கன்யாகுமாரி - Page 10
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7570
அவன் எல்லா இடங்களிலும் தேடிப் பார்க்கிறான். பெட்டிகளையும், கூடைகளையும் எடுத்து பார்த்துவிட்டு கீழே கூடையை எடுக்கிறான். அதிலிருக்கும் நாணயங்களை எடுத்து இடுப்பில் சொருகியபடி வெளியே போகும்போது வாசலில் திரும்பி நின்று-
வீரப்பன்: அடியே! பார்த்து நட... அந்தக் கல் வேலை செய்யிற பையன் கூட நீ சிரிச்சு விளையாடிக்கிட்டு இருக்குறதை நான் பார்த்தேன்.
அவன் வெளியே சென்றவுடன், அவள் கதவை அடைக்கிறாள்.
மீண்டும் மாலை கோர்க்கும் வேலையில் ஈடுபடுகிறாள். பழைய உற்சாகம் அவளிடம் இல்லாமல் போகிறது. கயிற்றுக் கட்டிலில் மீண்டும் படுக்கிறாள் கிழவி.
கிழவி: எந்தப் பையனைப் பற்றி அவன் சொன்னான்?
பார்வதி: எனக்குத் தெரியாது.
கிழவி: பிறகு ஏன்டி அவன் அப்படி சொல்லணும்?
பார்வதி பேசாமல் இருக்கிறாள்.
கிழவி: இப்போ உனக்கு நடக்குறது பதினாலு வயசுன்றதை ஞாபகத்துல வச்சுக்கோ, ஏதாவது கெட்ட பேரு உனக்கு வந்துச்சு, பிறகு நான் யார்னு கூட பார்க்க மாட்டேன்... அவ்வளவுதான் சொல்லுவேன்.
பார்வதி: (கோபத்துடன்) பைத்தியக்காரத்தனமா பேசாத பாட்டி...
கிழவி: உங்கம்மா வாங்கித்தந்த கெட்ட பேரு போதாதுன்னா நீ வேற வாங்கித் தரலாம்னு பார்க்குற?
பார்வதி பேசாமல் இருக்கிறாள். அவளின் முகம் மிகவும் வாடிப் போகிறது. கண்களில் கண்ணீர் அரும்புகிறது. தன்னையும் மீறி அவள் தேம்பித் தேம்பி அழுகிறாள். கிழவி கண்களை மூடி படுத்திருக்கிறாள்.
ஒரே அமைதி.
கிழவி: படுத்துட்டியா?
பார்வதி பேசாமல் இருக்கிறாள்.
கிழவி: (சாந்தமான குரலில், பாசத்துடன்) மனசு வேதனையா இருக்குறப்போ நான் ஏதாவது சொல்லத்தான் செய்வேன். இங்கே வா. இங்கே வந்து உட்காரு.
பார்வதி முதலில் தயங்குகிறாள். பிறகு கட்டிலில் பாட்டியின் அருகே வந்து உட்காருகிறாள். பேத்தியின் தலைமுடியைத் தேடி தடவியவாறு-
கிழவி: நீ இருக்குறதுனாலதான் நான் வயிறு காயாம இருக்கேன். உன்னை ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்துட்டா, நிம்மதியா நான் செத்துப் போவேன்.
பார்வதி: பாட்டி, நீ சாகக்கூடாது. நீ மட்டும் இல்லைன்னா மாமன் கள்ளு குடிச்சிட்டு வந்தா, நான் என்ன செய்றது?
கிழவி: உனக்கு எந்த தொந்தரவும் வராது. எப்பவும் தேவியை மனசுல நினைச்சுக்கிட்டே நட. சரி... இப்போ படுத்து உறங்கு.
கிழவியின் பார்வையற்ற கண்கள் இருக்கும் முகத்தில் பல்வேறு சிந்தனைகளும் நிழலாடுகின்றன.
27
கன்யாகுமாரியில் தெரியக்கூடிய அழகான சூரிய உதயம்.
கட்டு மரங்களில் ஏறி அலைகடலில் மீன் பிடிக்கப் போகும் மீனவர்கள்.
சூரியனின் முதற்கதிர்கள புறப்பட்டு வரும் வேளையில் தனியாக கடற்கரையில் நின்றிருக்கும் சாமியார்.
28
சேரியின் இன்னொரு எல்லையில் கருங்கல்லில் வேலை செய்து கொண்டிருக்கும் சங்கரன் சூரிய உதயத்தைப் பார்க்கிறான்.
பின்னால் பதுங்கிப் பதுங்கி வந்த பார்வதியை அவன் சரியாக கவனிக்கவில்லை. அவளின் கையில் அலுமினியத்தால் ஆன ஒரு தூக்கு பாத்திரம் இருக்கிறது. இலையால் ஆன ஒரு பொட்டலத்தையும் வைத்திருக்கிறாள்.
பாதி வேலை முடிந்திருந்த கருங்கல்லில் ஒரு பெண் உருவம் உருவாகி வருகிறது.
சிற்பம் வடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சங்கரன் பின்னால் இருந்து பார்வதியின் குரல் வருவதைக் கேட்கிறான்.
பார்வதி: வேலைக்குப் போகாம கள்ளத்தனம் காட்டிக்கிட்டு இங்கேயே உட்கார்ந்திருந்தா எப்படி?
அவன் திரும்பிப் பார்க்காமல் வேலையைத் தொடர்ந்தவாறு-
"நேரம் இன்னும் நிறைய இருக்கு!"
அவள் பின்னால் இருந்து அவனுக்கு முன்னால் வந்து நிற்கிறாள். கையிலிருந்த தூக்கு பாத்திரத்தையும் இலைப் பொட்டலத்தையும் கீழே மணலில் வைக்கிறாள்.
பார்வதி: (கல்லில் இருக்கும் உருவத்தைப் பார்த்து) முழுசா முடிஞ்சிருச்சா?
சங்கரன்: நீ என்ன மேஸ்திரியா (தன்னுடைய வேலைப்பாட்டைப் பார்த்து- ஒருவித திருப்தியுடன்) வேலை முழுசா முடிஞ்ச பிறகு பார்... கோவில்ல இருக்குற சிலைகளைவிட இது ரொம்பவும் நல்லா இருக்கும்.
பார்வதி: சரி... நான் கிளம்பணும். இதைக்குடிச்சிட்டு பாத்திரத்தைத் தாங்க.
அவன் இலைப் பொட்டலத்தைப் பிரித்து அவள் காலையில் பண்ணிய பலகாரத்தைச் சாப்பிடுகிறான். தூக்கு பாத்திரத்தில் இருந்த தேநீரைக் குடிக்கிறான்.
பார்வதி: இது முழுசா முடிஞ்ச பிறகு இதை என்ன செய்வீங்க?
சங்கரன்: (சர்வ சாதாரணமான குரலில்) யாருக்காவது கொடுக்க வேண்டியதுதான்.
பார்வதி: விலைக்கா?
சங்கரன்: விலைக்கோ சும்மாவோ கொடுக்க வேண்டியதுதான்.
அவள் பேசாமல் இருக்கிறாள். மனதிற்குள் சிறுபிள்ளைத்தனமான கோபம்.
சங்கரன்: உனக்கு வேணுமா?
பார்வதி: (ஆசையை அடக்கிக் கொண்டு) எனக்கு எதுக்கு?
சங்கரன்: வெள்ளைக்காரங்க யாருக்காவது வித்தா நல்ல பணம் கிடைக்கும்.
பார்வதி: தேவியோட விக்கிரகத்தை விக்கிறதா? நான் வீட்ல கொண்டு போய் வைக்கப் போறேன். ஒவ்வொரு நாளும் அதுக்கு பூ வைப்பேன். விளக்கு ஏத்துவேன்.
அவன் வேலை செய்து கொண்டிருக்கும் கருங்கல்லை எடுத்து இன்னொரு இடத்தில் வைத்து ஓலைக் கீற்றால் அதை மூடுகிறான்.
சங்கரன்: (நிழலைப் பார்த்து) ம்... சரி... நான் கிளம்பட்டுமா? ரெண்டு மாசம் ஆனா பாறையில வேலை முடிஞ்சிடும்.
பார்வதி: அதுக்குப் பிறகு என்ன செய்றதா உத்தேசம்?
சங்கரன்: கையில இருக்குற காசு தீர்றது வரை ஒரு வேலைக்கும் நான் போகமாட்டேன். ரோட்டுல சுத்திக்கிட்டு திரிய வேண்டியதுதான். மீதி இருக்குற நேரத்துல நல்லா தூங்க வேண்டியதுதான்.
பார்வதி: நல்லா தின்னணும்... சோம்பேறி. பணம் முழுசும் தீர்ந்திடுச்சுன்னா...?
சங்கரன் ஷர்ட்டை எடுத்து அணிந்துகொண்டு சுத்தியலையும் உளியையும் பையில் போட்டுக் கொண்டு-
சங்கரன்: மருதுவான் மலையில கருங்கல்லு இருக்குமா? பிழைக்கிறதுக்கு எனக்கு யாரோட தயவும் வேண்டாம்...
அவன் நடக்கிறான். காலியான தூக்கு பாத்திரத்தை அடைத்தவாறு அவள் அவனுக்குப் பின்னால் நடக்கிறாள்.
பார்வதி: (தயங்கியவாறு) நேத்தும் மாமன் வந்து தேவையில்லாததெல்லாம் சொன்னாரு.
சங்கரன் அதைக் கேட்டு நிற்கிறான். அவன் மனதிற்குள் கோபம் எழுகிறது.
சங்கரன்: என்ன சொன்னான்?
பார்வதி தலை குனிந்து நிற்கிறாள். எதுவும் பேசவில்லை.
பார்வதி: காசு கேட்டாரு... பிறகு...
சங்கரன்: பிறகு?
வெட்கத்துடன், அதே நேரத்தில் வேதனையுடன்-
பார்வதி: என்னைக் கல்யாணம் பண்ண போறதா சொன்னாரு.
சங்கரன்: (கோபத்துடன்) நீ அவன் சொல்றதைக் கேட்டு நின்னே?
பார்வதியின் கண்கள் நனைகின்றன.
பார்வதி: நான் என்ன பண்ண முடியும்? ஊரைவிட்டு உடனே ஓடுறதுக்கு நான் ஒண்ணும் ஆம்பளை இல்லியே!
பாதை பிரிகிற இடத்தில் அவர்கள் நிற்கிறார்கள். சங்கரன் என்னவோ தீவிரமாக சிந்திக்கிறான். தூரத்தில் ஒரு படகிலிருந்து கேட்கும் சங்கொலி.
சங்கரன்: (முகத்தை உயர்த்தாமல், மெதுவான குரலில்) நேரமாயிடுச்சு.
நடக்கிறான்.