காதல் கடிதம் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6822
“சத்தியமாக.”
சாராம்மா, “இப்போது சாகணும்னு அவசியம் ஒண்ணுமில்லே. நான் சொன்னா வேலைக்குப் போகாம இருப்பீங்களா?” என்று கேட்டாள்.
வேலைக்குப் போகாமல் இருப்பதா? வேலைக்குப் போகாவிட்டால் எவ்வளவு கஷ்டம். வாடகை கொடுக்க முடியாது; உண்ண முடியாது; உடுக்க முடியாது; பிச்சை எடுத்துத் தெருவில் அலைய வேண்டிவரும். நாடியில் கை வைத்து நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் கேசவன்.
சாராம்மா எழுந்து படியின் அருகே போனாள். கேசவன், “சாராம்மா, உன்னிடம் ஒண்ணு சொல்லணும்....” என்றார்.
அவள் திரும்பி வந்தாள். “காதலைப்பற்றி ஏதாவது பேசறதுன்னா அதைக் கேட்டுக் கேட்டு எனக்கு காது புளிச்சுப் போயிடுச்சு!” என்றாள்.
கேசவன் வாய் திறக்காதிருக்கவே, அவளே தொடர்ந்தாள்: “சொல்லுங்க, நான் சம்பளம் வாங்கறவளாச்சே. கேட்காம இருக்க முடியுமா?”
“சாராம்மா உனக்கு எதுவுமே தமாஷ்தான்!”
“இதைத்தான் சொல்லணும்னு நினைச்சீங்களா?”
“இல்லே.”
“பிறகு?”
“நீயும் என்கூட வந்திடு. அங்கே நான் மட்டும் தனியா இருக்க முடியாது!”
சாராம்மாவுக்கு சிரிப்பு வந்தது.
“ஏன்? பயமாயிருக்கா?”
“இல்லே, நான் சாராம்மாவை உயிருக்கு உயிராக...”
“இதுவரை இதை லட்சம் தடவை சொல்லிட்டீங்க. இங்கே பாருங்க. காதல்னா எது?”
அது ஒன்றும் கஷ்டமான ஒன்றில்லை. காதல் எதுவென்று கேசவனுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதைச் சொல்லத்தான் கொஞ்சம் வெட்கமாயிருந்தது.
“காதல்னு சொல்றது ஒருவிதத்திலே நிலா வெளிச்சம் மாதிரி...” என்றார்.
“நிலா வெளிச்சம்! அதுதானே பெண்களுடைய தலைக்குள்ளே இருக்குன்னு சொல்வீங்க?” குறும்புச் சிரிப்புடன் சொன்னாள் சாராம்மா.
“ஆமாம்” என்றார் கேசவன். “சாராம்மா, நீ வர்றே இல்ல?” என்று கேட்டார்.
“வந்து?”
“என் சம்சாரமா கூடவே இருக்கணும்.”
“நாம வேற வேற மதத்தைச் சேர்ந்தவங்களாச்சே?”
“அதனால் என்ன? ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கிட்டாப் போச்சு!”
“வரதட்சிணை ஒண்ணும் வேண்டாமா?”
“சாராம்மாதான் என் வரதட்சிணை.”
“சரி. போதும் நிறுத்துங்க. வேற ஒண்ணும் உங்ககிட்டே கேக்கணும்.”
“என்ன?”
“நாம புருஷன்-மனைவியா இருக்கிறதுன்னா அதிலே எத்தனையோ கஷ்டங்கள் இருக்கு. ஒருத்தர் கோவிலுக்குப் போனா இன்னொருத்தர் சர்ச்சுக்குப் போகணும். நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஏதாவது செய்ய முடியுமா? எதிலேயும் கோவிலும் சர்ச்சும் தலைகாட்டுமே!”
கேசவனுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் உண்டாகத் தொடங்கின.
“இது என்ன பெரிய விஷயமா? கோவில், சர்ச் ரெண்டுமே நமக்கு வேண்டாம்னு ஒதுக்கிட்டாப் போச்சு. சாராம்மா, நீயே யோசிச்சுப் பார். இவ்வளவு நாளும் நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கே? சித்தியும் அப்பனும் உன்னை எந்த அளவுக்கு துன்பப்படுத்தியிருக்காங்க. அப்போதெல்லாம் சர்ச்சா வந்து உன்னைக் காப்பாத்திச்சு? இல்லாட்டி தேவன்தான் வந்து காப்பாத்தினாரா? கோவில், எனக்கும் ஒண்ணும் பெரிசா பண்ணிடலே.”
“நீங்க சொல்றது சரிதான். இன்னும் சில விஷயம் கேக்கணும்.”
“சொல்லு சாராம்மா. உனக்கு எந்தச் சந்தேகம் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய நான் இருக்கேன்.”
அவளுக்கு உண்மையிலேயே வெட்கம் வந்துவிட்டது.
“வேறொரு விஷயம்...”
“கேளு... கேளு.”
“நமக்குக் குழந்தை பிறக்குதுன்னு வெச்சுக்குங்க. அது எந்த மதத்தையும் ஜாதியையும் சேர்ந்தது? இந்துவா அதை வளர்க்க எனக்கு விருப்பமில்லாமல் போகலாம். கிறிஸ்துவனா வளர்க்க என் புருஷனுக்கு விருப்பம் இல்லாமல் போகலாம். அப்போ குழந்தையின் நிலை என்ன?”
கேசவன் உண்மையிலேயே விக்கித்துப் போனார். அது பற்றி அவள் கேட்பது ஒரு விதத்தில் நியாயமாகவே பட்டது.
அவர் சிந்தித்தார். தீவிரமாக மண்டையைக் குடைந்து கொண்டு யோசித்தார். ஒரே குழப்பமாக இருந்தது. நரம்புகள் புடைத்து முறுக்கேறின. நெற்றியில் வியர்வை துளிர்த்து வழிந்தது. ஒரு பதிலும் தோன்றியதாய்த் தெரியவில்லை. அப்போதும் அவர் சிந்திப்பதை விடவில்லை. ஒரே இருட்டாயிருந்தது. திடீரென்று மின்னல் வெளிச்சத்தின் ஒரு கீற்று கண்ணில் பட்டதுபோல் இருந்தது. அவர் சொன்னார்:
“எனக்குத் தோணுது...”
“என்ன?”- அவள் கேட்டாள்.
“சொல்றேன். நம்ம குழந்தைகளை எந்த மதத்தைச் சேர்ந்தவங்களாகவும் இல்லாம நாம வளர்ப்போம்.”
“அப்புறம்?”
“பொதுவாக எல்லா மதங்களைப் பத்தியுமே பாகுபாடு பார்க்காம சொல்லித் தர்றது. வயசு வந்தபிறகு அவங்களாகவே இஷ்டமுள்ள ஏதவாது ஒரு மதத்தைப் பின்பற்றட்டும்” என்றார் கேசவன்.
சாராம்மா கேசவனின் முகத்தைப் பார்க்காமல் குரலில் மகிழ்ச்சி வெளிப்படச் சொன்னாள்:
“சரியாகச் சொன்னீங்க... சரி; பேர் விஷயத்துக்கு வருவோம். பொறக்கிற முதல் குழந்தை பையன்னு வெச்சுக்குங்க. அவனுக்கு என்ன பேர் வைக்கிறது?”
தர்மசங்கடமான நிலை கேசவனுக்கு. “ஆமாம்... அவனுக்கு என்னன்னு பேர் வைக்கிறது? இந்துப் பேர் வைக்க முடியாது. கிறிஸ்துவப் பேரும் வைக்க முடியாது. ஒண்ணு செய்தா என்ன? மற்ற சமுதாயத்திலே பிரபலமாயிருக்கிற ஏதாவதொரு பேரை வெச்சா என்ன?”
“அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவன்தான் என் மகன்னு மத்தவங்க நினைக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா?”
“நீ சொல்றதும் சரிதான். முஸ்லிம் பேர் வெச்சா அவனை முஸ்லிம்னு நினைக்க ஆரம்பிச்சிடுவாங்க. பார்ஸி பேர் வெச்சாலும் அதுதான் நடக்கும். சீனக்காரன் பேரோ, ரஷ்யக்காரன் பேரோ வெச்சா...? என்னடா இது ஒரே குழப்பமா இருக்கு!”
“சீனப் பேர் எப்படி இருக்கும்?”
கேசவன், “ஸிங்லி போ” என்றார்.
தனக்குப் பிறக்கப் போகும் ஆண் குழந்தைக்கு வைக்கும் இந்தப் பெயரைச் சொல்லி அன்புடன் அழைத்துப் பார்த்தாள் சாராம்மா:
“ஏன்டா ஸிங்லிபோ... ஏன்டா மகனே; நீ எங்கேடா போனே, ஸிங்லி போ? ஊஹும்... இது எனக்குப் பிடிக்கலே.”
“வேணும்னா ரஷ்யன் பேரு வெச்சுப் பார்ப்போமா நாம? ஸ்க்கின்னு சேர்த்தா போதும்.”
“ஊஹும்... அதுவும் உதவாது.”
“இப்போ சொல்றேன் கேள். ஸ்டைலான பேர்கள்.” கேசவன் மழையெனப் பொழிந்தார். “இந்தியா, காதல், கடிதம், சிறுகதை, ஸஹாரா, ஆகாயம், நிலா வெளிச்சம், மீன், சிம்பாலிஸம், மிட்டாய், நாடகம், சமுத்திரம், செம்மீன் கண்ணன், வெள்ளிக்கிழமை, புதுக்கவிதை, மாணிக்கக் கல், நட்சத்திரம்...”
“நிறுத்துங்க. நான் கூப்பிட்டுப் பாக்கறேன். ஏன்டா மகனே, செம்மீன் கண்ணா! சேச்சே! உதவாது இது. வேண்டாம்!”
அவள் மீண்டும் அழைத்துப் பார்த்தாள்:
“ஏன்டா மகனே, புதுக்கவிதை! நிலா வெளிச்சம்!”
அப்போது கேசவன், “ஒவ்வொரு பேரையும் பேப்பரில் எழுதிக் குலுக்கிப் போடுவோம். மொத்தம் ரெண்டு எடுப்போம். சண்டை எதுக்கு? குழந்தைக்கு ரெண்டு பேரையுமே வெச்சிடுவோம். அதுவும் ஒரு புதுமையாயிருக்குமில்லே?”
சாராம்மாவுக்கும் அது உடன்பாடானதாகவே பட்டது.
சிறு சிறு பேப்பர்த் துண்டுகளில் பெயர்களை எழுதிக் குலுக்கிப் போட்டு ஒன்றைச் சாராம்மாவும் இன்னொன்றைக் கேசவனும் எடுத்தார்கள். கேசவன் தம் பேப்பரைப் பிரித்து வாசித்தார்.