காதல் கடிதம் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6822
சாராம்மாவோ ஜன்னலோரம் சாய்ந்து நின்று, கேசவன் நாயரின் தலையிலுள்ள சுருண்ட கேசத்தையும், புன்னகை தவழ்ந்து கொண்டிருந்த முகத்தையுமே நோக்கிக் கொண்டிருந்தாள்.
“அந்த வேலை விஷயமா ஒண்ணும் சொல்லலையே!” அவரிடம் வினவினாள் சாராம்மா.
“ஆனா, அது உனக்குப் பிடிக்குமான்னுதான் பார்க்கறேன்.”
“சம்பளம் குறைச்சலா இருந்தாலும் பரவாயில்லை. இங்கே எல்லாருக்கும் பாரமா இருப்பதுபோல் படுகிறது. இந்த வாழ்க்கையே எனக்கு வெறுத்துப் போயிடுச்சு. சொல்லப்போனா சில நேரங்கள்லே எனக்கு எப்படியெல்லாம் தோணுது தெரியுமா?”
“எப்படியெல்லாம் தோணுது? சொல்லு, கேக்கறேன்.”
எப்பவும் தமாஷ்தானா? நான் சீரியஸாகவே சொல்றேன். எந்த வேலையா இருந்தாலும் நான் ஒப்புக்கத் தயார்!”
“உனக்கு சமையல் பண்ணத் தெரியுமா?”
“எதுக்கு கேக்கறீங்க?”
“சும்மா கேட்டேன்.”
சாராம்மா சொன்னாள்:
“தெரியும். சோறு சமைக்கத் தெரியும்; கூட்டு வைக்கத் தெரியும்; பலகாரங்கள் செய்யத் தெரியும்; டீ போடத் தெரியும்; காபி போடத் தெரியும்; கொக்கோ-ஓவல்டின் எல்லாம் தயாரிக்கவும் தெரியும்...”
“சுருக்கமாகச் சொல்லப்போனால் கால்படி அரிசி கொண்டு வந்து கையில் கொடுத்தா, அதை வடித்து...”
“என்ன, என்னைச் சமையல்காரியா ஆக்கிடலாம்னு நெனைச்சுட்டீங்களா?”
“சேச்சே! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே. பொதுவா படிச்ச பெண்களுக்கு சமையல்னாலே என்னன்னு தெரியாது. கரி, புகைன்னாலே அவங்களுக்கு ஒத்துக்காது. வகை வகையா டிரெஸ் பண்றதுக்கும், பவுடர் பூசிக்கிறதுக்கும், உதட்டைச் சிவப்பாக்கிக்கறதுக்குமே நேரம் சரியாயிருக்கும். அலங்காரமெல்லாம் முடிஞ்சு அப்படியே பையை ஸ்டைலாகத் தூக்கிட்டுப் போனா...?”
“பையா?”
“அதுதான் ஹேண்ட்பேக்.”
“ஓ!”
“அப்படித் தூக்கிக்கிட்டு ஒய்யாரமாப் போற ஒரு பெண்தானா நீயும்னு பார்க்கறதுக்காகக் கேட்டேன்.”
“என்கிட்டே அப்படிப்பட்ட “பேக்” எல்லாம் இல்லே.”
“சரி, சாராம்மா... அப்படி அந்தப் பையிலே அவங்க என்ன வெச்சிருப்பாங்க?”
“முகம் பார்க்க ஒரு சிறு கண்ணாடி, ஒரு சின்ன பவுடர் டப்பா, சின்னதா ஒரு சீப்பு...”
“அதில் காதல் கடிதம் ஏதாவது இருக்குமா?”
“என்ன சொன்னீங்க? காதல் கடிதமா?”
“ம்... வர்ற ஒவ்வொரு காதல் கடிதத்தையும் அதில் வாங்கி வெச்சிருந்தா சாயங்காலம் முழுசா அது நிறைஞ்சவுடனே குப்பையில் கொண்டு வந்து கொட்டுவாங்கன்னு நினைக்கிறேன்.”
“எனக்கு அதைப் பத்தியெல்லாம் ஒண்ணும் தெரியாது. சரி, எனக்கு என்ன மாதிரி வேலை பார்த்து வெச்சிருக்கீங்க?”
“நிச்சயம் உனக்குப் பிடிக்காது.”
“பிடிக்கும்.”
“உண்மையாகவா?”
“சத்தியம் பண்ணிச் சொல்லட்டா? பிடிக்கும் பிடிக்கும்!”
“அப்படின்னா...” கேசவன் சொல்லத் தயங்குவதுபோல் இருந்தது. “அதைப் எப்படிச் சொல்றது? உனக்குப் பிடிக்கலேன்னா...” என்று இழுத்தார்.
“அதுதான் சொல்லிட்டேனில்லே... எனக்குப் பிடிக்கும்னு!”
“ஒருவேளை பின்னாலே அதுக்காக வருத்தப்பட ஆரம்பச்சிட்டியானா?”
சாராம்மா உறுதியான குரலில் சொன்னாள்:
“நிச்சயமா இல்ல! வேலைக்காக நான் எந்தவிதமான கஷ்டத்தையும் தாங்கிக்கத் தயாராயிருக்கேன். ஒரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? அது நடந்தது, நீங்க இங்கே குடி வர்றதுக்கு முன்னாடி. மூணு தடவை என்னைப் பெண் பார்க்க வந்திருக்காங்க. ஒவ்வொரு தடவையும் இது முடிஞ்சிடாதான்னு ஆவலுடன் நான் உட்கார்ந்திருப்பேன். இதுவரை கண்டோ- கேட்டோ இராத மனுஷங்களோடு வாழப்போறதை நினைச்சு எனக்குக் கொஞ்சமும் தயக்கம் தோணலை. எப்படியாவது இந்த நரகத்துலேயிருந்து தப்ப மாட்டோமாங்கிற ஒரே சிந்தனைதான் எனக்கு. ஆனா துரதிருஷ்டவசம்னுதான் சொல்லணும். மூணு முயற்சியுமே தகர்ந்து போச்சு. வரதட்சிணை இல்லாம என்னைக் கொண்டு போக யாருக்குமே துணிச்சல் இல்ல! எல்லாம் என் தலையெழுத்துன்னாங்க அப்பாவும் சித்தியும். எல்லாத்துக்கும் நான் ஒருத்திதான் காரணமாம்! இந்த நாட்டிலே மழை பெய்யலேன்னா அதுக்கும் நான்தான் காரணமாம். இங்கேயிருந்து தப்பிச்சா போதும்னு எத்தனையோ இடங்களிலே வேலைக்கு முயற்சி செஞ்சு பார்த்துட்டேன். கிடைச்சாத்தானே!”
“ஏன் கிடைக்காம?”
“கிடைச்சிருக்கா?”
“சொல்றேன்... ஆமாம் வரதட்சிணை அது இது என்கிறாங்களே! அப்படின்னா என்ன!”
“பொண்ணைக் காப்பாத்த ஆணுக்குத் தர்ற சம்பளம்.”
“சரியாப் புரியலே.”
“இப்போ ஒரு ஆள் என்னைக் கட்டிட்டுப் போறார்னு வச்சுக்குங்க...”“
“சரி நான்னே வச்சிக்குவோம்.”
“அப்படிக் கட்டிட்டுப் போற நீங்க எனக்காகச் செலவு செய்ய வேண்டாமா? என் சாப்பாடு, துணிமணி, சோப்பு, பவுடர், சென்ட், பிரசவம், சாவு எல்லாத்துக்கும் செலவு செய்ய முன்கூட்டியே ஒரு மொத்தத் தொகையை உங்க கையில தந்திடறது; அப்படித் தந்தாதான் என்னையே கல்யாணம் கட்டிப்பீங்க!”
“உன்னைக் காதலிக்காதவன் வேணும்னா அப்படிச் செய்வான். உன்னை யாராவது...”
“யாராயிருந்தாலும் கொடுத்துத்தான் ஆகணும். அதுதான் எங்க ஜாதி மரியாதை...”
ஒருவிதத்தில் பார்த்தால் வரதட்சிணை என்ற ஒன்று இருப்பது கேசவன் நாயருக்கு மகிழ்ச்சியையே தந்தது.
“அப்படி ஒண்ணுமட்டும் இன்னிக்கு இல்லாம இருந்தா...” சாராம்மா சொன்னாள்.
“வரதட்சிணையை நான் பலமா ஆதரிக்கிறேன்.” கேசவன் சொன்னார்.
“வரதட்சிணைச் சம்பிரதாயத்தை நான் விரும்புறேன்.”
“எதுக்கு?”
“சொல்றேன். இந்த மாதிரி பழக்கம் நம்பூதிரிகளிடமும் இருக்கு.”
“ஏன்? முஸ்லிம் சமுதாயத்திலே கூடத்தான் இருக்கு.” சாராம்மா.
“வரதட்சிணை தர முடியாதவங்க வரதட்சிணை இல்லாமலே கல்யாணம் செஞ்சுக்கத் தயாராயிருக்கிற பிற சமுதாயத்தவரைத் திருமணம் செய்துக்க முன்வரணும்.”
“புதுமையான ஐடியாதான். அதிருக்கட்டும். இடையில் நான் ஒண்ணு கேட்கட்டா?”
“தாராளமா.”
“எனக்கு என்ன வேலை பார்த்து வெச்சிருக்கீங்கன்னு சொல்லவே இல்லையே?”
“ஆனா, அது உனக்குப் பிடிக்காதேன்னு பார்க்கறேன்.”
“அதுதான் சொல்லிட்டேனே, எனக்குக் கட்டாயம் பிடிக்கும்னு.”
“அப்படின்னா அது...” கேசவன் சென்ட் பாட்டிலைத் திறப்பது போன்று லாவகமாக இதயத்தைத் திறந்து சொன்னார்: “சாராம்மா, நான் உன்னை விரும்புகிற மாதிரியே நீயும் என்னை முழு மனசோட விரும்பணும். அதுதான் உனக்காக நான் தேடி வெச்சிருக்கிற வேலை.”
சாராம்மா ஒரு நிமிஷம் ஸ்தம்பித்துதான் போய்விட்டாள். அவளுடைய முகத்தில் குப்பென்று ரத்தம் பரவ ஆரம்பித்து விட்டது. ஒன்றுமே பேசாமல் மவுனமாய் நின்று கொண்டிருந்தாள்.
கேசவன் தொடர்ந்தார்: “நான் ரொம்ப நாளாகவே உன்னை நேசிக்கிறேன். அதாவது என்னைவிட... என் இதயத்தைவிட...”
அவ்வளவுதான்... அவள் சிரித்து விட்டாள்! இப்போது முகத்தில் இனம் புரியாத ஒரு ஒளி வந்து குடிகொண்டு விட்டதுபோல் இருந்தது!
கேசவன் கேட்டார்: “சாராம்மா, நான் உனக்குத் தேடி வெச்சிருக்கிற வேலை எப்படி?”
மெல்லிய குரலில் சாராம்மா சொன்னாள்: “வேலை பரவாயில்லே; சம்பளம் எவ்வளவு தர்றதா உத்தேசம்?”
“சம்பளம்?” என்று கேட்ட கேசவன் தமக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டார்: “வீரப் பரம்பரையின் ரத்தமாக்கும் என் உடலில் ஓடுவது! யுத்தம்னா யுத்தந்தான்! நானா பயப்படுவேன்? வெற்றி அல்லது வீர மரணம்...” “சரி, என்ன சம்பளம் உனக்கு வேணும்?” சாராம்மாவிடம் வினவினார் கேசவன்.
“நீங்களே சொல்லுங்க.”
சிறிது நேர யோசனைக்குப்பின் கேசவன் சொன்னார்: “இருபது ரூபாய்.”
“ரொம்பவும் குறைவாயிருக்கே.”
“ஆனா, அதுக்குமேலே ஒரு பைசா என்னாலே தர முடியாது. தினமும் ஒன்பது மணி நேரம் வீதம் முப்பது நாட்கள் கஷ்டப்பட்டு வேலை செய்து கிடைக்கிற பணத்திலே உங்கப்பனுக்கு வீட்டு வாடகை, ஹோட்டல்காரனுக்குப் பணம், சலவை செய்பவனுக்கு கூலி எல்லாம் கொடுத்ததுபோக மீதி இருக்கிறது அந்தத் தொகைதான்! அதைச் சேமிக்கவே கொஞ்சம் நஞ்சம் பட்டினி கிடந்தாத்தான் முடியும். அப்படி இந்த வேலையிலே உனக்கு என்ன கஷ்டம் இருக்கு? சொல்லு சாராம்மா?”
“என்ன இருந்தாலும் கஷ்டமான வேலை இல்லையா? உங்களுக்காவது இருபத்துநாலு மணி நேரத்தில் வெறும் ஒன்பது மணிநேரந்தான் வேலை; பாக்கி பதினஞ்சு மணி நேரமும் ரெஸ்ட்தானே. ஆனா எனக்கு அப்படியா? ஒரு நிமிஷமாவது என்னால ஓய்வுன்னு இருக்க முடியுமா? ராத்திரியும் பகலும் சாப்பிடறப்பவும் உறக்கத்திலேயுங்கூட உங்களை நான் நெனச்சிட்டிருக்கணுமா இல்லையா? நீங்க அழுகிறப்போ நானும் அழணும்; நீங்க சிரிக்கிறப்போ நானும் சிரிக்கணும். நீங்க சாப்பிடறப்போ நான் சும்மா உட்கார்ந்திருக்கணும். நீங்க உறங்கறப்போ முழிச்சிருந்து உங்களைக் கவனிக்கணும்.” ஒரு நீண்ட பட்டியலையே ஒப்பித்த சாராம்மா ஒரு தினுசாகக் கேசவனைப் பார்த்தாள். பிறகு, “அது இருக்கட்டும். இந்த வேலை எனக்குத் தற்காலிகமானதா? நிரந்தரமா?” என்றாள்.
“சத்தியமா நிரந்தரமானது.”
சாராம்மாவுக்கு இப்போதுதான் திருப்தி உண்டானதுபோல் இருந்தது.
“நீங்க போய்விட்ட பிறகும் இந்த வேலை இருக்குமில்லே?”
“அதாவது?”
“அதாவது, நீங்க காலமாயிட்டாலும் எனக்கு இந்த வேலை உண்டான்னுதான் கேக்கறேன்.”
“அதில் என்ன சந்தேகம்?”
“அப்புறம் யார் சம்பளம் தர்றது?” சாராம்மாவுக்கு இப்படி ஒரு சந்தேகம்.
கேசவன் ஒன்றும் பேசவில்லை. என்ன பதில் சொல்ல முடியும்? அவரது மவுனம் சாராம்மாவுக்குச் சிரிப்பை வரவழைத்து விட்டது. கேலி செய்கிற தொனியில் அவள் சொன்னாள்: “பொம்பளைங்களுக்கு மூளையிலே நிலா வெளிச்சந்தான் இருக்குன்னு கேலி பண்ணுவீங்களே, இப்போ என்ன சொல்றீங்க? நீங்க செத்துப் போனப்புறம் எனக்கு யார் சம்பளம் தர்றது?”
தீவிரமான யோசனையில் ஆழ்ந்தார் கேசவன்.
“ரெண்டு பேருமே ஒரே நேரத்தில் செத்துப் போயிட்டா?” -கேசவன்.
“ஆசையப் பாரு! நீங்க சாகறப்பவே நானும் போயிடணுமா?”
“சாராம்மா என்னைப் பார்த்தா கேலியாவா இருக்கு?”
“அதெல்லாம் இல்லை. உள்ள விஷயத்தைச் சொன்னா கேலியாம் கேலி! என்ன இருந்தாலும் நான் பொம்பளை இல்லையா? தலையையே பொளந்தாலும் மூளை இருக்குமா அங்கே?”
“சாராம்மா மன்னிக்கணும். உன் அளவுக்கு அழகோ அறிவோ என்கிட்டே இல்லை. ஒத்துக்கறேன்.”
“இப்போ நீங்கதான் என்னைக் கேலி செய்கிற மாதிரி இருக்கு!”
“உன்னைப் போய் நான் கேலி செய்வேனா?”
“சும்மா பண்ணுங்க.”
அவ்வளவுதான். உளற ஆரம்பித்துவிட்டார் கேசவன் நாயர்!
“என் இதயத்து நாயகியை, என் தேவதையை, என் ஆருயிரை நான் கேலி செய்வேனா? என்...”
சாராம்மா இடைமறித்து, “கொஞ்சம் நிறுத்துங்க. உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்” என்றாள்.
“தாராளமாக ஆணையிடு!”
“எப்போதிலிருந்து நான் உங்க இதயத்து நாயகி?”
“என்னிக்கோயிருந்து!”
“இந்த விஷயத்தை ஏன் என்கிட்டே இவ்வளவு நாளா சொல்லல?”
“நான் சொல்லலியா- ஒவ்வொரு நாளும் உன்னை நினைப்பேன். காதல் கடிதம் எழுதுவேன்.”
“அதுக்கப்புறம்?”
“கிழிச்செறிஞ்சிடுவேன்.”
“சரி, உங்க இதயத்து நாயகின்னா நான் என்ன சொன்னாலும் நீங்க கேப்பீங்க இல்லையா?”
“என்ன சொன்னாலும் செய்யத் தயார். யாரையாவது கொல்லணுமா, கொல்றேன். கடலை நீந்திக் கடக்கணுமா, கடக்கறேன். உனக்காக நான் சாகக்கூடத் தயார்!” உணர்ச்சி வசப்பட்டு பேசினார் கேசவன்.
“இப்போதைக்குச் சாக வேண்டாம். எங்கே, தலைகீழா நில்லுங்க பார்ப்போம்.”
“உண்மையாகவே நிக்கணுமா?”
“ஆமாம்.”
“அதாவது சிரசாஸனம்... இல்லியா?”
“ம்...”
சட்டையைக் சுழற்றிய கேசவன் அதை நாற்காலியின்மேல் வைத்தார். வேஷ்டியை மடக்கிக் கட்டித் தலையைத் தரையில் ஊன்றிக் கால்கள் இரண்டையும் மேல் நோக்கித் தூக்கி நின்றார்.
அவரையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து நின்ற சாராம்மா மெல்ல முறுவலித்தாள்.
“பேஷ்.”
கேசவன் நின்ற கோலத்தில் கேட்டார்: “சாராம்மா! உனக்கும் என்னைப் பிடிச்சிருக்கு இல்லையா?”
அவள் பதில் ஒன்றும் கூறவில்லை.
கேசவன் மீண்டும் கேட்டார்.
“சாராம்மாவுக்கு வேலை பிடிச்சிருக்கா?”
ஓசையின்றிப் படியில் இறங்கிப் போன சாராம்மா, கீழே இருந்தபடி “நாளைக்குச் சொல்றேன்...” என்றாள்.
3
“சாராம்மா, நான் சொன்ன வேலை உனக்குப் பிடிச்சிருக்கா?” மறுநாள் மீண்டும் கேசவன் கேட்டார்.
“நாளைக்குச் சொல்றேனே!”- சாராம்மா.
அதற்கு மறுநாள் அவர் கேட்டபோதும் சாராம்மா அதே பதிலைத்தான் கூறினாள்.
இப்படியே சில நாட்கள் சென்றன.
அப்புறம் அவர் ஒன்றும் கேட்கவில்லை. மாறாக, உறுதியான குரலில், “நான் தற்கொலை செஞ்சுக்கப் போறேன்” என்றார் திடீரென்று!
“நல்ல தீர்மானந்தான் எடுத்திருக்கீங்க. அதுக்குப் பிறகாவது யாராவது உங்கள் வாழ்க்கையைப் பற்றி எழுதட்டுமே!”
கேசவன் பதில் கூறவில்லை.
சாராம்மா கேட்டாள்:
“அப்போ கட்டாயம் தற்கொலை பண்ணிக்கிறதுன்னு முடிவெடுத்துட்டீங்க?”
“ஆமாம்.”
“அந்த மங்கள காரியத்தை என்னிக்கு நடத்தறதா உத்தேசம்?”
கேசவன் அதற்குப் பதில் கூறாமல் இருக்கவே, அவளே வினவினாள்: “எந்த முறையில் தற்கொலை செய்துக்கலாம்னு யோசனை?”
“இன்னும் அதுபத்தி நான் முடிவெதுவும் எடுக்கல. எப்படிச் செய்யலாம்னு சிந்திச்சுக்கிட்டு இருக்கேன்.”
“ரெயில்வே தண்டவாளத்தில தலையை வெச்சுச் சாகலாம். இல்லாட்டி தூக்குப் போட்டுக்கிட்டுச் சாகலாம். இதிலே எது உங்களுக்குப் பிடிச்சிருக்கு?”
கேசவன் மவுனமாய் இருக்கவே சாராம்மாவே தொடர்ந்தாள்:
“இன்னொரு வழியும் இருக்கு. இது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. ஒரு பெரிய கல்லையும் கயித்தையும் எடுத்துகிட்டுப் படகிலே போகணும். நடுத்தண்ணிக்குப் போனவுடனே கயித்தின் ஒரு நுனியைக் கல்லோட பிணைச்சிட்டு மறுநுனியைக் கழுத்திலே இறுக்கமாக் கட்டிக்கணும். அப்படியே படிப்படியாக படகைத் தண்ணீலே மூழ்க வெக்கணும்.”
கேசவன் சொன்னார்:
“எனக்கு இப்போ புதுசா ஒருவழி தோணிச்சு. இங்கேயே தூக்குல மாட்டிக்கிட்டுத் தொங்கிடறது. கால்ல பேப்பர்ல இப்படி எழுதிக்கட்டித் தொங்க விடறது: உலகே! என் சாவுக்கும் சாராம்மாவுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. சாராம்மாவை நான் காதலிக்கிறேன் என்பதும், அவள் என்னைக் காதலிக்கவில்லை என்பதும் உண்மை. நான் எழுதித் தந்த காதல் கடிதம் ஒவ்வொன்றையும் அவள் கிழித்து குப்பையில் எறிந்துவிட்டாள் என்பதும் உண்மை. இருந்தாலும் என் சாவுக்கும் சாராம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இப்படிக்கு,
சாகும் கேசவன் நாயர்.”
“வேற ஏதாவது விசேஷங்கள்...?”
“ஒண்ணுமில்ல.”
சாராம்மா சொன்னாள்: