காதல் கடிதம் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6822
“நான் நினைச்சேன்...” கேசவன் என்ன பதில் கூறலாம் என ஒரு நிமிஷம் ஆலோசித்துப் பார்த்தார். அவர், “எதையோ எடுக்கப் பிரயத்தனப்படுறதா” என்பதற்குள், “வேறே எதை எடுப்பேன்? உங்களுக்கு வந்த பத்திரிகையைத்தான்! தபால்காரர் ஜன்னல் வழியா உள்ளே போடுறதைப் பார்த்தேன். வேலை ஒண்ணும் இல்லாததால் பொழுது போகவில்லையேன்னு...” என்றாள் சாராம்மா.
“அப்படின்னா, என்னை நேசிக்கலாமே!” மனசினுள் இப்படி நினைத்தபடி தம் பாக்கெட்டினுள் கையை நுழைத்து, ஏற்கெனவே எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்து அவளுடைய கையில் கொடுத்தார். அதை வாசித்து முடித்த சாராம்மா அதைச் சுருட்டி ஒரு மூலையில் கசக்கி எறிந்தாள்! “வேற விசேஷம் ஒண்ணுமில்லையா?” என்றாள்.
கேசவன் பதில் பேசவில்லை. அறையைத் திறந்து உள்ளே ஒரு மூலையில் கிடந்த பத்திரிகையை எடுத்துச் சாராம்மாவின் கையில் கொடுத்தார். தன் ஷர்டைக் கழற்றி ஆணி ஒன்றில் தொங்க விட்டார். பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள் சாராம்மா.
நடந்த சம்பவத்தின் பாதிப்பு எதுவும் முகத்தில் வெளிப்பட்டு விடாத மாதிரி பேசினார் கேசவன்.
“அப்புறம் என்ன சங்கதி? இன்னிக்கு சித்தியோடு சண்டை ஒண்ணும் இல்லையா?”
“போகிற போக்கைப் பார்த்தால் சித்தியும் அப்பனும் என்கிட்டேகூட வாடகை வாங்கிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாங்கபோல் இருக்கு!”
“விஷயம் அந்த அளவுக்கு வந்திருச்சா?”
“பின்னே என்னவாம்? நான் இப்போ இருக்கிற அறையையும் வாடகைக்கு விட்டுவிட்டு....”
“அப்படின்னா உனக்கு?”
“இவளுக்கு எதுக்கு தனியா அறை? சமையல் அறையிலே ஒரு மூலையில் படுடீன்னு சொன்னா போதாதான்னு பார்க்குறா சித்தி.”
“உன் அப்பன் என்ன சொல்றான்?”
“சித்தி சொல்றப்போ அப்பன் வேண்டாம்னா சொல்லிவிடப் போறார்?”
“சித்தியைக் கல்யாணம் கட்டிக்கிறதுக்கு முன்னாடி குணம் எப்படி?”
“யாருடைய குணத்தைக் கேக்கறீங்க? சித்தியினுடையதையா?”
“இல்லை. உன் அப்பனைப் பத்திக் கேக்கறேன்.”
“அப்போ எனக்கு வெறும் அப்பா என்கிற ஸ்தானத்துல இருந்தார். அவ்வளவுதான். நான் நினைக்கிறேன், ஆண்களுடைய தலைக்குள்ளே ஒண்ணுமே இல்லைன்னு.”
கேசவன் பதில் ஒன்றுமே பேசவில்லை. சிறிது நேரம் கழித்துக் கேட்டார். “அப்படின்னா இந்தக் கட்டடத்திலே உனக்கும் பங்கு இருக்குன்னு சொல்லு.”
“எனக்கு எப்படி இருக்க முடியும்? சித்தி கொண்டு வந்த வரதட்சணைப் பணத்தை வெச்சுத்தான் இந்த வீட்டின் மேலே இருந்த கடனையே அப்பன் அடைச்சாரு. அம்மா சாகப் பொழைக்க கெடக்கிறப்போ ஆன செலவும், செத்தப்புறம் ஆன செலவுமே கடன் உண்டாகக் காரணமாம். அப்பன் சொல்லித்தான் எனக்கே இது தெரியும். அம்மா மட்டும் இன்னும் ரெண்டு வருஷம் உயிரோடு இருந்திருந்தா நான் பி.ஏ. முடிச்சிருப்பேன். வேலை கிடைக்கிறதும் அப்படியொண்ணும் கஷ்டமாயிருந்திருக்காது.”
“பி.ஏ. படிச்சுட்டு எத்தனையோ பெண்கள் வேலை இல்லாம இருக்காங்களே! இருந்தாலும் உன் மாதிரி ஒரு பெண்ணுக்கு வேலை இல்லாம இருக்கிறதுங்கறது கொஞ்சம் கஷ்டந்தான்.”
பத்திரிகையின் பக்கங்களிலிருந்து விழிகளை உயர்த்திய சாராம்மா கெஞ்சுகிற பாவனையில் கேட்டாள்:
“நீங்க வேலை பார்க்கிற பாங்க்கில் ஏதாவது காலி இருந்துச்சுன்னா முயற்சி செஞ்சு பாருங்களேன்! அங்கே இல்லாட்டி, வேற எங்கேயாவது...”
கேசவன் முகத்தை உயர்த்தி அவளைப் பார்த்தார். சாராம்மாவின் நனைந்த விழிகளையும் கழுத்து, மார்பு முதலானவற்றையும் ஒரு நிமிஷம் ஆராய்ந்து பார்த்தன அவருடைய கண்கள். பின்பு தமக்குள் எண்ணிப் பார்த்துக் கொண்டார். “ஆண்களை நேசிப்பதைவிடப் பெண்களுக்கு அப்படி என்ன பெரிய வேலை வேண்டிக் கிடக்குது? இதைவிட்டு ஆஃபீஸ் வேலைக்குப் போகிறேன் என்றால்?”
இருந்தாலும் கேசவன் வெளிப்படையாக, “முயற்சி செய்து பார்க்கிறேன்” என்றார்.
“எங்கேயாவது இடம் காலியிருக்கா?”
“இல்லாம என்ன? என் இதயத்திலேதான் ஒரு பெரிய இடம்
காலியா கிடக்குதே! அங்கே வரணும்னா சிபாரிசு, லஞ்சம் எதுவுமே தேவையில்லை.” தம் மார்பைத் தடவித் தமக்குள் இப்படிக் கூறிக் கொண்ட கேசவன் வெளிப்படையாக, “இருக்கு” என்றார்.
“எங்கே?”
“நாளைக்குச் சொல்றேன்.”
“என்ன வேலை?”
“அது...” கேசவனின் அதரத்தில் மென்னகை தவழ்ந்தது. “எதிரே இருப்பவனைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் இதய தாகத்தை வெளிப்படுத்திய அவனுடைய கடிதத்தைக் கசக்கியா எறிகிறாய்? சரி; எறிந்ததுதான் எறிந்தாய்! ஒருவார்த்தை அதைப்பற்றிப் பேசினாயா? என்னை யாருன்னு நினைச்சுக்கிட்டிருக்கே!” ஆணாய்ப் பிறந்ததற்காகப் பெருமைப்பட்டுக் கொண்டார் கேசவன். இடது கையால் மேலுதட்டைத் தடவிப் பார்த்தார். ஒரு சிறு அரும்பு மீசையாவது இனி வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். கண்களில் இனம் புரியாத ஒளி தோன்றச் சொன்னார்:
“நாளைக்குக் கட்டாயம் சொல்றேன்.”
“சொன்னாப் போதாது. கிடைக்குமா?”
“நிச்சயமாக.”
“இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு.” காதல் கடிதம் சம்பந்தமாக ஒரு வார்த்தைகூட பேசாமல் கம்பையும் பத்திரிகைகளையும் கையில் எடுத்துக் கொண்டு படியிறங்கிப் போன சாராம்மா கீழேயிருந்து உரக்கச் சொன்னாள்:
“கேட்டதை மறந்திடாதீங்க!”
கேசவனிடம் கொஞ்சமாவது அசைவு இருக்க வேண்டுமே! அவள் சுருட்டி எறிந்த காதல் கடிதம் அறையின் ஒரு மூலையில் அநாதையாய்க் கிடந்தது. வெறுப்புடன் தமக்குள் அவர், “சேச்சே!” என்று முனகிக் கொண்டார்.
2
இந்தா, என் இதயத்தின் சாவி” என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு மறுநாள் காலையில் தன் அறைச்சாவியை சாராம்மாவிடம் கொடுத்து விட்டு பாங்குக்குப் போனார் கேசவன்.
மாலையில் திரும்பி வரும்போது அவருடைய கையில் சாவியைத் தந்தாள் சாராம்மா. முதல் நாள் அவளிடம் படிக்கக் கொடுத்த பத்திரிகையை வாங்கிக் கொண்டு மேலே போன கேசவன், நாற்காலியை எடுத்து அறைக்கு வெளியே போட்டுக் கொண்டு புத்தகத்தைப் பிரித்தார். அப்போது எதையோ வெற்றி கொள்ளப் போகும் பெருமிதம் அவருடைய இதயத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. சாராம்மாவுக்குத் தாம் பார்த்து வைத்திருக்கிற வேலையைப் பற்றிச் சொன்னால் அவள் முதலில் தன்னைக் கொன்று விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பாள்! இதை நினைத்துப் பார்த்த கேசவன் தமக்குத்தாமே சிரித்துக் கொண்டார்.
அப்போது சாராம்மாவே மேலே ஏறி வந்தாள். வேலையைப் பற்றிக் கேட்கவே அவள் வருகிறாள் என்பது தெரிந்தும், குரலில் அதைக் கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல் வழக்கமாகப் பேசுவதுபோல் கேசவன் கேட்டார்: “சாராம்மா, வேறென்ன விசேஷம்?”
வழக்கமான புன்சிரிப்புடன் சாராம்மாவும், “ம்... ஒண்ணுமில்லை. அறையிலே ஏதாவது காணாமப் போயிடுச்சா பாருங்க” என்றாள்.
“நான் பார்க்கலையே!” இது கேசவன்.
“அப்படின்னா நல்லாப் பாருங்க.”
கேசவன் ஒன்றும் பேசவில்லை. ஆர்வத்துடன் பத்திரிகை படிக்கிற மாதிரி பாவனை செய்து கொண்டிருந்த அவருடைய மனம், சாராம்மாவிடம் அடுத்துப் பேசப் போகும் சங்கதி குறித்து அசைபோட்டுக் கொண்டிருந்தது. இதயத்திலிருந்து அது வெளிப்படும் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.