காதல் கடிதம் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6822
“நீங்க எழுதின காதல் கடிதங்களை நான் கொண்டுபோய் உமிக் கரி மடிக்க உபயோகித்தேன்.”
என்ன கடினமான பெண் இதயம்! பிறகு கேசவன் ஒன்றும் பேசவில்லை. இப்படியே ஏராளமான நாட்கள் ஓடிவிட்டன. யாருடனும் ஒன்றும் பேசாமல், யாரையும் நோக்காமல் உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கப் பழகி விட்டார் கேசவன்.
பெண்கள் என்றாலே அவருக்கு அத்தனை வெறுப்பு மூண்டுவிட்டது. உலகத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணும் ஆணுமே மடையர்கள்! இப்படிப் பலவாறாக அசை போட்டுச் சிந்தித்து கொண்டிருந்த கேசவனின்முன் ஒரு மாலைப்பொழுதில் வந்து நின்றாள் சாராம்மா. எதையோ கேட்கும் பாவனையில் அவரை நோக்கிக் கை நீட்டினாள். கேசவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. சாராம்மா கேட்டாள்: “என் சம்பளம் எங்கே?”
“சம்பளம்? எந்தச் சம்பளம்?” கேசவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அவர் ஏதோ சொன்ன வார்த்தையைக் காற்றில் பறக்க விட்டதற்குக் குற்றம் சாட்டுகிற பாவனையில் அவள், “ஓ! இது வேறயா? எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்! தெரியாமலா சொன்னாங்க என்னோட தலைக்குள்ளே இருப்பது நிலா வெளிச்சம்னு? வேலையை ஒத்துக்கிட்டு இன்னிக்கோட பதினஞ்சு நாளாச்சு!” என்றாள்.
“ஓ...” கேசவனின் முகம் மலர்ந்தது. கண்களில் ஒளியின் ரேகைகள் படர்ந்தன. மகிழ்ச்சியால் கால்பந்து மாதிரி இதயம் விம்மி வீங்கி விலா எலும்புகளைத் தொட்டுப் பார்த்தது.
“பிறகு எதுக்காக நீ அந்த விஷயத்தை இதுவரை என்கிட்டே சொல்லல?”
தாழ்ந்த குரலில் துக்கம் தொனிக்கச் சாராம்மா, “வாழ்க்கை என்பது ரொம்பவும் இளமையும் மென்மையும் நிறைந்ததாய் இருக்கறப்போ, தற்கொலை அது இதுன்னு பேசி முகத்தை உம்முன்னு வெச்சிக்கிட்டு ஏதோ மூணாவது ஆள் மாதிரி நடந்துகிட்டா நான் என்ன செய்யறது?” என்றாள்.
“வேற விசேஷம் ஏதாவது...?”
“இல்ல...”
கேசவன், “இப்படி வா” என்று கட்டளையிட்டார்.
அவர் முன் நடக்க, சாராம்மா பின் தொடர்ந்தாள். இருவரும் மேலே போனார்கள். அறை வாயில் படியருகே அவள் நின்றாள். பெட்டியைத் திறந்து இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்த கேசவன் அவற்றை ஒரு கவரினுள் வைத்து மேலே “திருமதி சாராம்மா அவர்களுக்கு” என்று எழுதினார். பின்பு கவரை அவளுடைய கையில் தந்தார்.
சாராம்மா, “இது என்ன? காதல் கடிதமா?” என்றாள்.
கேசவன் பதில் சொல்லவில்லை. “காதல் கடிதமாம் காதல் கடிதம்! பணத்தைக் கண்டு மூக்கில் விரல் வைக்கப் போகிறாள்!”
ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரி அவள் ஒன்றும் விரலை வைக்கவில்லை. ஏதோ காய்கறி வியாபாரம் செய்கிறவள்போல் ரூபாய் நோட்டை எடுத்து முகத்துக்கு நேரே வைத்துப் பார்த்து, “இதெல்லாம் நல்ல நோட்டுதானே!” என்றாள்.
கேசவன் ஒன்றுமே பேசவில்லை.
“சரி! இனிமே இப்படி லேட்டா சம்பளம் தந்தா அவ்வளவு நல்லா இருக்காது. ஒவ்வொரு மாசமும் சரியா ஒண்ணாம் தேதி என் கைக்கு சம்பளம் வரணும்!” என்றாள் அவள்.
கேசவனுக்கு ஒரே மகிழ்ச்சி. அவள்மேல் அவருக்குக் கொள்ளை ஆசை! அவளை நெருங்கி வந்தார்.
“ஒரு நாலடி தள்ளி நின்னா நல்லாயிருக்கும்! நம்ம ஒப்பந்தத்தில் ஒண்ணும் இது சொல்லப் படலையே!”
கேசவன் இதற்கு என்ன பதில் சொல்வார்?
4
இப்படியே ஐந்து மாதங்கள் ஓடிவிட்டன. சாராம்மாவின் கைக்கு நூறு ரூபாய் சேர்ந்தது. அதை வைத்து அவள் என்ன செய்கிறாள் என்பதை கேசவனும் விசாரிக்கவில்லை. இருந்தாலும் மூன்றாம் மாத இறுதியில் சாராம்மா தனக்கு “லாட்டரி டிக்கெட்டில் ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது” என்று சொன்னாள். கேசவன் அவளுக்குத் தந்த சம்பளத்திலிருந்து ஒரு ரூபாய் எடுத்து வாங்கிய சீட்டுக்கு விழுந்த பரிசாம் அது! இது பற்றியெல்லாம் கேசவன் கொஞ்சமும் கவனம் செலுத்தவில்லை. பணம் சம்பந்தப்பட்ட சாதாரண விஷயங்களைப்போய் பெரிதாக எப்படி நினைத்துக் கொண்டிருக்க முடியும்? காதல் நோயில் சிக்கிக் கிடந்த அவருக்கு எதுவுமே சரியாகக் கண்ணில் படவில்லை. காதலி சொன்னபடி நடப்பதுதான் அவரது ஒரே நடவடிக்கையாக இருந்தது. அவள் சொன்னாள் என்பதற்காக வெளிநாடுகளில் வேலை கேட்டுப் பல மனுக்களை அனுப்பி வைத்தார். இதெல்லாம் ஏன்? சாராம்மாவுக்கு நோய் கண்டு படுக்கையாக அவள் கிடந்தபோது தாம் டாக்டரை அழைத்து வந்தது, பணம் தந்து அவளுக்காக மருந்து வாங்கித் தந்தது, சித்திக்கும் அவளுக்குமிடையே சமாதானம் உண்டாக்க முயன்றது, சாராம்மாவின் அப்பனிடம் தந்தையின் கடமைகளைப் பற்றிச் சிறு பிரசங்கமே செய்தது- இப்படிப் பல காரியங்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் கேசவன். ஆனால் ஒரு விஷயத்துக்காவது அவள் நன்றி சொல்ல வேண்டுமே! இருந்தாலும் கேசவன் அதைச் சகித்துக் கொண்டார். அவருக்குப் பிடிக்காதது, “வாழ்க்கை என்பது ரொம்பவும் இளமையும் மென்மையும் நிறைந்தது” என்று பீடிகை போட்டு அவள் ஏதாவது பேச ஆரம்பிப்பதுதான்.
அவள் அந்த வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்து விட்டாலே வெலவெலத்துப் போவார் கேசவன். அவள் அப்படிச் சொல்லவே இல்லையென்றால் ஏக திருப்தி அவருக்கு. அதற்காக அவரது பிரேமையில் ஒளி ஒன்றும் குன்றிவிடவில்லை; நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அது வளர்ந்து கொண்டுதான் இருந்தது. எப்போது பார்த்தாலும் சாராம்மாவைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும் அவருக்கு.
சாராம்மாவோ- அவள் கேசவனிடம்தான் ஈடுபாடு உள்ளவள் என்பதற்கு அடையாளமாக இதுவரை எதையும் வெளிப்படுத்தவில்லை. பேச்சாக இருக்கட்டும், இல்லை செயலாகட்டும்- எதிலுமே பிடி கொடுக்காமல்தான் அவள் நடந்து கொண்டாள்.
அப்போதுதான் அவர்களிடையே பிரிவு நேரும் என்ற நிலை ஏற்பட்டது. வெளிநாட்டிலுள்ள ஒரு பெரிய கம்பெனியில் கேசவனுக்கு நல்ல வேலை ஒன்று கிடைத்தது. சம்பளமும் ஏராளம். சாராம்மா கூறியபடி வேலையை ஒப்புக் கொள்வதாகப் பதில் எழுதிப்போட்டார் கேசவன்.
சாராம்மா சொன்னாள்:
“அப்படின்னா எனக்கு நூத்திருபத்தைந்தாவது சம்பளம் கிடைக்குமில்லையா?”
அவளுக்குத் தேவை அவ்வளவுதான். அதற்குமேல் ஒன்றும் வேண்டாம். இருந்தாலும் ஞாபகப்படுத்தி வைத்தாள்.
“கரெக்டா ஒண்ணாம் தேதி மணியார்டர் அனுப்பிடணும்! மேல் விலாசம் தெரியுமில்லே?”
கேசவன் மவுனமாய் நிற்கவே, சாராம்மாவே தொடர்ந்தாள்:
“எப்போ புறப்படறீங்க?”
“பத்து நாட்களிலே வேலையை ஒப்புக் கொள்ளணும். நாளை மறுநாள் புறப்பட்டா சரியா இருக்கும். அதுக்கேத்த மாதிரி பாங்க் வேலையையும் ராஜினாமா பண்ணிட்டேன்.”
“அப்போ கட்டாயம் போறதுன்னு தீர்மானிச்சிட்டீங்க?”
“இதென்ன கேள்வி?”
“நான் இப்போதும் உங்கள் நாயகிதானே?”
“அதில் என்ன சந்தேகம்?”
“எனக்காக சாகக்கூடத் தயார்தானே?”
“நிச்சயமாக.”
“சத்தியமாக?”