உன் மனதை நான் அறிவேன் - Page 57
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10466
வழக்கம் போல பாவனா வந்த போது, குளிக்காமல் கொள்ளாமல், கலைந்த தலைமுடியுடனும், கலங்கிய கண்களுடனும் சோகமாகக் காணப்பட்டாள் சரிதா.
''என்ன மேடம்? எப்பவும் காலையில குளிச்சு முடிச்சு 'பளிச்'ன்னு இருப்பீங்க? இன்னிக்கு என்ன ஆச்சு? ஏன் இப்பிடி இருக்கீங்க? ''
அப்போது அங்கே வத்சலாம்மா வந்தாள்.
''மணி பதினொண்ணு ஆகுது. இன்னும் ஒரு வாய் காபி கூட குடிக்கலை. 'நானே போடறேன்... நானே போடறேன்...'னு எனக்கும் சேர்த்து கருப்பட்டி காப்பி போடுவாங்க. இன்னிக்கு பச்சைத் தண்ணி கூட குடிக்கலை. எழுந்திருச்சதும் சாமி கும்பிட்டு விளக்கேத்துவாங்க. அதுவும் செய்யலை.''
உண்மையான கவலையோடு வத்சலாம்மா பேசியது கண்டு பாவனாவின் மனசாட்சி 'சுருக்' என்று குத்தியது.
பாவனாவைப் பற்றி நல்ல விதமான அபிப்ராயம் இல்லாத வத்சலாம்மா, தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்த இயலாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
அவளை அழைத்தாள் பாவனா.
''வத்சலாம்மா... ஒரு தட்டில ரெண்டு இட்லி அல்லது தோசை போட்டு குடுங்க. நான் அவங்களை சாப்பிட வைக்கிறேன்.''
''சரி'' என்ற ஒற்றை வார்த்தையுடன் சமையலறைக்கு சென்றாள் வத்சலாம்மா.
சரிதாவை அழைத்துக் கொண்டு மாடியிலுள்ள அவளது அறைக்கு சென்றாள்.
சரிதாவை உட்கார வைத்தாள்.
''இவ்ளவு 'டல்'லா உங்களை நான் பார்த்ததே இல்லை மேடம். என்ன ஆச்சு ? என்கிட்ட சொல்லலாம்ன்னா சொல்லுங்க மேடம்.''
சரிதாவின் முதுகை ஆறுதலாக தடவிவிட்டபடியே பாவனா கூறியதும் சரிதா பேச ஆரம்பித்தாள்.
அறையின் கதவை நாசூக்காகத் தட்டி விட்டு உள்ளே வந்தார் வத்சலாம்மா. 'இதயம்' நல்லெண்ணெய் மணக்க மணக்க ஊற்றி, வார்க்கப்பட்ட மிருதுவான தோசைகளுடன், சிறிய கிண்ணத்தில் வெங்காய சாம்பார் ஊற்றி கொண்டு வந்திருந்தார் வத்சலாம்மா.
அவற்றை சரிதாவிடம் கொடுப்பதற்குள் முந்திக் கொண்டு, பாவனா வாங்கிக் கொண்டாள். இதனால் மனது வாடிப் போன வத்சலாம்மா, சரிதாவிடம் கூட எதுவும் பேசாமல் வெளியேறினார்.
''மேடம், முதல்ல சாப்பிடுங்க'' என்று கூறி வற்புறுத்தி சாப்பிட வைத்தாள். நீண்ட நேரமாக காலியாகக் கிடந்த வயிறு சற்று நிரம்பியதும் ஓரளவு புத்துணர்ச்சி பெற்றாள் சரிதா. ஆனால் முன்தினம் இரவு, அபிலாஷ் பேசிய கடுமையான வார்த்தைகள் நினைவிற்கு வந்ததாலும், அவன் கடுமையாக பேசியதற்குரிய காரணம் நினைவிற்கு வந்ததாலும் மீண்டும் தனக்குள் சுருங்கிப் போனாள்.
''முகம் வாடிக் கிடக்கு மேடம். ஒரு ஃபேஷியல் பண்ணி விடறேன். நல்ல ரிலாக்ஸ் கிடைக்கும் மேடம்.'' என்று கூறிய பாவனா, சரிதாவின் பதிலை எதிர் பார்க்காமல் ஃபேஷியலில் தன் கை வண்ணத்தைக் காண்பிக்க ஆரம்பித்தாள்.
கூடவே, தன் வாய்ப் பேச்சின் பிரதாபத்தையும் பயன்படுத்தி, சரிதாவின் வாயிலிருந்து பேச்சை வரவழைத்தாள். அவளது சாமர்த்தியமான பேச்சினால் தன் உள்ளத்தில் உள்ளதைக் கொட்ட ஆரம்பித்தாள் சரிதா.
''நேத்து ராத்திரி, அபிலாஷ் என்னை ரொம்ப திட்டிட்டார் பாவனா. அவரோட மொபைல் ஃபோனை 'செக்' பண்ணிப் பார்த்துக்கிட்டிருந்தப்ப அவர் முழிச்சுக்கிட்டார். கயல்விழி அவருக்கு ஃபோன் பண்ணி இருக்கா. அதை அவர் என்கிட்ட சொல்லவே இல்லை. யார் யாரோ பெண்கள் அவருக்கு கண்டபடி காதல் வசனம் மெஸேஜ் பண்ணி இருக்காங்க. உயிர்த் தோழியா இருந்தாகூட வீட்டுக்குள்ள விடக் கூடாதுன்னு நீ சொன்னப்ப, நான் 'என்னடா இது... இவ இப்பிடி பேசறாளே'ன்னு நினைச்சேன். ஆனா... இப்பதான் புரியுது... எல்லா விஷயங்களுக்கும் ஒரு எல்லை இருக்குன்னு. கயல்விழியோட பேசினதைப் பத்தி ஏன் என்கிட்ட சொல்லலைன்னு கேட்டப்ப ஏதேதோ காரணம் சொல்றாரு.
மத்த பொண்ணுங்களோட மெஸேஜ் பத்தி கேட்டதுக்கும் 'நான் பிரபலமானவன்' 'அது' 'இது'ன்னு சொன்னாரு. கோபமா வேற கத்தினார். 'அவர் எனக்கு மட்டுமே சொந்தம்'ங்கற என்னோட எண்ணத்துல மண் விழுந்து போச்சு. கயல்விழி அவர்கிட்ட பேசினதுக்கப்புறம் என்கிட்ட பேசவே இல்லை. அவ மேலதான் ஆத்திரமா வருது...'' கோயிலில் இருக்கும் நேரங்களில் தன் மொபைலை 'ஸ்விட்ச் ஆஃப்' பண்ணி வைப்பதையும், அதன் பின்னர் நீண்ட நேரம் மறுபடியும் செயல்பட வைக்க மறந்து விடுவதையும் அறவே மறந்து போய், கயல் விழியைத் திட்டித் தீர்த்தாள் சரிதா.
தன்னுடைய மாய வலை, சரிதாவின் இதயத்தில் ஏற்படுத்திய காயம் வலியை ஏற்படுத்தியுள்ளது கண்டு, சந்தோஷமும் கூடவே சஞ்சலமும் அடைந்தாள் பாவனா. சுதாகர், தனக்குக் கொடுத்த வேலை முடிந்தால் விரைவில் தன் பணக் கஷ்டம் தீரும் என்கிற எதிர்பார்ப்பு அளித்த சந்தோஷத்தையும், அப்பாவியான சரிதாவின் மனதைக் கலைத்து, அவளது மனதில் சந்தேக விதையைத் தூவி, அவளையும், அபிலாஷையும் மன வேறுபாடுக்குள்ளாக்கி, கயல்விழியின் உண்மையான நட்பை பிரித்து, ஏகப்பட்ட பாவ காரியங்கள் செய்ய நேரிட்ட அவலத்தால் சஞ்சலமும் அடைந்தாள் பாவனா. ஒரு பக்கம் மனசாட்சி முள்ளாக உறுத்த, இன்னொரு பக்கம் குடும்பத்தின் வறுமைக் காட்சி அந்த முள்ளை எடுக்க முயல, பல்வித உணர்ச்சிகளின் பிரதிபலிப்பால் மன அழுத்தத்திற்கு ஆளானாள்.
பாவனாவிடம் தன் மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்த்ததாள் சரிதா. அப்போதைக்கு அவளது துக்கம் கொஞ்சம் குறைந்திருந்தது.
விதியின் வலிமை மிக்கக் கரங்கள், அந்தப் பெண்மணிகளின் மன நிம்மதியை நசுக்கின.