கன்யாகுமாரி - Page 14
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7571
சாமியார்: ஏதாவது மாலை வாங்கினானா?
பார்வதி: அந்த ஆளு எதுவும் வாங்கல. இப்படித்தான் பார்க்குறப்ப எல்லாம் அதுவும் இதுவும் சொல்லிக்கிட்டு இருப்பான்...
சாமியார் யாரிடம் என்றில்லாமல் தனக்குள் இரண்டு வரி சமஸ்கிருத ஸ்லோகங்களைக் கூறிக் கொள்கிறார்.
பார்வதி: (ஒன்றும் புரியாமல்) என்ன சொன்னீங்க?
சாமியார்: ஒண்ணுமில்ல...
நடக்கிறார்கள்.
44
சாமியாரின் அறை.
நனைந்த தன்னுடைய ஆடைகளைக் காயப் போட்டுவிட்டு, ஒரு துண்டை இடுப்பில் சுற்றியவாறு சாமியார் நின்றிருக்கிறார். அப்போது அவரின் அறைக் கதவு தட்டப்படுகிறது.
சாமியார் கதவைத் திறக்கிறார். வாசலில் ஜெயன் நின்றிருக்கிறான்.
சாமியார்: வா... உட்காரு ஜெயன்...
ஜெயன் கவலை படர்ந்த ஒரு புன்னகையுடன் அமர்கிறான்.
சாமியார்: என்ன கோயிலுக்குப் போகலியா?
ஜெயன்: 'இல்லை' என்று தலையை ஆட்டுகிறான்.
ஜெயன்: அவளைக் கிழவன் உள்ளே அடைச்சி வச்சிருக்கான்.
சாமியார்: ராட்சசன்கிட்ட இருந்து கன்னியைக் காப்பாத்துறதுக்காக மாறுவேஷம் போட்டு நடக்குற இராஜகுமாரன் வந்திருக்காரு... அப்படித்தானே?
ஜெயன்: சாமி, என்னைக் கிண்டல் பண்றீங்களா?
சாமியார்: நிச்சயமா இல்ல...
ஜெயன்: சாமி, உங்களுக்குத் தெரியாது.
சாமியார்: எனக்குப் புரியுது.
ஜெயன்: (சாமியாரைப் பேசவிடாமல்) இல்லை... உங்களால புரிஞ்சிக்க முடியாது. எனக்குக் கூட இதுவரை தெரியாமத்தான் இருந்துச்சு. என்னால தாங்க முடியல... சன்னியாசிமார்கள் பொதுவா யார் மேலயும் அன்பு செலுத்துறது இல்லையில்லையா?
சாமியார்: எல்லாரும் அன்புக்காகத்தான் ஏங்குறாங்க. அது கிடைக்கலைன்னு வர்றப்போ, கிடைச்சதை வச்சு அவங்க திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான்...
ஜெயன்: (ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவாறு) சாமி உங்களுக்குத் தெரியுமா? நான் கல்யாணம்ன்ற ஒண்ணைப் பத்தி இதுக்கு முன்னாடி எப்பவும் மனசுல நினைச்சுப் பார்த்ததே இல்ல. காரணம் என்ன தெரியுமா? எந்தப் பெண் மேலயும் என் மனசு ஒட்டாததுதான். சில மணி நேரங்கள் மட்டுமே நீடிச்சு நிக்கிற காதல் நாடகங்களை நான் விலைக்கு வாங்கினேன்...
சாமியார் அவன் கூறியதைத் தொடர்ந்து-
சாமியார்: நான் அதை முடிக்கிறேன். 'இப்போ வாழ்க்கையிலேயே முதல் தடவையா எந்த காரணமும் இல்லாம ஒரு பெண் மேல ஈடுபாடு வந்திருக்கு. கண்டு மறந்த கனவைப் போல அவள் என்னை பாடா படுத்திக்கிட்டு இருக்கா.' இதுதானே நீ சொல்ல வர்றது?
ஜெயன்: அப்படி நான் நினைக்கிறது தப்பா?
சாமியார்: அப்படி நான் சொல்லலியே?
ஜெயன்: நான் பல விதங்கள்லயும் சிந்திச்சுப் பார்த்தேன்.
சாமியார்: ம்...
ஜெயன்: (சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, தொடர்கிறான்) நேராக போயி அறைக் கதவைத் தட்டுறது. என்னை அந்தக் கிழவன் ஒரு மாதிரி பார்ப்பான். அப்போ அவனைப் பார்த்து நான் சொல்லப் போறேன், நான் அவளை மனப்பூர்வமா காதலிக்கிறேன்னு..(பேச்சைச் சிறிது நிறுத்தி)... சாமி... நீங்க என்ன சொல்றீங்க?
சாமியார் எதுவும் கூறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சாமியார்: இப்போ எனக்கு ஞாபகத்துல வருது. ஜெயன், உன்னை நான் ரொம்பவும் முன்னாடி பார்த்திருக்கேன்.
ஜெயன்: என்னையா? இம்பாஸிபில்...
சாமியார்: நான் பார்த்தது.... எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாடி கண்ணாடியில பார்த்த என் முகம் இப்படித்தான் இருந்துச்சு...
ஜெயன் சாமியாரைத் திகைப்புடன் பார்க்கிறான்.
ஜெயன்: எனக்கு... எனக்கு எதுவுமே புரியல.
சாமியார்: நாம எதுவுமே தெரியாதவங்களா இருக்கமேன்னு நமக்குத் தெரியும்.
ஜெயன் இருந்த இடத்தை விட்டு எழுகிறான். என்னவோ கூறுவதற்காக தயங்கி நிற்கிறான். பிறகு என்ன நினைத்தானோ ஏதோ சிந்தனையுடன் மெதுவாக வெளியே நடக்கிறான்.
45
கடற்கரை.
கடற்கரையில் கோவிலில் இருந்து திரும்பி வரும் குடும்பங்களுக்கு சங்கு மாலைகள் விற்பதற்காக பார்வதி ஓடிக் கொண்டிருக்கிறாள்.
பார்வதி: ஒரு ரூபா... ஸார்.. ஒரு ரூபா...
ஒரு பெண் மாலைகளைப் பார்த்துவிட்டு, அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறாள்.
அவளின் கணவன் இடுப்பில் செருகி வைத்திருக்கும் பர்ஸை எடுத்து பார்த்து, நோட்டுகளை வெளியே எடுத்து, பின்னர் என்ன நினைத்தானோ மீண்டும் பர்ஸிலேயே வைத்துவிட்டு, மாலை வாங்கிய மனைவியிடம்-
அவன்: பிறகு வாங்கலாம். சேஞ்ச் இல்ல...
அவ்வளவுதான். அந்தப் பெண் மாலையைத் திருப்பி பார்வதியிடமே தருகிறாள். பார்வதி ஏமாற்றத்துடன் அதை வாங்கி கையில் வைத்தவாறு நடக்கிறாள். தூரத்தில் ஒரு கூட்டம் வருவது தெரியவே, அதை நோக்கி ஓடுகிறாள்.
46
குளித்து முடித்து உடம்பைத் துடைத்துக் கொண்டிருந்த ஃப்ரெடரிக் பார்வதி நடந்து செல்வதைப் பார்க்கிறான். அவளை அவன் அழைக்கிறான்:
"ஏய்!"
அவள் நடக்கிறாள். ஃப்ரெடரிக் சற்று அருகில் வந்து-
ஃப்ரெடரிக்: நீ எனக்கு மாலை தர மாட்டியா?
பார்வதி: எத்தனை வேணும்?
ஃப்ரெடரிக்: எவ்வளவு கையில இருக்கோ எல்லாத்தையும் வாங்கிக்கிறேன்.
அவள் தன் கையிலிருக்கும் மாலைகளை எண்ணுகிறாள்.
பார்வதி: இருபது மாலைகள் இருக்கு. பதினஞ்சு ரூபா கொடுத்துட்டு எல்லாத்தையும் எடுத்துக்கோ.
ஃப்ரெடரிக்: ரூபா அறையில இருக்கு. சாயங்காலம் அறைக்கு வா. தர்றேன்.
பார்வதி அவனைப் பார்த்து கீழே துப்புகிறாள்.
பார்வதி: நீயெல்லாம் ஒரு ஆளு!
அவள் திரும்பி நடக்க ஆரம்பிக்க, அவளுக்கு முன்னால் வீரப்பன் நின்றிருக்கிறான். எப்போதும் அவனைப் பொறுத்தவரை போதைதான்.
வீரப்பன்: எட்டணா எடுடி...
பார்வதி: நான் இதுவரை ஒரு மாலை கூட விக்கலியே!
வீரப்பன்: பொய் சொன்னே கொன்னுடுவேன். திருட்டு நாயே!
பயத்துடன், அதே சமயம் கவலையுடன்-
பார்வதி: நான் இதுவரை மாலை ஒண்ணு கூட விக்கல...
அவள் தப்பித்தால் போதும் என்று நடக்கிறாள். வீரப்பனும் ஃப்ரெடரிக்கும் நின்றிருக்கிறார்கள்.
ஃப்ரெடரிக்: இங்கே பிராண்டி, விஸ்கி எதுவுமே கிடைக்காதா?
வீரப்பன்: (உண்மையான ஆர்வத்துடன்) ரெஸ்ட் ஹவுஸ்ல இல்லையா சார்?
ஃப்ரெடரிக்: ஸ்டாக் தீர்ந்து போச்சு.
வீரப்பன்: உங்களுக்கு நாட்டுச் சரக்கு வேணும்னா...
ஃப்ரெடரிக்: ஒரு சேஞ்ச்சுக்கு வேணும்னா நாட்டு சரக்கை சாப்பிட்டுப் பார்க்கலாம். ஆமா... இந்தப் பொண்ணு யாரு?
வீரப்பன்: என் சொந்தம்தான். ஆனா, பத்து பைசா பிரயோஜனம் கிடையாது.
ஃப்ரெடரிக்: அப்படியா?(என்னவோ சிந்தித்தவாறு) சரி... ரெஸ்ட் ஹவுஸ்ல இருக்குற என்னோட அறைக்கு வா...
47
மற்றொரு சூரிய அஸ்தமனப் பொழுது
48
ஃப்ரெடரிக்கின் அறை. வீரப்பன் பயங்கர போதையுடன் சுவரில் சாய்ந்தவாறு இருக்கிறான். டீப்பாயில் நாட்டு சாராய குப்பி இருக்கிறது. அது முக்கால் பகுதி தீர்ந்திருக்கிறது.
சிகரெட் புகை வீரப்பனின் முகத்தை வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அவன் போதையில் சிக்கி பாதி உறக்கத்தில் இருக்கிறான்.