உன் மனதை நான் அறிவேன் - Page 60
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10466
இசை அமைப்பு வேலை முடிந்து இரவில் வீடு திரும்பிய அபிலாஷ், காரை 'ஷெட்'டில் நிறுத்தி விட்டு பங்களா வாசலில் நின்று அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தான். இசைப்பணி முடியும் வரை பசி என்பதை அறியாத அபிலாஷ், தன் வயிறு உணவு கேட்பதை அப்போதுதான் உணர்ந்தான்.
அழைப்பு மணியின் ஒலி கேட்டு கதவைத் திறந்த சரிதா, வேகமாக திரும்பிச் சென்றாள். எப்போதும் ஆவலோடு அபிலாஷின் முகம் பார்த்து அகம் மலரும் சரிதா, அன்று அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.
பசி அபிலாஷின் வயிறைக் குடைய, சரிதாவின் பாராமுகம் அவனது மனதைக் குடைய மௌனமாய் சென்று உடைகளைக் கலைந்து, இரவு அணியும் கவுனை அணிந்து கொண்டான்.
படுக்கையில் குப்புறப் படுத்துக் கொண்ட சரிதா, கோபம் மாறாமல் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான்.
சமையல் அறைக்கு சென்றான். குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தான். ரொட்டியையும், இரண்டு முட்டைகளையும் எடுத்தான். உள்ளிருக்கும் பொருள் வெளியே தெரியக் கூடிய அழகிய ப்ளாஸ்டிக் டப்பாவில் நறுக்கிய வெங்காயம் இருந்தது.
அதையும் எடுத்தான். பச்சை மிளகாயைத் தேடி எடுத்தான். குளிர் சாதனப் பெட்டியை மூடினான். ஒரு பாத்திரத்தில் தேவையான உப்புத் தூள், மிளகாய் தூள், போட்டுக் கலக்கினான். அதில் முட்டைகளை உடைத்து ஊற்றினான்.
மின்சார முட்டை அடிக்கும் கருவியில் முட்டைகளை மேலும் மென்மையாகக் கலக்கினான். ஸ்டவ்வைப் பற்ற வைத்து, தோசைக் கல்லைக் காய வைத்தான். இரண்டு தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கினான். வதங்கியதும் முட்டைக் கலவையை பரவலாக ஊற்றி ஆம்லெட் தயாரித்து, அதை ஒரு தட்டில் எடுத்துக் கொண்டான்.
ரொட்டி 'டோஸ்ட்' செய்யும் இயந்திரத்தை இயக்கச் செய்து ரொட்டித் துண்டுகளை டோஸ்ட் செய்து அவற்றை பெரிய தட்டில் எடுத்துக் கொண்டான். இரண்டு தட்டுக்களையும் சாப்பிடும் மேஜை மீது வைத்தான். நாற்காலியில் அமர்ந்து ரொட்டியையும், முட்டையையும் சாப்பிட்டான்.
வயிறு நிறைந்ததும், மனதில் வெறுமை வெளிப்பட்டது. 'இது நாள் வரை ஒரு நாள் கூட தன்னை சரிதா, இப்படி உதாசீனப்படுத்தியது இல்லையே' என்கின்ற வேதனை குடைந்தது.
நீண்ட நேரம் சிந்தனை சிதறல்களில் சிக்குண்டான் அபிலாஷ்.
'நான் ஏன் ஸ்ட்ரெஸ் ஆகணும்? என் மேல என்ன தப்பு? நான் களங்கம் இல்லாதவன். நான் ஏன் கலங்க வேண்டும்? என்னோட மனசு தூய்மையா இருக்கு. நான் சுத்தமா இருக்கேன். என் மீது ஆசைப்பட்டு 'மெஸேஜ்' அனுப்பும் இளம் பெண்களைப் பற்றியும், அவங்களது முதிர்வு பெறாத இளமைக்கால உணர்வுகள் பற்றியும் கவலைப்பட்டிருக்கேனே தவிர, அவர்களில் யாருக்காவது பதில் 'மெஸேஜ்' அனுப்பி இருக்கேனா?
சரிதாவின் இனிய, உயிர்த் தோழி கயல்விழி! அவளிடம் நான் ஒரு நண்பனாகவும், சகோதரனாகவும், வழிகாட்டியாகவும்தான் பழகி வருகிறேனே தவிர வேறு தவறான எண்ணங்கள் எனக்கு இல்லையே?! கயல்விழியும் என்னை தன் குடும்பத்தில் ஒருவனாகத்தானே நினைக்கிறா... பழகறா?! என்னையும், அவளையும் போய்... சந்தேகப்பட்டு சரிதா பேசும் பேச்சுக்கள்!... ச்சே... சரிதா ஏன் இப்பிடி மாறிட்டா?
சரிதா மேல என் உயிரையே வச்சிருக்கேனே! என்னோட இசையையும் அவளையும் சரி நிகர் சமமா நேசிக்கிறேனே?! இது அவளுக்கு தெரியாத விஷயமா? நடு ராத்திரியில... என்னோட... மொபைலை நோண்டிப் பார்த்து 'செக்' பண்ற அளவுக்கு நான் கேவலமாயிட்டேனா... அல்லது சந்தேகப் பேய் ஆட்டுவிக்கிற கேவலமான பெண்ணா... அவ ஆகிட்டாளா? என்னோட இதயத்தை நெருங்கக் கூடிய ஒரே பெண் சரிதா மட்டுமேன்னு ஏன் அவ புரிஞ்சுக்கலை?
சிந்தனைக் கூட்டில் இருந்து வெளி வருவதற்கு பெரிதும் முயற்சி செய்தான் அபிலாஷ். அவனது முயற்சிக்கு வெற்றி கிடைத்தபின் தெளிவானான்.
'என் மீது எந்தத் தவறும் இல்லாதபோது நான் ஏன் மன அழுத்தத்தில் தவிக்கணும்? வருவது வரட்டும். சரிதாவின் மனநிலை மாறட்டும். அவளே என்னைத் தேடி வரட்டும். அவளுக்கு என்னைப் பற்றிய தவறான எண்ணம் மறையட்டும்! என்று வைராக்யமாக எண்ணியவன், அவள் மீதுள்ள அளவற்ற பாசத்தினால் பரிதவித்தான்.
'பாவம் சரிதா. பெற்ற அம்மா, அப்பாவை கண் எதிரே விபத்தில் பறி கொடுத்த அவள், என்னையே தன் உலகமாக எண்ணி வாழ்ந்த அவள், எனக்காகவும், என் இசைத்துறையின் வெற்றிக்காகவும் எப்போதும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அவள், ஒரு தாய் போல என்னை கவனித்துக் கொண்ட அவள் ஏன் இப்படி தனக்குள் சுருங்கிப் போனாள்? எண்ணங்களில் குறுகிப் போனாள்? என்று மறுபடியும் சரிதா மீது பரிதாபப்பட்டான். எண்ண அலைகளினால் இழுத்துச் செல்லப்பட்டான் அவன்.