கன்யாகுமாரி - Page 9
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7570
23
சேட்டின் அறை. ஒரு மலையைப் போல் சேட் படுத்திருக்கிறார். அவரின் பைஜாமாவைச் சுருட்டி மேலே ஏற்றிவிட்ட அவர் மனைவி அவரின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருக்கிறாள்.
சேட் பாதி மூடிய கண்களுடன் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். சத்தம் வெளியே கேட்கவில்லை. உதடுகள் மட்டும் அசைகின்றன.
உதடுகளின் அசைவு நின்றதும் அவள் மெதுவாக தன்னுடைய கைகளை எடுத்து எழுந்து நிற்கிறாள். டீப்பாயில் இருந்த வெள்ளியால் ஆன பெட்டியில் இருந்து பாக்கைக் கொஞ்சம் எடுத்து வாய்க்குள் போட்டு மென்றவாறு அவள் விளக்கை அணைக்கிறாள். மங்கலான இருட்டில் மூச்சு விடுவதற்கேற்றபடி சேட்டின் உடம்பு உயர்வதும் தாழ்வதுமாய் இருக்கிறது. அவள் இரட்டைக் கட்டிலின் இன்னொரு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறாள். சிறிது நேரத்தில் சேட் குறட்டை விட ஆரம்பிக்கிறார்.
24
இரவு.
ஜெயன் தன்னுடைய அறையின் ஜன்னலருகில் நின்றிருக்கிறான். தூரத்தில் கடற்கரை தனிமையானதாகவும் ஒரு கனவைப் போலவும் தெரிகிறது. மங்கலான விளக்குகள், காந்தி மண்டபம்.
அவன் அறைக்குள் இங்குமங்குமாய் நடக்கிறான். தன்னுடைய கடந்த காலத்தின் இருண்ட பக்கங்களை நினைத்துப் பார்த்தவாறு அவன் இருக்கிறான். பார்கள், கேபரேக்கள், சில நிமிடங்கள் மட்டுமே நிலவிய உறவுகள்...
எங்கே பார்த்த முகம் அது? அவன் மீண்டும் வெளியே வருகிறான்.
24-ஏ
வராந்தா, இரவு நேரம்.
பணியாள் வராந்தாவில் இருந்த விளக்குகளை ஒவ்வொன்றாக அணைக்கிறான். மங்கலான இருட்டு, ஜெயன் மங்கலான இருட்டில் வராந்தாவில் அசையாமல் நின்றிருக்கிறான்.
ஏதோ சத்தம் கேட்டு தலையைத் தூக்கி பார்த்தால் சேட்டின் அறை கதவைத் திறந்து ஒரு பெண் உருவம் வெளியேறிக் கொண்டிருப்பது தெரிகிறது. வேகமாக வெளியேறிய அந்த உருவம் நீச்சலடிக்கும் இளைஞனின் அறைக்குள் நுழைகிறது.
நீச்சலடிக்கும் இளைஞன் கதவுக்கு வெளியே தலையை நீட்டி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறான்.
அவனின் பார்வையில் - வராந்தாவின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் ஜெயன் தெளிவில்லாமல் தெரிகிறான்.
25
ஜெயனின் அறை இரவு.
ஜெயன் மீண்டும் அறைக்குள் போய் பாதி படித்து வைத்திருந்த ஆங்கில நாவலை எடுத்து படிக்க ஆரம்பிக்கும்போது வாசல் பக்கம் குரல்:
"ஏய் மிஸ்டர்!"
தன்னுடைய சதைப் பிடிப்புடன் உருண்டு திரண்டு இருக்கும் உடம்பைக் காட்டியவாறு பைஜாமா மட்டும் அணிந்திருக்கும் நீச்சலடிக்கும் இளைஞன் வெளியே நின்றிருக்கிறான். ஜெயன் மரியாதை கலந்த குரலில்-
"கம் இன் ப்ளீஸ்!"
நீச்சலடிக்கும் இளைஞன்: என் பேரு ஃப்ரெடரிக். ஐ ஹேவ் த்ரீ யுனிவர்ஸிட்டி ரிக்கார்ட்ஸ் டூ மை க்ரடிட்...
ஜெயன்: (தயங்கியவாறு) க்ளாட் டூ மீட் யூ. என் பேரு ஜெயன். இலேசாக சிரித்தவாறு.
ஃப்ரெடரிக்: சும்மா பேசிக்கிட்டிருக்க எனக்கு நேரமில்ல. சம் ஒன் ஈஸ் வெயிட்டிங் ஃபார் மீ. ஒரு வார்னிங்...(சிரிப்பு மாறுகிறது) மைன்ட் யுவர் ஒன் பிஸினஸ்...
ஜெயன்: நான்...
ஃப்ரெடரிக்: நீங்க எப்படிப்பட்ட டைப்னு எனக்குத் தெரியும். நீங்க சாப்பிடுறது இல்ல. மற்றவங்களை சாப்பிட விடுறதும் இல்ல.
ஜெயன்: ஸாரி... நான்...
ஃப்ரெடரிக்: சாயங்காலத்துல இருந்தே பதுங்கி ஒதுங்கி நீங்க நின்னுக்கிட்டு இருக்குறதை நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். தேவையில்லாம என் விஷயத்துல தலையிடாதீங்க.
ஜெயன்: (வருத்தத்துடன்) மிஸ்டர் ஃப்ரெடரிக்!
ஃப்ரெடரிக்: இங்க எல்லாரும் ஒழுக்கமா நடக்குற மாதிரி பார்த்துக்குற வேலையை அரசாங்கம் உங்கக்கிட்ட தந்திருக்குதா என்ன?
அவன் வெளியே செல்கிறான்.
என்ன செய்வதென்று தெரியாமல், அதே சமயம் பயங்கர கோபத்துடன் ஜெயன் நின்றிருக்கிறான். வாசலில் அவன் நிற்கும்போது, ஃப்ரெடரிக்கின் அறை வாசல் கதவு தாழ்ப்பாள் போடப்படும் சத்தம்.
தூரத்தில் சேரிகளில் எங்கோ இருந்து புறப்பட்டு வரும் சன்னமாக ஒலிக்கும் ஒரு பாடல்...
26
இரவு.
பார்வதியின் குடிசை.
தூரத்தில் ஏழைகள் வாழ்ந்து கொண்டிருக்கும் சேரிப்பகுதி.
பார்வதி குடிசையில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து சங்கு மாலையைக் கோர்த்துக் கொண்டிருக்கிறாள். வெளிச்சமே இல்லாத ஒரு மூலையில் கயிற்றால் ஆன கட்டிலில் கம்பளியை மூடிக் கொண்டு அவளுடைய பாட்டி படுத்திருக்கிறாள்.
ஓலைக் கதவை யாரோ வெளியே இருந்து அசைக்கும் ஓசையைக் கேட்டு அவள் திடுக்கிட்டு யாரென்று பார்க்கிறாள்.
வெளியேயிருந்து குரல்:
கதவைத் திறடி...
பார்வதி பயத்துடன் பாட்டி படுத்திருக்கும் கயிற்றுக் கட்டிலின் காலைப் பிடித்தவாறு மெதுவான குரலில் முணுமுணுக்கிறாள்:
"பாட்டி... மாமன்!"
கிழவி படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்திருக்கிறாள். அம்மைத் தழும்பு விழுந்த முகத்தில் பார்வை தெரியாத இரண்டு கண்கள்.
கிழவி: டேய் குரிப்பு... ராத்திரி ஒரு மூலையில கிடந்து படுக்க நீ விடுறியா இல்லியா?
வெளியே இருந்து குரல்:
கதவைத் திறடி...
பார்வதி பயத்துடன் ஓலையால் ஆன கதவைத் திறக்கிறாள். மது அருந்திவிட்டு பார்ப்பதற்கு எந்தவித மோசமான காரியத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கும் மனிதன் என்று தோற்றமளிக்கும் 35 இலிருந்து 45 வயதிற்குள் மதிக்கக்கூடிய ரவுடியான வீரப்பன் உள்ளே நுழைகிறான். கட்டம் போட்ட கைலி கட்டியிருக்கிறான். பட்டன் இடாத காலர் வைத்த பனியன் அணிந்திருக்கிறான்.
கிழவி: நேரம் இப்போ என்ன தெரியுமாடா?
வீரப்பன்: எனக்குத் தெரியாது... (பார்வதியிடம்) ஒரு ரூபா தாடி...
கிழவி: அவ கையில எப்படிடா காசு இருக்கும்?
வீரப்பன்: எனக்கு அதெல்லாம் தெரியாது.
கிழவி: அவ ஏதாவது கொண்டு வர்றதை வச்சுத்தானடா நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்!
வீரப்பன்: (பார்வதியிடம்) நீ பயப்படாதடி... உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அதுக்குப் பிறகு எனக்குள்ளதெல்லாம் உனக்குத் தானே!
கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து அவன் பார்வதியைப் பார்க்கிறான். அவள் பயந்து போய் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறாள்.
கிழவி: ஒருத்தியை அடிச்சு கொன்னது போதாதா? இன்னொருத்தியைக் கட்டணும்னு வேற ஆசைப்படுறயாக்கும்... ம்க்கும்...
வீரப்பன்: (பார்வதியை மேலிருந்து கீழ்வரை பார்த்தவாறு) இன்னும் ஒரு வருஷம் ஆகட்டும். என்னடி... என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதம்தானே?
பார்வதி பயந்து போய் உட்கார்ந்திருக்கிறாள். பதிலெதுவும் கூறும் நிலையில் அவள் இல்லை.
வீரப்பன்: சொல்லுடி...
கிழவி: நீ கிளம்புடா... பிள்ளையைத் தேவையில்லாம பயமுறுத்தாதே.
வீரப்பன்: கண்ணு தெரியலையேன்னு கூட நான் பார்க்க மாட்டேன். மிதிச்சு நான்... (பார்வதியிடம்) ஒரு ரூபா எடு...
பார்வதி: என்கிட்ட காசு இல்ல...