கன்யாகுமாரி - Page 7
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7570
வராந்தாவின் இன்னொரு பகுதியில் நின்றிருக்கும் சாமியார் கட்டிடத்தின் பின் பாகத்தில் இருக்கும் காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்.
ஜெயன் சாமியாரை நெருங்கி வருகிறான்.
ஜெயன்: எதுவுமே சரியா ஞாபகத்துல வரமாட்டேன்குது.
சாமியார்: (அமைதியாக புன்னகைத்தவாறு) அது எவ்வளவு பெரிய விஷயம்! பலருக்கும் அந்த சித்திதான் கட்டாயம் வேணும்.
ஜெயன்: நான் அவளைப் பார்த்திருக்கேன்.
சாமியார்: யாரை?
ஜெயன்: இப்போ அறைக்குள்ளே போனாளே, அந்தப் பொண்ணை! எங்கே பார்த்தோம்ன்றதை எவ்வளவு யோசிச்சாலும் சரியா ஞாபகத்துல வரவே மாட்டேங்குது.
சாமியார்: உலகம்ன்றதே ரொம்பவும் சின்னது.
ஜெயன்: நான் சின்னப் பையனா இருக்குறப்போ என்னோட ஞாபக சக்தியைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுவாங்க. மூணு வயசுல நடந்த விஷயங்களைக் கூட நான் அவ்வளவு அருமையா ஞாபகப்படுத்தி சொல்லிக்கிட்டு இருந்தேன்னா பார்த்துக்கங்களேன். (மீண்டும் தீவிரமாக சிந்தித்து) எங்கே வச்சு பார்த்தேன்? வெரி ஃபெமிலியர்... ஐ ஆம் ஷுவர்...
சாமியார்: மனசு இந்த மாதிரிதான் சில நேரங்கள்ல விளையாட்டு காண்பிக்கும். விதி வசத்தால நாம ஒண்ணை இழந்துட்டோம்னு நினைச்சு அதை மறக்க முயற்சி செஞ்சிக்கிட்டு இருப்போம். அப்போ பார்த்தா பழைய தகரப் பெட்டியில இருந்து காணாமப் போன அந்த ஒண்ணை மனசு மறுபடியும் நம்ம முன்னாடி கொண்டு வந்து நிறுத்தும்.
பகல் நேரத்தில் பார்த்த பணியாள் ட்ரேயில் சோடாவும், மது குப்பிகளும் எடுத்துக் கொண்டு நடந்து போகும்போது அவர்கள் எதிரில் வந்ததும் நிற்கிறான்.
சாமியார் ஜெயனின் முகத்தைப் பார்க்கிறார். ட்ரேயில் இருந்த தன்னுடைய பார்வையை அவன் அகற்றுகிறான். சாமியார் தன்னைப் பார்க்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு புன்னகையுடன்-
ஜெயன்: எனக்கு இப்போ எந்த டெம்ப்டேஷனும் இல்ல... என்னோட கோட்டா எப்பவோ முடிஞ்சிடுச்சு.
பணியாள்: (சாமியாரிடம்) இங்கேயே சாப்பிடுறீங்களா, எப்படி?
சாமியார்: நான் வர்றேன்.
பணியாள்: இன்னைக்கு ரெண்டு பேரு லீவ் சார். ஆறு அறைகளையும் நானே பார்க்க வேண்டியதிருக்கும். டிப்பார்ட்மெண்ட் இந்த விஷயத்தையெல்லாம் யோசிச்சுப் பார்க்குதா? எதுதான் நினைக்கிற மாதிரி நடக்குது?
சேட்டின் அறை திறக்கிறது. சேட்டும் அவரின் மனைவியும் அறையைப் பூட்டிவிட்டு வெளியே நடக்கும்போது சேட் சாமியாரை தூரத்தில் பார்த்தவாறே வணங்குகிறார்.
(மேலே இரண்டு பிரிவுகளாக ஆறு அறைகள். இடது பக்கம் சாமியார், அதற்கடுத்து சேட், அதைத் தாண்டி நீச்சலடிக்கும் இளைஞன். வலது பக்கத்தின் ஓரத்தில் ஜெயன், அதற்கடுத்து கிழவரும் இளம்பெண்ணும், மூன்றாவது அறையில் கதையில் நேரடியாக வராத ஒரு குடும்பம்)
ஸ்போர்ட்ஸ் ஷர்ட்டும், பேன்ட்டும் அணிந்து மார்பில் பொத்தான்களை திறந்துவிட்டு உடம்புப் பகுதியை வெளியே காட்டிக் கொண்டிருக்கும் நீச்சலடிக்கும் இளைஞன் வெளியே வந்து அறைக் கதவைப் பூட்டுகிறான். அவன் அவர்களைப் பார்க்கிறான்.
“ஹை... ஹவ் ஆர் யூ?”
பதில் எதிர்பார்க்காத அந்தக் கேள்வியை காற்றில் பறக்கவிட்டு அவன் வாயால் விஷில் அடித்தவாறு நடந்து படிகளில் இறங்கிப் போகிறான்.
17
ரெஸ்ட் ஹவுஸில் இருக்கும் டைனிங் ஹால்.
கிழவரும் அந்த இளம் பெண்ணும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டைனிங் அறையின் வாசலில் விஷில் சத்தம் கேட்கிறது. கிழவர் தலையை உயர்த்தி பார்த்தால், நீச்சலடிக்கும் இளைஞன் வந்து கொண்டிருக்கிறான்.
அவன் உள்ளே வந்தபிறகும் கொஞ்சம் கூட விஷில் அடிப்பதை நிறுத்தாமல் டைனிங் டேபிளைச் சுற்றி வந்து சமையல் செய்யும் இடத்தின் வாசலில் நின்றவாறு கேட்கிறான்.
“சங்கரன் குட்டி... என் கோழி ரெடி ஆயிடுச்சா?”
உள்ளேயிருந்து குரல்: “ரெடி ஆயிடுச்சு சார்...”
மீண்டும் விஷில் சத்தம். விஷிலடித்தவாறு டைனிங் டேபிள் நடு நாயகமாகப் போட்டிருக்கும் நாற்காலியில் அமர்கிறான். அப்போது சேட்டும் அவரின் மனைவியும் அங்கே வந்து அமர்கிறார்கள்.
நீச்சலடிக்கும் இளைஞன்: குட் ஈவ்னிங்! சேட்டு மனதிற்குள் முணுமுணுக்கிறார்- வெளியே காட்டிக் கொள்ளாமல்.
சேட்டின் மனைவி: (மெதுவான குரலில்) ஈவ்னிங்!
அவள் அவனைப் பார்க்காமல் இருக்க முயற்சிக்கிறாள். ஆனால், சலனங்களைக் கொண்ட அந்த விழிகள் அவ்வப்போது அவனின் கண்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.
முன்பு நாம் பார்த்த பணியாள் தாண்டிச் சென்றபோது நீச்சலடிக்கும் இளைஞன் அவனை அழைக்கிறான்.
“பாஸ்கரா!”
அவன் அருகில் வந்தவுடன், கையால் சைகை காட்டுகிறான்-
“ஒரு லார்ஜ்”
பணியாள் சேட்டிற்கும், அவருடைய மனைவிக்கும் சப்பாத்தியும் குருமாவும் கொண்டு வந்து வைக்கிறான்.
கிழவருக்கு இளைஞன் நடந்து கொள்ளும் விதம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இருந்தாலும் மனதில் உண்டான எண்ணத்தை அடக்கிக் கொண்டு அவர் சாப்பிடுகிறார். தன்னுடன் இருக்கும் பெண்ணை கிழவர் பார்க்கிறார். அவள் அதை கவனிக்கவில்லை. அதற்குள் கிழவர் சாப்பிட்டு முடிக்கிறார்.
நீச்சலடிக்கும் இளைஞனின் முன்னால் பணியாள் பாஸ்கரன் விஸ்கி க்ளாஸையும், மூடி திறக்கப்பட்ட சோடாவையும் கொண்டு வந்து வைக்கிறான். அவன் அதில் சோடாவை ஊற்றும்போது-
நீச்சலடிக்கும் இளைஞன்: எனி ஒன் டூ ஷேர் எ ட்ரிங் வித் மீ?
யாரும் பேசவில்லை.
இளைஞன்: சேட்ஜி, ஒரு ஸ்மால் விஸ்கி?
சேட்: (தர்மசங்கடமாக உணர்ந்து) நோ சார். நமக்கு ப்ளட் சுகர், கொலஸ்ட்ரால், ஹை ப்ளட் பிரஸ்ஸர் -எல்லாமே இருக்கு.
நீச்சலடிக்கும் இளைஞன்: வாட் எ பிட்டி (எல்லோரையும் பார்த்து கண்ணாடி டம்ளரை உயர்த்தி) “சீயேர்ஸ்...!”
பாதி குடித்துவிட்டு ஒரு சிகரெட்டை உதட்டில் வைத்து புகைத்தபடி பார்த்தவாறு-
“கிருஷ்ணன் குட்டி! சிக்கன்...”
பெரிய ஒரு தட்டில் பொரித்த ஒரு முழு கோழியை பணியாள் அவன் முன்னால் கொண்டு வந்து வைக்கிறான். அவன் திருப்தியுடன் அதைப் பார்த்தவாறு மீண்டும் குடியைத் தொடர்கிறான். சேட்டின் மனைவியைப் பார்த்தவாறு அவன் கண்ணாடி டம்ளரை உதட்டில் வைக்கிறான்.
அப்போது சாமியார் உள்ளே நுழைகிறார்.
காலியாய் இருக்கும் நாற்காலியில் அமர்ந்த சாமியார் குறிப்பாக யாரையும் பார்க்காமல், ஒட்டுமொத்தமாக எல்லாரையும் ஒரு நோட்டம் விடுகிறார். கிழவரின் தர்மசங்கடமான நிலை, நீச்சலடிக்கும் இளைஞனின் உடம்பையே பார்த்துக் கொண்டிருக்கும் சேட்டின் மனைவியின் கண்கள், ஒரு இயந்திரத்தைப் போல தலையைக் குனிந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இளம்பெண் - எல்லோரையும் அவர் பார்க்கிறார்.
இளம்பெண் தலையை உயர்த்தும்போது வாசலில் ஜெயன் நிற்கிறான். ஒரு நிமிடம் அவர்கள் இருவரின் கண்களும் சந்திக்கின்றன. அடுத்த நிமிடம் அவள் வேகமாக தலையைக் குனிந்து கொள்கிறாள்.
கிழவர் ஒருவித அசவுகரியத்துடன் எழுந்து நிற்கிறார். கையைக் கழுவுவதற்காக வாஷ்பேஸினை நோக்கி நடக்கும்போது -
கிழவர்: சீக்கிரம் சாப்பிட்டு முடி எவ்வளவு நேரமாச்சு!