தாரா ஸ்பெஷல்ஸ் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6954
எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் இயந்திரம் கையில் கிடைக்க வேண்டும் போன்ற பிரார்த்தனைகள் மனத்திற்குள் கூறியவாறு, வழியில் இருந்த பள்ளி வாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் அரை ரூபாய் சில்லரைக் காசுகளைப் போட்டான் போளி.
"பாப்பச்சா, நீ கவனமா கேட்டுக்கோ.'' போளி சொன்னான்: "நீ ஒரு தலைவனும் இலக்கியவாதியுமாக இருப்பவன். அதனால் உனக்கு உலக அறிவும், தொலைநோக்குப் பார்வையும் குறைவாகவே இருக்கும். பேச வேண்டியதை எல்லாம் நான் பேசிக்கிறேன். இயந்திரத்தைப் பத்தி நீ எதுவும் பேசாதே. நீ பேசினா பிரேம்ரகு ஏதாவது பிகு பண்ணினாலும் பண்ணுவான். இன்னொரு விஷயத்தை ஞாபகத்துல வச்சுக்கோ. நாம லட்சக்கணக்கான ரூபாய் விளையாடப்போற பிசினஸ் பண்ணப்போறோம். இனிமே நாம சார்மினார் சிகரெட் பிடிச்சா நல்லா இருக்காது.''
"பிறகு எதைப் பிடிக்கிறது?''
"கோல்ட் ஃப்ளேக். இருபது சிகரெட் இருக்கிற ரெண்டு பாக்கெட். நான் ஏற்கெனவே வாங்கி வச்சுட்டேன். ரெண்டு பாட்டில் ஜானிவாக்கர் விஸ்கியும் வாங்கி வச்சிருக்கேன். மீசை ரப்பாயி சேட்டன்கிட்ட கம்மியான விலையில வாங்கினேன்.''
"அவர்கிட்ட விஸ்கிகூட இருக்கா என்ன? ஆனா போளி, பிரேம்ரகுவும் நீயும் நானும் சேர்ந்து கள்ளு, சாராயம் எல்லாம் அடிச்சிருக்கோம். பீடி, சார்மினார் எல்லாம் பிடிச்சிருக்கோம். பிறகு எதுக்கு இந்த ஜானிவாக்கரும் கோல்ட் ஃபிளேக்கும்?''
"டாகின் டாகே! சும்மா ஆளை கவர் பண்றதுக்குத்தான். நம்பளோட இப்போதைய வாழ்க்கை நிலையைப் பார்த்து பிரேம்ரகு அசர வேண்டாமா?''
கூறும்போது எல்லாவற்றையும் கூறவேண்டும் அல்லவா? போகும் வழியில் அவர்கள் பிடித்தது சார்மினார் சிகரெட்தான். நான்கு பாக்கெட்டுகள் கடனுக்கு வாங்கி பாப்பச்சன் தன்னிடம் வைத்திருந்தான். மதிய நேரம் கழிந்திருக்கும் சுபமுகூர்த்த நேரத்தில், வழியில் அவர்கள் ஒரு அழகான கள்ளுக் கடையைப் பார்த்தார்கள். அவ்வளவுதான்- சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான் போளி. கடையில் அவர்கள் ஸ்ரீரகுநாத்தின் வீட்டுக்கு எந்த வழியில் செல்ல வேண்டும் என்று கேட்டார்கள். புதுக் கள்ளின் மணமும் பொரித்த மீன் வாசனையும் மூக்கைத் துளைத்தது. ஆஹா...
"என்னடா சொல்றே?''
"நீ என்ன சொல்றே?''
ம்... தியாகம் செய்தார்கள்! தின்னவும் இல்லை. குடிக்கவும் இல்லை. என்ன இருந்தாலும் சரியான பிடிவாதம்தான். ரைட்! காரை மீண்டும் ஓட்டினான் போளி. இதோ நெருங்கிவிட்டது ப்ரேம்ரகுவின் வீடு! தார்ரோட்டை விட்டு விலகிச் செல்லும் மண் ரோடு. இருபுறமும் பச்சைப் பசேல் வயல் பத்து பன்னிரண்டு ஏக்கர் இருக்கும். நடுவில் நான்கு ஏக்கரில் தென்னந்தோப்பு. அதன் நடுவில் பழைய மாடலில் ஒரு பங்களா.
"நிறுத்தடா. கோல்ட் ஃப்ளேக்!''
பேகைத் திறந்து இரண்டு பாக்கெட்டுகளையும் எடுத்தார்கள். இரண்டு பேருமே அவற்றைப் பிரித்தார்கள். இரண்டு பேரும் தனித்தனியே சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்துக் கொளுத்தி, பந்தாவாகப் புகை விட்டார்கள். இரண்டு பேரும் நன்றாகவே இருமினார்கள். எப்போதும் பிடிக்கும் பிராண்டை விட்டு புதிய ரகத்தைப் பிடிக்கிறபோது இருமல் வரத்தான் செய்யும். பரவாயில்லை. வண்டியை மெதுவாக ஊர்ந்துபோகச் செய்தான் போளி. மெதுவாக நகர்ந்த கார் கேட்டை அடைந்தது. இரண்டு மூன்று அல்சேஷன் நாய்கள் ஒன்று சேர்ந்து குரைத்தன. தொடர்ந்து வெளியே வந்தான்- வாயில் பைப் வைத்துப் புகை பிடித்தவாறு, கைகள் இரண்டையும் பான்ட் பாக்கெட்டினுள் நுழைத்த கோலத்தில் உடல் பருத்தவனான பிரேம்ரகு. முடி செம்பட்டை நிறத்தில் இருந்தது. முன்னறைக்கு மேலே செல்லும் படிகள் இங்கிருந்தே தெரிந்தன. பிரேம்ரகுவே வந்து கதவைத் திறந்தான்.
"வெல்கம் டூ ரகு குடில்.''
கார் உள்ளே சென்றது. கதவுகள் அடைக்கப்பட்டன.
காரை நிழலில் நிறுத்திவிட்டு, பேகைக் கையில் எடுத்தவாறு போளியும் பாப்பச்சனும் இறங்கினர்.
பிரேம்ரகு சொன்னான்:
"லிஸி மோளுக்கும் சஹஸ்ரநயனனுக்கும் வணக்கம்.''
பாப்பச்சனும் போளியும் உண்மையிலேயே அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
பிரேம்ரகு தொடர்ந்து சொன்னான்:
"படுக்கையறை" பத்திரிகையைப் படிக்கிறப்பவே எனக்குத் தெரிஞ்சு போச்சு- லிஸிமோள்ன்ற பேர்ல எழுதுறது பாப்பச்சன், சஹஸ்ரநயனன்ற பேர்ல எழுதறது போளிதான்னு.''
"பிரேம், இதை வேற யார்கிட்டயாவது நீ சொல்லி இருக்கியா?''
"இதுவரை யார்கிட்டயும் சொன்னது இல்ல...''
பாப்பச்சன் கேட்டான்:
"உனக்கு எங்களோட இலக்கியப் படைப்புகளைப் பற்றி என்ன அபிப்ராயம்?''
பிரேம்ரகு கூறினான்:
"நான் அதை மறைச்சு வச்சுத்தான் படிச்சேன். அம்மாவும் சகோதரிகளும் அதை நல்ல வேளை பார்க்கல. வாசிச்சு முடிஞ்ச பிறகு அந்த மூன்று இதழ்களையும் கொண்டு போயி தென்னை மரத்தின் அடியில போட்டு தீ வச்சுப் பொசுக்கிட்டேன். அவ்வளவுதான்- கொஞ்ச நாள்லயே அந்தத் தென்னை மரம் வாடிப்போச்சு. உங்கள் இலக்கியப் படைப்புகளோட சக்தி அப்படி!''
"பண்பாடு தெரியாதவன்.'' பாப்பச்சன் சொன்னான்: "அதை எரிக்காதவங்க யாருமே இல்ல...''
"உங்களை யாரும் அடிக்கலியா?''
"நாங்கதான் அரசியலுக்குள்ள நுழைஞ்சிட்டமே!''
"நானும் கேள்விப்பட்டேன். நீங்க ஏன் ரிக்ஷாத் தொழிலாளிகளோட போராட்டத்திற்குத் தலைமை தாங்கினீங்க?''
போளி பாப்பச்சனைப் பார்த்தான். பாப்பச்சன் "வேண்டாம். சொல்லிடாதே" என்பது மாதிரி கண்களால் ஜாடை காட்டினான். போளி சொன்னான்:
"என்னால முடியாது. நான் சொல்லிடுவேன். பிரேம், நீ கேட்டுக்க. பாப்பச்சன்ற இந்தப் பய ஆரம்பிச்சு வச்சதுதான் அந்தப் போராட்டம். காரணம் என்ன தெரியுமா? ரிக்ஷா வண்டிக்காரன் பைலோவோட மகளை இந்த பாப்பச்சன் காதலிக்கிறான்.''
"பேரு?''
"தாரா.''
"தாராவுக்கும் பாப்பச்சனுக்கும் வாழ்த்துகள். நல்லது நடக்கட்டும். நாம இதைக் கட்டாயம் கொண்டாடியே ஆகணும். நல்ல சம்பா அரிசி சோறு இருக்கு. திருதா மீன் வறுத்து வச்சிருக்கு. மாங்கா ஊறுகாய், தயிர். போதுமா?''
"போதும்.''
"இருந்தாலும்... டேய்!'' பிரேம்ரகு அழைத்தான். தடியாக இருந்த ஒரு வேலைக்காரன் வந்து நின்றான்.
"டேய் செங்கிஸ்கான். அம்மாக்கிட்ட அப்பளம் பொறிக்கச் சொல்லு. பிறகு... ஐஸ் கட்டிகள், பொறிச்ச திருதா மீன், சட்னி... சீக்கிரம் எல்லாத்தையும் கொண்டு வா.''
போளி கேட்டான்:
"செங்கிஸ்கான்...?''
பிரேம்ரகு சிரித்தான்.
"இவன் என்னோட வேலைக்காரன். இவனோட உண்மையான பேரு கொச்சிட்யாதி. இவனுக்குச் சம்பள உயர்வெல்லாம் தேவையில்ல... பிரமோஷன் வேணும். புதிய பேர்கள் வேணும். கடந்த ஆறு மாசமா இவனோட பேரு செங்கிஸ்கான். போடா, சிரிச்சுக்கிட்டே நிக்காதே.''
செங்கிஸ்கான் என்ற அந்த அடிமை வேலைக்காரன் ஓடினான்.
"அவன் செங்கிஸ்கானோட கதையைப் படிச்சான். எதிரிகளின் முடியால் உண்டாக்கப்பட்ட அந்த மகானோட கொடி அவனுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. அதனால இந்தப் பேரை மாற்றவே வேண்டாம்னு சொல்றான். என்ன செய்றது? ஆமா... பேக்ல என்ன வச்சிருக்கீங்க?''