தாரா ஸ்பெஷல்ஸ் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6954
"ஜானிவாக்கர் விஸ்கி.'' பாப்பச்சன் கூறினான்.
பிரேம்ரகு சொன்னான்: "இதை எதுக்கு அங்கேயிருந்து வாங்கிட்டு வந்தீங்க? வாங்க...''
அவர்கள் மாடியை அடைந்தார்கள். நான்கு பக்கமும் பல கிலோ மீட்டர் தூரம் வரை உலகம் தெரிந்தது. ஒரு பக்கம் பரந்து கிடக்கும் கடற்கரை மணல் பரப்பைத் தாண்டி எல்லையற்ற நீலக்கடல். எங்கே இருந்து யார் வந்தாலும், வீட்டில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
4
மாடியில் இரண்டு அறைகள். சுற்றிலும் அரை மதில் அளவுக்கு கம்பிகள் அடிக்கப்பட்ட வராந்தா. அறைகளில் ஒன்று படுக்கையறை. இன்னொன்று அருமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. விலை உயர்ந்த நார்பாய், நாற்காலிகள், மேஜை, பெரிய இரும்பு அலமாரிகள், சீலிங்ஃபேன், ரேடியோகிராம், பூ ஜாடிகள், ஷெல்ஃப் முழுக்கப் புத்தகங்கள்...
போளி ஜானிவாக்கர் பாட்டிலை மேஜைமேல் வைத்தான். கோல்ட் ஃப்ளேக் சிகரெட் பாக்கெட்டை அதற்குப் பக்கத்தில் பந்தாவாக வைத்தான். பாப்பச்சனும் தன் கையில் இருந்த கோல்ட் ஃப்ளேக் சிகரெட் பாக்கெட்டை மேஜையில் வைத்தான். பிரேம்ரகு பைப்பில் இருந்த சாம்பலை ஆஷ்ட்ரேயில் கொட்டிவிட்டு பைப்பை மேஜை ஓரத்தில் வைத்தான். தொடர்ந்து ஸ்டேட் எக்ஸ்பிரஸ் சிகரெட்டின் ஒன்றை மேஜைமேல் வைத்தான்.
போளியும் பாப்பச்சனும் மனத்திற்குள் கூறிக் கொண்டார்கள்:
"அட... ம்...!"
பிரேம்ரகு இரும்பு அலமாரியைத் திறந்து மூன்று கண்ணாடி டம்ளர்களை எடுத்தான். அப்போது அலமாரியில் யாரையும் அதிர்ச்சி அடையச் செய்யும் ஒரு காட்சி. ஜானிவாக்கர், பிளாக் அண்ட் ஒயிட், ஷெயிக், ஒயிட் ஹார்ஸ் ஜின், ஷாம்பெயின் போன்றவை...
புலியைப் பிடிக்கிற புலி... இவன் என்ன சாதாரண ஆளா?
போளியும் பாப்பச்சனும் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்கள். மனதிற்குள் நினைத்தார்கள். சிகரெட் தயாரிக்கிற இயந்திரத்தை இவன் எங்கே வைத்திருப்பான்? வயல்வெளியிலோ, தோப்பிலோ ஷெட்மாதிரி எதுவும் கண்ணில்படவில்லை. வீட்டை விட்டுச் சற்று தூரத்தில் பெரிய சமையலறை, கிணறு... இயந்திரம் எங்கே இருக்கும்?
ஒரு வேளை... திறக்கப்படாமலே கொண்டு வந்தபடி பிரிக்கப்படாமலே பெட்டிக்குள் இருக்குமோ? உண்மையிலேயே இவன் புலியைப் பிடிக்கிற ஒரு பயங்கரப் புலிதான். இருந்தாலும் அவனே கூறுவான். கொஞ்ச நேரம் போகட்டும். நமக்குத் தெரியாதா?
பிரேம்ரகு இரண்டு பாட்டில்களையும் எடுத்து அடிப்பாகத்தை உற்று நோக்கி ஆராய்ந்தான். ஒரு பாட்டிலின் சீலை உடைத்துத் தலைகீழாக சில நிமிடங்கள் பிடித்துவிட்டு பிறகு நேராக மேஜைமேல் வைத்தான்.
"வெளிநாட்ல இருந்து வர்ற மது பாட்டில்கள்ல சில விளையாட்டுத்தனங்களை நம்ம ஆளுங்க செய்வாங்க. ஒரு ஸ்டீல் கம்பியைப் பழுக்க வச்சு பாட்டிலோட மூடியில லேசா ஓட்டை போட்டுடுவாங்க. பிறகு சிரிஞ்ச் வச்சு உள்ளே இருக்கிற விலை உயர்ந்த மதுவை பாதி அளவுக்கு உறிஞ்சி வேறொரு பாட்டிலுக்குக் கொண்டு வந்துட்டு, அதுக்குப் பதிலா சாராயத்தை ஊத்தி வச்சிடுவாங்க. சிலர் வெறும் ஸ்பிரிட்டை ஊற்றி வச்சிடுவாங்க. அதுக்குப் பிறகு மூடியோட துளையை உருக்கி சரி செஞ்சிடுவாங்க.
அதுக்கும் உபகரணங்கள் இருக்கு. இந்த பாட்டில் அப்படி அல்ல. ஒரிஜினல்தான். எங்கே வாங்கினீங்க இதை?''
போளி சொன்னான்:
"கடத்தல் சரக்குதான். ஒவ்வொரு பாட்டிலும் எழுபத்தஞ்சு ரூபா. லாபம்தான். ஓப்பன் மார்க்கெட்ல இதனோட விலை நூற்றி இருபது ரூபா...''
"யார்கிட்ட வாங்கினீங்க?''
"ரப்பாயி சேட்டன்னு ஒரு ஆளு... அவரு...''
பிரேம்ரகு சிரித்தான்.
"மீசை ரப்பாயி சேட்டனா? நான்தான் அவர்கிட்ட கொடுத்தேன். அம்பத்தஞ்சு ரூபாவுக்குக் கொடுத்தேன். எனக்கு முப்பது ரூபா வரும் அசல்.''
"அப்ப இந்தத் தொண்ணூறு ரூபா யாருக்கு?''
"எண்பது ரூபா அரசாங்கத்துக்கு, பத்து ரூபா விக்கிற வியாபாரிக்கு.''
செங்கிஸ்கான் பெரிய ஒரு ட்ரேயுடன் வந்தான்.
ப்ரேம்ரகு படுக்கையறைக்குள் நுழைந்து ஒரு சில்க் கைலியைக் கட்டினான். கையில் இரண்டு சில்க் கைலிகளை வைத்திருந்தான். பாப்பச்சனும் போளியும் அதை வாங்கினார்கள்.
போளி சொன்னான்:
"நாங்க உடனே போகணும்.''
தொடர்ந்து இரண்டு பேரும் உள்ளே இருந்த அறைக்குள் நுழைந்து கைலிக்கு மாறினார்கள். ட்ரேயில் ஒரு கண்ணாடி குடுவை நிறைய
ஐஸ்கட்டிகள். அதனுடன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆன ஒரு கிடுக்கி. தட்டில் பொரித்த திருதா மீன். அருகில் வெங்காயம், தக்காளி நறுக்கப்பட்டு. சிறிய தட்டில் பச்சை சட்னி.
பிரேம்ரகு அலமாரியில் இருந்து இன்னொரு கண்ணாடி டம்ளரை எடுத்தான். நான்கு டம்ளர்களிலும் பாதி வருகிற வரை விஸ்கியை ஊற்றி, மீதி இடத்தில் ஐஸ்கட்டிகளை இட்டான். ஒரு டம்ளரைக் கையில் எடுத்தான். போளியும் பாப்பச்சனும் டம்ளர்களை எடுத்தார்கள். மீதி இருந்த ஒரு டம்ளரை செங்கிஸ்கான் எடுத்தான்.
"தாராவுக்காகவும் பாப்பச்சனுக்காகவும்.''
பிரேம்ரகு சொன்னான். நான்கு பேரும் டம்ளர்களை ஒன்றோடொன்று முட்டச் செய்தார்கள். தொடர்ந்து வாயில் வைத்து விஸ்கியைச் சுவை பார்க்க ஆரம்பித்தனர். பிரேம்ரகுவும் செங்கிஸ்கானும் ஒரே மூச்சில் குடித்து டம்ளரை காலி செய்தார்கள். டம்ளர்களில் அனாதையாக ஐஸ்கட்டிகள் மட்டும் இருந்தன. போளியும் அதேபோல குடித்து டம்ளரை வைத்தான். இப்போது பாப்பச்சனும் குடித்துத் தீர்த்தான். பாப்பச்சன் ஐஸ்கட்டிகளைக்கூட விட்டு வைக்கவில்லை. அதையும் விழுங்கி விட்டிருந்தான்! பிறகு பச்சை நிறத்தில் இருந்த சட்னியை ஸ்பூனால் எடுத்து வாயில் வைத்து நக்கிய பாப்பச்சன் கேட்டான்:
"என்னடா இது?''
"குடவன் இலையில் உண்டாக்கின சட்னி. இதைச் சாப்பிட்டா ரொம்ப நாள் உயிரோட இருக்கலாமாம்...''
"குடவன்னா என்ன அர்த்தம்?''
பார்த்தபோது செங்கிஸ்கான் இடத்தைவிட்டுப் போயிருந்தான். பிரேம்ரகு எழுந்து சென்று ரேடியோ கிராமைப்போட்டு, பெரிய ஒரு இசைத்தட்டை இசைக்கச் செய்தான். மெல்ல மெல்ல காற்றில் தவழ்ந்து வந்த இசைக் கருவிகளின் இனிய சங்கீதம்... முழுக்க முழுக்க இன்ஸ்ட்ரூமெண்ட் மியூசிக்...
"அரேபியன் நைட்ஸ்.'' க்யாஸ் ஃபில்ட் ரான்ஸனில் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் சிகரெட்டைக் கொளுத்திய பிரேம்ரகு சொன்னான். மீண்டும் கண்ணாடி டம்ளர்களில் ஐஸ் கட்டிகள். ஒவ்வொரு டம்ளரிலும் தலா நான்கைந்து ஐஸ் கட்டிகள். விஸ்கி தலா இரண்டு பெக்குகள். இசை வெள்ளத்தில் மூழ்கி இருந்தனர் அனைவரும். அவசரமொன்றும் இல்லை. மெல்ல ரசித்தவாறு விஸ்கியை ருசி பார்த்தனர். நீண்ட ஆயுளுக்காக குடவன் சட்னியை நக்கினர்.
"அப்போ பிரேம்...'' பாப்பச்சன் கேட்டான்:
"நீ பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். மதுவைப் பற்றி உன்னோட கருத்து என்ன?''
"இந்தியர்களான நாம் தொடர்ந்து மது அருந்தினால் மூளை, பல், கண்கள் எல்லாத்துக்கும் பாதிப்பு உண்டாகி சீக்கிரமே முதுமையை அடைஞ்சு செத்துப் போயிடுவோம்.''