காதல் கடிதம் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6822
“அன்புள்ள சாராம்மா!
வாழ்க்கை என்பது ரொம்பவும் இளமையும் மென்மையும் நிறைந்தது. அதனால்தான் என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷத்திலும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீயோ...?
நன்றாக யோசித்து மகிழ்ச்சி தரும் பதில் தருவாய் என்ற முழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
உன்னுடைய கேசவன் நாயர்.”
கடிதத்தை ஒரே மூச்சில் எழுதி முடித்த கேசவன் தம் முதுகுப் பக்கமாய் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டார். புன்னகை சிந்திய கோலத்தில் சாராம்மா அங்கு நிற்பதுபோல் ஒரு நிமிடம் கற்பனை செய்து பார்த்தார். வெறும் கற்பனைதான்! மீண்டும் தான் எழுதிய அந்தக் கடிதத்தை வாசித்துப் பார்த்தார். அதில் கவிதை இருக்கிறது! ஏன், கேசவனின் இதய வெளிப்பாடு முழுக்க அதன் ஒவ்வொரு வரியிலும் உயிர்ப்புடன் குடிகொண்டிருக்கிறதே!
அவருக்குப் பரம திருப்தி! கடிதத்தை பாக்கெட்டில் வைத்த அவர், தாம் பணிபுரியும் பாங்க் கட்டடத்தை விட்டு இறங்கித் தெருவில் கால் வைத்து ஒய்யாரமாக நடந்து போனார். அவள் பதில் எழுதுவாளா? அப்படி எழுதினால், அது என்னவாக இருக்கும்? சாராம்மாவின் குண நலன்களை அலசிப் பார்க்கிறபோது அவள் கேலி செய்வாள் என்றுதான் அவருக்குப் பட்டது. முன் ஒருசமயம் நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தார் கேசவன். அன்று சாராம்மாவிடம் பல விஷயங்களைக் குறித்துப் பேசி, கேலி செய்து கொண்டிருந்தார். கடைசியில் பேச்சு, பெண்களில் வந்து முடிந்தது. “தெய்வத்தின் உன்னத சிருஷ்டிதான் பெண்கள்” என்றாள் சாராம்மா. பெரிய ஒரு கவிஞர் பாடியிருந்ததை அவள் மேற்கோளாக வேறு காட்டினாள். அதைக் கேட்டதும் கேசவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “பெண்களின் தலைக்குள் என்ன இருக்கிறது? முழு நிலா வெளிச்சம். அப்போது ஏதோ முற்றும் என்பார்களே” என்று இழுத்தார் அவர். உதாரணமாக, ஏழு முறை திருமணம் செய்து கொண்ட ஒருவனைப் பற்றிய கதையையும் கூறினார். ஏழாமவள் ஏதோ எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ஏணி தடுக்கிக் கீழே விழுந்து விடுகிறாள். தலை குப்புற விழுந்த அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டுத் திரும்பி வருகிறான் கணவன். குசலம் விசாரித்தான் இன்னும் திருமணமாகாத ஒரு நண்பன். அவனிடம் அந்த ஆசாமி சொன்னானாம்:
“நல்ல வேளை, அடி அவ்வளவு மோசமில்லை.”
“தலை இரண்டாகப் பிளந்து விட்டது என்று சொன்னாங்களே!”
“ஆமாம்...”
“அப்போ மூளை வெளியே தெரிந்திருக்குமே!”
அவ்வளவுதான்; விழுந்து விழுந்து சிரித்துவிட்டான் கணவன். “மூளையா? பொம்பளைகளிடம் எங்கேயாவது மூளை இருக்குமா?” என்றானாம்.
“இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், பெண்களின் தலைக்குள் மருந்துக்குக்கூட மூளை இல்லை. இருப்பது முழு நிலவின் பிரதிபலிப்பு என்பதுதான். வெறும் பைத்தியக்கார, குழம்பிய மூளை!” என்று முடித்தார் கேசவன்.
அப்போது சாராம்மா பதில் ஒன்றும் பேசவில்லை. கேசவனுடன் சேர்ந்து அவளும் கொஞ்சம் சிரித்தாள். அதற்குப் பிறகுகூட எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கேசவனிடம் சாராம்மா அது பற்றிப் பேசியதில்லை. “இருந்தாலும், காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில் சாராம்மா நிலா வெளிச்சம் பற்றிய சம்பவத்தை நினைவுபடுத்திக் கொண்டால்? நம்மையே கேலி செய்து விட்டால்...” என்றுதான் தோன்றியது கேசவனுக்கு. இருந்தாலும் பெண்ணாயிற்றே. இன்னுமா அதையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கப் போகிறாள்? எப்போதோ மறந்திருப்பாள். எதையெதையோ மனதில் அசை போட்டபடி நடந்து போன கேசவன், ஹோட்டல் படிகளில் கால் வைத்தார். காபி குடிக்க வேண்டும் என்று அப்படி ஆவல் ஒன்றும் இல்லை. ஆனாலும் ஒரு கோப்பை பருகியபின் சிந்தனையில் ஆழ்ந்தார். கடிதத்தைப் பெற்றதும் சாராம்மா என்ன செய்வாள்? சொல்லப்போனால் காதல் என்ற ஒன்று இதுவரை சாராம்மாவை அண்டியதாகவே தெரியவில்லை! கிட்டத்தட்ட ஒரு லட்சம் தடவை கேசவன் அதற்காக முயற்சி செய்து பார்த்துவிட்டார். ஆனால் காதல் வாடை வீச ஆரம்பித்துவிட்டாலே கைக்குட்டை வைத்து மூக்கைப் பொத்திக் கொண்டு விடுகிறாள் சாராம்மா! அதன்மேல் அவளுக்கு ஏனோ அத்தனை வெறுப்பு.
அதே சிந்தனையோடு தாம் குடியிருக்கும் வீட்டின் மேல் பகுதிக்குப் படி வழியே ஏறலானார். ஆனால் மேலே நோக்கியதும் ஒரு நிமிஷம் என்ன காரணத்தாலோ ஸ்தம்பித்து நின்றுவிட்டார்!
பெரிய கம்பு ஒன்றைக் கேசவனின் அறை ஜன்னல் வழியே நுழைத்து, உள்ளேயிருந்து எதையோ எடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள் சாராம்மா!
அவ்வளவுதான்; மேலே போகாமல் கீழே வந்துவிட்டார். அப்படி அங்கே எதை எடுக்க முயன்று கொண்டிருந்தாள் சாராம்மா? மணிபர்ஸ் என்றால் அது கேசவனின் பாக்கெட்டில் அல்லவா இருக்கிறது? ஒருவேளை வேஷ்டி, சட்டை எதையாவது எடுக்க எத்தனித்துக் கொண்டிருக்கிறாளோ? இல்லாவிட்டால் ஏதாவது புத்தகத்தைத் தேடியிருப்பாளோ...? அப்படி வைத்துக் கொண்டாலும் அவள் வாசிக்காத புத்தகம் அங்கே என்ன இருக்கிறது? “இது தேவைதானா, சாராம்மா? உன்னை நான் என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன். உனக்குத் தெரியுமா? என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் உலகத்தையே உன் கையில் கொண்டுவந்து தருவேன். உனக்குத் தெரியுமா?” இப்படி ஏதாவது ஆளை இழுக்கிற மாதிரி வசனம் பேச வேண்டும். அப்படியே, “இந்தா சாராம்மா! நான் உனக்கு என் இதயத்தைத் திறந்து எழுதிய காதல் கடிதம்” என்று கூறி அந்தக் கடிதத்தை அவளுடைய கையில் திணிக்க வேண்டும். அதை வாசித்து முடித்த அவள், காதலை நினைத்து உருகிப் போய் உட்கார்ந்திருப்பாள். அவள் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்வார் கேசவன். அப்போது இரண்டு உள்ளங்களும் சங்கமமாகும்- இப்படி மனத்தில் ஒரு குட்டிக் கதையையே அசை போட்டுக் கொண்டிருந்தார் கேசவன்.
“என்ன, இங்கே வந்து நின்னுக்கிட்டு இருக்கீங்க?” மேலே இருந்து கேட்டாள் சாராம்மா.
“யாரு, சாராம்மாவா?” தெரியாதவர் மாதிரி கேட்டுக் கொண்டே மாடியேறிப் போனார் கேசவன். இதயத்தின் அடித்தளத்தில் இனம் புரியாத ஒரு துடிப்பு அவருக்கு.
அங்கே வியர்வை வழிய நின்றிருந்தாள் சாராம்மா.
“நானும் ஒரு மணி நேரமா முயற்சி பண்ணிப் பார்க்கிறேன். கம்பியில மாட்டிக்குவேனான்னுது. நாளைக்கு எப்படியும் ஒரு கள்ளச் சாவி தயார் பண்ணிட்டுத்தான் வேறு வேலை பார்க்கணும்.”
“நான் இல்லாத சமயத்தில் என் அறையைத் திறக்கிறதுக்கா?”
சாலையில் போய்க் கொண்டிருந்த ஜனக்கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
கேசவன், “ஆமாம்... அந்தக் கம்பியில அப்படி என்ன மாட்டிக்க மாட்டேங்குது?” என்றார்.
“ஓ! அதைச் சொல்ல மறந்துட்டேனே! கீழே நிக்கிறப்போ என்ன நினைச்சீங்க?”