நீ எங்கே? என் அன்பே ! - Page 26
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by chitralekha
- Hits: 8686
செபாஸ்டியன் அங்கிருந்து புறப்பட்டான். அவன் வெளியேறும்போது குளிர் கண்ணாடி இளைஞன் அசோக் அவசர அவசரமாகச் சென்று அங்கிருந்து நாற்காலியில் உட்கார்வதைப் பார்த்தான் செபாஸ்டியன். வெளியில் வந்து எஸ்.டி.டி.யில் குணாளனைத் தொடர்பு கொண்டு, தான் சேகரித்த தகவல்களைக் கூறினான்.
“கவுண்டரை மறுபடி விசாரிக்கப் போறேன்னு சொன்னீங்களே சார் விசாரிச்சீங்களா?” மறுமுனையில் குணாளன் பேசினார்.
“அவர்கிட்ட இருந்து புதுசா எந்தத் தகவலும் கிடைக்கல. கோபி செட்டி பாளையத்துல ஷூட்டிங்ல இருந்தார்ங்கறதுக்கு ஸ்டிராங்கா ஆதாரம் இருக்கு. நீங்க வந்ததும் நாம அடுத்து என்ன செய்யலாம்னு பேசலாம்.”
“ஓ.கே. சார், நான் புறப்பட்டு வரேன்.” பேசி முடித்து, பணத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினான் செபாஸ்டியன்.
சில்வர் ஸ்பூன் அட்வர்டைசிங் கம்பெனியில் சம்பத் கொடுத்த விலாசத்திற்கு பைக்கில் வந்து இறங்கினார் குணாளன். அநேக வீடுகள் நெருக்கமாய் இருந்தன. போர்ஷன் வீடுகளாகவே பெரும்பாலும் இருந்தன. விலாசத்தில் இருந்த பதினெட்டாம் நம்பர் வீடும் ஒரு பெரிய வீட்டின் பகுதி வீடாக இருந்தது. சிறிய வெராண்டாவின் படிகள் மீது ஏறிக் கதவருகே போன குணாளன், அங்கே பூட்டு தொங்குவதைப் பார்த்தார்.
அக்கம் பக்கம் விசாரிக்கலாம் என இறங்கி வந்தவரைப் பார்த்த இரண்டு நடுத்தர வயதுப் பெண்மணிகள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டார்கள். அந்த வழியாக நடந்து போகும் அனைவருமே குணாளனை ஒரு வித்தியாசமான பார்வை பார்த்தபடியே போனார்கள். ஒன்றும் புரியாமல் குழம்பினார் குணாளன். மஃப்டியில் இருந்தபடியால் அவர் ஷீலாவின் வாடிக்கையாளர் என நினைத்துக் கொண்டார்கள்.
“சார்... சார்...” தெருவில் போன ஒருவரை குணாளன் கூப்பிட்டார். அவர் திரும்பினார்.
“சார், இந்த வீட்ல ஷீலான்னு...” இவர் கேட்டு முடிப்பதற்குள் அவர், “எனக்குத் தெரியாது சார்” வெறுப்பாக பதில் சொல்லியபடி வேகமாக நகர்ந்து விட்டார்.
‘என்ன செய்யலாம்’ என நினைத்துக் கொண்டிருந்த குணாளனைப் பக்கம் இருந்து ஒரு குரல் கேட்டது. திரும்பினார். ஷீலாவின் வீட்டை ஒட்டி இருந்த வீட்டின் வெளிப்புறம் நின்றிருந்த ஒரு வயதான மனிதர் மீண்டும் கூப்பிட்டார்.
“சார் இங்கே வாங்க.”
குணாளன் போனார்.
“சார், ஷீலாவைத் தேடியா வந்தீங்க? பார்த்தா ரொம்ப டீசன்ட்டா இருக்கீங்க. அந்தப் பொண்ணு சினிமாவுல நடிக்கணும்னு ஊரை விட்டு வந்து சான்ஸ் கிடைக்காததுனால தன்னையே வித்து பொழைப்பு நடத்திக்கிட்டிருந்துச்சு. என் வீட்லதான் ஒரு பகுதியில் வாடகைக்குக் குடி இருந்தா. நிறைய பொய் சொல்லி வீட்டைப் புடிச்சுக்கிட்டா. அப்புறம்தான் தெரிஞ்சது அவளைப்பத்தி.”
இப்போது குணாளனுக்கும் புரிந்தது. ‘ஏன் மற்றவர்கள் தன்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள். சிரித்தார்கள்’ என்று.
“சார், நான் போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து ஒரு இன்வெஸ்டிகேஷனுக்காக இந்தப் பொண்ணைத் தேடி வந்தேன்.”
“அப்படியா? அவ என்னமோ சினிமாவுல நடிக்கறதுக்கு சான்ஸ் கிடைச்சிருச்சு. அட்வான்ஸ் கூட வாங்கியாச்சுன்னு சொல்லி வீட்டை காலி பண்ணிட்டா. ‘விட்டதுடா தொல்லை’ன்னு நானும் பெரிய கும்பிடு போட்டு அனுப்பிட்டேன். இந்த ஏரியாவுல எல்லோரும் ரொம்ப டீசன்ட். இவ இங்க இருந்தது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ராத்திரியானா அவளைத் தேடி பல பேர் வருவாங்க. எப்படியோ அவ போனதே பெரிய விஷயம்னு வாடகை பாக்கி கூட கேக்காம அனுப்பிட்டேன்.”
“வீடு மாத்தறப்ப உங்ககிட்ட சொல்லிட்டுத்தானே போயிருப்பா.”
“சொன்னா. கதாநாயகியா நடிக்கப் போறேன்னு ரொம்ப சந்தோஷமா சொல்லிட்டுத்தான் போனா.”
“சார், அவ புதுசா குடி போகிற வீட்டு அட்ரஸ் சொன்னாளா? நீங்க கேட்டீங்களா?” ஆர்வத்துடன் கேட்ட குணாளனுக்கு அவரது பதில் அதிக ஏமாற்றத்தை அளித்தது. கூடவே கொஞ்சம் திகைப்பும்.
‘முடிச்சுகள் அவிழும் நிலையில் இருக்கும்போது, மேலும் சிக்கல்கள் தோன்றுகிறதே’ நினைத்தபடியே அவரிடம் விடைபெற்று, பைக் நிறுத்தி இருந்த இடத்திற்குள் நடந்தார் குணாளன்.
9
கமிஷனர் அலுவலகத்தில் செபாஸ்டியன், குணாளன் இருவரும் அமர்ந்திருக்க, கான்ஸ்டபிள் முன்னூத்தி பன்னிரண்டு இரண்டு டம்பளர்களில் தேநீர் கொண்டு வந்து வைத்தார். இருவரும் தேநீர் பருகியபடியே தங்கள் அடுத்த முயற்சி பற்றி பேச ஆரம்பித்தனர்.
“அந்த சோப் விளம்பரத்துப் பொண்ணு தங்கியிருந்த ஹவுஸ் ஓனர்கிட்ட அவ புது வீட்டு அட்ரஸ் கேட்டேன். தெரியாதுன்னு அவர் மறுத்தப்ப ரொம்ப அப்செட் ஆயிட்டேன் சார்.”
“இதுக்காக ஏன் அப்செட் ஆகறீங்க சார்? உங்களுக்கு ஒரு விஷயம் ஞாபகம் இருக்கா? நாம அந்த கமாலியை இன்னும் விசாரிக்கவே இல்லை.” குணாளனுக்கும் பொறி தட்டியது.
“ஆமா சார், கமாலியை விசாரிச்சா அட்ரஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கு சார்.”
“செபாஸ்டியன் ‘குவாலிட்டி பிரிண்டர்ஸ்’ல இருந்து ஒரு போட்டோ கிராபர் அட்ரஸ் வாங்கிட்டு வந்தீங்கள்ல? அங்கேயும் நாம விசாரிக்கணும்.”
“ஓ.கே.சார்.”
“வாங்க, முதல்ல கமாலி வீட்டுக்குப் போகலாம். செபாஸ்டியன், கமாலியோட அட்ரஸ் எடுத்துக்கிட்டீங்களா?”
“இருக்கு சார்.”
மூவரும் ஜீப்பில் ஏறினார்கள்.
“கோடம்பாக்கம் ராம் தியேட்டருக்கு எதிர்த்த தெருவுக்குப் போகணும்.” ஜீப் டிரைவரை பணித்தார் செபாஸ்டியன். ராம் தியேட்டருக்கு எதிர்ப்புறம் உள்ள தெருவின் கடைசியில் பல ஒண்டுக் குடித்தனங்கள் இருந்தன. அதில் நாற்பத்தி இரண்டாம் வீட்டை சிரமப்பட்டு கண்டுபிடித்தனர்.
அந்த வீட்டு வாசலில் இரண்டு பெண் குழந்தைகள் பரட்டைத் தலையுடன் விளையாடிக் கொண்டிருந்தன. அக்கம் பக்கம் உள்ளவர்கள் போலீசைப் பார்த்ததும் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.
“இங்க, கமாலின்னு ஒரு ஆள் இருக்கிறாரா? நாற்பத்தி ரெண்டாம் நம்பர் வீடு.” செபாஸ்டியன் பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்த எண்ணிட்ட வீட்டிற்குள் இருந்து ஒரு பெண் வேகமாக வெளியில் வந்தாள்.
“கேட்டாரா, இந்த ஆளு. ஒழுங்கா சம்பாரிச்சு குடும்பம் நடத்துன்னா? இப்போ பாரு, போலீஸ் வந்து நிக்குதே. பாவி மனுஷன். இந்த ஆளுக்கெல்லாம் பொண்டாட்டி, பிள்ளைங்க ஒரு கேடு. சினிமாவாம் சினிமா” உரத்த குரலில் புலம்பிக் கொண்டே இவர்களை நோக்கி வந்தாள் அவள்.
“ஏம்மா, கமாலி யாரு? இப்ப எங்க?”
“அந்த ஆளு எம் புருஷன்தான்யா. ஸ்டுடியோவில வேலை பார்க்கறேன்னு சொல்லுவாரே தவிர என்ன வேலைன்னு இன்னி வரைக்கும் எனக்குத் தெரியாது. சில சமயம் கை நிறைய கொண்டு வந்து குடுப்பாரு. சில நேரம் வெறும் கையை விரிப்பாரு. ஏதாவது தப்பு பண்ணிட்டாராய்யா? எனக்கு பயம்மா இருக்கே?” மறுபடி பெருங்குரலில் புலம்ப ஆரம்பித்தவளைத் தடுத்தார் குணாளன்.
“இந்தாம்மா, உன் புருஷன் இப்ப எங்கே? அதைச் சொல்லு முதல்ல.”