டார். மேலேயும் கீழேயும் வாடகை நூற்றைம்பது மட்டுமே. அதனால் ஒன்றும் நஷ்டமில்லை. காரணம்... பகடியாக இருபத்தைந்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். அதைக் கொடுத்து வாங்கவும் ஆட்கள் இருக்கவே செய்தார்கள். மேலேயும் கீழேயும் மீதியிருக்கிற அறைகளில்தான் பாப்பச்சனின் இப்போதைய கண்பார்வை! கீழே இருக்கும் அறையில் இருந்து மாடிக்குப் போவதற்கு படிகள் இருக்கின்றன. நல்ல வசதியாகப் போய்விட்டது. கனமான இயந்திரம்! கட்டாயம் ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.
மாடியில் அலுவலகம். கீழே உள்ள அறையில் ஃபாக்டரி. ஃபாக்டரியின் பெயர்:
"தாரா சிகரெட் ஃபாக்டரி".
நிச்சயமாக வெற்றி பெற முடியும். போட்டிக்கும் வேறு யாரும் கிடையாது. ஆனால் மக்கள் சில நேரங்களில் சிந்தனையே இல்லாமல் கண்டபடி போய்க் கொண்டிருப்பார்கள். ஒரு நபர் ஏதாவது வித்தியாசமாகச் செய்யலாம் என்று நினைத்துச் செயல்பட்டால், அதற்கு உதவியாக அவர்கள் இருக்க வேண்டுமே! ஸ்டுப்பிட், ராஸ்க்கல்... போய்த் தொலையட்டும்! சிகரெட்டின் விலையைக் குறைக்க வேண்டியது. காம்பட்டிஷன் என்றால் காம்பட்டிஷன்!
பிரேம்ரகு மாறாமல் இருப்பானா? அவனுக்கு எதற்கு சிகரெட் தயாரிக்கும் இயந்திரம்? அவன் மட்டும் நிச்சயம் தனியாக சிகரெட் தயாரிக்க முடியாது. ஏற்கெனவே பழக்கமான நண்பர்களை பார்ட்னர்களாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கூறும்போது எல்லாவற்றையும் கூற வேண்டும் அல்லவா! பிரேம்ரகுவிற்கு நன்கு பழக்கமானவன் பாப்பச்சன். ஏற்கெனவே பல பிஸினஸ்களில் ஈடுபட்ட அனுபவம் இருக்கிறது. மூலதனம் குறைவு என்பது உண்மை.
முதன்முதலாகக் கால் வைத்தது இலக்கியத்தில். இலக்கியத்தில் மட்டுமல்ல; கலை, கலாச்சாரம், அரசியல், சினிமா ஆகியவற்றிலும் பாப்பச்சன் கால் வைத்திருக்கிறான். இப்படித்தான் "படுக்கையறை" ஆரம்பித்தது. அது கலை, கலாச்சாரம், அரசியல், சினிமா சம்பந்தப்பட்ட மாத இதழ். எந்த நல்ல காரியத்திற்கும் எதிரிகள் என்ற "ராஸ்கல்ஸ்" இருக்கத்தானே செய்வார்கள். அவர்கள் சொல்லிக் கொண்டே திரிவார்கள். "படுக்கையறை"யில் கலை இல்லை, கலாச்சாரம் இல்லை. "படுக்கையறை"யைப் படிக்கக்கூடாது என்று அவர்கள் கூப்பாடு போட்டார்கள். அரசாங்கத்திற்குப் புகார் அனுப்பினார்கள். அரசு "படுக்கையறை"யைப் படித்துப் பார்த்தது. குற்றம் என்று கூற எதுவும் இல்லை. பத்திரிகையில் பெண்களின் பெயர்களில் கேள்விகள் எழுதியது பாப்பச்சன். பதில் எழுதியது போளி. பன்னிரண்டு வயது பெண்ணொருத்தி தேன் வழியும் வார்த்தைகளால் காம உணர்வைத் தூண்டும் வண்ணம் தன் சுயசரிதையை எழுதுவதாக எழுதியது பத்திரிகை முதலாளி பாப்பச்சனே. ஆனால், "லிஸிமோள்" என்ற புனைப் பெயரில். "இது உண்மையா?" என்ற பெயரில் ஒரு புதுமைப்பகுதி. நாட்டில் உள்ள பிரபல பெண்களைப் பற்றி யாரும் இதற்கு முன்பு கேள்விப்பட்டிராத உண்மைச் செய்திகளை மிகமிக தைரியமாக "சகஸ்ரநயனன்" என்ற பெயரில் எழுதியது வேறு யார்- சாட்சாத் போளிதான். ஆனால் இது யாருக்கும் தெரியாது. விரோதிகள் இப்போதும் லிஸிமோளையும், சகஸ்ரநயனனையும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். ராஸ்கல்ஸ்! அவர்கள் பத்திரிகை முதலாளியைத் தாக்கவில்லை. "படுக்கையறை" இதழை அச்சடித்த அச்சக ஊழியரை அடித்தார்கள். அதை விற்பனை செய்தவர்களை விரட்டி விரட்டி அடித்தார்கள். "படுக்கையறை" இதழ்களை நகரத்தின் நடுவில் மலை எனக் குவித்து மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பிட்டு எரித்தார்கள்.
2
வருத்தமான விஷயம்தான். "படுக்கையறை"யை நிறுத்த வேண்டியதாகி விட்டது. அன்று இரவு ஒரே கொண்டாட்டம்தான். நான்கு பாட்டில் சாராயம் அதிகாலை நான்கு மணி வரை வந்து தீர்ந்தது. போளி பாடினான். பாப்பச்சனும் பாடினான்:
"போனால் போகட்டும். போடா!''
அடுத்த நாள் முதல் புதிய அத்தியாயம் ஆரம்பமானது. அரசியல் களம்!
தலைவர் போளி, செயலாளர் பாப்பச்சன், பொருளாளர் ரிக்ஷா வண்டிக்காரன் பைலோ. ரிக்ஷா வண்டித் தொழிலாளர்கள் யூனியன் -இதுதான் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. ஆளை அமர வைத்து ஆள் இழுக்கிற ரிக்ஷா வண்டிகளை ஒட்டுமொத்தமாக நிறுத்துவதற்கு முன்பு நடத்த விஷயம் இது. போராட்டம் தொடங்கியது ஆட்டோ ரிக்ஷாவுக்கும் சைக்கிள் ரிக்ஷாவுக்கும் டாக்ஸிகளுக்கும் எதிராகத்தான். கோரிக்கைகள் நியாயமானவை தான். ரிக்ஷா வண்டித் தொழிலாளர்களுக்கு வருமானம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து கொண்டே வருகிறது. இன்னும் சில நாட்களில் அவர்களின் பிழைப்பே கேள்விக்குறி ஆகிவிடும். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டினி கிடந்து சாக வேண்டிய நிலை உண்டாகும். இப்படிப்பட்டத் துயரச் சூழ்நிலையில் இருந்து ரிக்ஷாத் தொழிலாளர்களை உடனடியாகக் காப்பாற்றி ஆக வேண்டும். சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷா, டாக்ஸி, கார்கள் ஆகியவற்றை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். "போலோ, மகாத்மா காந்திக்கு ஜே! ரிக்ஷா வண்டி- மக்கள் வண்டி!"
உற்சாக கோஷங்கள் எழுப்பிய ஊர்வலங்கள்! கம்பீரமான தீர்மானங்கள்! போளி எத்தனையோ நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கினான். பாப்பச்சன் நூற்றுக்கணக்கான கூட்டங்களில் அனல் பறக்கச் சொற்பொழிவு ஆற்றினான். ஆனால் மக்கள் இதைக் கண்டுகொள்ளவே இல்லை. ஏழை ரிக்ஷா தொழிலாளர்கள் படும் துயரத்தைப் பார்த்தும், காணாதது மாதிரி இருந்தார்கள். அவர்களின் புலம்பலைக் கேட்டு கேலியாகச் சிரித்தார்கள். அதோடு நிற்காமல், சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷா, டாக்ஸி, கார்கள் போன்ற வாகனங்களுக்கு அமோக ஆதரவு வேறு கொடுத்தார்கள். அரசாங்கமோ புதிய ரிக்ஷா வண்டிகளுக்கு லைசென்ஸ் கொடுக்க மாட்டேன் என்றது.
"உங்களுக்கு நான் பாடம் கற்றுத் தர்றேன்.'' பாப்பச்சன் சொன்னான்: "தாரா சிகரெட் ஃபாக்டரி மட்டும் ஆரம்பமாகட்டும். இந்த பாப்பச்சன் கார் வாங்குவான். அந்தக் காரை உங்கள்மேல் ஏற்றிக் கொல்கிறேன். இது சத்தியம்.''
பாப்பச்சன் வறண்டுபோன தொண்டையுடன் நடந்து போனான். நடந்தே போளியின் வீட்டை அடைந்தான். அப்போது வாசலில் அமர்ந்து வெளியில் எதையோ தீவிரமாக பெருக்கிக் கொண்டிருந்தார் போளியின் தந்தை. பழைய ஒரு வேஷ்டியும் துண்டும்தான் அவர் அணிந்திருந்த ஆடைகள்.
பாப்பச்சன் கேட்டான்:
"வெயில்ல அப்படி என்ன பெருக்குறீங்க?''
"நெல்லு, எறும்பு கொண்டு போறதை...''
"போளி இருக்கானா?''
"அடியே!'' போளியின் தந்தை அழைத்தார். அழைப்பை எதிர்பார்த்திருந்த மாதிரி, குரல் கேட்ட அடுத்த நிமிடமே போளியின் தாய் வாசலுக்கு வந்தாள். போளியின் தந்தை கேட்டார்:
"உன்னோட வக்கீல் மகன் இங்க இருக்கானா?''
"அவன் கேஸ் கட்டு படிச்சுக்கிட்டிருக்கான்!''
போளியின் அம்மா சொன்னாள். இங்கு கட்டாயம் எல்லாரும் சிரித்தே ஆக வேண்டும். இது நல்ல ஹ்யூமரும் கூட. அதனால்தானோ என்னவோ, பாப்பச்சனும் போளியின் தந்தையும் சிரிக்கத் தொடங்கினார்கள். போளியின் தாய் கேட்டாள்: "பாப்பச்சா, உன் பத்திரிகையோட பழைய காப்பி இருக்கா? எல்லா காப்பியும் எனக்கு வேணும். பணம் தர்றேன்!''
இதுவும் ஹ்யூமர்தான். சாதாரணமாக பாப்பச்சனை எப்போது பார்த்தாலும் போளியின் தாய் பேசுவது இதைத்தான். கேட்கிறவர்கள் சிரிக்க வேண்டும். போளியின் தந்தை சிரித்தார். பாப்பச்சன் வராந்தாவைத் தாண்டி படிகள் வழியே ஏறிச் செல்லும்போது, போளி கண்ணாடியைப் பார்த்தவாறு மீசையைக் கத்தரித்து அழகைக் கூட்டிக் கொண்டிருந்தான்.
"டேய் போளி...'' பாப்பச்சன் அழைத்தான். "இனி நான் உன்னைப் பார்க்க வர்றதுன்னா, என் சொந்த கார்லதான் வருவேன்.''
போளி கூறினான்:
"படுக்கையறை"யை ஆரம்பிச்ச காலத்துல நீ இதைத்தான் சொன்னே. அந்த வகையில என் அப்பாவித் தந்தைக்கு நஷ்டம் மூவாயிரம் ரூபாய்.''
"இருந்தாலும் நீ ஒரு இலக்கியவாதி ஆயிட்டியே!''
"நானா?''
"நீதானே சஹஸ்ரநயனன்? திருட்டுப்பயலே...''
இதைக் கேட்டதும் முகம் சுருங்கிப் போனான் போளி. துக்கச் செய்தி ஆயிற்றே! அதனால் அலமாரியைத் திறந்து ஒரு பாட்டில் சாராயத்தையும் இரண்டு கண்ணாடி டம்ளர்களையும் ஒரு வறுத்த கடலைப் பொட்டலத்தையும் எடுத்தான். பாப்பச்சன் எழுந்து போய் ஓரு கூஜாவில் நீர் எடுத்துக் கொண்டு வந்தான். இரண்டு பேரும் சிமெண்ட் தரையில் அமர்ந்தார்கள். போளி இரண்டு டம்ளர்களில், ஒன்றில் முழுவதுமாகவும் இன்னொன்றில் பாதி வரையும் சாராயத்தை ஊற்றினான். முழுவதுமாக சாராயம் இருந்த டம்ளரை வாயில் வைத்து காலி செய்த போளி, இரண்டு கடலைகளை எடுத்து வாயில் போட்டான்.
"தண்ணியடிக்குறதுன்றது பிரேம்ரகுவிற்கு மட்டும் குத்தகை போட்டதல்ல.'' போளி சொன்னான். பாப்பச்சன் கேட்டான்: