காதல் கடிதம் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6822
“ரொம்பவும் கனமாக இருக்கே! காதல் கடிதமா?”
“அப்புறம் எதுன்னு தானாகத் தெரியுது.” சாராம்மா புன்னகையுடன் கூறினாள்.
“வண்டி புறப்பட்ட பிறகுதான் இதைத் திறந்து பார்ப்பேன்னு சத்தியம் பண்ணிக் குடுங்க.”
“சத்தியமாக.”
“இது போதாது. பக்தியும் நம்பிக்கையுமுள்ள எதை வைத்தாவது சத்தியம் செய்யுங்க....”
கேசவன் சாராம்மாவை நோக்கிச் சத்தியம் செய்தார். “என் அன்பு சாராம்மாமீது ஆணையாகச் சொல்றேன். வண்டியில் ஏறின பிறகுதான் இந்தக் கவரைத் திறந்து பார்ப்பேன்.”
சாராம்மா எழுந்து கதவைத் திறந்தாள். “காலையிலே போறப்போ என்னைக் கூப்பிடுங்க. இப்போ அமைதியா உறங்கணும். தெரியுதா?” என்றதும் கீழே இறங்கிவிட்டாள்.
7
டைம்பீஸ் அலாரம் அடித்தது. கேசவன் திடுக்கிட்டு
எழுந்தார். மணி நாலு ஆகியிருந்தது. எழுந்து காலும் முகமும் கழுவிப் புறப்படுவதற்கான ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்தார். ஆடை அணிந்தார். சாமான்களைக் கட்டிப் பெட்டியில் வைத்துப் பூட்டினார். அதன்பின் சாலையில் இறங்கி ஒரு வண்டிக்காரனை அழைத்து வந்தார்.
சாமான்களை வண்டியில் ஏற்றியபின் வெளியே சென்று ஜன்னலோரம் நின்று சாராம்மாவின் அறையை நோக்கி டார்ச் ஒளியை வீசி, “சாராம்மா! சாராம்மா...” என்று மெதுவாக அழைத்துப் பார்த்தார். ஆனால் ஓர் அரவமுமில்லை. அருகில் போய் கதவை மெல்லத் தள்ளினார். அது தானாகத் திறந்து கொண்டது.
டார்ச் விளக்கு வெளிச்சம் உள்ளே பாய்ந்தது. அங்கே யாரும் இல்லை. அவள் எங்கே போயிருப்பாள்? டார்ச் வெளிச்சம் மேஜையின்மீது கிடந்த கவரின்மேல் போய் விழுந்தது. கேசவன் இதயம் படபடக்க அதைத் திறந்து வாசித்தார்.
“அன்புள்ள அப்பனும், பெருமதிப்புக்குரிய சித்தியும் வாசிக்க வேண்டும் என்பதற்காகச் சாராம்மா எழுதிக் கொண்டது.
வாழ்க்கை என்பது ரொம்பவும் இளமையும் மென்மையும் நிறைந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மாதம் நூற்றிருபத்தைந்து ரூபாய் சம்பளம் வரக்கூடிய ஒருவேலை எனக்குக் கிடைத்திருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள நான் போகிறேன். வரதட்சிணை ஒரு பைசாக் கூட வாங்காமல் கட்டிய சேலையுடன் என்னைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராயிருக்கிற ஓர் ஆண் மகனும் எனக்குக் கிடைத்திருக்கிறார். அவரை நானும் என்னை அவரும் முழு மனதோடு நேசிப்பதால் தீர ஆலோசித்து இந்த முடிவு எடுத்தோம். எங்களை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொள்ளும், அப்பனின்- சித்தியின் சாராம்மா.”
கேசவன் அந்தக் கடிதத்தை மேஜைமேல் எடுத்த இடத்திலேயே வைத்து வெளியில் இறங்கி வண்டியில் ஏறி ஒரே வேகமாக ரெயில்வே ஸ்டேஷனைப் போய் அடைந்தார். அங்கே புன்னகை ததும்பிய முகத்துடன் நின்று கொண்டிருந்தாள் சாராம்மா.
“நான் இங்கே வந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள் அவள்.
“அதுதான் ஆணினுடைய புத்திசாலித்தனங்கறது.”
“நல்ல புத்திசாலித்தனம்! உண்மையைச் சொல்லுங்க. என் அறைக்குள் போய் அப்பனுக்கும் சித்திக்கும் நான் எழுதி வெச்சிருந்த லட்டரைத் திருட்டுத்தனமா படிச்சீங்களா இல்லையா?”
“சொல்றேன்... சொல்றேன்... ஒண்ணுவிடாம சொல்றேன்.”
இரண்டு டிக்கெட்டுகள் வாங்கிச் சாமான் சகிதமாக வண்டியில் ஏறி இருவரும் அமர்ந்தார்கள்.
நீண்டதோர் ஓசை எழுப்பிக் கொண்டு வண்டி புறப்பட்டது. ஒருவருடன் ஒருவர் ஒன்றும் பேசிக் கொள்ளாமல் அருகருகே அமர்ந்திருந்தார்கள். வண்டி மூன்று இடங்களில் நின்றது. கடைசியில் பெட்டியில் எஞ்சி நின்றவர்கள் அவர்கள் இருவர்தான்.
வண்டி ஒரு ஸ்டேஷனில் நின்றது. டீக்கு ஆர்டர் தந்தார் கேசவன். இரண்டு பேருக்கும் காபி போதும் என்றாள் சாராம்மா. கேசவனோ இரண்டு பேருக்கும் டீ வாங்கிக் கொள்ளலாம் என்றார். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் போகவே, கேசவன் ஒரு டீ குடிக்க, சாராம்மா ஒரு காபி குடித்தாள்.
கதிரவன் மெல்ல உதித்து தன் செவ்விய முகத்தைக் காட்டினான். தங்கம்போல் மினுமினுக்கும் நதியின்மீது பாலத்தில் வண்டி மெல்லச் சென்று கொண்டிருந்தது. டீ- காபி விவகாரத்தை மறந்த கேசவன் மெல்ல அழைத்தார்.
“தங்கமே!”
“என்ன, ஆகாய மிட்டாயின் அப்பனே?”
“அன்பு நிலா வெளிச்சமே.”
சாராம்மா கேசவனைக் கிள்ளினாள்.
கேசவன் கர்ஜித்தார். “ஒரேயடியில் பல்லை உடைச்சிடுவேன்!”
அவ்வளவுதான். சாராம்மாவின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. என்ன இருந்தாலும் பெண்ணாயிற்றே. கண்ணீருக்குப் பஞ்சமா என்ன? சும்மா அழுவதுபோல் அவள் நடித்தாள். அது கண்ட கேசவனின் மனம் இளகிவிட்டது. அவளுடைய கண்களைத் துடைக்க கையை அருகில் கொண்டு வந்தார்.
“வேண்டாம்... என்னைத் தொடதீங்க...!”- சாராம்மா.
“ஏம்மா அழறே?”
“நான் எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கேன்! என்கிட்டே இப்படியா நடந்துக்கிறது?”
“எப்படி நடந்துக்கிட்டேன்?அப்படி என்ன தியாகத்தைச் செஞ்சிட்டே நீ?”
“அப்பனையும் சித்தியையும் உதறிவிட்டு அந்நியரான உங்கக்கூட வரலியா?”
“சரி... அதுக்காக...”
“எனக்காக காபி குடிக்க... எனக்காகக் கொஞ்சம் தியாகம் செய்ய...”
கேசவன் பதில் ஒன்றும் பேசவில்லை. உலகத்தில் இருந்த, இருக்கும், இருக்கப்போகும் எல்லா பெண்களையும் அவர் நினைத்துப் பார்த்தார்.
எனக்காகக் கொஞ்சமாவது தியாகம் செய்ய... சாராம்மா தொடர்ந்தாள்: “ஊஹும்... இப்போ அடிச்சுப் பல்லை உடைச்சிடுவாராம்!”
“தியாக தீபமே! ஏன்டீ ஆகாய மிட்டாயின் தாயே!”
“என்ன?”
“இன்னிக்கு நாம ரெஜிஸ்டர் கல்யாணம் செஞ்சிக்கிட்டு முறைப்படி எல்லாரும் அறிய கணவன்- மனைவி ஆகப்போகிறோம். உனக்குச் சம்மதந்தானே?”
சற்று மவுனமாக இருந்தபின், “சம்மதம்தான்” என்றாள் சாராம்மா.
“உனக்கு மூணு விஷயத்திலே பரிபூர்ண சுதந்திரம்!”
“என்ன, விவரமாச் சொல்லுங்க.”
“உணவு, உடை, நம்பிக்கை.”
“அப்போ நம்ம வீட்டிலே ரெண்டு சமையல் அறை இருக்குமா?”
“ஒரே ஒரு சிறு சமையலறை.”
“ரெண்டுவித உணவு நான் தயாரிக்கணுமே!”
“வேண்டாம். ஒரே விதம் போதும்.”
“யார் இஷ்டப்பிரகாரம்?”
“என் சமையல்காரியினுடைய...”
அவள் புன்னகையுடன், “நான் காலையில் காபிதான் தயாரிப்பேன்” என்றாள்.
“ஓ.. அப்படியா? அப்படின்னா வெளியே போய் நான் டீ குடிப்பேன்.”
“அதுக்கு நான் சம்மதிச்சாத்தானே! வாங்கற சம்பளம் முழுவதும் என் கைக்கு வந்திடணும்!”
“பிரியமுள்ள பொண்டாட்டியே... அப்புறம் எப்படி நான் டீ குடிப்பது?”
“தியாகம் செய்ய வேண்டியதுதான். நான் எதையெதை எல்லாம் தியாகம் செய்தேன்?”
“நான் உனக்காகத் தலைகீழாய் எல்லாம் நின்னிருக்கேனே!”
“அது என்ன பெரிய தியாகமாம். காதலுக்காக பெரிய சாம்ராஜ்ஜியத்தையே துறந்தவங்க எத்தனை பேரைப் பத்திக் கேட்டிருக்கோம்? எட்டாம் எட்வர்டும் வாலிசிம்ஸனும்...”