நீ எங்கே? என் அன்பே ! - Page 24
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by chitralekha
- Hits: 8686
“அந்த வார இதழை இன்னும் வச்சிருக்கியா?”
“சமீபத்துல வந்ததுதான். இருக்கும். இருங்க எடுத்துட்டு வரேன்.”
குணாளனின் மனைவி கொண்டு வந்ததும் இருவரும் அதை கவனித்துப் பார்த்தனர்.
“செபாஸ்டியன் நீங்க சிவகாசிக்குப் போங்க. அங்கே அந்த குவாலிட்டி பிரஸ்ல விசாரிச்சிட்டு வாங்க. நான் இந்தப் படத்துல இருக்கற பொண்ணைப் பத்தின விபரங்களை சேகரிக்கிறேன். அந்த ப்ரொட்யூசர் கவுண்டரையும் மறுபடியும் விசாரிக்கணும்.”
“சாந்தி தியேட்டர் பக்கம் வாங்கின இந்த ஃபோட்டோவுல நடிகர் நிரஞ்சன் வழக்கத்தைவிட கொஞ்சம் வித்தியாசமான டிரஸ், ஹேர் ஸ்டைல் எல்லாம் பண்ணி இருக்கார். பிரிண்ட் பண்ணின படம்ங்கறதுனால அவங்களோட பின்னணி கடற்கரை மட்டும் தான் தெரியுது.” செபாஸ்டியன் சொன்னதும், மீண்டும் படத்தை வாங்கிப் பார்த்தார் குணாளன்.
இதற்குள் குணாளனின் மனைவி வார இதழ் ஒன்றைக் கொண்டு வந்து “இதாங்க அந்த விளம்பரம். பாருங்க.” குணாளனிடம் அதில் வெளிவந்திருந்த சோப் விளம்பரத்தையும் காண்பித்தாள்.
நடைபாதைக் கடைகளில் கிடைத்த படத்தில் இருந்ததற்கும், விளம்பரத்தில் இருந்ததற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து, இரண்டிலும் அவளே என உறுதிப்படுத்திக் கொண்டார்.
“விளம்பரத்தின் ஓரத்தில் விளம்பர ஏஜென்ஸியின் பெயர் இருக்கு. பார்க்கலாம்.” செபாஸ்டியன் பத்திரிகையை வாங்கிப் பார்த்தான் சில்வர் ஸ்பூன் (Silver spoon/lavan/5 Tam) என்று அச்சடிக்கப்பட்டிருந்தது.
“சார் இந்த சில்வர் ஸ்பூன் அட்வர்டைசிங் கம்பெனிக்குப் போய் கேட்டா, இவளைப் பத்தின விபரங்கள் தெரியறதுக்கு வாய்ப்பு இருக்கு சார்.”
“இந்த அட்வர்டைசிங் கம்பெனி இங்க மெட்ராஸ்லதான் இருக்கா?”
“ஆமா சார். டி.நகர்ல தான் இருக்கு.”
“நீங்க சிவகாசிக்குப் புறப்படுங்க. எந்தத் தகவல் கிடைச்சாலும் உடனே எஸ்.டி.டி.ல என்னைக் கூப்பிட்டுச் சொல்லுங்க.”
“ஓ.கே. சார் நீங்க குட்டியண்ண கவுண்டரை என்கொய்ரி பண்ணப் போறீங்களா?”
“ஆமா. நான் இப்போ கே.கே. பிலிம்ஸ் ஆபீசுக்குப் போய் கவுண்டரைப் பத்தின சில தகவல்கள் தெரிஞ்சுகிட்டு வரேன். அவர் இருந்தாலும் அவர்கிட்ட மறுபடியும் விசாரணை நடத்தியே ஆகணும். அதுக்கு முன்னால இந்த விளம்பரக் கம்பெனியில விசாரணை நடத்தணும்.”
“இந்தாங்க. நீங்க ஒரு படத்தை எடுத்துக்கோங்க.”
செபாஸ்டியன் ஒரு படத்தை எடுத்துக் கொண்டான்.
‘சில்வர் ஸ்பூன் அட்வர்டைசிங் கம்பெனியில் இந்தக் கேசுக்கு முக்கியமான தகவல்கள் கிடைக்க வேண்டுமே’ என்ற கவலையான முகத்துடன் குணாளன் புறப்பட்டார்.
8
‘சில்வர் ஸ்பூன் அட்வர்டைசிங்’ என்று பளபளவென்ற பித்தளைத் தகட்டில் மின்னும் போர்டு இருந்த ஸ்பார்டெக் பதித்த மிகப் பெரிய கட்டிடத்திற்குள் நுழைந்தார் குணாளன்.
கண்ணாடிகள் பொருத்தப்பட்ட கதவினைத் தள்ளியதும் ஏ.ஸி.யின் மென் குளிர் காற்று வீசியது.
ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண் இன்முகத்துடன் வரவேற்றாள். “யெஸ் சார், வாட் கான் ஐ டு ஃபார் யூ?”
குணாளன் சீருடை அணியாமல் மஃப்டியில் இருந்தார்.
“அட்வர்டைசிங் விஷயமா வந்திருக்கேன்.”
“மூணாவது காபினுக்குப் போங்க சார். அங்கே சுஜாதான்னு மீடியா எக்ஸிக்யூட்டிவ் இருப்பாங்க. அவங்க கிட்ட சொல்லுங்க. ஷீ வில் ஹெல்ப் யூ.”
“தாங்க்யூ.”
குணாளன் மூன்றாவது காபினை அடைந்தார். ‘சுஜாதா என்று ப்ளாஸ்டிக் தகட்டில் எழுதி வைக்கப்பட்ட பெயர் பலகை இருந்த மேஜைக்கு அருகில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஒரு இளம் பெண் கோப்புகளில் மூழ்கியிருந்தாள். அவளது மேஜைக் கண்ணாடிக்கு அடியில் ராகவேந்தர் படம் வைக்கப்பட்டிருந்தது. மேஜை மீது இருந்த அவளது கைப் பையிலும், சாவிக் கொத்திலும் ராகவேந்தர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ‘தீவிரமான ராகவேந்திரர் பக்தை போலும்’ நினைத்துக் கொண்ட குணாளன் “எக்ஸ்க்யூஸ் மீ” என்றார்.
“யெஸ். ப்ளீஸ் பீ ஸீட்டட்.”
குணாளன் உட்கார்ந்தார். தான் கொண்டு வந்திருந்த வார இதழை எடுத்துப் பிரித்தார்.
லவன் சோப் விளம்பரத்தைக் காட்டினார். “இந்த விளம்பரம் உங்க கம்பெனி குடுத்தது தானே மேடம்.”
“ஆமா.”
“இதிலே மாடலிங் பண்ணியிருக்கற பொண்ணு யார். இவ பேர் என்ன? சினிமா நடிகையா?”
“இதெல்லாம் எதுக்காக நீங்க கேக்கறீங்க?”
அவள் குரலில் லேசான உஷ்ணம் தெரிந்தது. தொடர்ந்தாள். “உங்களுக்கு விளம்பரம் பண்ணனுமா? அதுக்கு இந்த மாடல் வேணுமா? அப்படின்னா அதைச் சொல்லியில்ல கேட்டிருக்கணும். ஒண்ணுமே சொல்லாம இவ யாரு. பேரு, சினிமா நடிகையான்னு கேட்டா என்ன சார் அர்த்தம்?” தேவை இல்லாமல் டென்ஷன் ஆனாள்.
அவள் வெடித்து முடிக்கும் வரை காத்திருந்த குணாளன் புன்னகைத்தபடியே தன் அடையாள அட்டையை எடுத்துக் காட்டினார்.
“சார், நீங்க போலீஸ் டிபார்ட்மென்ட்டா? உங்களுக்கு இந்தப் பெண்ணைப் பத்தின டீடெய்ல்ஸ் வேணும், அவ்வளவு தானே சார்? இந்த காபின்ல இருந்து ரைட் சைட்ல போங்க. கடைசியா ஒரு காபின் இருக்கும். அங்க ஒருத்தர் இருப்பார். பேர் சம்பத். அவர்தான் மாடலிங் கேர்ள்ஸ் அரேன்ஜ் பண்றவர். அவர்கிட்ட கேளுங்க சார்.”
“தாங்க் யூ.”
குணாளன் அவள் சொன்ன காபினுக்குள் சென்றார். அங்கே மேஜை மீது பல புகைப் படங்கள் கிடக்க, எதிரில் இருந்தவருக்கு அதில் உள்ளவர்களின் விபரங்களைக் கூறிக் கொண்டிருந்தான் ஒருவன்.
“எக்ஸ்க்யூஸ் மீ” என்றார்.
“யெஸ் சார்.”
“மிஸ்டர் சம்பத்...?”
“நான்தான் சார். உட்காருங்க. ஒரு நிமிஷம். இவரைக் கவனிச்சுட்டு வந்துடறேன்.”
குணாளன் உட்கார்ந்தார். அவருக்கு அருகில் ஏற்கெனவே உட்கார்ந்திருந்தவர் அவரது தயாரிப்பின் விளம்பரத்துக்காக மாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டினார். சம்பத்திடம், “சார், இவங்க நல்லா இருக்காங்க. வேணும்னா கேளுங்களேன்” என்றார்.
சம்பத் சிரித்தார். “சார் இவங்க ஒரு நல்ல ஷூட்டிங்குக்கு டேன் தெளசண்ட் கேட்பாங்க. உங்க பட்ஜெட்டுக்கு ஒத்துவராதே சார்?”
“டென் தெளசண்டா? வாயைப் பிளந்தார்.”
“இந்தப் பொண்ணைப் பாருங்க சார். த்ரீ தெளசண்ட் தான். உங்க விளம்பரத்துக்குப் பொருத்தமா இருப்பாங்க.”
பல படங்களைப் பார்த்து, புரட்டி எடுத்து, பின் அரை மனதுடன் சம்பத் காண்பித்த பெண்ணையே தேர்ந்தெடுத்து விட்டு புறப்பட்டார் அந்த மனிதர்.
“சொல்லுங்க சார்.” குணாளனிடம் சம்பத் கேட்டான்.
வார இதழை எடுத்து மேஜை மீது போட்டார் குணாளன். லவண் சோப் விளம்பரத்தை எடுத்து, அதில் உள்ள பெண்ணின் படத்தைக் காண்பித்தார்.
“நான் போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து வந்திருக்கேன். இந்தப் பெண்ணைப் பத்தின தகவல்கள் எனக்குத் தேவைப்படுது.”
“இந்தப் பொண்ணு வேப்பேரியில இருக்கா.”