கன்யாகுமாரி - Page 5
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7570
சாமியார்: இன்னைக்கு எவ்வளவு ரூபாய்க்கு மாலை வித்திருப்பே?
பார்வதி: ஆறு ரூபாவுக்கு.
சாமியார்: புத்திசாலிப் பொண்ணு. ஆமா, உன் பேர் என்ன?
பார்வதி: பார்வதி.
அவள் என்னவோ சிந்தனையுடன் கடற்கரையையே பார்க்கிறாள்.
பார்வதி: (தனக்குத் தானே) நேரம் சாயங்காலம் ஆன பிறகும் வேலை முடியல... சரி... நான் வரட்டுமா?
சாமியார்: நீ வீட்டுக்குப் போம்மா. அம்மா உன்னைத் தேடிக்கிட்டு இருக்கப் போறாங்க.
பார்வதி: எனக்கு அம்மாவே இல்ல...
சாமியார்: அப்பா?
பார்வதி: அவரையும் நான் பார்த்தது இல்ல. இருக்குறது பாட்டி மட்டும்தான். அது கண்டபடி கெட்ட வார்த்தையில பேசும். பார்வை இல்லாதவங்களுக்கு இரவும் பகலும் தெரியுமா என்ன?
சாமியார்: பாட்டிக்கு கண் தெரியாதா?
பார்வதி: தெரியாது. அது கண்டபடி பேசினாலும், அதுமேல எனக்கு பயம் கிடையாது. மாமன் வீட்டுக்கு வராம இருக்கணும். அது ஒண்ணுதான் நான் கடவுள்கிட்ட வேண்டிக்கிறது.
சாமியார்: உன் மாமனா?
பார்வதி: மாமன் ரொம்பவும் மோசமான ஆளு. ஊர்க்காரங்க எல்லாருக்கும் அந்த ஆளைக் கண்டு பயம். போலீஸ்காரனைக் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போன வீரப்பனைப் பற்றி சாமி, நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா?
அதைக் கேட்டு சாமியார் இலேசாக அதிர்ச்சியடைகிறார். அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமலே, தனக்குத் தெரியாது என்கிறார்.
அப்போது தூரத்தில் யாரோ கூவும் சத்தத்தைக் கேட்டு அவள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடுகிறாள்.
11
கடற்கரை. மாலை நேரம்.
பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது மதிக்கக்கூடிய சங்கரன். கையில் கல்லால் ஆன உளியும் சுத்தியலும் அடங்கிய பையை வைத்திருக்கிறான். அரைக் கை சட்டையும், வேஷ்டியும் அணிந்திருக்கிறான். கறுத்துப் போய் காணப்படும் அந்த இளைஞன் கடுமையான உழைப்பின் காரணமாக பலமான உடல்வாகைக் கொண்டிருக்கிறான்.
ஓடிவரும் பார்வதிக்காக அவன் காத்திருக்கிறான்.
பார்வதி: ஏன் இவ்வளவு தாமதமா வர்றீங்க?
சங்கரன்: சில நேரங்கள்ல இப்படி தாமதமாயிடுது. வேலை இருந்தா நீ போக வேண்டியதுதானே!
அவளுக்கு சங்கரனின் கோபமும், தூக்கியெறிந்து பேசும் குணமும் நன்கு தெரிந்த ஒன்று. இரண்டு பேரும் நடக்கிறார்கள்.
சங்கரன்: வீட்டுக்குப் போகலியா?
பார்வதி: போகணும்.
சங்கரன்: மீன் பிடிக்கிற அந்தோணியும் சேவியரும் நேத்து உன் மாமனுக்கு நல்ல உதை கொடுத்திருக்காங்க. வேலை செய்ற இடத்துல யாரோ சொன்னாங்க.
பார்வதி: கொடுக்க வேண்டியதுதான். கள்ளு குடிச்சிட்டு தகராறு பண்ணணும்னு போனா சும்மாவா இருப்பாங்க!
சங்கரன்: என்னை ஒரு நாளு இப்படித்தான் வாய்க்கு வந்தபடி திட்டினான். நான் அப்போ பேசாம விட்டுட்டேன். இனியொரு தடவை அப்படி அந்த ஆளு நடக்கட்டும். சுத்தியலை வச்சு தலையில ஒரே போடா போட்டுருவேன்.
பார்வதி: அந்த ஆளு சுத்த மோசம். நீங்க ஏன் அந்த ஆளுக்கிட்ட தகராறுக்குப் போகணும்? அவர் பேசினது காதுலயே விழலன்றது மாதிரி இருந்துருங்க.
சங்கரன்: சரியான மாமன் உனக்கு கிடைச்சான்!
பார்வதி: அந்த ஆளு என்னோட மாமன் ஒண்ணுமில்ல...
சங்கரன்: பிறகு ஏன் அந்த ஆளை நீ அப்படி கூப்பிடுறே?
பார்வதி: அப்பா அம்மா இல்லாத இந்த ஆளை பாட்டிதான் எடுத்து வளர்த்தாங்க. எங்கம்மா அவரை அண்ணன்ணு கூப்பிடுவாங்க. பிறகு நான் எப்படி அவரைக் கூப்பிடுறது?
சங்கரன்: முன்னாடி வளர்த்ததுக்கு பாட்டி இன்னைக்கு அனுபவிக்கிறாங்கள்ல?
அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து மிகவும் நெருக்கமாக நடக்கிறார்கள்.
பார்வதி: வெள்ளைக்காரங்க வந்திருக்காங்க. மூணு மாலை வாங்கினாங்க. இன்னைக்கு வியாபாரம் பரவாயில்ல...
சங்கரன்: ஆமா... எதைப் பார்க்கணும்னு அவங்க இங்கே வர்றாங்க?
பார்வதி: இதெல்லாம் நமக்குத் தெரியுமா என்ன? அவங்க போட்டிருக்குற ட்ரெஸ்ஸைப் பார்க்கணுமே! ஆம்பளை யாரு பொம்பளை யாருன்னே கண்டுபிடிக்க முடியாது...
பாதை திரும்புகிற இடத்தில் சங்கரன் நிற்கிறான். பையிலிருந்து ஏதோ ஒரு பொட்டலத்தை எடுத்து அவள் கையில் தருகிறான்.
அதை வாங்குவதற்கு முன்பு -
பார்வதி: என்ன இது?
சங்கரன்: (கோபத்துடன்) மண்ணாங்கட்டி...
நீட்டிய பொட்டலத்தை மீண்டும் பைக்குள்ளே அவன் போடுகிறான்.
பார்வதி: அந்தப் பெரிய பாறை வரை யாராலயும் நீந்த முடியுமா?
சங்கரன்: நீ நீந்தப் போறியா?
பார்வதி: அதைச் சொல்லல. முன்னாடி ஒரு ஆளு நீந்தியிருக்காராம். சாமியாருக்கு அந்த ஆளைத் தெரியுமாம்.
சங்கரன்: எந்த சாமியார்?
தூரத்தில் சுட்டிக் காட்டியவாறு-
பார்வதி: அதோ அங்கே உட்கார்ந்திருந்த சாமியார்...
சங்கரன்: ம்... நேரமாயிடுச்சு. நீ புறப்படு.
அவள் இலேசான புன்னகையுடன் அங்கு தயங்கியவாறு நிற்கிறாள். அவன் சிரிப்பை மறைத்துக் கொண்டு பைக்குள் இருந்த பேப்பர் பொட்டலத்தை எடுத்து அவள் கையில் தருகிறான். அவள் அதை வாங்கிக் கொண்டு ஓடுகிறாள். சிறிது தூரம் சென்றபிறகு பொட்டலத்தை அவிழ்த்து பார்க்கிறாள். அதை எடுத்து வாயில் வைத்து கடித்தவாறு பின்னால் திரும்பி உரத்த குரலில் கூறுகிறாள்.
பார்வதி: மண்ணாங்கட்டி நல்ல இனிப்பாவே இருக்கு.
சங்கரன்: போடி முதல்ல...
12
ரெஸ்ட் ஹவுஸ் - இரவு.
வராந்தாவில் ஹிப்பிகள். சரஸ்ஸின் புகையில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தங்களையே மறந்து இருக்கின்றனர். அவர்கள் அமைதியாக இருக்கின்றனர். அவள் அவனுடைய மார்பில் சாய்ந்தவாறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவாறு புகைவிட்டுக் கொண்டு தியான நிலையில் இருக்கிறாள்.
மற்ற மூன்று ஹிப்பிகளும் அக்கார்டியன் இசைக் கருவியை மீட்டியவாறு பாடுகின்றனர் - ஆங்கிலத்தில்:
“ஐ நெவர் லவ் யூ
ஐ நெவர் ட்ரீம் யூ
பிகாஸ் ஐ ஆம் இன் லவ்
ஐ ஆம் இன் லவ்
ஐ ஆம் இன் லவ் வித் லவ்”
13
ரெஸ்ட் ஹவுஸின் படிக்கட்டில் தனியாக அமர்ந்திருக்கும் ஜெயன் ஹிப்பிகள் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
அவன் தனக்குள் கூறிக் கொள்கிறான்:
“ஐ வாஸ் இன் லவ் வித் லவ்!”
காதலை பழைய பாத்திரங்களைப் போல விலைக்கு வாங்க முயற்சி செய்து நடந்து திரிந்த ஒரு வியாபாரி.
கடந்த கால நினைவுகள் அவனுடைய மனதில் தோன்றி மறைகின்றன.
மூன்று நான்கு ரூபாய் நோட்டுகள். இளைஞனின் விரல்கள் அந்தப் பணத்தை நீட்டுகின்றன. க்யூட்டெக்ஸ் பூசிய விரல்கள் அந்தப் பணத்தை வேகமாக வாங்குகின்றன. ரூபாய் நோட்டுகளை சுருட்டி பிடித்திருக்கும் விரல்கள், ஹேண்ட் பேகின் கொக்கியைத் திறக்கின்றன.