கன்யாகுமாரி - Page 6
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7570
பணம் கொடுப்பவனையும், அதை வாங்குபவளையும் நாம் பார்க்கவில்லை. கைகள் மட்டுமே நமக்குக் காட்டப்படுகின்றன.
பெண்ணின் குரல்: நான் எப்பவுமே மறக்கமாட்டேன்.
ஆணின் விரல்கள் பெண்ணின் ஜாக்கெட் பட்டனை மெதுவாக அவிழ்க்கின்றன.
பெண்ணின் குரல்: நா... நோ ப்ளீஸ்...
ஜெயனின் குரல்: டாமிட்...
ஒன்றோடொன்று உரசிக் கொள்ளும் ஒயின் க்ளாஸும் விஸ்கி க்ளாஸும். பெண்ணின் மிருதுவான கைகளில் ஒயின் க்ளாஸ். இளைஞனின் கையில் விஸ்கி க்ளாஸ்.
ஃப்ளாஸ்பேக் - மற்றொரு காட்சி.
ஆணின் தோள் மேல் சாய்ந்தவாறு கெஞ்சுகிற ஆதரவற்ற பெண்ணின் குரல்:
“என்னைக் கைவிட்டுற மாட்டீங்களே! என்னைக் கைவிட்டுற மாட்டீங்களே!”
ஜெயனின் குரல்: காட்டிய அன்புக்கான முதலையும் வட்டியையும் நான் ஏற்கனவே தந்துட்டேனே! நௌ கெட் அவுட்!
ஆணின் கைகள் பாதத்தைப் பற்றிய பெண்ணின் கைகளை விலக்குகின்றன. காலியாய் இருக்கும் விஸ்கி குப்பி, அதற்கு அடியில் நான்கைந்து துளிகள் இருக்கும். எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக் குச்சி. குப்பியின் வாய் பகுதியை இலேசாக நடுங்கிக் கொண்டிருக்கும் விரல்கள் பிடிக்கின்றன. ஒரு நிமிடம் அது உள்ளே போகும்போது குப்பிக்குள் எரியும் ஜுவாலை தெரிகிறது. சிறிது நேரத்தில் அது அணைந்தும் போகிறது. கேமரா மீண்டும் ஜெயனை நோக்கி திரும்புகிறது - ஆழமாக என்னவோ சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறான் ஜெயன்.
14
ஜெயனின் கடந்த காலத்தில் அவன் சந்தித்த பெண்களுக்கு முகமே இல்லை- கையில் மைக் வைத்து பாடிக் கொண்டிருக்கும் ஒரு இளம் பெண். கண் சிமிட்டிக் கொண்டிருக்கும் விளக்கொளியில் நின்று கொண்டிருக்கும் பாடகியின் உடலமைப்பு நன்றாகவே தெரிகிறது. பாடல் தொடர்ந்து கொண்டிருக்கும்போது ஓடுகின்ற காரை நோக்கி நாம் பார்வையாளர்களின் கவனத்தைத் திருப்புகிறான். ஜெயன் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அருகில் அந்த இளம்பெண் அமர்ந்திருக்கிறாள். பாடல் தொடர்கிறது.
அதே கார் வேறொரு இடத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. பாட்டு நிற்கவில்லை. வேறு உடை அணிந்த இளம்பெண். அவள் முகம் நமக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த ஒன்றுதான். காரை ஓட்டுகிறபோது கடைக்கண்ணால் அவளின் சதைப் பிடிப்பான உடம்பை அளவெடுக்கிறான் ஜெயன்.
பாடலின் முடிவில் ஏதோ ஒரு ஹோட்டலின் அறைக்குள் இரட்டைக் கட்டிலில் அரை நிர்வாண கோலத்தில் களைத்துப்போய் உறங்கிக் கொண்டிருக்கிறான் அவன். கீழே காலியான விஸ்கி குப்பிகள், கண்ணாடி டம்ளர்கள், சிகரெட் துண்டுகள், கொஞ்சம் தள்ளி, பின் பக்கத்தைக் காட்டிக் கொண்டு ஆடை அணியும் இளம்பெண்.
பழைய நினைவுகளிலிருந்து விடுபடுகிறான் ஜெயன்.
15
ரெஸ்ட் ஹவுஸின் படியில் தனியாக வெளிச்சத்தில் அமர்ந்திருக்கும் ஜெயனைக் கடந்து ஒரு விலை உயர்ந்த கார் மெதுவாக வந்து போர்டிகோவில் நிற்கிறது.
டிரைவர் கார் கதவைத் திறக்க, வயதான ஒரு மனிதரும் ஒரு இளம்பெண்ணும் காரை விட்டு இறங்குகிறார்கள்.
வயதான பெரியவருக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்கும். கறுத்துப்போய் இருக்கும் அந்தப் பெரியவர் ஒரு நோயாளி என்பது பார்க்கும்போதே தெரிகிறது. அவர் கழுத்தில் வெள்ளியால் ஆன சங்கிலி தொங்கிக் கொண்டிருக்கிறது. கையில் மோதிரம் இருக்கிறது. அவருக்குப் பின்னால் இருபத்தைந்து வயது இருக்கக்கூடிய இளம்பெண் ஒருத்தி நின்றிருக்கிறாள். வராந்தாவில் ஹிப்பிகள் பாட்டு பாடி முடித்து, சரஸ் உண்டாக்கிய போதையில் மிதந்தவாறு ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துப் படுத்துக் கிடக்கிறார்கள். ஒருவன் மட்டும் சுவரில் சாய்ந்தவாறு அவ்வப்போது தன் விரல்களை கிட்டாரில் மீட்டிக் கொண்டிருக்கிறான். அவர்களைப் பார்த்து கிழவரின் முகத்தில் இனம்புரியாத கோபமும் வெறுப்பும் உண்டாகின்றன.
கவுண்டருக்கு அருகில் போனதும் கிழவர் என்னவோ சொல்கிறார், வாதாடுகிறார்.
கிழவர்: (மேனேஜரிடம்) படிகள்ல ஏறுறதுக்கம் இறங்குறதுக்கும் என்னால முடியாது. டாக்டர்ஸ் அட்வைஸ் பண்ணியிருக்காங்க.
மேனேஜர்: கீழே ஒரு அறை கூட காலியா இல்ல சார்.
கிழவர்: (கோபத்துடன்) டெலக்ராமில் நான் ஸ்பெஸிஃபிக்கா சொல்லியிருந்தேன் - டவுன் ஸ்டேர்தான் எனக்கு வேணும்னு. இர்ரெஸ்பான்ஸிபில் பீப்பிள்.
அப்போது கிட்டாரில் இருந்து திடீரென்று ஒரு இசை மிதந்து வருகிறது. அதைக் கேட்டு ஹப்பிகளில் யாரோ விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அந்தச் சிரிப்பு கொஞ்சம் கூட நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சிரித்து சிரித்து அந்த ஆள் கடைசியில் அழ ஆரம்பிக்கிறான்.
டிரைவர் வெளியே நின்றிருக்கும் காரில் இருந்து பெட்டிகளையும், கூடைகளையும் உள்ளே கொண்டு வந்து வைக்கிறான்.
கிழவர் இளம்பெண்ணை ஒரு பார்வை பார்த்து விட்டு கோபத்துடன் ஹிப்பிகளை நோக்கி-
கிழவர்: (மேனேஜரிடம்) மக்கள்கிட்ட இருந்து சாறு பிழியிற மாதிரி பிழிஞ்சு வரி வாங்கி ரெஸ்ட் ஹவுஸைக் கட்டினா, அது என்ன இந்த மாதிரி பைத்தியக்காரப் பசங்க தங்குறதுக்கா?
மேனேஜர்: அவங்க சுற்றுலாப் பயணிங்க சார்.
கிழவர் இளம் பெண்ணின் அருகில் போய்-
கிழவர்: ஸ்மக்லர்ஸ், ஸ்பைஸ்... இதையெல்லாம் யார்கிட்ட போய் சொல்றது? இதுல எல்லாம் ஒரு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டாமா?
அவர் கீழே வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுகிறார். எல்லாப் பொருட்களும் சரியாக இருக்கின்றனவா என்று பார்க்கிறார்.
வெளியே இருந்து வந்த ஜெயன் இளம் பெண்ணின் அருகில் வந்து நிற்கிறான். திடீரென்று தனக்கு அருகில் நின்றிருக்கும் குடும்பத்தனமான அழகான அந்தப் பெண் அவனுடைய மனதில் உறங்கிக் கிடக்கும் ஒரு மூலையைத் தட்டியெழுப்பி ஒரு மின்னல் கீற்றை உண்டாக்குவதுபோல் அவன் உணர்கிறான். அவர்கள் இருவரும் ஒரு நிமிடம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். கிழவர் கோபத்துடன் பார்க்கிறார். ஜெயன் தன் உதட்டில் வந்த புன்னகையை அடக்கிக் கொள்கிறார். அவர்களுக்கிடையில் ரெஸ்ட் ஹவுஸ் பணியாள் பெட்டிகளை எடுத்துக் கொண்டு படிகளை நோக்கி நடந்து போகிறான்.
கிழவர்: (பெண்ணிடம்) யார் இவன்?
இளம்பெண்: எனக்குத் தெரியாது.
கிழவர்: (வெறுப்புடன்) அவன் சிரிச்ச மாதிரி இருந்ததே!
கிழவரின் கோபத்தையும் வெறுப்பையும் எங்கே மற்றவர்கள் கவனித்துவிடப் போகிறார்களோ என்ற கவலை அவளுக்கு. அவள் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் கிழவரின் முகத்தைப் பார்க்காமலே மெதுவான குரலில் சொல்கிறாள்:
“எனக்குத் தெரியாது!”
16
இரவு.
ரெஸ்ட் ஹவுஸின் மாடிப் பகுதியைச் சேர்ந்த பால்கனி.
சாமான்களுடன் அறைக்குள் நடக்கும் பணியாளுக்குப் பின்னால் கிழவரும், இளம் பெண்ணும் வருகிறார்கள். பால்கனியில் நின்றிருக்கும் ஜெயன் அவர்களையே பார்த்துக் கொண்டு என்னவோ சிந்திக்கிறான்.