காதல் கடிதம் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6822
“என் அன்புள்ள இன்டர்மீடியட்டே! அவங்க விவகாரத்தை நினைவுபடுத்தறியா? ஏன்டீ நிலா வெளிச்சமே! அது என்ன பெரிய விஷயம்? நான்கூட நாற்காலியில் உட்கார்ந்துக்கிட்டு பெரிய சாம்ராஜ்ஜியத்தையே வேண்டாம்னு சொல்ல முடியும். ஆனால் காதலுக்காக ஒரு தடவையாவது தலைகீழாக நிக்கறது என்பதை இதுவரை என் மாதிரி யாருடீ செய்திருக்காங்க?”
“ஆகாய மிட்டாயின் தந்தையே!”
“என்ன பொன்னே!”
“சொல்றேன்.”
அவள் குனிந்து கேசவனின் இரண்டு பாதங்களையும் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு முத்தமிட்டாள்.
அவளை அன்பு கனியத் தூக்கி நிறுத்திய கேசவனின் கோட் பாக்கெட்டினுள் அவள் விரலை விட்டாள்.
“என்ன நிலா வெளிச்சமே, என்ன தேடறறே?”
“நான் தந்த கவரை.”
“காதல் கடிதக் கற்றையையா? அதை வாசிக்க நான் மறந்தே போனேன்!”
கேசவன் கவரை எடுத்துப் பிரித்தார். உள்ளே ரூபாய் நோட்டுகள்.
அவற்றை ஒவ்வொன்றாக எண்ணலானார். ஆயிரத்து தொண்ணூற்றொன்பது ரூபாய்கள்.
“இதை வெச்சு ஒரு வாட்சும் மோதிரமும் வாக்கிக்குங்க. என்ன?” என்றாள் அவள்.
கேசவனுக்கு பணத்தைக் கண்டு மகிழ்ச்சி உண்டானதென்றாலும் காதல் கடிதம் வாசிக்கத்தான் அதிக ஆசை. அவர் கேட்டார்.
““மற்றது எங்கே?”
“மற்றதுன்னா...?”
“காதல் கடிதம்?”
“வாசிச்சே ஆகணுமா?”
“சும்மா பார்க்கத்தாண்டீ தங்கம்.”
“அப்படீன்னா பாத்துக்கங்க!” அவள் மென்னகை தவழக் கேசவனைப் பார்த்தாள். “என்ன, பார்த்தாச்சா?”
கேசவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“எங்கே காண்பிச்சாத்தானே?”
அவள் ஜாக்கெட்டினுள்ளிலிருந்து கசங்கி நைந்த ஒரு காகிதத்தை எடுத்து கேசவனிடம் தந்தாள். அதைத் திறந்து வெளிச்சத்தில் பிரித்துப் பார்த்தார் அவர். முன்பு எங்கோ பார்த்த கையெழுத்து! அன்றொரு நாள் மூலையில் அவள் கசக்கிப் போட்ட அவருடைய கடிதந்தான்!
“வாழ்க்கை என்பது ரொம்பவும் இளமையும் மென்மையும் நிறைந்த இந்தச் சூழ்நிலையில் நாமேதான் காதல் கடிதங்கள்.”
“எங்கே... இன்னொரு தடவை சொல்லு.”
“சொல்ல மாட்டேன்...” என்று பொய்க்கூச்சத்துடன் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அவள்.