கன்யாகுமாரி - Page 4
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7570
சாமியார் வெளியே போகப் போகிறார் என்பதைத் தெரிந்து கொண்டு பணியாள் அந்த இடத்தைவிட்டு நகர்கிறான்.
9
கடற்கரை. மாலை நேரம்.
கடைசியாக வந்த டூரிஸ்ட் பஸ் புறப்படுவதை சாமியார் பார்க்கிறார்.
கடற்கரையில் குறைவான கார்களே நின்றிருக்கின்றன. திரும்பவும் நடந்து ரெஸ்ட் ஹவுஸுக்கு முன்னால் வந்து கடற்கரையில் அவர் நிற்கிறார்.
நடைபாதை வழியாக முன்னர் ஜன்னலருகில் நின்றுகொண்டு பார்த்த இளைஞன் நடந்து வந்து கொண்டிருக்கிறான். சாமியார் அவனை ஆர்வம் மேலோங்க பார்க்கிறார். இரவில் அவன் சரியாகத் தூங்கவில்லை என்பதை அவனுடைய கண்களை வைத்து அவர் கண்டுபிடிக்கிறார். மிகவும் அக்கறை எடுத்து அணியாதது மாதிரி அவனின் ஆடைகள் இருக்கின்றன. மிகவும் மெலிந்து போய் காணப்படுகிறான்.
அவன் அருகில் நெருங்கி வந்தபோது அவனுடன் பேசுவோமா வேண்டாமா என்ற தடுமாற்றத்துடன் சாமியார் நின்றிருக்கிறார். அப்போது -
ஜெயன்: நமஸ்தே!
சாமியார்: நமஸ்காரம்.
ஜெயன்: சாமி, நீங்க வர்றதை நான் பார்த்தேன்.
சாமியார் ஒன்றும் பேசாமல் புன்னகைக்கிறார்.
ஜெயன்: சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க இவ்வளவு ஆளுங்க வர்றது உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு விஷயம்தான். சூரிய உதயத்தைப் பார்க்க ஒரு ஆளு கூட வெளியே வர்றது இல்ல....
அவன் மெதுவாக நடக்கிறான். அவனுடன் சாமியாரும்.
ஜெயன்: சூரிய அஸ்தமனம் முடிஞ்ச பிறகுதான் நான் அறையை விட்டு வெளியிலேயே வருவேன். எனக்குப் பயம்....
சாமியார்: எதுக்கு பயம்?
ஜெயன்: சாமி உங்களுக்குத் தோணினது இல்லையா? எனக்கு... எனக்கு சூரிய அஸ்தமனத்தைப் பார்க்குறப்போ மரணத்தைப் பார்க்குறது மாதிரி இருக்கும். சாமியார் அவன் சொல்வதைக் கேட்கிறார். அவனுடைய கைவிரல்கள் இலேசாக நடுங்கிக் கொண்டிருக்கின்றன. அவன் உள்ளுக்குள் வெளியே தெரியாமல் அழுவது தெரிகிறது.
சாமியார் மணலில் அமர்கிறார். இளைஞன் சற்று தூரத்தில் கடலையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான். கடலில் யாரோ ஒரு மனிதன் நீந்திக் கொண்டிருக்கிறான்.
ஜெயன்: ராத்திரி நேரம்தான் சொல்லப் போனால், ரொம்பவும் பயங்கரமானது. அலைகளோட ஓசை, மண்டபத்தின் விளக்குகள்... நான் கடந்து போன ஆறு இரவுகளும் ஒரு பொட்டு கூட உறங்கவே இல்ல.
தனக்குத்தானே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துபோன அவன் மென்மையாக புன்னகைக்கிறான்.
ஜெயன்: நேற்று சின்னப் பையனா இருக்குறப்போ செய்யிற மாதிரி அர்ஜுனன், ஃபல்குனன், பார்த்தன், விஜயன்னு திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே படுத்துக் கிடந்தேன்.
சாமியார் அவனைப் பார்த்து புன்னகைக்கிறார்.
சாமியார்: அப்படிச் சொன்னதுக்கு பலன் இருந்துச்சா?
ஜெயன்: ஊஹும், சாமி என்னால உங்களுக்குத் தொந்தரவா? தொந்தரவுன்னா சொல்லிடுங்க. நான் உடனே போயிர்றேன்.
சாமியார்: அப்படியெல்லாம் இல்ல. சொல்லு...
ஜெயன்: நான் யார்கிட்டயாவது பேசி எவ்வளவு நாட்களாயிடுச்சுன்றீங்க? மவுன விரதம் இருக்கேன்னு வச்சுக்கங்களேன். தனிமைச் சிறை... (சிரித்தவாறு) எனக்கு நானே தந்துக்கிட்ட தண்டனை இது...
கடலில் நீந்திக் கொண்டிருந்த உடல் பலம் பொருந்திய இளைஞன் கரைக்கு ஏறி வருகிறான். கிரேக்க கடவுளின் உடல் வலிமை அவனுக்கு இருக்கிறது. நீர்வளைகள் சொட்டிக் கொண்டிருக்கும் தன்னுடைய கட்டான உடலமைப்பு குறித்து அவனுக்கு நன்றாகவே தெரியும். காற்றில் கைகளை இப்படியும் அப்படியுமாக சுழற்றியவாறு நின்றிருந்த அவன் மீண்டும் அலைகளில் குதிக்கிறான்.
ஜெயன்: சாமி, நீங்க சன்னியாசியா ஆனதுக்குக் காரணம்...?
சொல்ல வந்ததை அவன் நிறுத்துகிறான். சாமியார் அதற்கு என்ன பதில் சொல்வார் என்ற எதிர்பார்ப்புடன் அவன் காத்திருக்கிறான்.
சாமியார்: வாழ்க்கையின் கொடூர முகத்தால் அல்ல...
ஜெயன், சாமியார் மீண்டும் ஏதாவது கூறுவார் என்று எதிர்பார்ப்புடன் பார்க்கிறான்.
சாமியார்: சிறைச்சாலைகள் பல்வேறு வகையானவை, ஜெயன்....
ஜெயன் ஆர்வத்துடன் சாமியாரைப் பார்க்கிறான்.
ஜெயன்: இங்கே வேலை செய்றவங்க என்னைப் பற்றி சொல்லியிருப்பாங்களே!
சாமியார்: கொஞ்சம் சொன்னாங்க.
ஜெயன்: முழுசா சொல்லாதது நீங்க செஞ்ச பாக்கியம்.
அவன் கடந்த காலத்தில் இருந்து மெதுவாக எழும், அதே நேரத்தில் மனதில் துக்கத்தை உண்டாக்கும் சில ஞாபகங்களை அசைபோட்டவாறு மெதுவாக இருந்த இடத்தை விட்டு லேசான புன்னகையுடன் எழுந்திருக்கிறான். மெதுவாக அந்த இடத்தை விட்டு நடக்க ஆரம்பிக்கிறான். சாமியாரின் சிந்தனை வயப்பட்ட விழிகள் அவனையே பின் தொடர்கின்றன. சாமியாரும் தனக்குத் தானே புன்னகை புரிகிறார்.
10
கடற்கரை. மாலை நேரம்.
கடற்கரையில் மின் விளக்குகள் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. நீச்சலடிக்கும் இளைஞன் அப்போதும் கடலில் நீந்திக் கொண்டிருக்கிறான்.
கடைசி முறையாக அவன் கடலுக்குள் குதித்து முடித்து பிறகு கரைக்கு வருகிறான். ஒரு துண்டால் தன் உடம்பைத் துடைக்கிறான்.
கடற்கரை ஆள் நடமாட்டமே இல்லாமல் இருக்கிறது. சாமியார் இருந்த இடத்தை விட்டு எழுந்து நிற்கிறார்.
அப்போது ஒரு உருவம் தன்னை நோக்கி நடந்து வருவதை சாமியார் பார்க்கிறார். அது வேறு யாருமல்ல- பகலில் அவர் பார்த்த சிப்பி மாலை விற்கும் இளம்பெண்தான்.
சாமியார்: நீ வீட்டுக்குப் போகலியா?
பார்வதி: ஊஹும்...
சாமியார்: ஏன்?
அவள் பதிலெதுவும் பேசாமல் நின்றிருக்கிறாள். நீச்சலடிக்கும் இளைஞன் துண்டை தோளில் போட்டவாறு நடந்து போகும்போது அந்த இளம்பெண்ணையே உற்று பார்க்கிறான். அந்த இளைஞனுக்கு நல்ல திடகாத்திரமான உடம்பு.
இளைஞன்: மாலை வியாபாரம் முடிஞ்சிருச்சா?
அவள் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை. அவன் சென்றபிறகு அவள் வெறுப்புடன்- அதே சமயம் உறுதியான குரலில்:
“ஹோ... இந்த ஆளுக்கு மட்டும்தான் நீச்சல் தெரியுமா? இந்த ஆளைவிட சங்கரனுக்கு நல்லா நீந்தத் தெரியும்!”
சாமியார்: சங்கரன்றது யாரு?
பார்வதி: (தூரத்தில் கையால் சுட்டிக் காட்டி) அந்தப் பாறையில வேலை செய்யிற சங்கரனைத் தெரியாதா?
சாமியார்: எனக்குத் தெரியாது.
பார்வதி: சங்கரன் நினைச்சா அந்தப் பாறைவரை கூட அவரால நீந்த முடியும். ஆனா, எனக்குத்தான் பயம். நீந்தக் கூடாதுன்னு நான்தான் சொல்லியிருக்கேன்.
சாமியார்: அங்கே வரை நீந்துறது கஷ்டமா என்ன?
பார்வதி: (கிண்டலான குரலில்) பிறகென்ன? சாமி, வேணும்னா நீங்க நீந்திக் காட்டுங்க - பார்ப்போம். யாராலயும் அவ்வளவு தூரம் நீந்தவே முடியாது. முன்னாடி ஒரு சாமியார் நீந்தி காண்பிச்சார். அதுக்குப் பிறகு வேற யாருக்குமே அந்த அளவுக்கு தைரியம் வரல.
சாமியார்: அது எவ்வளவோ காலத்துக்கு முன்னாடி இல்ல? அதுக்குப் பிறகு ஒரு ஆளு நீந்தி இருக்காரு. அவரை எனக்குத் தெரியும்.
பார்வதி: சுத்தப்பொய். சாமி, உங்களுக்கு எதுவுமே தெரியாது.
சாமியார் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்.