காதல் கடிதம் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6822
“மிட்டாய்.”
சாராம்மா வாசித்தாள். “ஆகாயம்.”
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கினார்கள்.
சாராம்மா மகனின் பெயரை அழைத்துப் பார்த்தாள்.
“மிட்டாய், ஆகாயம்!”
“தப்பாச் சொல்றே. ஆகாய மிட்டாய். இது எப்படி இருக்கு?” என்றார் கேசவன்.
சாராம்மாவுக்கும் அது பிடித்திருந்தது. அன்பு தவழ அவள், “ஆகாய மிட்டாயீ! நீ எங்கேடா போனே, ஆகாய மிட்டாயீ” என்று சொல்லிப் பார்த்தாள்.
“உண்மையிலேயே பேர் கம்பீரமாய்த்தான் இருக்கு!” கேசவனும் சொல்லிப் பார்த்தார்.
“மிஸ்டர் ஆகாய மிட்டாய்! ஸ்ரீமான் ஆகாய மிட்டாய்! தோழர் ஆகாய மிட்டாய்!”
சாராம்மாவுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம். “என் மகன் கம்யூனிஸ்ட்டா?” என்றாள்.
கேசவன் சிரித்தபடி சொன்னார்:
“இருந்தா இருந்துட்டுப் போகட்டுமே! அவனுக்கு இஷ்டம் இருந்தா எதிலே இருந்தா என்ன?”
“எப்படியோ என் மகன் நல்லபடியா இருந்தா போதும்” என்று சாராம்மா, என் மகன் என்பதை அழுத்திச் சொல்லத் தொடங்கியதும் கேசவனுக்குக் கோபம் வந்துவிட்டது.
“சாராம்மா, நானும் பார்த்துக்கிட்டே வர்றேன். என் மகன் என் மகன்னே சொல்றியே? இப்படியா சுயநலம் பிடிச்சு அலையறது? யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க? ஆகாய மிட்டாய்க்கும் எனக்கும் சம்பந்தம் இல்லேன்னு நினைக்க மாட்டாங்களா? இனிமேலாவது “நம்ம மகன்”னு சொல்லு, தெரியுதா?”
சாராம்மாவுக்கு இதைக் கேட்டுக் கோபம் தலைக்கேறியது. “நான் ஏதோ பேச்சுக்குச் சொன்னா, உங்களுக்குப் பொண்டாட்டியா ஆயிட்டதாகவே நினைச்சுட்டீங்களா மிஸ்டர் கேசவன் நாயர்?” என்றாள்.
அவ்வளவுதான். கேசவனின் முகம் வாடிவிட்டது. தாழ்ந்த குரலில், “அப்போ சாராம்மா சொன்னது...” என்று இழுத்தார்.
“என்ன சொன்னேன்?”
“என் பொண்டாட்டி ஆகிறதா?”
“ஆகி...?”
“எப்போ பாரு இந்த சாராம்மாவுக்கு தமாஷ்தான்!”
“தமாஷாம் தமாஷ்! வாழ்க்கையில் தமாஷ்னா என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?”
“எனக்குத் தெரிய வேண்டாம்!”
“நான் சொன்னா நீங்க கேக்கவா போறீங்க? நான் சாதாரண ஏடீ (ஏண்டி) தான்!”
“அப்படின்னா...” என்று அசடுவழியக் கேட்டார் கேசவன்.
“தமாஷ்! வாழ்க்கையின்...” என்று அவள் படிகளில் இறங்கியபடி சொன்னாள்: “நறுமணம்”.
5
“சாராம்மா, பொழுது விடியறதுக்கு முன்னாடி இங்கேயிருந்து புறப்படணும்.” இருள் படரும் நேரத்தில் சொன்னார் கேசவன். பிறகு “கடைசியா ஏதாவது சொல்ல நினைக்கிறியா?” என்று கேட்டார்.
“வாழ்க்கை என்பது ரொம்பவும் இளமையும் மென்மையும் நிறைந்ததாய் இருக்கிற இந்த சமயத்தில் சில கேள்விகள் கேக்கணும்.”
கேசவன் மவுனமாக நிற்கவே சாராம்மாவே தொடர்ந்தாள்:
“கேள்வி ஒண்ணு. அப்பாவுக்குத் தரவேண்டிய வாடகை எல்லாம் கொடுத்தாச்சா?”
“கொடுத்தாச்சு.”
“ரெண்டாவது கேள்வி. ஹோட்டல்காரனுக்குத் தர வேண்டிய பாக்கி?”
“தந்தாச்சு.”
“இப்போ ஒரு துணைக் கேள்வி. பணம் எப்படி உங்களுக்குக் கிடைச்சுது?”
“என் கைக் கடிகாரத்தையும் தங்க மோதிரத்தையும் விற்றேன்.”
“நல்லது. பெருமதிப்புக்குரிய கேசவன் நாயர் இந்த ஊரைவிட்டுச் சென்றபின், சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்” என்று கூறிய சாராம்மா சிரித்தவாறு படி இறங்கிப் போனாள்.
இதயத்தில் துக்கம் மேலிட கேசவன், “சாராம்மா!” என்று அழைத்தார். ஒரு பதிலும் இல்லை.
“சாராம்மா, பொழுது விடியறதுக்கு முன்னாடி இங்கேயிருந்து புறப்படணும்.” இருள் படரும் நேரத்தில் சொன்னார் கேசவன். பிறகு “கடைசியா ஏதாவது சொல்ல நினைக்கிறியா?” என்று கேட்டார்.
“வாழ்க்கை என்பது ரொம்பவும் இளமையும் மென்மையும் நிறைந்ததாய் இருக்கிற இந்த சமயத்தில் சில கேள்விகள் கேக்கணும்.”
கேசவன் மவுனமாக நிற்கவே சாராம்மாவே தொடர்ந்தாள்:
“கேள்வி ஒண்ணு. அப்பாவுக்குத் தரவேண்டிய வாடகை எல்லாம் கொடுத்தாச்சா?”
“கொடுத்தாச்சு.”
6
கொஞ்சமும் அசையாமல் சிலை போன்று அமர்ந்து விட்டார் கேசவன். இரவு வந்தது. நிலவு மெல்ல மெல்லத் தன் ஒளியைப் பரப்பலாயிற்று. அப்போதும் கேசவன் அசையவில்லை. திடீரென்று என்ன நினைத்தாரோ எழுந்து விளக்கைப் பொருத்தினார். டைம் பீஸில் மணி பதினொன்று ஆகியிருந்தது.
நாலு மணிக்கு அலாரம் வைத்துவிட்டு கதவைச் சாத்திக் கொண்டு கட்டிலில் போய்த் துவண்டு விழுந்தார், அவர். கடைசி இரவு... பசியில்லை; தாகமில்லை; கேசவன் கண்களைத் திறந்த நிலையில் கிடந்தார். தெளிவாக எதையும் அப்போது அவரால் சிந்திக்க முடியவில்லை. கண்கள் இரண்டிலும் நீர் அரும்பிக் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது. உண்மையிலேயே பெண்கள் கடின இதயம் படைத்தவர்கள்தாம். பெண்! பெண்ணைக் கடவுள் எதற்காகப் படைத்தான்? நிச்சயம் நல்ல உத்தேசத்தோடு இருக்காது. மனம் விட்டு அழவேண்டும்போல் இருந்தது கேசவனுக்கு.
அப்போது வெளியேயிருந்து மென்மையான குரல் ஒன்று “உறங்கிட்டீங்களா?” என்றது.
அவள்! கேசவன் அசையவேயில்லை.
மீண்டும் அதே குரல். “திறங்க, நான்தான்.” கேசவன் எழுந்து கதவைத் திறந்தார்.
சாராம்மா அறையினுள் நுழைந்தாள். கேசவன் அறை வாயிலின் அருகேயே நின்று கொண்டார்.
சாராம்மா மெதுவான குரலில், “இங்கே பக்கத்திலே வாங்க, ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள்.
கேசவன் திரும்பி வந்து கட்டிலின்மேல் அசையாமல் அமர்ந்தார். சாராம்மா கதவருகே சென்று வெளியே நோக்கியபடி சிறிது நேரம் நின்றாள். விசேஷமான சத்தம் சந்தடி எதுவுமில்லை. கதவை அடைத்துவிட்டு நாற்காலி ஒன்றை எடுத்துக் கட்டிலோடு ஒட்டியபடி போட்டு அதில் அமர்ந்தாள். கூந்தல் அலங்கோலமாக அவிழ்ந்து லேசாகப் பறந்து கொண்டிருந்தது. முகத்தைக் கைகளால் தாங்கி அமர்ந்திருந்த அந்தக் கோலத்தில்...
கேசவனுக்குப் புல்லரித்தது. இருந்தாலும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு தலையணைமேல் சாய்ந்து கொண்டார். அப்போதும் கண்களில் நீர் வழிந்து கொண்டுதான் இருந்தது.
“ஏன் அழறீங்க?” அவள்.
அவர் ஒன்றும் பதில் கூறவில்லை. அவள் எழுந்து கட்டிலில் அமர்ந்து மெல்லக் குனிந்து அவருடைய தலையை மெல்லப் பிடித்து விடலானாள். அவருடைய நெற்றியோடு கன்னத்தைப் பதித்து, “என் மேல் கோபமா?” என மெல்ல வினவினாள்.
துக்கமெல்லாம் மனதை விட்டு அகன்று ஓடிவிட்டதுபோல் இருந்தது அவருக்கு. அவளுடைய கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார். இருந்தாலும் கண்ணீர் வழிவது நிற்கவில்லை. முகத்தில் ஒரு மூலையில் பிரகாசத்தின் ரேகைகளும் தெரியாமல் இல்லை.
அவள் சொன்னாள்:
“மழை பெய்யறப்போ சூரியன் உதிக்கிற மாதிரி...”
“ம்... உவமையைப் பார் உவமையை! காலையிலே நாலரை மணி வண்டிக்கு என்கூட நீயும் வரணும்.”
“எங்கே?”
“நான் போற இடத்துக்கு...”
“எப்போதும் உங்களுக்கு விளையாட்டுத்தான்!”
“விளையாட்டு- அதுதான் தமாஷ், வாழ்க்கையினுடையது எதுன்னு தெரியுமா?” என்றார். அவள் தன் ஜாக்கெட்டினுள் விரலை நுழைத்து தடிமனான ஒரு கவரை எடுத்துக் கேசவனிடம் தந்தாள்.
“வண்டி இங்கேயிருந்து புறப்பட்ட பிறகுதான் இதைத் திறந்து பார்க்கணும். தெரிஞ்சுதா?” என்றாள்.